Sidebar

16
Thu, May
1 New Articles

மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?

அறிமுகம்

மரணித்தவர்கள் குறித்து முஸ்லிம் சமுதாயத்திலும், முஸ்லிமல்லாத மக்களிடமும் தவறான மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன.

உயிருடன் வாழும்போது மனிதனுக்கு இருந்த அனைத்து ஆற்றலும் அற்றுப் போவதைக் கண்ணால் கண்ட பின்பும் மரணித்தவர்களின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஏறுக்குமாறாக நம்புகின்றனர்.

ஒருவன் உயிருடன் இருக்கும் போது அவனுக்கு அருகில் நின்று  அழைத்தால் தான் செவியுறுவான் என்று நம்பும் மக்கள், அவன் மரணித்த பின்னர் எவ்வளவு தொலைவில் இருந்து அழைத்தாலும் அவன் செவியுறுவான் என்று நம்புகின்றனர்.

உயிருடன் இருக்கும் போது தனது தேவைக்காக பிள்ளைகளைச் சார்ந்து இருந்தவன், மரணித்து விட்டால் குடும்பத்துக்கு உதவும் அளவுக்கு மகா சக்தி பெற்றுவிட்டதாகக் கருதுகின்றனர்.

நல்லவர்கள், ஞானிகள் என்று அறியப்பட்டவர்களாக இருந்தால் வாழும் போது அவர்கள் ஒரு மொழியை மட்டுமே அறிவார்கள். ஆனால் மரணித்த பின்னர் உலகின் பல பாகங்களில் இருந்தும் பல மொழிகளிலும் அவரை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர். செத்த பின்னர் அனைத்து மொழிகளும் அவர்களுக்குத் தெரிந்து விடுகிறது என்று நம்புகின்றனர்.

உயிருடன் வாழும் போது அவருக்கே பிள்ளை இல்லாவிட்டாலும் செத்த பின்னர் மற்றவர்களுக்குப் பிள்ளை வரம் கொடுக்கும் ஆற்றல் வந்து விடுகிறது எனக் கருதுகின்றனர்.

உலகில் வாழும் போது சீடர்கள் போடும் பிச்சையில் வாழ்க்கை நடத்தியவர்கள், செத்த பின்னர் தமது சீடர்களைச் செல்வந்தராக்க வல்லவர்கள் என்று நினைக்கின்றனர்.

பிற மதத்தவர்கள் இப்படி நம்பினால் அதில் ஆச்சரியம் இல்லை. மரணித்த பின்னர் மனிதனின் நிலை என்ன என்று தெளிவாக விளக்கும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்களும் இப்படி நம்புவதுதான் வியப்பாக உள்ளது.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் மாபாதகச் செயலில் அவர்கள் இறங்குவதற்கும் இந்த நம்பிக்கையே காரணமாக உள்ளது.

மரணித்த மனிதனுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதையும், மரணித்தவர்களுக்கு இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் விளக்கி இணைகற்பிக்கும் மாபாதகச் செயலில் இருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும் என்பதே இந்நூலை வெளியிடும் நோக்கமாகும்.

இந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

நபீலா பதிப்பகம்

ஆன்மாக்களின் உலகம்

மனிதன் மரணித்து விட்டால் அவனது செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன. மரணித்தவனால் சிந்திக்கவும், செயல்படவும் முடியாது என்பதைக் கண்கூடாக நாம் காண்பதால் இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை.

அதனால் தான் இறந்தவரை நாம் அடக்கம் செய்கிறோம். அவரது சொத்துக்களை வாரிசுகள் பிரித்துக் கொள்கிறார்கள். அவரது மனைவியை மற்றவர்கள் மணந்து கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் எல்லா முஸ்லிம்களும், முஸ்லிமல்லாத மக்களும் சரியான கருத்திலேயே இருக்கிறார்கள்.

மனிதன் மரணித்த பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான் என்றும், உயிர்ப்பிக்கப்படும் வரை பர்ஸக் எனும்  ஆன்மாக்களின் உலகில் மனிதன் வாழ்கிறான் என்று முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம்.

மரணித்த மனிதர்கள் ஆன்மாக்களின் உலகில் உயிருடன் உள்ளனர் என்பதை முஸ்லிம்களில் பலரும் பலவாறாகப் புரிந்து கொள்கின்றனர்.

ஆன்மாக்களின் உலகில் இருந்து கொண்டு இவ்வுலகில் நடப்பதை அவர்கள் கவனித்துக் கொண்டு உள்ளனர். நாம் பேசுவதைச் செவிமடுக்கின்றனர். இறந்தவர்கள் மகான்களாக இருந்தால் நமது தேவைகளை நிறைவேற்றி வைக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர்களாக இருக்கின்றனர் என்று சில முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கை தான் தர்கா வழிபாட்டுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

இறந்த பின்னர் இன்னொரு உலகத்தில் உயிருடன் உள்ளனர் என்ற அடிப்படை சரியானது தான். ஆனால் அங்கே இருந்து கொண்டு இவ்வுலகில் நடப்பதை அறியவோ, பார்க்கவோ, கேட்கவோ, மற்றவருக்கு உதவவோ இயலாது என்பதுதான் சரியான நிலைபாடாகும்.

இன்னொரு உலகில் வாழும் மனித உயிர்கள் இவ்வுலகில் உள்ளவர்களுடன் எந்தத் தொடர்பும் கொள்ள முடியாது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

அவற்றை முதலில் அறிந்து விட்டு, மாற்றுக் கருத்து உள்ளவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களும், வாதங்களும் எப்படி தவறானவை என்பதை இரண்டாவதாக அறிந்து கொள்வோம்.

உறுதி செய்யப்பட்ட நபியின் மரணம்

நல்லடியார்கள் என்று கருதப்படுபவர்களை மரணித்து விட்டதாக நாம் கருதக் கூடாது என்பதும், அவர்கள் உயிருடன் தான் உள்ளனர் என்பதும் சிலரது நம்பிக்கை.

இது முற்றிலும் இஸ்லாத்துக்கு எதிரான நம்பிக்கையாகும். ஏனெனில் நல்லடியார்களில் முதலிடத்தில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே மரணித்து விட்டார்கள் என்று திருக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

திருக்குர்ஆன் 3:144

"எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:162, 163

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா?

திருக்குர்ஆன் 21:34

 (முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.

திருக்குர்ஆன் 39:30

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா? ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 21:34, 35

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்து விட்டார்கள் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது நாம் அன்பு வைத்திருப்பதால் அவர்கள் மரணிக்கவில்லை என்று முடிவு செய்ய நம் மனம் விரும்புகிறது என்பது தான் நபிகள் நாயகம் மரணிக்கவில்லை என்று நாம் நம்புவதற்குக் காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபித்தோழர்கள் நம்மை விட அதிகமான நேசித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது இது போன்ற குழப்பம் அவர்களுக்கும் ஏற்பட்டது. அந்தக் குழப்பம் அன்றைக்கே தீர்க்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

صحيح البخاري - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَاتَ وَأَبُو بَكْرٍ بِالسُّنْحِ، - قَالَ: إِسْمَاعِيلُ يَعْنِي بِالعَالِيَةِ - فَقَامَ عُمَرُ يَقُولُ: وَاللَّهِ مَا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: وَقَالَ عُمَرُ: وَاللَّهِ مَا كَانَ يَقَعُ فِي نَفْسِي إِلَّا ذَاكَ، وَلَيَبْعَثَنَّهُ اللَّهُ، فَلَيَقْطَعَنَّ أَيْدِيَ رِجَالٍ وَأَرْجُلَهُمْ، فَجَاءَ أَبُو بَكْرٍ " فَكَشَفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:7] فَقَبَّلَهُ، قَالَ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، طِبْتَ حَيًّا وَمَيِّتًا، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُذِيقُكَ اللَّهُ المَوْتَتَيْنِ أَبَدًا، ثُمَّ خَرَجَ فَقَالَ: أَيُّهَا الحَالِفُ عَلَى رِسْلِكَ، فَلَمَّا تَكَلَّمَ أَبُو بَكْرٍ جَلَسَ عُمَرُ،

3668 - فَحَمِدَ اللَّهَ أَبُو بَكْرٍ وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ: أَلا مَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَيٌّ لاَ يَمُوتُ، وَقَالَ: {إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ} [الزمر: 30]، وَقَالَ: {وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ} [آل عمران: 144]، قَالَ: فَنَشَجَ النَّاسُ يَبْكُونَ، قَالَ: وَاجْتَمَعَتِ الأَنْصَارُ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، فَقَالُوا: مِنَّا أَمِيرٌ وَمِنْكُمْ أَمِيرٌ، فَذَهَبَ إِلَيْهِمْ أَبُو بَكْرٍ، وَعُمَرُ بْنُ الخَطَّابِ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ، فَذَهَبَ عُمَرُ يَتَكَلَّمُ فَأَسْكَتَهُ أَبُو بَكْرٍ، وَكَانَ عُمَرُ يَقُولُ: وَاللَّهِ مَا أَرَدْتُ بِذَلِكَ إِلَّا أَنِّي قَدْ هَيَّأْتُ كَلاَمًا قَدْ أَعْجَبَنِي، خَشِيتُ أَنْ لاَ يَبْلُغَهُ أَبُو بَكْرٍ، ثُمَّ تَكَلَّمَ أَبُو بَكْرٍ فَتَكَلَّمَ أَبْلَغَ النَّاسِ، فَقَالَ فِي كَلاَمِهِ: نَحْنُ الأُمَرَاءُ وَأَنْتُمُ الوُزَرَاءُ، فَقَالَ حُبَابُ بْنُ المُنْذِرِ: لاَ وَاللَّهِ لاَ نَفْعَلُ، مِنَّا أَمِيرٌ، وَمِنْكُمْ أَمِيرٌ، فَقَالَ أَبُو بَكْرٍ: لاَ، وَلَكِنَّا الأُمَرَاءُ، وَأَنْتُمُ الوُزَرَاءُ، هُمْ أَوْسَطُ العَرَبِ دَارًا، وَأَعْرَبُهُمْ أَحْسَابًا، فَبَايِعُوا عُمَرَ، أَوْ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ، فَقَالَ عُمَرُ: بَلْ نُبَايِعُكَ أَنْتَ، فَأَنْتَ سَيِّدُنَا، وَخَيْرُنَا، وَأَحَبُّنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ عُمَرُ بِيَدِهِ فَبَايَعَهُ، وَبَايَعَهُ النَّاسُ، فَقَالَ قَائِلٌ: قَتَلْتُمْ سَعْدَ بْنَ عُبَادَةَ، فَقَالَ عُمَرُ قَتَلَهُ اللَّهُ "،

(நபியவர்கள் மரணித்த போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, "எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் "அல்லாஹ் (என்றும்) உயிராய் இருப்பவன்; அவன் இறக்க மாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்'' என்று சொன்னார்கள். மேலும், "(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே' என்னும் (39:30) இறை வசனத்தையும், "முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்' என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

நூல்: புகாரி 3668

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்று அன்பின் மேலிட்டால் கருதிய நபித்தோழர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் சான்றுகளை எடுத்துக் காட்டிய பின்னர் தமது முடிவை மாற்றிக் கொண்டார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள்; உயிருடன் இல்லை என்பதை நபித்தோழர்கள் உறுதியாக அறிந்து கொண்ட காரணத்தினால் தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆட்சியாளராக ஒருமித்து ஏற்றுக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மாக்களின் உலகில் தான் உயிரோடு உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி மரணித்த அனைவரும் ஆன்மாக்களின் உலகில் உயிருடன் தான் உள்ளனர். இவ்வுலகைப் பொருத்தவரை அவர்களுக்கு எந்தத் தொடர்பும் உறவும் இல்லை என்பதுதான் இஸ்லாத்தின் நிலைபாடாகும்.

உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்!

கைப்பற்றப்பட்ட மனிதனின் உயிர்களைத் தனது கட்டுப்பாட்டில் இறைவன் வைத்திருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 39:42

தூக்கத்தின் போதும், மரணிக்கும் போதும் உயிர்களைக் கைப்பற்றிக் கொள்ளும் இறைவன் தூக்கத்தில் கைப்பற்றப்பட்ட உயிர்களை இவ்வுலகில் செயல்படும் வகையில் விட்டு விடுகிறான். மரணித்தவர்களின் உயிர்களை இவ்வுலகுக்கு வர முடியாமல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறான் என்பதை இவ்வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இறந்தவர்களின் ஆவிகள் தமது வீடுகளைச் சுற்றிக் கொண்டு இருக்கும் என்றும், மகான்களை நினைவு கூறும் சபைகளில் அவர்களின் உயிர்கள் அங்கே வருகை தரும் என்றும் நம்புவதற்கு மறுப்பாக இவ்வசனம் அமைந்துள்ளது.

இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்து, ஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.

மீற முடியாத தடுப்பு!

மரணித்தவர்களின் உயிர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இறைவன் அவை இவ்வுலக்குக்கு வரமுடியாதவாறு தடையை ஏற்படுத்தியுள்ளான் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

திருக்குர்ஆன் 23:99, 100

இறந்தவர்கள் ஆன்மாக்களின் உலகுக்குச் சென்ற பின் அவர்கள் இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் கொள்ள முடியாத வகையில் ஒரு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு  விடும் என்று இவ்வசனம் கூறுகிறது.

மனித உயிர்களை இறைவன் கைப்பற்றிக் கொள்ளும் போது, நல்லறங்கள் செய்வதற்காக மீண்டும் என்னை உலகிற்கு அனுப்பி வை என்று மனிதன் ஒரு கோரிக்கை வைக்கிறான். அந்தக் கோரிக்கை ஏற்கப்படாது என்று இறைவன் மறுக்கிறான்.

ஆன்மாக்களின் உலகில் நபிமார்கள் மட்டுமல்லாமல் இறந்து விட்ட நல்லவர்கள் - தீயவர்கள் என அனைவருமே உயிருடன் தான் உள்ளார்கள். தீயவர்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள். நல்லோர்கள் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். நபிமார்கள் மேலான உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்.

ஆனால் ஆன்மாக்களின் உலகில் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் இவ்வுலகில் உள்ளதைப் போன்று இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கு இவ்வசனம் சான்றாக உள்ளது.

நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் கட்டுக்காவல்

நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது எல்லா நேரமும் அல்லாஹ்வில் கட்டுக்காவல் இருக்கிறது என்று நபிமொழிகளிலும் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري 1379 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ أَحَدَكُمْ إِذَا مَاتَ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ [ص:100] بِالْغَدَاةِ وَالعَشِيِّ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الجَنَّةِ فَمِنْ أَهْلِ الجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، فَيُقَالُ: هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ القِيَامَةِ "

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப்படும். அவர் நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி 1290, 3001, 6034

நல்லடியார்களும், தீயவர்களும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். தினமும் காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் மறுமையில் அவர்கள் அடையவிருக்கின்ற சொர்க்கமும், நரகமும் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று இந்த ஹதீஸ் கூருகிறது.

சுதந்திரமாகச் சுற்றித் திரியுமாறு ஆவிகள் விடப்படவில்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள்

மனிதன் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட உடன் என்ன நடக்கிறது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளனர்.

سنن الترمذي 1071 - حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا قُبِرَ المَيِّتُ - أَوْ قَالَ: أَحَدُكُمْ - أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ، يُقَالُ لِأَحَدِهِمَا: الْمُنْكَرُ، وَلِلْآخَرِ: النَّكِيرُ، فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: مَا كَانَ يَقُولُ: هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ هَذَا، ثُمَّ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا فِي سَبْعِينَ، ثُمَّ يُنَوَّرُ لَهُ فِيهِ، ثُمَّ يُقَالُ لَهُ، نَمْ، فَيَقُولُ: أَرْجِعُ إِلَى أَهْلِي فَأُخْبِرُهُمْ، فَيَقُولَانِ: نَمْ كَنَوْمَةِ العَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ، وَإِنْ كَانَ مُنَافِقًا قَالَ: سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ، فَقُلْتُ مِثْلَهُ، لَا أَدْرِي، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ ذَلِكَ، فَيُقَالُ لِلأَرْضِ: التَئِمِي عَلَيْهِ، فَتَلْتَئِمُ عَلَيْهِ، فَتَخْتَلِفُ فِيهَا أَضْلَاعُهُ، فَلَا يَزَالُ فِيهَا مُعَذَّبًا حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ "

இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும், நீலநிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) "இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?'' என்று கேட்பார்கள். "அவர் அல்லாஹ்வின் தூதரும்  அவனது அடியாருமாவார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்'' என்று அந்த மனிதர் கூறுவார். "உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று அம்மலக்குகள் கூறுவார்கள். பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளிமயமாக்கப்படும். பின்னர் அவரை நோக்கி, "உறங்குவீராக'' என்று கூறப்படும்.

நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், "நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், "இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறுவான். அதற்கு அவ்வானவர்கள், "நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவார்கள். அதன் பின்னர் பூமியை நோக்கி, "இவனை நெருக்குவாயாக'' என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதீ 991

நல்லவர்களின் ஆவிகளானாலும், கெட்டவர்களின் ஆவிகளானாலும் அவை ஒருக்காலும் உலகுக்கு வர முடியாது. உலகில் உள்ளவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாது என்பதை இந்த ஹதீஸ் அழுத்தம் திருத்தமாக இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் தெளிவுபடக் கூறுகிறது.

மண்ணறை விசாரணை சில நிமிடங்களில் முடிந்த பின் நல்லவரின் மண்ணறை ஒளி வீசும் வகையில் விசாலமாக்கப்பட்டு உறங்குமாறு நல்லடியாருக்குக் கட்டளையிடப்படும் என்று கூறப்படுகிறது.

தன்னை அல்லாஹ் பொருந்திக் கொண்டதையும், முதல் பரீட்சையில் தான் தேறிவிட்டதையும் அறிந்து கொண்ட நல்லடியார், இந்த நற்செய்தியை எனது உறவினருக்குச் சொல்லி விட்டு வருகிறேன் என அனுமதி கேட்கிறார்.

அனுமதி மறுக்கப்பட்டதுடன் புதுமாப்பிள்ளை போல் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல் எனக் கூறப்படுகிறது. இது சில மணி நேர உறக்கம் அல்ல. நியாயத்தீர்ப்பு நாள் வரை நீடிக்கும் உறக்கமாகும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

நல்லடியார் யார் என்பதை நாம் அறிய முடியாது. ஆனாலும் சிலரை நாமாக மகான்கள் என முடிவு செய்து கொள்கிறோம். அந்த முடிவு சரியானது என்று வைத்துக் கொண்டாலும் அவர்களை அழைக்கவோ, பிரார்த்திக்கவோ முடியாது என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.

ஏனெனில் நல்லவர்கள் கியாமத் நாள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் எனும்போது நமது அழைப்பை எவ்வாறு அவர்கள் செவியுற முடியும்? எவ்வாறு நமக்கு உதவ முடியும்? ஆழ்ந்த உறக்க நிலையில் இருப்பவர்கள் எப்படி நமக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேச முடியும்?

கெட்டவர்களின் ஆவிகள் பேய்களாக உலகில் திரிகின்றன என்ற நம்பிக்கைக்கும் இந்த ஹதீஸ் பகிரங்க மறுப்பாக அமைந்துள்ளது.

ஏனெனில் அவர்கள் கியாமத் நாள் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டு அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே அவர்கள் இவ்வுலகுக்கு வந்து ஆட்டம் போட முடியாது என்பதும் இந்த ஹதீஸில் இருந்து தெரிகிறது.

முடிவுக்கு வரும் செயல்பாடுகள்!

மனிதன் மரணித்து விட்டால் மூன்று விஷயங்கள் தவிர அவனது எல்லா செயல்பாடுகளும் முடிவுக்கு வரும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பினவருமாறு விளக்கியுள்ளனர்.

صحيح مسلم مشكول 14 - (1631) حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ يَعْنِي ابْنَ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ هُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ "

மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3358

நிலைத்திருக்கும் வகையிலான தர்மங்களைச் செய்து விட்டு ஒருவன் மரணித்து விட்டால், மற்றவர்கள் அதில் பயன் பெறும்போதெல்லாம் இவனுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. கிணறு வெட்டுதல், மரம் நடுதல், நிழற்குடை அமைத்தல் போன்றவற்றைப் பொதுப் பயன்பாட்டுக்கு விட்டுச் செல்வது தான் நிலையான தர்மம் எனப்படும்.

இவற்றைச் செய்தவன் மரணித்து விட்டாலும் இவற்றில் மக்கள் பயனடையும் காலம் வரை இவனுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. ஆகையால் இந்த விஷயத்தில் இவனது செயல்பாடு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

பயனுள்ள கல்வியைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்து ஒருவன் மரணித்து விட்டால் அவனிடம் கற்றவர்கள் மூலம் மற்றவர்கள் பயனடைவார்கள். யாரெல்லாம் இவ்வாறு பயனடைகிறார்களோ அவர்களின் அந்த நன்மையில் இவனுக்கும் ஒரு பங்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த வகையில் இவனது செயல்பாடு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

தனது பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து விட்டு ஒருவன் மரணித்து விட்டால் அந்தப் பிள்ளை இவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் போது அதனால் இவனுக்கு நன்மைகள் சேர்கின்றன. எனவே இந்த விஷயத்திலும் அவனது செயல்பாடுகள் முடிவுக்கு வரவில்லை.

இம்மூன்றைத் தவிர மனிதனின் எல்லா செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்டார்கள்.

இறந்தவர் அல்லாஹ்விடம் நல்லடியாராக இருந்தால் கூட அவரால் நமக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்பதை இந்த ஹதீஸிலிருந்தும் அறியலாம்.

மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது

மனிதன் மரணித்த பின்னும் இவ்வுலகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், இவ்வுலகில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மரணித்தவர் நல்லடியாராக இருந்தால் அவர் நமது தேவைகளை நிறைவேற்றுவார் என்றும் மார்க்கம் அறியாத சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் காரணமாகவே தர்காக்களில் வழிபாடுகளும் நடத்துகின்றனர்.

மரணித்தவர் மகானாகவே இருந்தாலும் இவ்வுலகில் என்ன நடக்கிறது என்ற அறிவு கூட அவர்களுக்கு இருக்காது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி 'நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!' என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். 'நீங்கள் எங்களை வணங்கவே இல்லை' என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். 'எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்' என்றும் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 10:29

மரணித்தவர்களை இறைநேசர்கள் என்று கருதி அவர்களை வழிபாடு செய்பவர்களுக்கு இவ்வசனம் மரண அடியாக அமைந்துள்ளது.

மகான்கள்  நமக்கு உதவுவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இவர்கள் வணங்கியதும், பிரார்த்தித்ததும், காணிக்கை செலுத்தியதும் இன்னும் இவர்கள் செய்த எந்த வணக்கமும் அந்த மகான்களுக்குத் தெரியவே தெரியாது இவ்வசனம் கூறுகின்றது.

'நீங்கள் எங்களை வணங்கவே இல்லை;  ஒரு வேளை நீங்கள் எங்களை வணங்கி இருந்தால் அது எப்படி எங்களுக்குத் தெரியும்? எனவே நீங்கள் எங்களை வணங்கியது எங்களுக்குத் தெரியாது என்று மறுத்து விடுவார்கள்.

வணங்கியதும், பிரார்த்தித்ததும் அவர்களுக்குத் தெரியாது என்றால் எப்படி அவர்களால் நமக்கு உதவ முடியும் என்பதைச் சிந்தித்தால் சமாதிகளையும், இறந்தவர்களையும் யாரும் வணங்கவே மாட்டார்கள்.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:21

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

திருக்குர்ஆன் 46:5,6

இவ்வசனங்களை ஒன்றுக்குப் பல முறை வாசித்துப் பாருங்கள்!

கியாமத் நாள் வரை அழைத்தாலும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்று இதில் கூறப்பட்டுள்ளது. கியாமத் நாள் வரை அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எனவே அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் அவர்களை அழைத்தால் அவர்கள் பதில் தர முடியாது என்பதையும், அவர்களால் நமக்கு உதவ முடியாது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அறிவீனர்கள் தங்களைப் பிரார்த்தித்து வந்தனர் என்ற விஷயமே மறுமையில் அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டும் போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது என்பதையும் இவ்வசனத்தில் இருந்து அறியலாம்.

அது மட்டுமின்றி இவர்கள் எங்களை வணங்கவே இல்லை; அவர்கள் எங்களை வணங்கி இருந்தால் அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று கூறி கைவிரித்து விடுவார்கள் என்பதையும் இவ்வசனத்தில் இருந்து அறியலாம்.

இறந்தவர்களின் நிலை குறித்து படைத்த இறைவன் சொல்வதை நம்புவதா? மார்க்கத்தை அறியாத மூடர்கள் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளை நம்புவதா என்று சிந்தித்துப் பாருங்கள்!

நபிமார்களுக்கும் இவ்வுலகில் நடப்பது தெரியாது.

மனிதர்களில் மிகச் சிறந்தவர்களும், அல்லாஹ்வின் நல்லடியார்களில் முதல் நிலையில் இருப்பவர்களும் நபிமார்களே! நபிமார்கள் இவ்வுலகில் வாழும் போது அவர்களைப் பின்பற்றிய மக்களில் அதிகமானவர்கள், நபிமார்களின் மரணத்திற்குப் பின் வழிகெட்டுப் போனார்கள். நபிமார்களையே கடவுளாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஆனால் தமது சமுதாயம் வழிகெட்டுப் போனது மரணித்த நபிமார்களுக்குத் தெரியாது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துவதைக் காணுங்கள்!

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் 'உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?' என்று கேட்பான். 'எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்' என்று அவர்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 5:109

உங்கள் பிரச்சாரத்தை மக்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டனர் அல்லாஹ் கேட்கும் போது அது பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது; அல்லாஹ்வாகிய உனக்குத்தான் தெரியும் என நபிமார்கள் கூறுவார்கள்.

இதிலிருந்து தெரிய வருவது என்ன? ஆன்மாக்களின் உலகில் நபிமார்கள் உயிருடன் இருந்தாலும் இவ்வுலகில் என்ன நடக்கிறது? தமது கொள்கைகளை ஏற்றவர்கள் யார்? தலைகீழாகப் புரட்டியவர்கள் யார் என்ற விபரத்தை அவர்களால் அறிய முடியவில்லை என்பது தெரிகிறது. நபிமார்களின் நிலையே இது என்றால் அவர்களை விட தகுதியில் குறைந்த சாதாரணமான நல்லடியார்களுக்கு இவ்வுலகில் நடப்பது எப்படித் தெரியும்? அவர்கள் எப்படி நமது பிரார்த்தனையை அறிவார்கள்? எப்படி உதவுவார்கள்? குர்ஆன் மீது நம்பிக்கை உள்ள யாரும் இப்படிக் கருத மாட்டார்கள்.

மரணித்தவர்கள் செவியுற முடியாது

இவ்வுலகில் மனிதர்கள் பேசிக் கொள்வதை மரணித்தவர்களால் செவியுற முடியாது. தங்களையே ஒருவர் அழைத்தாலும் அவர்களால் அதைச் செவியுற முடியாது. இதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறது.

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

இறந்தவர்கள் செவியுற முடியாது என்று கூறுவதுடன்  நன்கறிந்த என்னைப் போல் உமக்கு யாரும் அறிவிக்க முடியாது என்றும் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மரணித்தவரின் நிலை என்ன என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். ஆன்மாக்களின் உலகில் என்ன நடக்கிறது என்பதை எந்த மனிதரும் அறிய முடியாது. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ்வாகிய நான் கூறுகிறேன் என அல்லாஹ் கூறுகிறான்.

மகான்கள் எங்கள் கோரிக்கையைச் செவிமடுத்து ஆவண செய்வார்கள் என்று கட்டுக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு நம்புகிறீர்களே இது பற்றி அறிந்தவர்கள் நீங்களா? அல்லாஹ்வாகிய நானா? என அருமையாக அல்லாஹ் இதைப் புரிய வைக்கிறான். இதற்கு மாற்றமான கருத்து கொள்வோர் அல்லாஹ்வை விட தங்கள் முன்னோர்கள் இது குறித்து நன்கு அறிந்தவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

'நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது'

திருக்குர்ஆன் 30:52

(நபியே!) இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது.

திருக்குர்ஆன் 27:80

(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உம்மால் செவியேற்கச் செய்ய முடியாது.

திருக்குர்ஆன் 35:22

சாதாரண மனிதர்கள் இறந்தவர்களை அழைப்பது கிடக்கட்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்தவர்களை அழைத்தால் கூட இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்ற கருத்தை இவ்வசனம் அழுத்தமாகக் கூறி இருக்கும் போது சமாதி வழிபாட்டுக் கூட்டம் இதற்கு ஒரு வியாக்கியானம் கொடுத்து இதன் அர்த்தத்தை அனர்த்தமாக்குகிறது.

அவர்கள் கூறுவது இதுதான்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னபோது அதைச் சிலர் ஏற்கவில்லை. அவ்வாறு ஏற்காதவர்கள் குறித்துத் தான் இவ்வசனம் பேசுகிறது. உங்கள் போதனையை மரணித்த உள்ளம் கொண்ட இவர்கள் செவியுற மாட்டார்கள் என்ற கருத்தில் தான் இது சொல்லப்பட்டுள்ளது. மரணித்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது பற்றி இவ்வசனம் பேசவில்லை எனக் கூறுகின்றனர்.

மரணித்த உள்ளம் கொண்டவர்களைத் தான் இவ்வசனத்தில் இறந்தவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்பது உண்மைதான்.

இறந்தவர்களுக்கு எவ்வாறு காது கேட்காதோ அது போன்ற நிலையில் காஃபிர்களும் உள்ளனர். எனவே தான் இறந்தவர்களின் நிலையுடன் இவர்களின் நிலையை ஒப்பிட்டு அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

காஃபிர்களை இறந்தவர்களுடன் ஒப்பிட்டுக் கூறி இருப்பதில் இறந்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்து இன்னும் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

மேலும் மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எப்படி செவியேற்க மாட்டார்களோ அது போல் இவர்களும் உமது போதனையைச் செவியுற மாட்டார்கள் என்று கூறப்படுவதும் இதே அடிப்படையில் தான்.

அதிகம் பேசாமல் இருக்கும் ஒருவரைப் பற்றி நாம் பேசும்போது இந்த ஊமையனை யாரும் பேச வைக்க முடியாது எனக் கூறுவோம். ஊமையாக இல்லாத, அதிகம் பேசாத மனிதனைப் பற்றித்தான் நாம் இப்படிக் கூறுகிறோம். ஊமையைப் பற்றிப் பேசவில்லை.

ஊமை பேச மாட்டான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத விஷயமாக உள்ளதால் அது போல் இவனும் இருக்கிறான் என்ற கருத்தில் இவ்வாறு பேசுகிறோம். இந்த மனிதனாவது எப்போதாவது பேசிவிடுவான். ஆனால் உதாரணமாகக் காட்டப்படும் ஊமை எப்போதும் பேச மாட்டான்.

அது போல் தான் இந்த உதாரணமும் அமைந்துள்ளது. செத்தவன் எப்படி செவியுற மாட்டானோ அது போன்ற நிலையில் இவர்கள் உள்ளனர். எனவே உமது போதனையைச் செவியுற மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இது உதாரணம் தான்; எனவே இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதை இது மறுக்க உதவாது என்று யாரேனும் கூறினால், அல்லாஹ் இந்த உதாரணத்தைத் தவறாகக் கூறி விட்டான் என்று சொல்ல வருகின்றார்கள்.

இந்த வசனத்தில் உதாரணமாக அல்லாஹ் கூறினாலும் இதுவல்லாத எத்தனையோ வசனங்களில் இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று நேரடியாகக் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். 'எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:21

இந்த வசனத்தில், இறந்தவர்கள் என்பதை உவமையாகக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ் கூறுகின்றான். இறந்தவர்கள் என்று மட்டும் கூறாமல், உயிருடன் இருப்பவர்கள் அல்லர் என்றும் சேர்த்துக் கூறுகின்றான். இதற்கு வேற்றுப் பொருள் கொடுக்கவே முடியாது.

இறந்த பின் எதையும் அறியாத நல்லடியார்

முந்தைய காலத்தில் ஒரு மனிதருக்கு அல்லாஹ் ஏற்படுத்திய அதிசய அனுபவத்தைப் பின்வரும் வசனத்தில் எடுத்துக் காட்டுகிறான்.

அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. "இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து "எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். "அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது "அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார்.

திருக்குர்ஆன் 2:259

நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான். மரணித்தபின் அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே கிடந்தது. பின்னர் அவருக்கு உயிர் கொடுத்து அல்லாஹ் எழுப்பி எவ்வளவு நாளை இந்த நிலையில் கழித்திருப்பீர் என்று கேட்கிறான். அதற்கு அவர் அளித்த பதில் என்ன? ஒரு நாள் அல்லது அதைவிட குறைவான நேரம் என்று அவர் பதிலளிக்கிறார்.

இப்படி அல்லாஹ்வால் மரணிக்கச் செய்யப்பட்டவர் அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற நல்லடியாராகத் தான் இருக்க முடியும்.

இப்ராஹீம் நபியவர்கள் இறைவா மரணித்தவர்களை எவ்வாறு நீ உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்குக் காட்டு எனக் கேட்டார்கள். அல்லாஹ் பறவைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பிக் காட்டினான். இந்தச் சம்பவம் இதற்கு அடுத்த வசனத்தில் கூறப்படுகிறது.

இறந்தவர்களை அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான் என்பதை அறிய நல்லடியார்கள் ஆவல் கொள்ளும் போது அவர்களுக்கு அல்லாஹ் செய்முறை விளக்கம் அளித்துள்ளான்.

இதுபோல் தான் இந்தச் சம்பவத்தில் கூறப்படுபவரும் நல்லடியாராகத் தான் இருக்க முடியும். அதனால் தான் அவருடன் அல்லாஹ் உரையாடி தனது வல்லமையை அவருக்குப் புரிய வைக்கிறான்.

நல்லடியாராக இருந்தும் தற்காலிகமாக மரணமடைந்த அவர் நூறு ஆண்டுகளைக் கடந்துள்ளதை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. காரணம் அவர் மரணித்து விட்டார் என்பதுதான்.

ஒரு நாள் தூங்கியதாகவே அவர் நினைக்கிறார். பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவரால் அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மேலும் இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் இவர் நல்லடியார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத்தான் இருப்பார்கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே சமாதிகளில் வழிபாடுகள் நடத்துவோருக்கு எதிராக இந்த ஒரு வசனமே போதுமானதாகும்.

குகை வாசிகளுக்கு ஒன்றும் தெரியவில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த இளைஞர்களுக்குப் பல்வேறு துன்பங்களைக் கொடுத்தனர். தமது சமுதாயத்துக்குப் பயந்து அவர்கள் ஒரு குகையில் போய்ப் பதுங்கினார்கள். பதுங்கிய அவர்களை அல்லாஹ் பல ஆண்டுகள் தூங்க வைத்தான். அந்தத் தலைமுறையினர் அழிந்த பின்னர் அவர்களை அல்லாஹ் எழுப்பினான் என்ற வரலாறைத் திருக்குர்ஆன் கூறுகிறது. அந்த வரலாறும் நல்லடியார்கள் தூங்கும் போது எதையும் அறிந்து கொள்ள முடியாது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். "எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்?'' என்று அவர்களில் ஒருவர் கேட்டார். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்'' என்று (மற்றவர்கள்) கூறினர். "நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்'' என்றும் கூறினர். அவர்கள் உங்களைக் கண்டு கொண்டால் உங்களைக் கல்லால் எறிந்து கொல்வார்கள்! அல்லது அவர்களின் மார்க்கத்தில் உங்களை மீண்டும் சேர்த்து விடுவார்கள். அப்போது ஒருக்காலும் வெற்றி பெற மாட்டீர்கள்!

திருக்குர்ஆன் 18:19,20

இவர்கள் மிகச் சிறந்த நல்லடியார்களாக இருந்தும் எத்தனை ஆண்டுகள் உறக்க நிலையில் இருந்தனர் என்பதை அவர்கள் அறியவில்லை. அதற்கு நெருக்கமான கால அளவைக் கூட அவர்கள் கூற முடியவில்லை. ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவான நாட்கள் தான் நாம் தூங்கி இருப்போம் என்று கூறுகின்றனர்.

மேலும் தமது காலத்து மக்கள் அனைவரும் மரணித்து அடுத்த தலைமுறை மக்கள் தான் தற்போது ஊரில் உள்ளனர் என்பதையும் அறியவில்லை. ஊருக்குள் யாரும் அறியாவண்ணம் சென்று உணவு வாங்கி வருமாறு கூறுகின்றனர். தமது ஊரில் என்ன நடக்கிறது என்பதும் தாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்பதும் இவர்களுக்குத் தெரியவில்லை.

உறக்க நிலையில் உள்ள போது இந்த நல்லடியார்களுக்கு உலகில் நடப்பது ஒன்றும் தெரியவில்லை எனும் போது மரணித்தவர்கள் எப்படி உலகில் நடப்பதை அறிய முடியும்?

மரணித்தவர்களுக்கு இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று இவ்வளவு தெளிவாக அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவுபடுத்திய பின்பும் மரணித்தவர்கள் நமக்கு உதவுவார்கள் என்றும், அவர்களை நினைவு கூறும் சபைக்கு வருகை தருவார்கள் எனவும் சிலர் வாதிடுகின்றனர். சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால் அவை இவர்களின் வாதத்தை நிறுவ உதவாது என்பதே உண்மை.

அவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களையும், வாதங்களையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா?

நன்மக்கள் மரணித்தாலும் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற தவறான கொள்கையுடையோர் பின்வரும் வசனங்களைத் தமது தீய கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:154

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நற்பேறு மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

திருக்குர்ஆன் 3:169, 170, 171

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பது எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சாதாரண அறிவு படைத்தவனும் அறிந்து கொள்ள முடியும்.

அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற சொல் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதைச் சொல்கிறது. கொல்லப்பட்ட பின் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டது, அவர்களின் சொத்துக்களை அவர்களின் வாரிசுகள் பிரித்துக் கொண்டது, அவர்களின் மனைவிமார்கள் மறுமணம் செய்து கொண்டது ஆகிய அனைத்தும் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கும் போது இறந்தவர்கள் என்று சொல்லக் கூடாது என்று கூறப்பட்டால் அது வேறு அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வுலகைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டாலும் ஆன்மாக்களின் உலகில் அல்லாஹ்விடம் அவர்கள் வேறு விதமான உயிருடன் உள்ளனர் என்ற கருத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது பளிச்சென்று தெரிகின்றது.

நல்லடியார்கள் மட்டுமின்றி கெட்டவர்களும் ஆன்மாக்களின் உலகில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டு உள்ளனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அப்படியானால் அவர்களும் உயிருடன் தான் உள்ளனர்.

மரணித்த யாராக இருந்தாலும் அவர்கள் இவ்வுலகைப் பொருத்த வரை மட்டுமே மரணித்தவர்கள். ஆன்மாக்களின் உலகில் வேறு விதமான உயிர் பெற்றவர்களாக உள்ளனர். இந்த அடிப்படையை விளங்காமல் இவ்வசனங்களைத் தமது தவறான கொள்கைக்கு ஆதாரமாக காட்டி வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்.

இந்த வசனங்களுக்குள்ளேயே இதன் கருத்து என்ன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

2:154 வசனத்தில் "அவர்கள் உயிருடன் உள்ளனர்'' என்பதுடன் "எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்'' என்று சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் உயிருடன் இருப்பது நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்பதுதான் இதன் கருத்தாகும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது..

3:169 வசனமும், அதைத் தொடர்ந்து வரும் நான்கு வசனங்களும் இதை இன்னும் தெளிவாகக் கூறுகின்றன.

3:169 வசனம் "தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்'' எனக் கூறுகிறது. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் என்பது இதன் கருத்தாகும்.

அடுத்த வசனங்களில் (3:170, 171) அவர்களுக்கு இறைவன் வழங்கியுள்ள பாக்கியங்களை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மறுமை வாழ்க்கையில் அல்லாஹ் வழங்கும் இன்பங்களை அனுபவித்துக் கொண்டுள்ளனர் என்பது தான் இதன் கருத்து என்பதும், இது போன்ற இன்பங்கள் கிடைக்க உள்ளதால் அல்லாஹ்வுக்காக உயிர் தியாகம் செய்ய முஸ்லிம்கள் தயங்கக் கூடாது என்பதைச் சொல்வதற்காகவே இவ்வசனம் அருளப்பட்டது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

இவ்வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் முக்கியமானது.

صحيح مسلم 121 - (1887) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، كِلَاهُمَا عَنْ أَبِي مُعَاوِيَةَ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، جَمِيعًا، عَنِ الْأَعْمَشِ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا أَسْبَاطٌ، وَأَبُو مُعَاوِيَةَ، قَالَا: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: سَأَلْنَا عَبْدَ اللهِ عَنْ هَذِهِ الْآيَةِ: {وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ} [آل عمران: 169] قَالَ: أَمَا إِنَّا قَدْ سَأَلْنَا عَنْ ذَلِكَ، فَقَالَ: «أَرْوَاحُهُمْ فِي جَوْفِ طَيْرٍ خُضْرٍ، لَهَا قَنَادِيلُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، تَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شَاءَتْ، ثُمَّ تَأْوِي إِلَى تِلْكَ الْقَنَادِيلِ، فَاطَّلَعَ إِلَيْهِمْ رَبُّهُمُ اطِّلَاعَةً»، فَقَالَ: " هَلْ تَشْتَهُونَ شَيْئًا؟ قَالُوا: أَيَّ شَيْءٍ نَشْتَهِي وَنَحْنُ نَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شِئْنَا، فَفَعَلَ ذَلِكَ بِهِمْ ثَلَاثَ مَرَّاتٍ، فَلَمَّا رَأَوْا أَنَّهُمْ لَنْ يُتْرَكُوا مِنْ أَنْ يُسْأَلُوا، قَالُوا: يَا رَبِّ، نُرِيدُ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى، فَلَمَّا رَأَى أَنْ لَيْسَ لَهُمْ حَاجَةٌ تُرِكُوا "

அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நாங்கள் கேட்டபோது "அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம் 3834

நியாயத் தீர்ப்புக்குப் பிறகுதான் நல்லோர் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் உயிர்த்தியாகிகள் மட்டும் இறந்த உடன் சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் மனித வடிவில் இல்லாமல் பச்சை நிறப் பறவைகளாக சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாக இதை விளக்கிய பிறகும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு சிலர் நேரடிப் பொருள் செய்து வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் கொடுத்த அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இல்லை.

அல்லாஹ்வின் பாதையில் தான் ஒருவர் கொல்லப்பட்டார் என்பதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதால் இவர்கள் கொடுக்கும் அர்த்தம் முற்றிலும் தவறு என்பது உறுதியாகிறது.

அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்று கொல்லப்பட்டாரா? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(இது குறித்து விரிவாக அறிய இறை நேசர்களை அறிந்து கொள்வது எப்படி என்ற நமது நூலைப் பார்க்கவும்.)

இறந்தவர்களை நோக்கி நபிகள் பேசியது ஆதாரமாகுமா?

பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களில் 24 தலைவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள். கிணற்றில் போடப்பட்ட அவர்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசினார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பது தெரிகின்றதே என்றும் சமாதி வழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர். அவர்களின் வாதம் சரியா என்பதை விபரமாகப் பார்ப்போம்.

صحيح البخاري 3976 - حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، سَمِعَ رَوْحَ بْنَ عُبَادَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، قَالَ: ذَكَرَ لَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ أَبِي طَلْحَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ يَوْمَ بَدْرٍ بِأَرْبَعَةٍ وَعِشْرِينَ رَجُلًا مِنْ صَنَادِيدِ قُرَيْشٍ، فَقُذِفُوا فِي طَوِيٍّ مِنْ أَطْوَاءِ بَدْرٍ خَبِيثٍ مُخْبِثٍ، وَكَانَ إِذَا ظَهَرَ عَلَى قَوْمٍ أَقَامَ بِالعَرْصَةِ ثَلاَثَ لَيَالٍ، فَلَمَّا كَانَ بِبَدْرٍ اليَوْمَ الثَّالِثَ أَمَرَ بِرَاحِلَتِهِ فَشُدَّ عَلَيْهَا رَحْلُهَا، ثُمَّ مَشَى وَاتَّبَعَهُ أَصْحَابُهُ، وَقَالُوا: مَا نُرَى يَنْطَلِقُ إِلَّا لِبَعْضِ حَاجَتِهِ، حَتَّى قَامَ عَلَى شَفَةِ الرَّكِيِّ، فَجَعَلَ يُنَادِيهِمْ بِأَسْمَائِهِمْ وَأَسْمَاءِ آبَائِهِمْ: «يَا فُلاَنُ بْنَ فُلاَنٍ، وَيَا فُلاَنُ بْنَ فُلاَنٍ، أَيَسُرُّكُمْ أَنَّكُمْ أَطَعْتُمُ اللَّهَ وَرَسُولَهُ، فَإِنَّا قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا، فَهَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا؟» قَالَ: فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، مَا تُكَلِّمُ مِنْ أَجْسَادٍ لاَ أَرْوَاحَ لَهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا أَقُولُ مِنْهُمْ»، قَالَ قَتَادَةُ: أَحْيَاهُمُ اللَّهُ حَتَّى أَسْمَعَهُمْ، قَوْلَهُ تَوْبِيخًا وَتَصْغِيرًا وَنَقِيمَةً وَحَسْرَةً وَنَدَمًا

பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள்.  அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, "இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் அடைந்து கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்ததை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?'' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை இவர்களை விட நீங்கள் நன்கு செவியேற்பவர்களாக இல்லை'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி)

நூல் : புகாரி 3976

உயிருடன் உள்ளவர்களை விட பாழுங்கிணற்றில் போட்டப்பட்டவர்கள் நன்கு செயுறுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் இறந்தவர்கள் இவ்வுலகில் பேசுவதைச் செவியுறுகிறார்கள் என்பது சமாதி வழிபாட்டுக்காரர்களின் வாதமாகும்.

இது குறித்து இந்த ஒரே ஒரு ஆதாரம் மட்டும் இருந்து இதற்கு மாற்றமாக வேறு ஆதாரம் ஏதும் இல்லாவிட்டால் இறந்தவர்கள் செவியுறுவதற்கு ஆதாரமாக இதைக் கருதலாம்.

ஆனால் இறந்தவர்கள் இவ்வுலகில் நடக்கும் எதையும் அறிய மாட்டார்கள் என்றும், எதையும் செவியுற மாட்டார்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுவதை முன்னர் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அதற்கு முரணில்லாத கருத்தில் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

صحيح البخاري 3978 - حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ: ذُكِرَ عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ ابْنَ عُمَرَ رَفَعَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ المَيِّتَ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِبُكَاءِ أَهْلِهِ» فَقَالَتْ: وَهَلَ؟ إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ لَيُعَذَّبُ بِخَطِيئَتِهِ وَذَنْبِهِ، وَإِنَّ أَهْلَهُ لَيَبْكُونَ عَلَيْهِ الآنَ»، قَالَتْ: وَذَاكَ مِثْلُ قَوْلِهِ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى القَلِيبِ وَفِيهِ قَتْلَى بَدْرٍ مِنَ المُشْرِكِينَ، فَقَالَ لَهُمْ مَا قَالَ: «إِنَّهُمْ لَيَسْمَعُونَ مَا أَقُولُ» إِنَّمَا قَالَ: «إِنَّهُمُ الآنَ لَيَعْلَمُونَ أَنَّ مَا كُنْتُ أَقُولُ لَهُمْ حَقٌّ»، ثُمَّ قَرَأَتْ {إِنَّكَ لاَ تُسْمِعُ المَوْتَى} [النمل: 80]، {وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي القُبُورِ} [فاطر: 22] يَقُولُ حِينَ تَبَوَّءُوا مَقَاعِدَهُمْ مِنَ النَّارِ

உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: "குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள். இது ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் இவர் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்' என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று சொன்னார்கள்.

(மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இது எப்படியிருக்கிறதென்றால், "இணை வைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அவர்களிடம், "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது) "நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், "நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்'' என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்'' என்று நபியவர்கள் சொல்லவில்லை.)

 பிறகு, ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:

(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது.

திருக்குர்ஆன் 27:80

(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது.

திருக்குர்ஆன் 35:22

நூல் : புகாரி 3978

அறிகிறார்கள் என்பதற்கும், செவியுறுகிறார்கள் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

செவியுறுகிறார்கள் என்றால் நபிகள் நாயகம் பேசியது அவர்களின் காதுகளில் விழுந்தது என்று பொருள். செவியேற்க மாட்டார்கள் என்ற வசனத்துக்கு முரணாக இது அமைகிறது.

அறிகிறார்கள் என்றால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுபவித்து உணர்ந்தார்கள் என்று பொருள். செவியேற்க மாட்டார்கள் என்பதற்கு இது முரணாக அமையாது.

பாழும் கிணற்றில் அவர்கள் போடப்பட்ட பின் அவர்கள் ஆன்மாக்களின் உலகத்துக்குச் சென்று விட்டனர். இவ்வுலகில் தாம் தவறான மார்க்கத்தில் இருந்ததை அப்போது அறிந்து கொள்வார்கள். இதைத் தான் நபியவர்கள் சொன்னார்கள். செவியுறுகிறார்கள் என்று சொல்வது குர்ஆனுக்கு முரணாக உள்ளதால் அவ்வாறு நபியவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று காரணத்துடன் விளக்குகிறார்கள்.

குர்ஆனுக்கு முரணில்லாத வகையில் இன்னொரு விதமாகவும் விளக்கம் கொடுக்க இவ்வசனத்திலேயே வழி உள்ளது.

செவியுற மாட்டார்கள் என்று சொல்லும் வசனங்களில் அல்லாஹ் நாடியவரை செவியேற்கச் செய்வான். மரணித்தவரைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

தான் நாடும் போது செவியேற்கச் செய்வான் என்று கூறப்படுவதால் மக்காவின் இணைகற்பிப்பாளர்கள் மேலும் இழிவை அடைவதற்காக நபிகள் நாயகம் இவ்வாறு இடித்துரைத்ததைச் செவியேற்கச் செய்தான். அதை வஹீ மூலம் அறிந்து நபியவர்கள் சொன்னார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

அதாவது இது பாழும் கிணற்றில் போடப்பட்ட இவர்களுக்கு மாத்திரம் உரியது என்று புரிந்து கொண்டால் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கு இது முரண்படாது.

மரணித்தவர்களில் அல்லாஹ் நாடும் சிலர் தவிர மற்ற யாரும் செவியேற்க முடியாது. அல்லாஹ் யாருக்கு நாடுகிறான் என்பது வஹீயின் தொடர்பில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர யாரும் அறிய முடியாது.

மேலும் இது மகான்கள் செவியுறுவார்கள் என்பதற்கு ஆதாரமாகாது. அல்லாஹ்வின் எதிரிகளாக மரணித்தவர்களை மேலும் வேதனைப்படுத்துவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசியதை அல்லாஹ் கேட்கச் செய்தான் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு மகான்கள் செவியுறுகிறார்கள் என்று முடிவு செய்ய முடியாது.

செருப்போசையைக் கேட்குமா

மரணித்தவனின் உடலை அடக்கம் செய்து விட்டு, மக்கள் திரும்பும்போது அவர்களின் செருப்போசையை மரணித்தவர் செவியுறுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. அதை ஆதாரமாகக் கொண்டு மரணித்தவர்கள் அனைத்தையும் செவியுறுவார்கள் என்று சமாதிவழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர்.

இது குறித்து விபரமாகப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

صحيح البخاري 1338 - حَدَّثَنَا عَيَّاشٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ: وَقَالَ لِي خَلِيفَةُ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " العَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ، وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ، فَأَقْعَدَاهُ، فَيَقُولاَنِ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيُقَالُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الجَنَّةِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَيَرَاهُمَا جَمِيعًا، وَأَمَّا الكَافِرُ - أَوِ المُنَافِقُ - فَيَقُولُ: لاَ أَدْرِي، كُنْتُ أَقُولُ مَا يَقُولُ النَّاسُ، فَيُقَالُ: لاَ دَرَيْتَ وَلاَ تَلَيْتَ، ثُمَّ يُضْرَبُ بِمِطْرَقَةٍ مِنْ حَدِيدٍ ضَرْبَةً بَيْنَ أُذُنَيْهِ، فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ إِلَّا الثَّقَلَيْنِ "

ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து "முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?'' எனக் கேட்பர். அதற்கு "இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்'' என்பார். பிறகு "(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், "எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்'' என்பான்.  அப்போது அவனிடம் "நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.”

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 1338, 1374

இந்த ஹதீஸ் கூறுவது என்ன? அடக்கம் செய்ய வந்த மக்கள் அடக்கத் தலத்தில் பல விஷயங்களைப் பேசுவார்கள். அடக்கம் செய்யப்பட்டவர் குறித்தும் பேசுவார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்கள் அவற்றைக் கேட்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. செருப்போசையைக் கேட்கும் என்று தான் கூறினார்கள். முஸ்லிமில் உள்ள அறிவிப்பில் அவர்கள் திரும்பிச் செல்லும் போது ஏற்படும் செருப்போசையைக் கேட்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மக்களின் பேச்சுக்களைச் செவியுறுவார்கள் என்று கூறாமல் செருப்போசையைக் கேட்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அனைத்தையும் கேட்பார்கள் என்றால் இப்படி கூறமாட்டார்கள்.

உயிருடன் வாழும் ஒரு மனிதர் அனைத்தையும் செவியுறுவார் என்பதை நாம் அறிவோம். இவரைப் பற்றி பேசும் போது செருப்போசையைக் கேட்பார் என்று சொல்ல மாட்டோம். அனைத்தையும் கேட்பார் என்பதால் இப்படிக் கூறுவது பொருளற்றதாக ஆகும்.

ஆனால் கூர்மையான கேட்கும் திறன் உள்ளவர் என்பதைக் கூற நாம் விரும்பினால் கேட்க சாத்தியக் குறைவானதைக் குறிப்பிடுவோம். ஊசி விழும் சப்தத்தையும் இவர் கேட்பார் என்போம். இடியோசையைக் கேட்பார் என்று கூறமாட்டோம். அப்படிக் கூறினால் அதைத் தவிர வேறு எதையும் செவியுற மாட்டார் என்று தான் பொருள்.

உயிருடன் உள்ள ஒருவர் மண்ணுக்குள் சில நிமிடம் புதைக்கப்பட்டால் அவரால் மக்கள் பேசுவதைக் கேட்க முடியாது. ஏனெனில் பேசுவதைக் கேட்க காற்றின் ஊடுறுவல் இருக்க வேண்டும். ஆனால் அருகில் கார் ஓடும் போது எழுப்பும் அதிர்வலைகளை அவர் கேட்பார். பூமிக்குள் காற்று புகாவிட்டாலும் கார் ஓடும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக அதைக் கேட்க முடியும். அதிர்வுகளைக் கேட்டதால் பேசுவதையும் கேட்பார்கள் என்ற அர்த்தம் வராது.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பேச்சுக்களைச் செவியுறுவது பற்றிப் பேசாத இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அனைத்தையும் கேட்பார்கள் என்று அறிவுடையோர் வாதிட மாட்டார்கள்.

செருப்போசை என்பது எந்தக் கருத்தையும் சொல்லாத வெறும் சப்தமாகும். மனிதர்களின் பேச்சுக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் சப்தமாகும். மனிதர்களின் பேச்சைக் கேட்பார்கள் என்றால் அதைத் தான் நபியவர்கள் சொல்லி இருப்பார்கள்.

மேலும் செருப்போசையைக் கேட்பார்கள் என்பது கூட எப்போதும் நடக்கக் கூடியதல்ல. அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது எழும் செருப்போசையைக் கேட்பார்கள் என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்று முஸ்லிம் அறிவிப்பில் உள்ளதால் அந்த ஒரு தடவை மட்டும் தான் அதைக் கேட்பார்கள். அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்ற சொல்லுக்கு இதுதான் அர்த்தமாகும். எப்போதும் செருப்போசையைக் கேட்பார்கள் என்றால் அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்று நபியவர்கள் சொல்வார்களா?

நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்க நிலையில் வைக்கப்படுகிறார்கள் என்ற ஹதீஸை முன்னர் எடுத்துக் காட்டியுள்ளோம். ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றதால அவர்களால் எதையும் செவியுற முடியாது என்பதையும் விளக்கியுள்ளோம்.

செருப்போசையைக் கேட்பது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போவதற்கு முன் நடப்பதாகும் என்று மேற்கண்ட ஹதீஸில் இருந்தே அறியலாம். அடக்கம் செய்து மக்கள் திரும்பிச் செல்லும் ஓசையைச் செவியேற்ற பின்னர் தான் முன்கர் நகீர் எனும் வானவர்கள் விசாரணையை ஆரம்பிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்குப் பின்னர் தான் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் வைக்கப்படுகிறார்கள்.

அடக்கம் செய்ததற்கும், வானவர்கள் விசாரணையைத் துவக்குவதற்கும் இடைப்பட்ட குறுகிய நேரத்தில் தான் செருப்போசையைச் செவியேற்கிறார்கள். இப்படிச் சரியான முறையில் புரிந்து கொண்டால் அனைத்து ஆதாரங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகிறது.

மேலும் செருப்போசையைக் கேட்பது என்பது நல்லடியார்களுக்கு மட்டும் உரியது அல்ல. மரணிக்கும் அனைவருக்கும் உரியதாகும். காஃபிர்களுக்கும் உரியதாகும்.

இது மகான்களை வழிபடுவதற்கும் ஆதாரமாகாது. அனைத்தையும் செவியுறுகிறார்கள் என்பதற்கும் ஆதாரமாகாது.

சலவாத்தும் சலாமும் ஆதாரமாகுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூறுவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூறுமாறு 33:56 வசனத்தில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

அதிகமதிகம் தன் மீது சலவாத் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஆர்வமூட்டியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் சலவாத் கூறுவதில் இருந்து அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்று தெரிகிறதே என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூற வேண்டும் என்பது உண்மைதான். அது மிகச் சிறந்த வணக்கங்களில் ஒன்று தான். இதில் எந்த மறுப்பும் நமக்கு இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இவ்வுலகுடன் தொடர்பில் உள்ளனர் என்பதற்கும், இங்கே வருகை தருவார்கள் என்பதற்கும், நாம் கோருவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்பதற்கும் இதில் எந்த ஆதாரமும் இல்லை.

சலவாத் என்றால் நபிகள் நாயகத்தை  நோக்கி நாம் பேசுவது என்றும், அவர்களிடம் உதவி தேடுதல் என்றும் தவறாகப் புரிந்து கொண்டதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

சலவாத் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேண்டுவது அல்ல. மாறாக அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்று நாம் அல்லாஹ்விடம் செய்யும் பிரார்த்தனை தான் சலவாத்.

தொழுகைகளில் அத்தஹிய்யாத் எனும் இருப்பில் நாம் சொல்ல வேண்டிய சலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதை எல்லா முஸ்லிம்களும் தமது தொழுகைகளில் கூறி வருகின்றனர்.

அந்த சலவாத்தின் பொருளைப் பாருங்கள்!

இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ எவ்வாறு அருள் புரிந்தாயோ அது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக!

இது தான் இந்த சலவாத்தின் பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது தான் சலவாத் என்பதை இந்த அர்த்தமே நமக்குச் சொல்லி விடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டவுடன் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் என்று சொல்கிறோம். அல்லது அல்லாஹும்ம சல்லி வசல்லிம் வபாரிக் அலைஹி என்று சொல்கிறோம். இதன் பொருள் என்ன? இறைவா அவருக்கு (முஹம்மது நபிக்கு) அருள் புரிவாயாக என்பதுதான் இதன் பொருள்.

எந்த சலவாத்தை எடுத்துக் கொண்டாலும் அனைத்துமே நபிகள் நாயகத்துக்கு நாம் துஆச் செய்யும் வகையில் தான் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் அதிகம் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் வழியாகவே இந்த மார்க்கத்தை அல்லாஹ்  நமக்கு வழங்கினான். எனவே அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும்; மதிக்க வேண்டும் என்பது இயல்பாகும். அன்பு செலுத்துகிறோம்; மதிக்கிறோம் என்ற பெயரில் பிற சமுதாய மக்கள் எல்லை மீறியது போல் நாமும் எல்லை மீறக்கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த வழிமுறை தான் சலவாத்.

என்னை மதிப்பதாக இருந்தால் என்னை அழைக்கக் கூடாது; என்னிடம் பிரார்த்திக்கக் கூடாது; எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆச் செய்ய வேண்டும். அதுதான் சலவாத் என்று கற்றுத் தந்துள்ளார்கள்.

அவர்களுக்கு நாம் சலவாத் சொல்லும் இந்த நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்காமல் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தைத் தரவில்லை. அவர்கள் இவ்வுலகுக்குத் திரும்ப வருவார்கள் என்ற கருத்தையும் தரவில்லை. மரணித்த அவர்களுக்காக நாம் தான் துஆச் செய்ய வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையைத் தான் சலவாத் எனும் வணக்கம் அழுத்தமாகச் சொல்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் சொல்லும் சலவாத் எனும் துஆ அவர்களின் காதில் விழுமா? ஆன்மாக்களின் உலகில் அவர்கள் உயிருடன் இருந்தாலும் நாம் கூறும் சலவாத் அவர்களின் காதுகளில் விழாது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தெளிவாக்கி விட்டார்கள்.

سنن النسائي

1374 - أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ، وَفِيهِ قُبِضَ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ»قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ، وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ؟ قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ»

நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்று தான் மரணித்தார்கள். அன்று தான் உலகத்தை அழிக்க சூர் ஊதப்படும். அன்று தான் எழுப்புதல் நிகழும். எனவே அன்றைய தினம் எனக்காக அதிகம் சலவாத் கூறுங்கள். நீங்கள் கூறும் சலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்கிப் போன நிலையில் எங்கள் சலவாத் எப்படி உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும் என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் உடல்களை மண் சாப்பிடுவதை அல்லாஹ் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)

நூல்கள் : நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

எனக்காக நீங்கள் செய்யும் சலவாத் எனும் துஆவை நான் செவிமடுக்கிறேன் என்று கூறாமல் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். நாம் கூறும் சலவாத்தை அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

சலவாத் என்பது அல்லாஹ்வை அழைத்து பிரார்த்திப்பது என்பதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவியுறும் அவசியம் எதுவும் இல்லை. எனவே இனின்னார் சலவாத் சலவாத் கூறினார்கள் என்ற தகவல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

(மேற்கண்ட ஹதீஸில் நபிமார்களின் உடல்களை மண் திண்ணாது என்று சொல்லப்படுகிறது. மண் திண்ணாமல் உள்ளதால் அவர்கள் செவியுறுவார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒரு நல்லடியாரின் உடல் நூறு ஆண்டுகள் பூமியின் மேற்பரப்பில் மண் திண்ணாத வகையில் கிடந்தது. ஆனாலும் அவரால் எதையும் அறிய இயலவில்லை. உடலை மண் திண்ணாது என்பதால் இவ்வுலகில் நடப்பதை அறிவார்கள் என்று அர்த்தம் இல்லை. இதை இறந்த பின் எதையும் அறியாத நல்லடியார் என்ற தலைப்பில் விளக்கியுள்ளோம்.)

ஒருவர் உயிருடன் இருந்தால் அவரை மண் சாப்பிடுவதில்லை. அவர் உயிருடன் இருப்பதே அவரை மண் சாப்பிடுவதில் இருந்து தடுத்து விடும். உலகில் 700 கோடி மக்கள் வாழ்கிறோம். இவர்களில் யாரையாவது மண் தின்றுள்ளதா? உயிருடன் இருப்பவனை மண் சாப்பிடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் மண் சாப்பிடாது என்று சொல்லத் தேவை இல்லை. ஏனென்றால் உயிருடன் இருப்பவரை மண் சாப்பிடாது.

அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் தான் அவர்களின் உடலை மண் சாப்பிடுமா என்ற கேள்வியே பிறக்கிறது. இதற்கு, "நபிமார்கள் இறந்து விட்டாலும் அவர்களது உடலை மண் சாப்பிடாது'' என்ற கருத்தில் நபிகள் நாயகம் பதிலளிக்கிறார்கள். எனவே இது நபிமார்கள் உயிருடன் இல்லை என்பதற்குத்தான் ஆதாரமாக அமைந்துள்ளது.

சலாம் குறித்து  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் இதை உறுதி செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சலவாத் சொல்வது போல் சலாமும் சொல்கிறோம். ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் இருப்பில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு – நபியே உங்கள் மீது சலாம் உண்டாகட்டும் – என்று கூறுகிறோம். இது அவர்களை அழைத்துப் பேசுவது போல் அமைந்துள்ளது. இதைக் கூட அவர்கள் செவியுற மாட்டார்கள்.

பின் வரும் நபிமொழியில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

سنن النسائي

1282 - أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ، ح وأَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ»

இப்பூமியில் சுற்றிக் கொண்டிருக்கும் வானவர்களை அல்லாஹ் நியமித்துள்ளான். அவர்கள் என் சமுதாயத்தினரின் சலாமை எனக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

நூல்கள் : நஸாயீ, அஹ்மத், தாரிமி, ஹாகிம், இப்னு ஹிப்பான், தப்ரானி, அபூயஃலா, பஸ்ஸார்

நபிகள் நாயகத்துக்கு சொல்லப்படும் சலாமை ஆன்மாக்களின் உலகில் உயிருடன் இருக்கும் நபிகள் நாயகத்துக்கு எடுத்துச் சொல்லும் ஒரே பணிக்காக அல்லாஹ் சில வானவர்களை நியமித்துள்ளான். நாம் கூறும் சலாமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவிமடுப்பார்கள் என்றால் அதை எடுத்துச் சொல்லும் அவசியம் இல்லை. சலாமை எடுத்துச் சொல்வதற்காக வானவர்களை அல்லாஹ் நியமனம் செய்திருப்பதிலிருந்து நாம் கூறும் சலாமை அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது.

அவர்களை அடக்கம் செய்துள்ள இடத்தின் அருகில் நின்று அழைத்தாலும் அவர்கள் அதைச் செவியுற மாட்டார்கள்.

இறந்தவர்கள் இவ்வுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தில் நாம் முன்னர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இது ஒத்துப் போகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் கூறும் சலாம், வானவர்கள் எத்திவைப்பதால் தான் அவர்களுக்குத் தெரிய வருகிறது. மற்றவர்களை நாம் ஜியாரத் செய்யும் போது சலாம் கூறுகிறோம். அந்த சலாம் அவர்களுக்கு கேட்காது என்பதும் இதிலிருந்து உறுதியாகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் கூறும் சலாமை எடுத்துச் சொல்ல வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போல் மற்றவர்களுக்கு இவ்வாறு நியமிக்கப் படாததால் அவர்கள் அதை அறிந்து கொள்ள மாட்டார்கள்.

மேலும் சலாமை எத்தி வைப்பதற்குத் தான் வானவர்களை அல்லாஹ் நியமித்துள்ளான். அது தவிர வேறு எந்த விஷயத்துக்காக நாம் நபியை அழைக்கவும் கூடாது. அழைத்தாலும் அதைச் செவியுறவும் மாட்டார்கள். இதற்காக வானவர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் அவர்கள் அறியவும் மாட்டார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்க்கியுள்ளது.

இதற்கு இன்னும் வலுவான ஆதாரமும் உள்ளது.

அத்தஹிய்யாத்தில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு என்று நபிக்கு நாம் சலாம் சொல்கிறோம். இப்போது நாம் கூறுவது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் நபித்தோழர்கள் தமது தொழுகைகளில் சலாம் கூறினார்கள். ஒரு நேரத்தில் ஏராளமான நபித்தோழர்கள் சுன்னத்தான, உபரியான தொழுகைகளைத் தொழுவார்கள். மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது போல் மேலும் பல பள்ளிவாசல்களில் கடமையான தொழுகைகளையும் அவர்கள் தொழுவார்கள்.

தொழுகையில் கூறும் சலாம் நபியவர்களுக்குக் கேட்கும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) வ அலைக்கு முஸ்ஸலாம் என்று ஒவ்வொரு வினாடி நேரமும் பதில் சொல்லிக் கொண்டே இருந்திருப்பார்கள். ஏனெனில் சலாம் கூறப்பட்டு அது செவியில் விழுந்தால் அதற்குப் பதில் அளிப்பது அவசியமாகும்.

அப்படி அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கவில்லை என்பதால் நபித்தோழர்கள் கூறிய சலாமை அவர்கள் உயிருடன் இருக்கும் போது செவியுறவில்லை என்று தெரிகிறது.

நேருக்கு நேராக வந்து யார் சலாம் கூறினார்களோ அதை மட்டும் கேட்டு பதிலளித்தார்கள். நேருக்கு நேர் வராமல்  தொழுகையில் ஏராளமான நபித்தோழர்கள் சலாம் கூறினார்கள். அவற்றில் ஒரு சலாமுக்குக் கூட நபியவர்கள் பதிலளிக்கவில்லை.

உயிருடன் வாழும் போதே யார் அருகில் வந்து நேருக்கு நேராகப் பார்த்து சலாம் கூறினார்களோ அதை மட்டும் தான் கேட்டார்கள். அதற்கு மட்டும் தான் பதில் சொன்னார்கள் என்றால் மரணித்த பின்னர் எப்படி அனைவரின் சலாமையும் செவியுற முடியும்?

எனவே இறந்தவரை ஜியாரத் செய்யச் செல்லும் போது நாம் சலாம் கூறுவது அவர்களுக்குக் கேட்கும் என்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும் என்று துஆ செய்வதற்காகவே என்பதில் சந்தேகம் இல்லை.

உங்கள் மீது சலாம் உண்டாகட்டும் என்று நேரடியாக அழைப்பது போல் அமைந்துள்ள சலாம் உயிருள்ளவர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் அதைச் செவியுற்று பதில் அளிப்பார்கள் என்பதற்காகச் சொல்லப்படுகிறது. மரணித்தவர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காகச் சொல்லப்படுகிறது. இதனால் தான் நாம் கூறும் சலாம் நபிகள் நாயகத்துக்கு வானவர்கள் மூலம் எடுத்துச் சொல்லப்படுகிறது.

குழந்தையைக் கொஞ்சும் போது கண்ணே மணியே என்று கூறுகிறோம். அந்தக் குழந்தையை அழைத்துப் பேசும் வடிவில் இருந்தாலும் அதன் பொருள் அழைப்பதல்ல. ஏனெனில் அந்தக் குழந்தைக்கு இதன் அர்த்தம் விளங்காது. நமது அன்பை வெளிப்படுத்துதல் மட்டுமே இதன் நோக்கமாகும்.

நிலா நிலா ஓடிவா என்றும், அணிலே அணிலே என்றும் நாம் படிப்பது குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவதற்குத் தான். அணிலையும், நிலாவையும் அழைத்துப் பேசுவதற்கு அல்ல. ஏனெனில் இவை பேசாது; நம் பேச்சைக் கேட்காது.

நமது பேச்சைக் கேட்டு புரிந்து கொள்ளக் கூடியவர்களை நோக்கிப் பேசினால் அதற்கு நேரடி அர்த்தம் தான் கொடுக்க வேண்டும். கணவன் மரணித்துக் கிடக்கும் போது என்னை விட்டு போய் விட்டீர்களே என்று மனைவி புலம்பினால் அவரிடமே பேசுவது என்பது அர்த்தம் அல்ல. என்னை விட்டுப் போய்விட்டார் என்பதைத் தான் என்னை விட்டுப் போய்விட்டாய் என்று முன்னிலையாகப் பேசுகிறார்.

எனவே உங்கள் மீது சலாம் உண்டாகட்டும் என்று முன்னிலையாகப் பேசுவதால் அவர்கள் சலாமைச் செவியுறுகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஆகாது.

அடுத்து பினவரும் ஹதீஸையும் தீய கொள்கையுடையவர்கள் தமது ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

سنن أبي داود

 2041 - حدثنا محمد بن عوف ثنا المقري ثنا حيوة عن أبي صخر حميد بن زياد عن يزيد بن عبد الله بن قسيط عن أبي هريرة  : أن رسول الله صلى الله عليه و سلم قال " ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام " .

எனக்கு எந்த அடியான் சலாம் கூறினாலும் அவருக்கு நான் பதில் கூறுவதற்காக அல்லாஹ் எனது உயிரை எனக்குத் திருப்பித் தராமல் இருக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத்

இன்னும் பல நூல்களிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆதாரப்பூர்வமானது பல அறிஞர்கள் கூறியிருந்தாலும் இதன் கருத்தில் தெளிவு இல்லை. தனக்குத்தானே இது முரண்படுகிறது. எண்ணற்ற ஆதாரங்களுடன் இது மோதுகிறது. திருக்குர்ஆனுக்கும் முரணாக அமைந்துள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இதில் உள்ள குழப்பங்களை விரிவாகப் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மரணித்த அனைவரும் ஆன்மாக்களின் உலகில் எப்போதும் உயிருடன் தான் உள்ளனர். எப்போதும் உயிரற்ற நிலையில் உள்ளதாகவும் சலாம் கூறும் போது மட்டும் உயிர்கொடுக்கப்படுவதாகவும் சொல்வது இதற்கு முரணாகும்.

ஆன்மாக்களின் உலகில் உள்ள உயிரை இது குறிக்கவில்லை. மரணிப்பதற்கு முன் உயிருடன் வாழ்ந்தார்களே அது போன்ர உயிர் கொடுப்பது பற்றி இந்த ஹதீஸ் கூறுகிறது என்று கூறுவார்களானால் அதுவும் தவறாகும்.

அப்படி இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமது சலாத்துக்குப் பதில் கூறுவது நம் செவிகளில் விழ வேண்டும். அப்படி விழுவதில்லை என்பதால் இந்த வகை உயிரைக் குறிக்கவில்லை என்று ஆகிறது.

உலகில் உள்ள முஸ்லிம்கள் தொழுகையில் கூறும் சலவாத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு வினாடியிலும் பல்லாயிரக்கணக்கான சலாம் சொல்லப்படுகிறது. அப்படியானால் பதில் சொல்வதற்காக உயிரைத் திரும்பக் கொடுக்கும் பேச்சுக்கு இடமில்லை. ஒரு வினாடி கூட உயிர் பிரிந்திருக்காது எனும் போது சலாம் சொல்லும் போது மட்டும் பதில் சொல்வதற்காக உயிர் மீண்டும் வழங்கப்படுகிறது என்பது பொருளற்றதாகி விடுகிறது.

இது உண்மை என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு மைக்ரோ செகண்டிலும் நபியவர்கள் சலாமுக்குப் பதில் கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். எப்போது பார்த்தாலும் வ அலைகு முஸ்ஸலாம் என்று அவர்கள் சொல்வதை நிறுத்த முடியாது. அபடியானால் இது கப்ர் வணங்கிகளுக்கு எதிரான ஆதாரமாகவே அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமது கோரிக்கைகளைச் செவிமடுப்பார்கள் என்றும், அவர்களைப் புகழும் சபைகளுக்கு வருகை தருவார்கள் என்ற வாதம் இப்போது அடிபட்டுப் போகிறது. 24 மணி நேரமும் வ அலைக்கு முஸ்ஸலாம் என்று சொல்வதிலேயே நபியின் முழு நேரமும் முடிந்து போய்விடும்.

ஒரு வினாடியில் பல்லாயிரம் பேர் சலாம் கூறினால் அதை மனிதரால் கேட்க முடியாது. இது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தன்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுகில் உயிருடன் வாழும் போது நபித்தோழர்கள் தொழுகையில் சலாம் கூறியதை அவர்கள் செவியுறவும் இல்லை. அதற்குப் பதில் சலாமும் கூறியதில்லை. இதை முன்னர் விளக்கியுள்ளோம். உயிரைத் திருப்பிக் கொடுத்தாலும் ஒரு நேரத்தில் பல்லாயிரம் ஓசைகளைக் கேட்டு பிரித்தரிவது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதால் அதற்கு முரணாக இது அமைந்துள்ளது.

ஒரு ஹதீஸை ஆதாரமாகக்  காட்டுவோர் அதில் அடங்கியுள்ள எல்லா கருத்துக்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக் கொள்ள முடியாத வகையிலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எண்ணற்ற ஆதாரங்களுக்கும் எதிரான வகையிலும் உள்ளதால் இது ஹதீஸ் அல்ல. இது கட்டுக்கதை தான்.

இவ்வுலகில் வாழும் போது தனக்கு அறிமுகமாக இருந்தவரின் அடக்கத்தலத்தை ஒரு அடியான் கடந்து செல்லும் போது சலாம் கூறினால் இறந்தவர் இவரை அறிந்து கொள்வதுடன் அவரது சலாமுக்குப் பதிலும் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.

தாரீக் அல்கதீப், அல்ஃபவாயித், இப்னு அஸாகிர், தைலமீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் சைத் பின் அஸ்லம் என்பார் பலவீனமானவர். இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது ஆதாரமாக ஆகாது.

இது போல் இப்னு அபித்துன்யா என்பார் தனது நூலில் ஒரு ஹதீஸைப் பதிவு செய்துள்ளார். சைத் பின் அஸ்லம் என்பார் அபூ ஹுரைராவிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சைத் பின் அஸ்லம் அபூ ஹுரைராவைச் சந்தித்ததில்லை என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜவ்ஹரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

மேலும் இது வரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு முரணாக உள்ளதால் இது கட்டுக்கதைகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியதாகும்.

ஸியாரத் ஆதாரமாகுமா?

அடக்கத்தலம் சென்று ஜியாரத் செய்வது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட சுன்னத் ஆகும். இறந்தவர்கள் செவியுறுவார்கள்; உதவுவார்கள் என்பதற்கு இதையும் தீய கொள்கை உடையோர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

சியாரத் என்றால் சந்திப்பு என்று பொருள். இது உயிருள்ளவர்களைச் சந்திப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எனவே மரணித்தவர்கள் உயிருடன் உள்ளனர் என்று இதிலிருந்து தெரிகிறது என்பது தீய கொள்கையுடையவர்களின் வாதம்.

சியாரத் என்ற சொல் உயிருள்ளவற்றைச் சந்திப்பதற்கும், உயிரற்றவைகளைச் சந்திப்பதற்கும் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும்.

3455 - حدثنا أبو جعفر أحمد بن منيع حدثنا إسماعيل بن إبراهيم حدثنا أيوب عن نافع عن ابن عمر أن رسول الله -صلى الله عليه وسلم- كان يزور قباء راكبا وماشيا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்தும், வாகனத்திலும் சென்று குபா பள்ளிவாசலை சியாரத் செய்வார்கள்.

நூல் : முஸ்லிம் 2702

குபா என்பது அடக்கத்தலம் அல்ல. நபியவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஊருக்குள்  நுழைவதற்கு முன் ஊரின் எல்லையில் இருந்த குபாவில் சில நாட்கள் தங்கினார்கள். அப்போது அங்கே ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப் பள்ளியை அவர்கள் அடிக்கடி சியாரத் செய்வார்கள் என்று இதில் கூறப்பட்டுள்ளது. உயிர் இல்லாத பள்ளிவாசலுக்குச் சென்றது சியாரத் என்ற வார்த்தையால் சொல்லப்படுகிறது.

صحيح البخاري

وقال أبو الزبير: عن عائشة، وابن عباس [ص:175] رضي الله عنهم،: «أخر النبي صلى الله عليه وسلم الزيارة إلى الليل» ويذكر عن أبي حسان، عن ابن عباس رضي الله عنهما، «أن النبي صلى الله عليه وسلم كان يزور البيت أيام منى»

மினாவில் தங்கும் நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத்தை சியாரத் செய்வார்கள்.

(புகாரி)

உயிர் இல்லாத கஅபா ஆலயத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றதைப் பற்றி குறிப்பிடும் போது சியாரத் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளனர்.

எனவே சியாரத் என்ற சொல்லை வைத்து மண்ணறையில் உள்ளவர்கள் நம்மைப் போல் உயிருடன் உள்ளனர் என்று வாதிடுவது அறியாமையாகும்.

சியாரத் செய்வது அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் நமது தேவைகளைக் கூறி வேண்டுதல் செய்வதற்காக சுன்னத்தாக ஆக்கப்படவில்லை. இரண்டு நோக்கங்களுக்காகவே ஜியாரத் சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது.

நாமும் மரணிக்கவுள்ளோம் என்ற எண்ணம் அடக்கத்தலம் செல்லும் போது உறுதிப்படும். மறுமையைப் பற்றிய அச்சம் அதிகரிக்கும் என்பது முதல் காரணம்.

மரணித்தவர்கள் எந்த நல்லறமும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர். அல்லாஹ்விடம் துஆச் செய்யக் கூட முடியாத நிலையில் உள்ளனர். உயிருடன் உள்ள நாம் தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய முடியும். எனவே அடக்கத்தலம் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்தபடி அவர்களுக்காக பாவ மன்னிப்பு கேட்பது சியாரத்துக்கான இரண்டாவது காரணம்.

இந்தக் காரணங்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மரணித்தவர்கள் மிகவும் பலவீன நிலையில் உள்ளதால் நாம் அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும் என்பதற்காக சியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, உயிருடன் உள்ளவர்களை விட அவர்கள் அதிக ஆற்றலுடன் உள்ளனர் என்று தலைகீழாக மாற்றிவிட்டனர்.

இதற்குப் பின்வரும் நபிமொழிகள் ஆதாரமாக உள்ளன.

سنن الترمذي 1054 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، وَالحَسَنُ بْنُ عَلِيٍّ الخَلَّالُ، قَالُوا: حَدَّثَنَا أَبُو عَاصِمِ النَّبِيلُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ القُبُورِ، فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ، فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الآخِرَةَ» وَفِي البَاب عَنْ أَبِي سَعِيدٍ، وَابْنِ مَسْعُودٍ، وَأَنَسٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَأُمِّ سَلَمَةَ.: «حَدِيثُ بُرَيْدَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»،

புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் புரைதா (ரலி)

நூல் : திர்மிதி (974)

மறுமையை நினைவூட்டுவதுதான் சியாரத்தின் நோக்கம் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.

(2208) ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَ يَحْيَى بْنُ أَيُّوبَ وَ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى ابْنُ يَحْيَى: أَخْبَرَنَا. وقَالَ الآخَرَانِ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكٍ وَهُوَ ابْنُ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ ابْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللّهِ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللّهِ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ. فَيَقُولُ: «السَّلاَمُ عَلَيْكُمْ دَارِ قَوْمٍ مُؤْمِنِينَ. وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَداً. مُؤَجَّلُونَ. وَإِنَّا، إِنْ شَاءَ اللّهُ، بِكُمْ لاَحِقُونَ. اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ» وَلَمْ يُقِمْ قُتَيْبَةُ قَوْلَهُ «وَأَتَاكُمْ».

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) "பகீஉல் ஃகர்கத்' பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அ(த்)தா(க்)கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.

(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது சாந்தி பொழியட்டும்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது (மரணம்) உங்களிடம் வந்து விட்டது. நாளை (இறுதித் தீர்ப்புக்கு) தவனை கொடுக்கப்பட்டுள்ளீர்கள். அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோரை நீ மன்னிப்பாயாக!

நூல் : முஸ்லிம் 1773

இந்த ஹதீஸில் கூறப்பட்ட துஆவும், சியாரத் செய்யும் போது கூறுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த மற்ற அனைத்து துஆக்களும் மரணித்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் பாவமன்னிப்புத் தேடும் வகையில் தான் அமைந்துள்ளன.

மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இறை மறுப்பாளர்களாகவும், இணை வைப்பாளர்களாகவும் இருந்தால் அவர்களின் மண்ணறைகளைப் பார்த்துவிட்டு மட்டும் வருவதற்கு அனுமதியுள்ளது. ஆனால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யக் கூடாது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

1622 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ رواه مسلم

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், "நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.  எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1777

சியாரத் என்பது இறந்தவர்களின் அருளையும் ஆசியையும் நாம் பெறுவதற்கு அல்ல. மாறாக மரணத்தை நினைவு கூறவும், அனைத்து ஆற்றலையும் இழந்து விட்ட மரணித்தவர்களுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்வதற்கும் தான் சியாரத் சுன்னத்தாக ஆக்கப்பட்டது என்பதை இதிலிருந்து அறியலாம்.

தர்காக்களுக்குப் போவது ஸியாரத் அல்ல

பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து விட்டு மரண பயத்தையும், மறுமை எண்ணத்தையும் அதிகப்படுத்திக் கொள்வதற்குப் பெயர் தான் ஸியாரத் என்பது.

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவாக அனுமதித்தவைகளை பொதுவாகவும், குறிப்பாக அனுமதித்தவைகளை குறிப்பாகவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கப்ரு சியாரத்தைப் பொருத்தவரை அது பொதுவாக அனுமதிக்கப்படவில்லை. மரணத்தை நினைவுபடுத்தும் என்ற காரணத்துடன் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுவான அடக்கத்தலங்கள் மரணத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. ஆனால் தர்காக்கள் மரணத்தை நினைவுபடுத்துவதற்குப் பதிலாக மரணத்தை மறக்கடிக்கச் செய்யும் வகையில் தான் உள்ளன.

எனவே தர்காக்களுக்குப் போவது ஸியாரத் ஆகாது.

حدثنا داود بن رشيد حدثنا شعيب بن إسحق عن الأوزاعي عن يحيى بن أبي كثير قال حدثني أبو قلابة قال حدثني ثابت بن الضحاك قال نذر رجل على عهد رسول الله صلى الله عليه وسلم أن ينحر إبلا ببوانة فأتى النبي صلى الله عليه وسلم فقال إني نذرت أن أنحر إبلا ببوانة فقال النبي صلى الله عليه وسلم هل كان فيها وثن من أوثان الجاهلية يعبد قالوا لا قال هل كان فيها عيد من أعيادهم قالوا لا قال رسول الله صلى الله عليه وسلم أوف بنذرك فإنه لا وفاء لنذر في معصية الله ولا فيما لا يملك ابن آدم

"புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்'' என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். "அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் "இல்லை' என்றார். "இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது "இல்லை' என்றார். அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே "இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?

மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில்

பிரம்மாண்டமான கட்டிடம், கப்ரின் மேல் பூசுதல்,  மனதை மயக்கும் நறுமணம், கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள், ஆண்களும் பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு, ஆடல், பாடல், கச்சேரிகள்

இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

தரைமட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள சமாதிகளை உடைக்க வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். (இது பற்றி பின்னர் விளக்கப்பட்டுள்ளது.)

இவ்வளவு தீமைகள் நடக்கும் இடத்துக்குப் போனால் மறுமை பயம் அதிகமாகாது.

மார்க்கம் தடை செய்த பல அம்சங்களைக் கொண்ட இடமாக தர்ஹாக்கள் விளங்குவதால் அங்கு செல்வது ஹராமாகும்.

எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணம் தர்காக்களில் இல்லை.

விழுந்து கும்பிடுவது, கையேந்திப் பிரார்த்திப்பது, கப்ரைச் சுற்றி கட்டடங்களை எழுப்புவது, பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல், தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல், விபூதி, சாம்பல் கொடுத்தல்,  மார்க்கம் தடை செய்த கட்டடம்,  இறந்தவருக்காக நேர்ச்சை செய்வது,  கப்ரை முத்தமிடுவது,  அங்கே விளக்கேற்றுவது,  கப்ர் மீது சந்தனம் தெளிப்பது, பூ போடுவது

என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.

صحيح مسلم

186 - حدثنا أبو بكر بن أبى شيبة حدثنا وكيع عن سفيان ح وحدثنا محمد بن المثنى حدثنا محمد بن جعفر حدثنا شعبة كلاهما عن قيس بن مسلم عن طارق بن شهاب - وهذا حديث أبى بكر - قال أول من بدأ بالخطبة يوم العيد قبل الصلاة مروان فقام إليه رجل فقال الصلاة قبل الخطبة. فقال قد ترك ما هنالك. فقال أبو سعيد أما هذا فقد قضى ما عليه سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول « من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان ».

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 70

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது. பொது அடக்கத்தலங்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.

மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான அடக்கத்தலம் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது என குர்ஆன் கூறுகிறது.

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا(140)4

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4 : 140

அல்லாஹ்வின் பல கட்டளைகள் கேலி செய்யப்படும் கேந்திரமாக தர்கா அமைந்துள்ளதால் அந்தத் தீமைகளைத் தடுப்பதற்காக தவிர வேறு நோக்கத்தில் அங்கே செல்வதற்கு அனுமதி இல்லை.

நபிமார்கள் கப்ரில் தொழுகிறார்களா?

நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு நபிமார்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர்.

நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் அறிவிக்கப்படும் செய்திகளில் மூஸா நபி தொடர்பான செய்தியைத் தவிர மற்ற அனைத்தும் தவறான அறிவிப்புகளாகும்.

மூஸா நபி அவர்கள் கப்ரில் தொழுததைப் பார்த்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் மட்டுமே ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அமைந்துள்ளது.

மிஃராஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியை கப்ரில் தொழுவதாகவும் பார்த்தார்கள். மறுவினாடி பைத்துல் முகத்தஸிலும் பார்த்தார்கள். அதற்கு அடுத்த வினாடி வின்னுலகிலும் பார்த்தார்கள்.

எனவே இது எடுத்துக்காட்டுவதில் அடங்கும். எடுத்துக் காட்டுதல் என்றால் என்ன என்று பின்னர் விளக்கப்பட்டுள்ளது.

மெய்யாகவே மூஸா நபி கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இறந்தவர்கள் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பதற்கோ, இவ்வுலக மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்கிறார்கள் என்பதற்கோ ஆதாரமாகாது. கப்ரில் அவர்கள் தொழுகிறார்கள் என்பதற்கு மட்டுமே அது ஆதாரமாகும்.

மற்ற ஹதீஸ்களைப் பார்ப்போம்.

ஹதீஸ் 1

நபிமார்கள் நாற்பது நாட்களுக்கு மேல் தங்கள் கப்ருகளில் விட்டு வைக்கப்பட மாட்டார்கள். எனினும் அல்லாஹ்வின் சூர் ஊதப்படும் வரை தொழுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : ஹயாதுல் அன்பியா

ஹதீஸ் 2

நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்கள் : ஹயாதுல் அன்பியா, பஸ்ஸார், ஃபவாயித்

இது போல் இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல.

பலமான அறிவிப்பாளர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் இது சமாதி வழிபாட்டுக்காரர்களுக்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.

ஆன்மாக்களின் உலகில் நபிமார்கள் உயிருடன் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தைத் தான் இவை தருகின்றன. அவர்கள் சூர் ஊதப்படும் வரை அதாவது உலகம் அழிக்கப்படும் வரை தொழுது கொண்டே இருப்பார்கள் என்றால் அவர்களுக்கும், இவ்வுலகுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தான் பொருள்.

தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களை அழைப்பதும் கூடாது. அந்த அழைப்புக்கு அவர்கள் பதில் சொல்வதும் கூடாது. எனவே அவர்கள் இவ்வுலகிற்கு வர மாட்டார்கள் என்பது உறுதியாகிறது.

மேலும் இதை ஆதாரப்பூர்வமான செய்தி என்று எடுத்துக் கொண்டால் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இந்த நிலை கூட இல்லை என்பது தெரிகிறது.

மிஃராஜின் போது இறந்தவர்களைப் பார்த்தது எப்படி?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்னுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட நபிமார்கள் உயிருடன் தான் உள்ளனர் என்று வாதிடுகின்றனர்.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். மரணித்து விட்ட நபிமார்கள் மட்டுமின்றி இதர நல்லடியார்களும், கெட்டவர்களும் கூட ஆன்மாக்களின் உலகில் உயிருடன் உள்ளனர் என்பதை நாம் மறுக்கவில்லை.

அவர்களால் இவ்வுலகுக்கு வரமுடியுமா? இவ்வுலகில் தொடர்பு கொள்ள முடியுமா என்பது தான் பிரச்சனை.

மிஃராஜில் பல நபிமார்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது தீய கொள்கையுடையவர்களுக்கு ஆதாரமாக ஆகாது. இவ்வுலகை விட்டு வேறு உலகத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அழைத்துச் சென்றதாலேயே அவர்களால் பல நபிமார்களைக் காண முடிந்தது. நபிகள் நாயகத்துக்குப் பின்னர் எந்த முஸ்லிமும் வின்னுலகம் அழைத்துச் செல்லப்பட மாட்டார். எனவே அவர் எந்த நபியையும் காண மாட்டார் என்பதற்குத் தான் இது ஆதாரமாக உள்ளது.

அடுத்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் வின்னுலகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தவை அனைத்தும் அல்லாஹ்வால் எடுத்துக் காட்டப்பட்டவையாகும்.

நேரடிச் சந்திப்புக்கும், எடுத்துக் காட்டப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நமது வீட்டில் நம்மோடு வசிக்கும் உறவினரை நாம் கனவில் காண்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவரைக் கனவில் நாம் காண்பதால் அவர் நம்மைக் கண்டார் என்று ஆகாது. காலையில் எழுந்து அவரை நாம் சந்தித்தால் உங்கள் கனவில் நான் நேற்று வந்தேனே என்று அவர் கூற மாட்டார். உங்களைக் கனவில் நான் கண்டேன் என்று நாம் கூறினால் தான் அவருக்கே அது தெரியும். ஏனெனில் கனவில் அவர் நமக்கு எடுத்துக் காட்டப்பட்டாரே தவிர  அவரையே நாம் சந்திக்கவில்லை.

மிஃராஜ் என்பது கனவல்ல என்றாலும் அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டவை அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டவை தான் என்பதை மிஃராஜ் சம்மந்தமான ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.

சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தல்!

நல்லோர்கள் சொர்க்கத்தில் இருப்பதையும், தீயோர்கள் நரகத்தில் இருப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்று மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

صحيح البخاري مشكول 3241 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اطَّلَعْتُ فِي الجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ»

நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 3241

صحيح البخاري 349 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " فُرِجَ عَنْ سَقْفِ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهُ فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي، فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَلَمَّا جِئْتُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، قَالَ جِبْرِيلُ: لِخَازِنِ السَّمَاءِ افْتَحْ، قَالَ: مَنْ هَذَا؟ قَالَ هَذَا جِبْرِيلُ، قَالَ: هَلْ مَعَكَ أَحَدٌ؟ قَالَ: نَعَمْ مَعِي مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، فَلَمَّا فَتَحَ عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا، فَإِذَا رَجُلٌ قَاعِدٌ عَلَى يَمِينِهِ أَسْوِدَةٌ، وَعَلَى يَسَارِهِ أَسْوِدَةٌ، إِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ يَسَارِهِ بَكَى، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ لِجِبْرِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا آدَمُ، وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ اليَمِينِ مِنْهُمْ أَهْلُ الجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ عَنْ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى حَتَّى عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ، فَقَالَ لِخَازِنِهَا: افْتَحْ، فَقَالَ لَهُ خَازِنِهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ: فَفَتَحَ، - قَالَ أَنَسٌ: فَذَكَرَ أَنَّهُ [ص:79] وَجَدَ فِي السَّمَوَاتِ آدَمَ، وَإِدْرِيسَ، وَمُوسَى، وَعِيسَى، وَإِبْرَاهِيمَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ، وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ وَجَدَ آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا وَإِبْرَاهِيمَ فِي السَّمَاءِ السَّادِسَةِ، قَالَ أَنَسٌ - فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِدْرِيسَ قَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، فَقُلْتُ مَنْ هَذَا؟ قَالَ: هَذَا إِدْرِيسُ، ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا مُوسَى، ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا عِيسَى، ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا إِبْرَاهِيمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "، قَالَ ابْنُ شِهَابٍ: فَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَأَبَا حَبَّةَ الأَنْصَارِيَّ، كَانَا يَقُولاَنِ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثُمَّ عُرِجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوَى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الأَقْلاَمِ»، قَالَ ابْنُ حَزْمٍ، وَأَنَسُ بْنُ مَالِكٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَفَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ، حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى، فَقَالَ: مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ؟ قُلْتُ: فَرَضَ خَمْسِينَ صَلاَةً، قَالَ: فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُ، فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى، قُلْتُ: وَضَعَ شَطْرَهَا، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ: ارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُهُ، فَقَالَ: هِيَ خَمْسٌ، وَهِيَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ القَوْلُ لَدَيَّ، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَقُلْتُ: اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، ثُمَّ انْطَلَقَ بِي، حَتَّى انْتَهَى بِي إِلَى سِدْرَةِ المُنْتَهَى، وَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ؟ ثُمَّ أُدْخِلْتُ الجَنَّةَ، فَإِذَا فِيهَا حَبَايِلُ اللُّؤْلُؤِ وَإِذَا تُرَابُهَا المِسْكُ "

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்து கொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) "நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!'' என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், "இவர் யார்?'' எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும், இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர், வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்; இடப் பக்கம் (நரகவாசிகளைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் அபூதர் (ரலி)

நூல்: புகாரி 349

இந்த இரு ஹதீஸ்களும் சொல்வது என்ன? மனிதர்கள் சொர்க்கத்துக்குச் செல்வதும், நரகத்துக்குச் செல்வதும் இனிமேல் நடக்கக் கூடியவை. மரணித்தவர்கள் இதுவரை சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ செல்லவில்லை. நியாயத் தீர்ப்பு நாளுக்குப் பிறகு தான் இது நடக்கும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் சிலரையும், நரகத்தில் சிலரையும் பார்த்ததாக முதல் ஹதீஸ் கூறுகிறது.

யாருமே சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இன்னும் செல்லாத போது எப்படி அவர்களை சொர்க்கத்திலோ, நரகத்திலோ பார்த்திருக்க முடியும்? இனிமேல் நடக்க உள்ளதை அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான் என்பதுதான் இதன் பொருளாக இருக்க முடியும். நேரடியாகவே பார்த்தார்கள் என்று பொருள் வைத்தால் நியாயத் தீர்ப்பு நாளில்தான் இதற்கான தீர்ப்பு அளிக்கப்படும் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களையும், நபிமொழிகளையும் மறுக்கும் நிலை ஏற்படும்.

இரண்டாம் ஹதீஸில் சொர்க்கத்தில் உள்ளவர்களைத் தமது வலப்பக்கமும், நரகத்தில் உள்ளவர்களைத் தமது இடப்பக்கமும் ஆதம் நபி பார்த்தார்கள் என்று கூறப்படுகிறது. அதில் மறுமை நாள் வரும் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரும் உள்ளடங்குவர். நாமும் அடங்குவோம். நபிகள் நாயகம் மிஃராஜ் சென்ற போது நாம் தான் பிறக்கவே இல்லையே? பிறகு எப்படி நம்மைக் கண்டார்கள்?

இவை யாவும் இறைவனது வல்லமையால் நபிகளாருக்கு எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்ச்சி தான் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

இனிமேல் படைக்கவுள்ளதை எடுத்துக் காட்டுவது இறைவனின் வழிமுறைகளில் ஒன்றாகும் என்பதைப் பின் வரும் வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். "நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) "ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, "இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)

திருக்குர்ஆன் 7:172

மறுமை நாள் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரையும் ஆதம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் எடுத்துக் காட்டியதாக இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் அனைவரையும் ஆதம் நபி பார்த்தார்கள் என்றால் நேரடியாகப் பார்த்தார்கள் என்ற பொருளில் அல்ல. இறைவன் எடுத்துக் காட்டிய விதத்தில் பார்த்தார்கள் என்பதாகும்.

இது போலவே மிஃராஜிலும் நபிகள் நாயகம் அவர்களுக்குப் பல காட்சிகளை அல்லாஹ் எடுத்துக் காட்டினான்.

எதிர்காலத்தில் பிறக்கவுள்ள மக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிரத்தியேகமான முறையில் எடுத்துக் காட்டினான். கடந்த காலத்தில் மரணித்தவர்களையும் எடுத்துக் காட்டினான். எதிர்காலத்தில் பிறக்கவுள்ள மக்களை அல்லாஹ் எடுத்துக் காட்டியதால் அவர்கள் பிறந்து உயிருடன் உள்ளார்கள் என்று கருதுவது எந்த அளவு அபத்தமோ, மரணித்தவர்கள் நம்மைப் போல் உயிருடன் உள்ளனர் என்று கருதுவதும் அதே அளவு அபத்தமாகும்.

மிஃராஜில் காட்டப்பட்டவை அனைத்தும் எடுத்துக் காட்டுதல் தான் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களும் உள்ளன.

صحيح البخاري 1149 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ: «عِنْدَ صَلاَةِ الفَجْرِ يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ» قَالَ: مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي: أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ " قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «دَفَّ نَعْلَيْكَ يَعْنِي تَحْرِيكَ»

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில்  சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ)செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருந்ததில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1149

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் பிலாலைப் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் பிலால் பூமியில் தான் அந்த நேரத்தில் இருந்தார். அவர் சொர்க்கத்தில் நடந்து சென்றது மெய்யான காட்சி என்றால் அது பிலால் அவர்களுக்குத் தான் முதலில் தெரிந்திருக்கும். அல்லாஹ்வின் தூதர் சொன்ன பிறகுதான் அவருக்கே தெரிந்தது என்றால் அவர் சொர்க்கத்தில் நடந்து செல்லவில்லை. இனிமேல் அவர் சொர்க்கம் செல்வார் என்பதைச் சொல்வதற்காக அவர் நடந்து செல்வது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ளான் என்பதைத் தவிர இதற்கு வேறு விளக்கம் கிடையாது.

صحيح البخاري 3679 - حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ المَاجِشُونِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " رَأَيْتُنِي دَخَلْتُ الجَنَّةَ، فَإِذَا أَنَا بِالرُّمَيْصَاءِ، امْرَأَةِ أَبِي طَلْحَةَ، وَسَمِعْتُ خَشَفَةً، فَقُلْتُ: مَنْ هَذَا؟ فَقَالَ: هَذَا بِلاَلٌ، وَرَأَيْتُ قَصْرًا بِفِنَائِهِ جَارِيَةٌ، فَقُلْتُ: لِمَنْ هَذَا؟ فَقَالَ: لِعُمَرَ، فَأَرَدْتُ أَنْ أَدْخُلَهُ فَأَنْظُرَ إِلَيْهِ، فَذَكَرْتُ غَيْرَتَكَ " فَقَالَ عُمَرُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أَعَلَيْكَ أَغَارُ

"நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, "யார் அவர்?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), "இவர் பிலால்' என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், "இது யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), "இது உமருடையது' என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)'' என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்'' என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 3679

பிலால் (ரலி) அவர்களும், ருமைஸா அவர்களும் உலகில் உயிருடன் இருக்கும் போது அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் இருப்பதாகக் காட்டினான்.

நடக்காத ஒன்றை எடுத்துக் காட்டுவதாக இது அமைந்துள்ளது போல், மரணித்தவர்களை உயிருடன் உள்ளவர்களைப் போல் அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான் என்றே பொருள் கொள்ள  வேண்டும்.

ஒருவரையே பல இடங்களில் பார்த்ததாக வருவதும் இது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வுதான் என்பதை மேலும் தெளிவாக்குகிறது.

மூஸா நபியை முதலில் கப்ரில் பார்த்தார்கள் என்று முஸ்லிம் 4736 கூறுகின்றது.

கப்ரில் தொழும் நிலையில் மூஸா நபியைப் பார்த்தது போலவே வானத்திலும் மூஸா நபியைச் சந்தித்தார்கள்.

(பார்க்க: புகாரி 349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர்.

(முஸ்லிம் 3410)

நேரடியாகப் பார்ப்பதாக இருந்தால் ஒருவரை ஒரு இடத்தில் தான் பார்க்க இயலும். ஒருவரை ஒரே நேரத்தில் பல இடங்களில் பார்த்ததாக வருவதிலிருந்து இது இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட காட்சி என்பதை அறியலாம்.

உலகம் அழிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு நாளில் தீர்ப்பும் வழங்கப்பட்ட பின்னரே நல்லோர்கள் சொர்க்கத்திற்கும், தீயோர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.

அதுவரை நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் சொர்க்கம் செல்ல இயலாது.

பிர்அவ்ன், அபூஜஹ்ல்களாகவே இருந்தாலும் நரகத்திற்குச் செல்ல முடியாது. ஆன்மாக்களின் உலகில் தான் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில் பல தண்டனைகளை அனுபவிக்கும் நபர்களைப் பார்த்ததாக மிஃராஜ் பற்றிய ஹதீஸ்களில் வருகிறது.

سنن أبي داود 4878 - حَدَّثَنَا ابْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا بَقِيَّةُ، وَأَبُو الْمُغِيرَةِ، قَالَا: حَدَّثَنَا صَفْوَانُ قَالَ: حَدَّثَنِي رَاشِدُ بْنُ سَعْدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ، فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ، قَالَ [ص:270]: هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ، وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ

விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும், மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். "ஜிப்ரயீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். "இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல்: அபூதாவூத் 4255

உலகம் இனிமேல் தான் அழிக்கப்படும்.  அதன் பின்னர் அனைவரும் எழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். அதன் பிறகே நரகவாசிகள் நரகிற்குச் சென்று தண்டனையை அனுபவிப்பார்கள். அதற்குள் இந்தத் தண்டனைகளைப் பெறுபவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிப் பார்த்தார்கள்? நரகத்தின் தண்டனை எவ்வாறு இருக்கும் என்று எடுத்துக் காட்டுவதுதான் இதன் கருத்தாகும்.

صحيح مسلم مشكول 164 - (2375) حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، وَسُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَتَيْتُ - وَفِي رِوَايَةِ هَدَّابٍ: مَرَرْتُ - عَلَى مُوسَى لَيْلَةَ أُسْرِيَ بِي عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ "

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத் தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4736

மூஸா நபி அவர்களை பைத்துல் முகத்தஸிலும், வின்னுலகிலும் பார்த்தது போல் மண்ணறையில் தொழுது கொண்டு இருந்ததையும் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் மூஸா நபியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துள்ளதால் இவ்வாறு எடுத்துக் காட்டப்பட்டது என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பது ஆதாரமாகுமா?

"உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்'.

திருக்குர்ஆன் 49:7

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்ற வாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்று வரை உயிருடன் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று வாதிடுகின்றனர்.

இவ்வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மக்களுடன் இருந்தனர் என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. மரணிக்காமல் இப்போதும் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை இவ்வசனம் தராது என்பதை அறியாமல் பிதற்றுகின்றனர்.

இவ்வசனம் அருளப்பட்டது முதல் இப்போது வரை உயிருடன் இருக்கிறார்கள் என்றால் உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய கடமைகளை ஏன் அவர்கள் செய்யாமல் உள்ளனர்? தூதர் என்ற முறையில் உலகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யும் கடமையை அவர்கள் விட்டிருப்பார்களா?

இன்று சமுதாயம் எழுபத்திரண்டு கூட்டங்களாகப் பிரிந்துள்ள நிலையில் அதை ஏன் தடுக்க வராமல் உள்ளனர்?

முஸ்லிம் நாடுகள் தமக்கிடையே போர் செய்து கொண்டு பல்லாயிரம் உயிர்கள் பலியாகிக் கொண்டு இருக்கும் போது அவர்கள் வந்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே? ஏன் அதைச் செய்யவில்லை? தூதருக்கு அதுதானே முதல் கடமை?

அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களைக் குழி தோண்டி அடக்கம் செய்வது ஆகுமா? உயிருடன் உள்ளவரைத் தான் நபித்தோழர்கள் அடக்கம் செய்தார்களா?

இப்படிச் சிந்தித்துப் பார்த்தால் இது போல் உளற மாட்டார்கள்.

திருக்குர்ஆனில் உலகம் உள்ளளவும் கடைப்பிடிக்க வேண்டிய போதனைகளும் உள்ளன. அருளப்பட்ட காலத்து வரலாறும் உள்ளது. அது அந்தக் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும்.

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்ற சொல்லுக்கு இவர்கள் கூறுகிறபடி பொருள் கொண்டால் நபித்தோழர்களும் உயிரோடு உள்ளனர் என்று அவர்கள் சொல்ல வேண்டும். உங்களிடையே என்று யாரை அல்லாஹ் அழைத்துப் பேசுகிறார்களோ அவர்களும் உயிருடன் உள்ளனர். அவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கலந்து வாழ்கின்றனர் என்று சொல்ல வேண்டும். அவ்வாறு இவர்கள் சொல்வதில்லை.

மேலும் இவ்வசனத்துக்கு முன்னுள்ள வசனங்களும் இவர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும் என்று இதற்கு முன்னுள்ள 49:2 வசனம் கூறுகிறது.

நபிகள்  நாயகத்தின் குரலை விட மற்றவர்கள் குரலை உயர்த்தக் கூடாது என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அவர்களின் குரல் எந்த அளவில் இருக்கும் என்பதை அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தான் அறிய முடியும். அவர்களின் குரலைக் கேட்டு அதைவிட குரலைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றால் இது அன்றைய காலத்தவர்களுக்குத் தான் பொருந்தும். எனவே இது வரலாற்று நிகழ்வாகச் சொல்லப்படுகிறதே தவிர நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பார்கள் என்ற கொள்கையைச் சொல்லவில்லை என்பது இதில் இருந்து உறுதியாகின்றது.

மேலும் அதற்கு அடுத்த வசனத்தைப் பாருங்கள். தீய கொள்கை உள்ளவர்களுக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

(முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள். நீர் அவர்களிடம் வரும் வரை அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 49:4, 5

நபியின் வீட்டுக்கு வெளியே நின்று அவர்களை அழைக்கக் கூடாது; அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது. அப்படியானால் இவர்கள் மதீனாவுக்குச் சென்று நபியவர்களின் வீடாகிய அவர்களின் அடக்கத்தலத்தின் வாசலில் காத்திருக்க வேண்டும். நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும். கியாமத் நாள் வரை இவர்களுக்கு வாழ்நாள் அளிக்கப்பட்டு  இவர்கள் காத்திருந்தாலும் நபியவர்கள் வெளியே வந்து இவர்களைச் சந்திக்க மாட்டார்கள்.

இவ்வசனம் அருளப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லடக்கம் செய்வது வரை வாழ்ந்த முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்பது இதிலிருந்தும் உறுதியாகிறது.

பினவரும் வசனமும் இது போன்றது தான். இவர்களின் தீய கொள்கைக்கு ஆதாரமாக ஆகாது.

அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்குக் கூறப்படும் நிலையிலும், அவனது தூதர் (முஹம்மத்) உங்களுடன் இருக்கும் நிலையிலும் எப்படி (ஏக இறைவனை) மறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வைப் பற்றிக் கொள்பவர் நேரான வழியில் செலுத்தப்பட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 3:101

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் நடப்பதை எப்போது அறிவார்கள், எப்போது அறிய மாட்டார்கள் என்பதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.

(முஹம்மதே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ (அதைப்பற்றி உமக்கென்ன?) எடுத்துச் சொல்வதே உமது கடமை.81 விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.

திருக்குர்ஆன் 13:40

(முஹம்மதே!) பொறுப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. எனவே அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நாம் காட்டினால் அல்லது உம்மை நாம் மரணிக்கச் செய்தால் நம்மிடமே அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்.

திருக்குர்ஆன்  40:77

அந்த மக்களுக்கு எச்சரித்தவற்றில் சிலதைக் காட்டினால் என்பதற்கு எதிர்ச்சொல்லாக மரணிக்கச் செய்தால் என்ற சொல் இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உம்மை மரணிக்கச் செய்யாமல் விட்டு வைத்தால் நீர் அதனைக் காண்பீர். மரணித்து விட்டால் அவர்களுக்கு நேரும் கதியைக் காண மாட்டீர் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லித் தருகிறான்.

எனவே நபிகள் நாயகத்தை அல்லாஹ் கைப்பற்றிக் கொண்ட பின்னர் இவ்வுலகில் நடப்பதை அறியும் ஆற்றல் நபியவர்களுக்கு அறவே இல்லை என்பதை இவ்விரு வசனங்களும் அழுத்தமாகச் சொல்கின்றன.

திருக்குர்ஆனில் கூறப்படும் வரலாற்று நிக்ழ்ச்சிகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! "நாங்கள் கிறித்தவர்கள்'' எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 5:82

முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்களாக கிறித்தவர்களைக் காண்பீர்கள் என்று சொல்லப்படுவதன் கருத்து என்ன? இவ்வசனம் அருளப்படும் போது வாழ்ந்த கிறித்தவர்கள் அப்படி இருந்தார்கள் என்பதுதான் இதன் பொருள்.

காலாகாலம் கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் கிறித்தவர்கள் முஸ்லிம்களின் முதல் எதிரிகளாக இருந்தார்கள் என்பதை சிலுவைப் போர்களும், இன்றுள்ள கிறித்தவ நாடுகளின் அத்துமீறல்களும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன. எனவே இது அன்றைய காலத்து வரலாற்று நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை. அது போல் தான் உங்களுடன் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்ற வசனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களின் மனைவியரை மற்றவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:53

ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது மனைவியை மணந்து கொள்ளக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை யாரும் மணந்து கொள்ளக் கூடாது என்றால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதுதான் காரணம் என தீய கொள்கை உடையவர்கள் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதையும், அவர்கள் இவ்வுலகில் நடப்பதை அறிந்து கொள்ளக் கூடிய நிலையில் இல்லை என்பதையும் தெளிவான சான்றுகள் மூலம் முன்னர் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நபிகள் நாயகத்தின் மனைவியரை மற்றவர்கள் மணக்கக் கூடாது என்ற சட்டம் தான் மேற்கண்ட வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இருப்பது தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்படவில்லை.

இவர்களின் இந்த வாதம் தவறு என்பதை இன்னொரு சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதனின் தந்தை, அவனது தாய் அல்லாத இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தந்தை இறந்த பின்னர் அவரது மனைவியை மகன் மணந்து கொள்ளக் கூடாது என்று திருக்குர்ஆன் 4:22 வசனம் கூறுகிறது.

தந்தைக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை இதனால் கெடும் என்பது தான் இந்தத் தடைக்குக் காரணம் என்று அறிவுடைய மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

இல்லை. அந்தத் தந்தை செத்த பின்பும் உயிரோடு இருக்கிறார் என்பதற்காகத் தான் அவரது மனைவியை அவரது மகன் மணக்க்க் கூடாது என்று சட்டம் போடப்பட்டுள்ளது என்று அறிவுடைய மக்கள் புரிய மாட்டார்கள்.

நபிகள் நாயகம் இறந்து விடுவார்கள். அவரது இறப்பிற்குப் பிறகு யாரும் அவர்களது மனைவியர்களை மணக்கக் கூடாது என்பது தான் இதன் பொருள்.

நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்பதை எந்த வசனம் தெளிவாகப் பறை சாற்றுகின்றதோ அதையே நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள் எனில் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

கனவுகளில் வருவது ஆதாரமாகுமா?

மரணித்தவர் என் கனவில் வந்தார்; அதனால் அவர் உயிரோடு உள்ளார் என்பதையும் சமாதி வழிபாடு செய்பவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள்.

ஒருவர் நமது கனவில் வருகிறார் என்றால் அவரே நமது கனவில் வந்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அவர் நம்முடன் எதையாவது பேசினால் அவரே நம்மோடு பேசுகிறார் என்றும் நாம் புரிந்து கொள்ளக் கூடாது. அது போன்ற காட்சிகளை இறைவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறான் என்றே புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளும் உண்மையுமாகும்.

உதாரணமாக இன்று உயிருடன் உலகத்தில் வாழும் ஒருவரை நாம் கனவில் காண்பதாக வைத்துக் கொள்வோம். கனவில் அவரைப் பார்த்த பின்னர் அவரை நாம் நேரிலும் சந்திக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அந்த மனிதர் "நான் நேற்றிரவு உன் கனவில் வந்தேனே?'' என்று கூறுவாரா என்றால் நிச்சயமாகக் கூற மாட்டார்.

நமது கனவில் அவர் வந்தது நமக்குத் தான் தெரியுமே தவிர அவருக்குத் தெரியாது. "உங்களை நான் கனவில் கண்டேன்'' என்று அவரிடம் நாம் கூறினால் தான் அதை அவரால் அறிந்து கொள்ள முடியும்.

எத்தனையோ விஷயங்களை ஒருவர் நம்மிடம் பேசுவதாக நாம் கனவு கண்டிருப்போம். நாம் அவரிடம் போய் "நேற்று என் கனவில் நீங்கள் கூறிய அறிவுரையை மீண்டும் கூறுங்கள்'' என்று கேட்டால் அவரால் அதைக் கூற முடியாது. "நான் கனவில் என்ன அறிவுரை கூறினேன் என்பது எனக்கு எப்படித் தெரியும்?'' என்பது தான் அவரது பதிலாக இருக்கும்.

எனவே ஒருவரை நாம் கனவில் கண்டால் அவரே வந்து விட்டார் என்று கருதக் கூடாது. அவர் நம்மோடு பேசியது அனைத்தும் அவரது வார்த்தைகள் என்றும் நாம் நினைக்கக் கூடாது. அவருக்கு நமது கனவில் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அவரை எடுத்துக் காட்டி அவர் கூறுவது போல் சில செய்திகளை இறைவன் நமக்குக் கூறலாம். அல்லது ஷைத்தான் அவரது வடிவத்தில் வந்து நமக்கு கெட்ட கனவை ஏற்படுத்தியிருப்பான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உயிருடன் உள்ள ஒருவரை ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் கூட கனவில் காண முடியும். அவர் ஆயிரம் இடத்துக்குச் சென்று காட்சியளித்தார் என்று அதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஒருவரை வீடியோவில் பதிந்து மற்றவருக்குக் காட்டுவது போல் தான் கனவில் காண்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா?

சில பெரியார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாக சில நூல்களில் எழுதப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்றளவும் உயிருடன் உள்ளனர் என்று சிலர் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? என்பது பற்றிய அறிவும் நமக்கு இருப்பது அவசியமாகும்.

صحيح البخاري 6197 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»

"யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6197

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.

இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.

صحيح البخاري 6993 - حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَآنِي فِي المَنَامِ فَسَيَرَانِي فِي اليَقَظَةِ، وَلاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي»

"என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்'' என்பது தான் அந்த நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6993

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யார் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.

"என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும்போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும்.

அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும்போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது.

இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும், எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்தப் பெரியார் கனவில் கண்டார், அந்த மகான் கண்டார்'' என்று கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைச் சான்றாகக் கொண்டு நான் தான் முஹம்மது நபி என்று கனவில் ஒருவர் நம்மிடம் சொல்வது போல் கண்டால் கனவில் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று சிலர் கருதுகின்றனர்.

என் பெயரைச் சொல்லி ஷைத்தான் கனவில் வரமாட்டான் என்று சொல்லப்பட்டால் தான் அதிலிருந்து இந்தக் கருத்தை எடுக்க முடியும். ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான் என்ற சொல்லில் இருந்து இவர்கள் கூறும் கருத்தை எடுக்க முடியாது.

ஷைத்தான் அவனுக்கே உரிய வடிவில் வந்து நான் தான் முஹம்மத் நபி என்று சொல்லலாம். அவர்களின் பெயரைப் பயன்படுத்தி பொய் சொல்லி இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தர்காக்களில் அற்புதம் நடப்பது எப்படி

இறந்தவர்களுக்கு ஆற்றல் இல்லை என்றால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? அது எப்படி என்று சிலர் கேட்கின்றனர்.

தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன எனக் கூறுவதில் உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் செல்வந்தராக ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.

செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கைகூடாத 998 பேர் "இவர் ஒரு மகானா'' என்று கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைந்து விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் மரணித்து விடுவதைப் பார்க்கிறோம். தர்காக்களில் அற்புதம் நடக்கவில்லை என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை.

கோவில்களிலும், சர்சுகளிலும் இன்னும் பல வழிபாட்டுத் தலங்களிலும் நடப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு நடப்பதாக அவர்கள் நம்புவதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாகக் காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் வாதமாக இருக்கிறது.

ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும்போது தானாக அந்தக் காரியம் நிறைவேறும்.

அந்த நேரம் வரும்போது தர்காவில் இருப்பவர்கள், தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது என்று 7:34, 10:49, 16:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது

மரணித்த மகான்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?

ஈஸா நபியவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர். இதை 4:157-159, 5:75, 43:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் சரியானதாகும்?

அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அனைத்து ஆற்றலும் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டும் அவரிடம் பிரார்த்திக்க முடியாது.

இது பற்றி அல்லாஹ் தெள்ளத் தெளிவாக எச்சரிப்பதைப் பாருங்கள்!

உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் 13:14

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:20

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 6:36

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன் 27:80

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன் 30:52

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

திருக்குர்ஆன் 35:22

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

திருக்குர்ஆன் 46:5,6

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

திருக்குர்ஆன் 7:191,192,193

'வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?' என்று (முஹம்மதே!) கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! 'அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்' என்று கூறுவீராக! 'குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? இருள்களும், ஒளியும் சமமாகுமா?' என்று கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக படைத்தது யார்?' என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:16

'அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 46:4

இந்த வசனங்களும், இது போன்ற எண்ணற்ற வசனங்களும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

2:186, 3:38, 7:29, 7:55, 7:56, 7:180, 7:197, 10:12, 10:106, 14:39, 14:40, 17:56, 17:110, 19:4, 21:90, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 31:30, 35:13, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66,

மரணித்தவர்கள் ஆன்மாக்கள் உலகில் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உயிருடன் உள்ளனர்; அவர்கள் இவ்வுலகுக்கு வர முடியாது; இவ்வுலகில் நடப்பதையும், பேசுவதையும் அறிய முடியாது; அவர்களால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதை உணர்ந்து அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கும் நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account