- மண் கேட்ட படலம்
ஆதம் (அலை) அவர்களைப் படைக்க அல்லாஹ் எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணித்தானாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்ட போது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராஃபீலை அனுப்பிய போது, அவர்களும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.
சில ஏடுகளில் இந்தக் கதை எழுதி வைக்கப்பட்டுள்ளது. சில பேச்சாளர்களால் பல மேடைகளில் பேசப்பட்டும் வருகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே இந்தக் கதை முரணாக அமைந்துள்ளதை நாம் விரிவாகப் பார்ப்போம்.
வானங்கள், பூமி அவற்றில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் ஆணைக்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்கின்றன என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையாகும். பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனித ஜின் இனங்கள் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்கக்கூடியவர்களாகவும், மறுக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர். மற்ற படைப்பினங்கள் அனைத்தும் அவனது கட்டளைக்கும், விருப்பத்திற்கும் எதிராகச் செயல்படுவதே இல்லை என்பதை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் இதைத் தெளிவாகவே விளக்குகின்றது.
அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 3:83
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.
திருக்குர்ஆன் 13:15
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.
திருக்குர்ஆன் 16:49
"வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்'' என்பதை நீர் அறியவில்லையா?
திருக்குர்ஆன் 22:18
வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 24:41
ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதிக்கின்றன. அவனைப் போற்றிப் புகழாத எதுவுமே இல்லை. ஆயினும் அவை துதிப்பதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! அவன் சகிப்புத் தன்மையுடையவன்; மன்னிப்பவன்.
திருக்குர்ஆன் 17:44
என்று தனது திருமறையில் வல்ல அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் கட்டளைக்கு பூமி அடிபணிய மறுத்து விட்டதாக இந்தக் கதை அமைந்துள்ளது. வானங்களையும், பூமியையும் படைத்த பின் அவற்றை நோக்கி ஒரு உடன்படிக்கை எடுத்ததைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்'' என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம்'' என்று அவை கூறின.
திருக்குர்ஆன் 41:11
"அல்லாஹ் பூமிக்கோ வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும்; அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது'' என்று மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்கள் ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும் போது அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்? இந்தக் கதையை நம்பினால் திருக்குர்ஆனின் வசனங்களை மறுக்கும் நிலை ஏற்படும்.
எனவே பூமி அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிய மறுத்திருக்கும் என்று எந்த ஒரு முஸ்லிமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
மலக்குகளைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் இலக்கணத்திற்கும் இந்தக் கதை முரணாக அமைந்துள்ளது.
மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராஃபீல் ஆகிய மூவரும் அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா?
"மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது'' என்றெல்லாம் திருக்குர்ஆனின் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.
திருக்குர்ஆன் 16:49, 50
"'அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
திருக்குர்ஆன் 21:26, 27
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
திருக்குர்ஆன் 66:6
சிறப்புக்குரிய வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?
"இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள்'' என்று தெளிவாக்கும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இந்தக் கதை முரண்படுகிறது.
மேலும் மலக்குல் மவ்த் என்ற வானவர் மட்டும் பூமியின் ஆட்சபணையைப் பொருட்படுத்தாமல் மண் அள்ளிச் சென்றதாகவும், அதன் காரணமாகவே உயிர் வாங்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இந்தக் கதையில் கூறப்பட்டுள்ளது.
மனிதர்கள் அனைவரின் உயிர்களையும் ஒரே ஒரு வானவர் தான் கைப்பற்றுகிறார் என்ற தவறான நம்பிக்கையில் இந்தக் கதை புனையப்பட்டுள்ளது.
உண்மையில் அனைத்து மனிதர்களின் உயிர்களையும் ஒரே ஒரு வானவர் தான் கைப்பற்றுகிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; அந்த வானவரின் பெயர் இஸ்ராயீல் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. இஸ்ராயீல் என்ற பெயரில் எந்த வானவரும் கிடையாது.
திருக்குர்ஆனை நாம் ஆராய்ந்தால் மனித உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் ஏராளமாக உள்ளனர் என்பதை அறியலாம்.
மனித உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடும் போது, "வானவர்'' என்று ஒருமையாகக் கூறாமல் "வானவர்கள்'' என்று பன்மையாகக் கூறுகின்றது.
தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள்.
திருக்குர்ஆன் 4:97
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 6:61
நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது "அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று கேட்பார்கள்.
திருக்குர்ஆன் 7:37
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, "சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!'' என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!
திருக்குர்ஆன் 8:50
தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, "நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை'' என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள்.
திருக்குர்ஆன் 16:28
நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, "உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!'' என்று கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 16:32
அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்?
திருக்குர்ஆன் 47:27
அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகின்றீர்கள்!' (எனக் கூறுவார்கள்).
திருக்குர்ஆன் 6:93
உயிர்களைக் கைப்பற்றும் வானவர் ஒருவர் அல்ல; ஏராளமாக உள்ளனர் என்பதை இந்த வசனங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறுகின்றன.
ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கைப்பற்ற ஒரு வானவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான் அந்த மனிதனின் உயிரைக் கைப்பற்றுகிறார் என்பதைப் பின்வரும் வசனம் கூறுகின்றது.
"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 32:11
மேற்கண்ட வசனங்களின் கருத்துக்கு முரணாகவும் இந்தக் கதை அமைந்துள்ளது.
மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.
அந்தப் பணியைச் செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும், அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறி விட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.
அற்பமான காரியத்தைச் செய்து முடிக்க அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்லவில்லை. மிக உயர்ந்த சிறந்த நோக்கத்திற்காக மண் எடுத்து வரச் சொல்லி இருந்தும் அது பூமியால் மறுக்கப்படுவதாக இந்தக் கதை குறிப்பிடுகிறது.
எந்த வகையில் பார்த்தாலும், இந்தக் கதை சரியானதல்ல என்பது தெளிவாகவே தெரிகின்றது. இது போன்ற கதைகளை நம்பினால் இறைவனைப் பற்றியும், அவனது மலக்குகளைப் பற்றியும் தவறாக நம்பிக்கை கொண்டவர்களாவோம். மேலே நாம் எடுத்துக் காட்டிய இறை வசனங்களை நிராகரித்தவர்களாகவும் நாம் ஆக நேரிடும்.
இந்தக் கதை முழுக்க பொய் என்பதைப் பின்வரும் நபி மொழி இன்னும் தெளிவாக்குகின்றது.
4693 حَدَّثَنَا مُسَدَّدٌ ، أَنَّ يَزِيدَ بْنَ زُرَيْعٍوَيَحْيَى بْنَ سَعِيدٍ حَدَّثَاهُمْ، قَالَا : حَدَّثَنَاعَوْفٌ ، قَالَ : حَدَّثَنَا قَسَامَةُ بْنُ زُهَيْرٍ ، قَالَ : حَدَّثَنَا أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ مِنْ قَبْضَةٍ قَبَضَهَا مِنْ جَمِيعِ الْأَرْضِ، فَجَاءَ بَنُو آدَمَ عَلَى قَدْرِ الْأَرْضِ ؛ جَاءَ مِنْهُمُ الْأَحْمَرُ وَالْأَبْيَضُ وَالْأَسْوَدُ وَبَيْنَ ذَلِكَ، وَالسَّهْلُ وَالْحَزْنُ، وَالْخَبِيثُ وَالطَّيِّبُ ".
"பூமியின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அல்லாஹ்வே கைப்பிடி மண் எடுத்து ஆதமைப் படைத்தான்'' (நபிமொழி)
அறிவிப்பவர்: அபூமூஸா அல் அஷ்அரி (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 4073, திர்மிதீ 2879, அஹ்மத் 18761, 18813
"மண் எடுத்து வரும்படி மலக்குகளுக்கு அல்லாஹ் உத்தரவிடவில்லை. மாறாக அவனே கைப்பிடி மண் எடுத்து ஆதம் (அலை) அவர்களை உருவாக்கினான்'' என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்கும் போது இந்தக் கதை பச்சைப் பொய் என்பது தெளிவாகின்றது. இது போன்ற கதைகளை நம்பி வானவர்களை நிராகரித்து இறைவனின் கோபத்திற்குள்ளாகாமல் இறைவன் நம்மைக் காப்பானாக!
மனிதனைப் படைக்க மண் தர மறுத்த பூமி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode