ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா?
என் சகோதரிகளுக்கு சொந்தமாக வீடு உள்ளது. ஆனால் அவர்களுக்கு வருமானம் இல்லை (little income). இந்த நிலையில் என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? ஆனால் அவர்களிடம் 11 பவுன் நகைக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. விளக்கம் கொடுக்கவும்.
முஹம்மத்
பதில்
செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்குக் கொடுப்பதே ஜகாத் என்பதன் அடிப்படை.
இந்த அடிப்படையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
செல்வந்தர்கள் ஏழைகள் என்பது ஒப்பிட்டுப் பார்த்து வகைப்படுத்துவதாகும். ஒருவருடன் ஒப்பிடும் போது செல்வந்தராக காணப்படுபவர் இன்னொருவருடன் ஒப்பிடும் போது ஏழையாக இருப்பார்.
மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் மக்களைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவர் சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார். அவருக்கு மாதம் இருபதாயிரம் சம்பளம் கிடைக்கிறது. இவர் தனது சொந்த ஊரில் செல்வந்தராகக் கருதப்படுவார்.
ஆனால் சவூதியில் இவருக்குச் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பார்வையில் இவர் ஏழையாவார். ஒரு அரபியின் வீட்டில் வேலை செய்தால் அந்த வீட்டின் உரிமையாளர் பார்வையில் இவர் பரம எழையாவார். இவரது தரத்தில் உள்ளவர்களுக்குத் தான் அரபிகளால் ஜகாத் கொடுக்க முடியும். இல்லாவிட்டால் அரபிகள் ஜகாத் கொடுக்க முடியாது.
அரபுகளிடம் ஜகாத் பெற்ற இவர் தனது ஊரில் உள்ள ஏழைகளுக்கு ஜகாத் கொடுக்கலாம். நானே ஜகாத் வாங்கியிருக்கிறேன்; நான் எப்படி ஜகாத் கொடுப்பது என்று கருதினால் அந்த ஊர் மக்களுக்கு ஜகாத் கிடைக்காமல் போய்விடும்.
மேலும் இவரது சொந்த ஊரில் இவரை விட குறைந்த வருவாய் உள்ளவர்கள் கூட ஜகாத் கொடுப்பார்கள். ஆனால் அவர்களை விட அதிக வருமானம் உள்ள இவர் நானே ஜகாத் வாங்கி இருக்கிறேன் நான் எப்படி ஜகாத் கொடுப்பது என்று வாதிடுவது வரட்டு வாதமாகவே அமையும்.
ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்குபவராக இருக்கக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருந்தால் இவ்வாறு வாதிடலாம். அவ்வாறு எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் இருப்பதாக நாம் தேடிப்பார்த்த வகையில் கிடைக்கவில்லை.
ஒரு ஊரில் பலகோடி ரூபாய்களுக்கு அதிபதியாக ஒருவர் இருக்கிறார். அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் லட்சாதிபதி அவர் பார்வையில் ஏழையாக உள்ளதால் இவருக்கு ஜகாத் கொடுக்கலாம். இவரும் வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு வாங்கி விட்டு தனது வருமானத்தையும் தனக்கு ஜகாத்தாகக் கிடைத்த வருமானத்தையும் கணக்கிட்டு அதில் இருந்து தன்னை விட ஏழைகளுக்கு இவர் ஜகாத் கொடுக்கலாம்.
தங்கத்தை அளவு கோலாகக் கூறும் ஹதீஸ் பலவீனமாக உள்ளது. யாரும் அந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது எனக் கூறவில்லை. எவ்வளவு தொகை இருந்தால் ஜகாத் கடமையாகும் என்பதற்கு வெள்ளியைத் தான் அளௌகோலாக கொள்ள வேண்டும்.
வெள்ளியை அளவுகோலாகக் கொள்ளும் ஹதீஸ் படி இன்றைய மதிப்பில் முப்பதாயிரம் ரூபாய் வைத்துள்ளவருக்கு ஜகாத் கடமையாகிவிடும்.
صحيح البخاري
1405 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى بْنِ عُمَارَةَ أَخْبَرَهُ، عَنْ أَبِيهِ يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ أَبِي الحَسَنِ: أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ»1405 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஜகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் = 60 ஸாவு) தானியத்தில் ஜகாத் இல்லை.
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஐந்து ஊகியா வெள்ளி வைத்து இருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஒரு ஊகியா என்பது 40 திர்ஹமாகும். அன்றைய ஒரு திர்ஹத்தின் இன்றைய எடை 3.6 கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 200 திர்ஹத்தின் எடை 720 கிராம் ஆகும். அதாவது வெள்ளியை அளவுகோலாகக் கொள்ளும் ஹதீஸ் படி இன்றைய மதிப்பில் 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் உள்ளவருக்கு ஜகாத் கடமையாகி விடும்.
முப்பதாயிரம் ரூபாய் அல்லது அதன் மதிப்புடைய தங்கம், வெள்ளி, பணம் இல்லாதவர் மிகச்சிலரே இருப்பார்கள். அப்படியானால் ஊருக்குப் பத்து பேர் கூட ஜகாத் வாங்கத் தகுதி உடையவராக மாட்டார்கள். ஜகாத் என்ற அம்சம் வெறும் ஏட்டில் மட்டுமே இருக்கும். எனவே ஜகாத் வாங்குபவர் ஜகாத் கொடுப்பவராகவும் இருக்கலாம் என்ற நிலைபாடு இருந்தால் தான் ஜகாத் என்பது நடைமுறையில் இருக்கும்.
ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் வேறு எந்த இருப்பும் இல்லை. அவர் ஜகாத் கொடுக்க மாட்டார். சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து 720 கிராம் வெள்ளி அளவுக்கு அவரிடம் இருப்பு வந்து விட்டது என்றால் அந்த 720 கிராம் வெள்ளிக்கும் அதன் பின் அவருக்கு வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.
எப்போது 720 கிராம் வெள்ளியை விட குறைந்து விடுகிறதோ அப்போது ஜகாத் கடமை இல்லை.
ஒருவர் மாதம் மூவாயிரம் சம்பளம் வங்குகிறார். ஆனால் அவரிடம் ஏற்கனவே 20 பவுன் நகை உள்ளது என்றால் இவர் அந்த 20 பவுனுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அந்த மூன்றாயிரம் ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.
எப்போதெல்லாம் அவருக்கு செல்வம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜகாத் கடமையாகி விடும்
எனவே நமக்கு யாரும் ஜகாத் கொடுத்தால் அவர்கள் நம்மைவிட மேல்நிலையில் தான் இருப்பார்கள், அவர்களிடம் இருந்து நாம் ஜகாத்தை வாங்குவது குற்றமில்லை. எனெனில் அவருடன் ஒப்பிடும் போது நாம் எழையாகத் தான் இருக்கிறோம். அதுபோல் நம்மைவிட கீழ் நிலையில் உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது நாம் அவரை விடச் செல்வந்தராக இருப்போம். அதனடிப்படையில் நாம் கொடுப்பவர்களாகவும் இருக்கலாம்.
அல்லாஹ் ஒருவன் மட்டுமே யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காமல் செல்வந்தன் என்ற பட்டத்துக்கு கனீ என்ற பட்டத்துக்கு உரியவன். மனிதர்களில் அப்படி ஒரு செல்வந்தனும் இல்லை.
21.11.2013. 9:30 AM
ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode