Sidebar

19
Fri, Apr
4 New Articles

தொப்பி அணிய ஆதாரம் உண்டா

ஆடை அலங்காரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி போடச் சொல்லி ஹதீஸே இல்லை என்று கூறுகின்றீர்களே! மேற்கண்ட ஹதீசுக்கு என்ன விளக்கம்?

பதில் :

حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا سَأَلَهُ مَا يَلْبَسُ الْمُحْرِمُ فَقَالَ لَا يَلْبَسُ الْقَمِيصَ وَلَا الْعِمَامَةَ وَلَا السَّرَاوِيلَ وَلَا الْبُرْنُسَ وَلَا ثَوْبًا مَسَّهُ الْوَرْسُ أَوْ الزَّعْفَرَانُ فَإِنْ لَمْ يَجِدْ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا تَحْتَ الْكَعْبَيْنِ

'இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளை அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 134, 366, 1542, 1842

இந்த ஹதீஸில் இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணியக் கூடாது என்று கூறியிருப்பதால் இஹ்ராமைக் களைந்தவுடன் அவற்றை அணிய வேண்டும் என்பது தான் பொருள் என்று கேள்வி கேட்கின்றீர்கள்.

புரிந்து கொள்வதற்கான முறையில் இதைப் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு கேட்டுள்ளீர்கள்.

குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் மற்ற சந்தர்ப்பங்களில் அந்தக் காரியத்தைச் செய்யலாம் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற சந்தர்ப்பங்களில் அதைச் செய்தாக வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

நோன்பாளிகள் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்றால் இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்றுதான் பொருள் வரும். இரவில் கண்டிப்பாக தாம்பத்தியத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்று யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள்.

ஜும்மாவுக்கு பாங்கு சொன்ன உடன் கடையைத் திறந்திருக்கக் கூடாது என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது? ஜும்மா முடிந்தவுடன் விரும்பினால் கடையைத் திறக்கலாம். திறக்காமலும் இருக்கலாம் என்று தான் புரிந்து கொள்வோம்.

அது போல தான் இந்த ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராமுடன் இருக்கும் போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணிவதற்கு அனுமதி உள்ளது என்று தான் விளங்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் தொப்பி அணிவது கட்டாயமான ஒன்றல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

தொப்பி அணிவது அனுமதிக்கப்பட்டது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அது கட்டாயம் இல்லை என்பது தான் நமது நிலைப்பாடு. அந்த நிலைபாட்டுக்கு ஆதாரமாகத் தான் இந்த் ஹதீஸ் அமைந்துள்ளது.

ஒரு வாதத்துக்காக நீங்கள் புரிந்து கொள்வது போல் புரிந்து கொள்வது என்றால் மொத்த ஹதீஸையும் அவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது இஹ்ராம் அணிந்தவர் தொப்பி அணியக்கூடாது என்பதை மட்டும் இந்த ஹதீஸ் கூறவில்லை. அத்துடன் சட்டை, பேன்ட், காலுறை ஆகியவற்றையும் இஹ்ராமின் போது அணியக் கூடாது எனக் கூறுகிறது. இஹ்ராம் அல்லாத நேரத்தில் இம்மூன்றையும் அணிவது கட்டாயக் கடமை என்று நீங்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை? இதைச் சிந்தித்தால் புரிந்து கொள்வதில் உங்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தை நீங்கள் உணரலாம்.

தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.

தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account