Sidebar

20
Sat, Apr
0 New Articles

மூன்று நாட்கள் என் மகள் ஃபாத்திமா சாப்பிடவில்லை என்ற ஹதீஸ் சரியா?

பலவீனமான ஹதீஸ்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மூன்று நாட்கள் என் மகள் ஃபாத்திமா சாப்பிடவில்லை என்ற ஹதீஸ் சரியா?

கீழ்க்கண்ட செய்தியை முக நூலில் அதிகமாகப் பரப்பி வருகின்றனர்.

நபிகள் நாயகத்தின் மிக நெருங்கிய நண்பர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு மிகுந்த வயிற்றுப் பசி. ஏதாவது உணவு இருக்கிறதா என மனைவியிடம் கேட்கிறார்கள். தண்ணீரைத் தவிர எதுவும் இல்லை என்கிறார் அவரது மனைவி! சரி உமருடைய வீட்டிற்குச் சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள்.

பாதி வழியில் உமர் (ரலி) எதிரே வருகிறார்கள். என்னவென்று கேட்கிறார் அபூபக்கர் சித்தீக் (ரலி). வீட்டில் தண்ணீரைத் தவிர உண்பதற்கு எதுவும் இல்லை. எனவே தான் உங்களைப் பார்க்க வருகிறேன் என்கிறார்கள். உமர் ரலி, சரி! என் வீட்டிலும் இதே நிலைதான்; அதனால் தான் நான் உங்களைப் பார்க்க வந்தேன் என கூறிவிட்டு இருவரும் நபிகளைச் சென்று பார்க்கலாம் என நபிகளாரின் வீட்டிற்குச் செல்கின்றனர்.

எதிரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள். அருமைத் தோழர்களின் நிலை அறிந்து வேதனையுடன் தனது வீட்டின் நிலையும் இதுதான் என்று சொல்லி, என்ன செய்வது எங்கே செல்லலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது அபூ அய்யூப் அல் அன்ஸாரியின் வீட்டிற்குச் செல்லலாம் என முடிவு செய்து மூவரும் செல்கின்றனர்.

இவர்கள் மூவரும் வருவதைப் பார்த்த நபித்தோழர் அபூ அய்யூப் அல் அன்ஸாரி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று தனது இல்லத்தில் அமரவைத்து அவர்களுக்கு பேரீச்சம் பழங்களைக் கொடுத்துப் பரிமாறுகிறார்கள்.

கொஞ்சம் பேரீச்சம் பழங்களைத் தின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரியிடம், அபூ அய்யூப் அவர்களே! நான் இவற்றில் இருந்து கொஞ்சம் பேரீச்சம் பழங்களை எடுத்துக் கொள்ளலாமா? எனக் கேட்கிறார்கள்.

அதைக் கேட்ட நபித்தோழர் அபூ அய்யூப் (ரலி) அவர்கள், என்ன யா ரசூலுல்லாஹ்! இப்படிக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்கிறார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லை எனக்குச் சிறிதளவு போதும், என் அருமை மகள் ஃபாத்திமா கடந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவே இல்லை எனக் கூறுகிறார்கள். இதைக் கேட்ட உடனே அபூ அய்யூப் அல் அன்ஸாரி அவர்கள், தமது பணியாளர் ஒருவரிடம் அண்ணல் நபிகளின் வீட்டிற்கு பேரீச்சம்பழங்களை கொடுத்து அனுப்புகிறார்கள்.

இப்னு ஹிப்பான் ஹதீஸ் எண் – 5328

இந்தச் செய்தியை உண்மை என நம்பி பரப்புகின்றனர். இப்படி ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாலும் இது ஆதாரப்பூர்வமானது அல்ல.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் கைஸான் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டவர். எனவே இவர் அறிவிக்கும் இந்த ஹதீஸ் பலவீனமானது.

இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் இதனுடைய கருத்தும் சரியானதாக இல்லை.

என் அருமை மகள் பாத்திமா கடந்த மூன்று நாட்களாக சாப்பிடவே இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அபூ அய்யூப் அல் அன்சாரி அவர்கள் தமது பணியாளரிடம் ஃபாத்திமாவின் வீட்டுக்குப் பழங்களைக் கொடுத்தனுப்பினார் என்று இந்தச் செய்தி கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் எப்போதும் வறுமை தான் நிறைந்து இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மூன்று நாட்கள் அல்ல! சில ஹதீஸ்களில் மூன்று மாதங்கள் கூட அடுப்பெரிக்காமல் இருந்தனர் என்று சரியான ஹதீஸ் கூறுகின்றது.

தன் மகளுக்காக மட்டும் நபியவர்கள் கருணை காட்டினார்கள் என்றால், தம்முடைய அன்பு மனைவிமார்களுக்கு எதைக் கொடுத்தார்கள்? அவர்களும் பசியோடும் பட்டினியோடும் தானே இருந்தார்கள்?

தன் மகள் ஃபாத்திமா மூன்று நாட்கள் சாப்பிடவில்லை என்று சொல்லி அவர்களுக்கு பேரீச்சம்பழம் கொடுக்க நபியவர்கள் ஏற்பாடு செய்தார்கள் என இந்த ஹதீஸ் கூறுகின்றது.

அப்படியானால் நபியவர்களின் குடும்பத்தில் ஃபாத்திமாவைத் தவிர மற்ற அனைவரும் நன்கு புசித்துக் கொண்டிருந்தார்களா?

மேற்கூறப்பட்ட பலவீனமான ஹதீஸில் தான் இந்தக் கதைகளும் கப்ஸாக்களும் உள்ளன. ஆனால் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் இதுபோன்ற கதைகள் இல்லை.

முஸ்லிமில் இடம்பெறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இதோ:

صحيح مسلم

5434 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ذَاتَ يَوْمٍ أَوْ لَيْلَةٍ فَإِذَا هُوَ بِأَبِى بَكْرٍ وَعُمَرَ فَقَالَ « مَا أَخْرَجَكُمَا مِنْ بُيُوتِكُمَا هَذِهِ السَّاعَةَ ». قَالاَ الْجُوعُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ « وَأَنَا وَالَّذِى نَفْسِى بِيَدِهِ لأَخْرَجَنِى الَّذِى أَخْرَجَكُمَا قُومُوا ». فَقَامُوا مَعَهُ فَأَتَى رَجُلاً مِنَ الأَنْصَارِ فَإِذَا هُوَ لَيْسَ فِى بَيْتِهِ فَلَمَّا رَأَتْهُ الْمَرْأَةُ قَالَتْ مَرْحَبًا وَأَهْلاً. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَيْنَ فُلاَنٌ ». قَالَتْ ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ. إِذْ جَاءَ الأَنْصَارِىُّ فَنَظَرَ إِلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَصَاحِبَيْهِ ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ مَا أَحَدٌ الْيَوْمَ أَكْرَمَ أَضْيَافًا مِنِّى – قَالَ – فَانْطَلَقَ فَجَاءَهُمْ بِعِذْقٍ فِيهِ بُسْرٌ وَتَمْرٌ وَرُطَبٌ فَقَالَ كُلُوا مِنْ هَذِهِ. وَأَخَذَ الْمُدْيَةَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِيَّاكَ وَالْحَلُوبَ ». فَذَبَحَ لَهُمْ فَأَكَلُوا مِنَ الشَّاةِ وَمِنْ ذَلِكَ الْعِذْقِ وَشَرِبُوا فَلَمَّا أَنْ شَبِعُوا وَرَوُوا قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لأَبِى بَكْرٍ وَعُمَرَ « وَالَّذِى نَفْسِى بِيَدِهِ لَتُسْأَلُنَّ عَنْ هَذَا النَّعِيمِ يَوْمَ الْقِيَامَةِ أَخْرَجَكُمْ مِنْ بُيُوتِكُمُ الْجُوعُ ثُمَّ لَمْ تَرْجِعُوا حَتَّى أَصَابَكُمْ هَذَا النَّعِيمُ ».

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பகல் அல்லது ஓர் இரவு வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்? என்று கேட்டார்கள். அதற்கு, பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே! என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள் ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் தான். உங்கள் இருவரையும் வெளியே வரச் செய்ததே என்னையும் வெளியே வரச் செய்தது என்று கூறி விட்டு, எழுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், வாழ்த்துகள்! வருக என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், அவர் எங்கே? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார் என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும், கனிந்த பழங்களும், செங்காய்களும் இருந்தன. அவர், இதை உண்ணுங்கள் என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4143

இதுதான் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account