Sidebar

19
Fri, Apr
4 New Articles

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா?

துஆ திக்ர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா?

அபூஸாலிஹ், லெப்பைக்குடிக்காடு.

பதில் :

பிரார்த்தனைகள் இரு வகைகளில் உள்ளன.

சாதாரண நேரத்தில் பல்வேறு தேவைகளுக்காகக் கேட்கும் பிரார்த்தனை முதல் வகை.

உயிர் போய்விடும் என்ற நெருக்கடியான நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை மற்றொரு வகை.

முதல் வகையான பிரார்த்தனையைப் பொருத்தவரை அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படாது.

இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தாலும் அவர்களின் உள்ளத்தில் இன்னும் பலர் கடவுள் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களின் துஆக்கள் ஏற்கப்படாது.

அப்துல்காதிர் ஜீலானியையும் ஷாஹுல் ஹமீதையும் ஒரு ஒரத்தில் வைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பதால் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான். அல்லாஹ்வை மட்டுமே உள்ளத்தில் இருத்தி கேட்கும் துஆக்களை மட்டுமே அல்லாஹ் ஏற்பான்.

இரண்டாவது வகை பிரார்த்தனையின் போது இணை கற்பிப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நெருக்கடியான நிலை ஏற்படும் போது அவர்களில் அதிகமானவர்கள் குட்டித் தெய்வங்களையும், அவ்லியாக்களையும் மறந்து விட்டு ஒரே இறைவனை மட்டுமே பிரார்த்திப்பார்கள்.

அந்த நேரத்தில் மட்டுமாவது குட்டித் தெய்வங்களாலும், அவ்லியாக்களாலும் ஏதும் ஆகாது என்று உளப்பூர்வமாக அவர்கள் நினைப்பதால் அவர்களது அந்த நேரத்துப் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்கிறான்.

இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி "இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்'' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களை அவன் காப்பாற்றும் போது, நியாயமின்றி பூமியில் அட்டூழியம் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் 10:22,23

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு அவர்கள் நன்றி மறக்கட்டும்! அனுபவிக்கட்டும்! பின்னர் அறிந்து கொள்வார்கள்.

திருக்குர்ஆன் 29:65,66

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும்போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

திருக்குர்ஆன் 31:32

"இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்'' என்று பணிவாகவும், இரகசியமாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்யும்போது "தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?'' என்று கேட்பீராக! "இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:63,64

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் (அவனைப்) புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.

திருக்குர்ஆன் 17:67

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களின் துஆக்களைப் பற்றியே அல்லாஹ் இவ்வசனனங்களில் கூறுகிறான்.

அவர்கள் சாதாரணமான நேரங்களில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தாலும் மிக நெருக்கடியான நேரத்தில் இணை கற்பித்தவர்களை உள்ளத்தில் இருந்து தூக்கி எறிந்து விட்டு பிரார்த்தனையை அவனுக்கே உரித்தாக்கியதால் அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதாக கூறுகிறான்.

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள சிலர் நெருக்கடியான நேரத்தில் கூட அல்லாஹ்வை மட்டும் அழைக்காமல் யா முஹ்யித்தீனே என்று அழைத்து பிரார்த்திக்கின்றனர். மக்கத்துக் காஃபிர்களை விட கொடிய இணை வைப்பாளர்களின் துஆக்கள் நெருக்கடியான நேரத்திலும் ஏற்கப்படாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account