Sidebar

12
Thu, Dec
3 New Articles

விவாதத்தில் ஆபாசம் தேவையா

விவாதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

விவாதத்தில் ஆபாசம் தேவையா

களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நீங்கள் விவாதம் செய்த சில தலைப்புகள் மிகவும் ஆபாசமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. அதைத் தவிர்த்து இருக்கலாமே?

பதில் :

களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமாகும்.

தர்ஹா, தரீக்கா, மவ்லிது, இறந்தவர்களிடம் உதவி தேடுதல், மத்ஹபுகள் இவை அனைத்தையும் சரி என்று வாதிடக் கூடிய ஒரு கூட்டத்துடன் நாம் விவாதம் செய்தோம். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இவை தவறானவை என்பதை நிரூபிக்க வேண்டியது நமது கடமையாகும்.

அவ்வாறு நிரூபிக்காவிட்டால் அவர்கள் சொல்லும் கருத்து தான் சரியானது என்று மக்கள் எண்ணி, வழிகேட்டில் வீழ்ந்து விடுவார்கள். அந்த அடிப்படையில் தான் மத்ஹபு சட்டங்களில் உள்ள அசிங்கங்களை, ஆபாசங்களை நாம் எடுத்துக் காட்டி அவை குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமானவை என்பதை நிரூபித்தோம்.

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

திருக்குர்ஆன் 5:94

என்ற வசனத்தின் அடிப்படையில் உண்மையைப் போட்டு உடைத்தோம்.

மத்ஹபுகளில் உள்ள குப்பைகளை நாம் அந்தச் சபையில் போட்டு உடைக்காவிட்டால், அந்தச் சட்டங்கள் அனைத்தும் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான் என்ற நிலை ஏற்பட்டு விடும்.

இந்தச் சட்டத்தில் இப்படி உள்ளது; இது இந்த ஹதீஸுக்கு மாற்றமானது என்பதை நாம் விளக்கும் போது அவர்களுடைய சட்டத்தை எடுத்துக் காட்டித் தான் ஆக வேண்டும். இதைத் தவிர்த்து விட்டு அந்த விவாதத்தை எப்படி நடத்த முடியும்? அந்தக் குப்பைகளை இஸ்லாத்தின் அடிப்படை என்று நாமும் ஒப்புக் கொண்டு போக வேண்டிய நிலை தான் ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

மத்ஹபுகளில் உள்ள அசிங்கங்களை இஸ்லாத்தின் அடிப்படைகள் என்று வாதிடுபவர்களே வெட்கப்படாத போது, அவற்றைக் குப்பைகள் என்று கூறும் நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்?

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ الْمُنْكَدِرِ سَمِعْتُ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ الْيَهُودُ تَقُولُ إِذَا جَامَعَهَا مِنْ وَرَائِهَا جَاءَ الْوَلَدُ أَحْوَلَ فَنَزَلَتْ نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ

ஒருவர் தம் மனைவியிடம் பின் பக்கத்தில் இருந்தவாறு இல்லறத்தில் ஈடுபட்டால் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். ஆகவே உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்! என்ற (2:223வது) வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 4528

இந்த ஹதீஸில் யூதர்களின் கருத்து தவறானது என்பதை அல்லாஹ் தனது திருமறையில் வசனம் இறக்கி மக்களுக்கு அறிவிக்கின்றான். இந்தச் செய்தி ஹதீஸ் நூற்களிலும் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் ஆபாசம் என்று கருதி இஸ்லாம் விட்டு விடவில்லை.

எத்தனையோ பெண் நபித்தோழியர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மாதவிடாய், ஸ்கலிதம் போன்றவை குறித்து விளக்கம் கேட்டுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அந்தச் செய்திகளும் ஹதீஸ்களாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மார்க்கச் சட்டத்தைத் தெரிந்து கொள்வதற்கே வெட்கப்படக் கூடாது எனும் போது, சத்தியத்தை நிலைநாட்டும் விவாதத்தில் இவற்றை எடுத்துக் கூறுவதற்கு நாம் தயங்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை அறியலாம்.

இருந்தாலும் எடுத்துச் சொல்லும் போது விரசமாக தெரியாத வகையில் இயன்றவரை கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

15.08.2009. 10:57 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account