Sidebar

16
Mon, Sep
1 New Articles

கந்தூரியில் கடை போடலாமா

வியாபாரம் பொருளீட்டுதல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கந்தூரியில் கடை போடலாமா

கேள்வி : திருவிழாக்களில் கூடி இருக்கும் கடைகளுக்கு நம் முஸ்லிம் மக்களும் பொருட்கள் வாங்குவதற்காக சென்று வரலாம், இதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று ஒருவர் கூறுகிறார். இது சரியா?

கிள்ளை யூசுப்

பதில்:

எந்தத் தீய காரியத்திற்கும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது.

(அல்குர்ஆன் 5:2)

தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.

தீமைக்குத் துணை போகக் கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அவ்வாறு தான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஒரு தவ்ஹீத் மாநாடு நடத்துகிறோம். இந்த தவ்ஹீத் மாநாட்டில் ஒருவர் சாப்பாடு கடை போடுவதற்காக நம்மை அணுகுகிறார். நாம் அவருக்கு அனுமதி வழங்குகிறோம். இப்போது அவர் தவ்ஹீது மாநாட்டிற்கு உதவி செய்தார் என்று யாரும் கருத மாட்டோம். அவர் தன்னுடைய வருமானத்திற்காக, இலாபத்திற்காக கடை போட்டார் என்றே கருதுவோம்.

அதே நேரத்தில் தவ்ஹீத் மாநாட்டிற்கு வருபவர்களுக்காக ஒருவர் இலவசமாக உணவுப் பொருட்களை வழங்கினால் அதை நாம் உதவியாகக் கருதுவோம்.

தவ்ஹீது மாநாட்டில் தன்னுடைய இலாபத்திற்காக கடை போடும் ஒருவர் எப்படி தவ்ஹீது கொள்கைக்கு உதவியவராக மாட்டாரோ அது போன்று தான் தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் ஒருவர் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தால் அல்லது அங்கு போடப்படும் கடைகளில் ஒரு பொருளை வாங்கினால் அவர் அந்தத் தீமையை ஆதரித்தவர் ஆகமாட்டார்.

நன்மைக்கு உதவுதல் என்பதை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோமோ அது போன்றுதான் தீமைக்கு உதவுதல் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடை காலத்தில் மக்காவில் உகாள், துல்மஜாஸ் போன்ற சந்தைகள் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்படும். இவை சந்தைகளாக மட்டும் இருக்கவில்லை. இங்கு சிலை வணக்கம் உட்பட கூத்து கும்மாளங்கள் அனைத்தும் நடைபெறும் இடமாகவும் இருந்தது.

இந்தச் சந்தைகளில் முஸ்லிம்களான ஸஹாபாக்கள் வியாபாரம் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانَ ذُو الْمَجَازِ وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ حَتَّى نَزَلَتْ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ فِي مَوَاسِمِ الْحَجِّ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். இஸ்லாம் தோன்றியதும் மக்கள் அவ்வியாபாரத் தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது என்ற 2:198 ஆவது வசனம் அருளப்பெற்றது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கின்றது.

நூல் : புகாரி 1770

பலவிதமான பாவ காரியங்கள் நடைபெற்ற உகாள், துல்மஜாஸ் போன்ற வியாபாரத் தலங்களில் வியாபாரம் செய்ய இஸ்லாம் அனுமதித்தது என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தீமைகள் நடக்கும் இடங்களில் நாம் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தாலோ, அல்லது அது போன்ற இடங்களுக்குச் சென்று ஒரு பொருளை வாங்கினாலோ அது தீமைக்குத் துணை செய்ததாக ஆகாது என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் ஒருவர் தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் வியாபாரம் செய்வது தவறில்லை என்றாலும் அது போன்ற தீமைகளில் தான் வீழ்ந்து விடாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்டது என்றால் கட்டாயம் செய்து தான் ஆக வேண்டும் என்பது கிடையாது.

நம்முடைய ஈமானுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் அது போன்ற நிலைகளில் நாம் அவற்றை விட்டும் விலகிக் கொள்வதே சிறந்ததாகும்.

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا زَكَرِيَّاءُ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்து கொள்ளுங்கள்: அது தான்  உள்ளம்.

அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல் : புகாரி 52

நம்முடைய கால்நடை பிறருடைய வேலிக்குள் சென்று மேய்வது ஹராமானாதாகும். அதே நேரத்தில் வேலிக்கு அருகில் மேய்ந்தால் அது ஹராமானது கிடையாது.

வேலிக்குள் செல்லாமல் அருகில் தான் மேயும் என்று நாம் பாராமுகமாக இருந்தால் கால் நடை வேலியைத் தாண்டியும் சென்று விடும்.

அது போன்று தான் தர்ஹா வழிபாடு போன்ற பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களில் நாம் எந்தத் தவறிலும் பங்கேற்காமல் வியாபாரம் செய்தால் அல்லது அங்குள்ள கடைகளில் ஒரு பொருள் வாங்கினால் அது தவறு கிடையாது. ஆனால் இது வேலிக்கு அருகில் மேய்கின்ற கால்நடையின் நிலையைப் போன்றது தான்.

நாம் வேலிக்குள் நுழையவே முடியாத இடத்தில் நம்முடைய கால்நடையை மேயவிட்டால் அது நுழைந்துவிடும் என்பதைப் பற்றி எந்தக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

அது போன்று பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களை விட்டும் நாம் தவிர்ந்து கொண்டால் நம்முடைய ஈமானுக்குப் பாதிப்பு ஏற்படுவதை விட்டும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம்.

03.07.2012. 23:38 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account