132. அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை
திருக்குர்ஆன் மட்டுமே போதும்; திருத்தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் (4:150, 151, 152) கூறுகின்றன.
"அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை ஏற்போம். வேறு சிலதை நிராகரிப்போம் என்று கூறுபவர்கள் மெய்யாகவே முஸ்லிமல்லாதவர்கள்'' என்று இவ்வசனம் கூறுகிறது.
இவ்வசனம் தெளிவாகக் கூறும் இவ்வுண்மையை மறுத்திட இவ்வசனத்திற்குச் சிலர் தவறான பொருள் கொடுத்து வருகின்றனர். திருக்குர்ஆனின் சில தமிழாக்கங்களில் இவ்வசனம் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதைத் தங்கள் கூற்றுக்கு சான்றாகக் காட்டுகின்றனர்.
இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் சமமானவர்களே. அவர்களுக்கிடையே வேற்றுமை காட்டக் கூடாது. அவர்களில் சிலரை ஏற்று வேறு சிலரை மறுக்கக் கூடாது என்பது தான் இவ்வசனத்தின் பொருள் என்று இவர்கள் கூறுகின்றனர்.
இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கிடையில் வேற்றுமை காட்டக் கூடாது. எல்லாத் தூதர்களையும் நம்ப வேண்டும் என்பது சரி தான். இதைத் திருக்குர்ஆன் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறது. அத்தகைய வசனங்களுக்குத் தான் இவ்விளக்கம் பொருந்துமே தவிர இவ்வசனத்திற்கு அவ்விளக்கம் அறவே பொருந்தாது.
ஏனெனில் இவ்வசனம் இறைத்தூதர்களுக்கிடையே வேற்றுமை காட்டக் கூடாது என்று பொருள் கொள்ளும் வகையில் அமையவே இல்லை.
"வயுரீதூன அன் யுஃபர்ரிகூ பைன ருஸுலிஹி'' என்று கூறப்பட்டால் "இறைத் தூதர்களுக்கிடையே வேற்றுமை காட்ட எண்ணுகிறார்கள்'' என்று பொருள் வரும்.
ஆனால் இவ்வசனத்தில் "பைன ருஸுலிஹி'' (தூதர்களுக்கு இடையில்) என்று கூறாமல் "பைனல்லாஹி வருஸுலிஹி'' (அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையில்) என்று கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்களுக்கும் இடையே வேற்றுமை காட்டாதீர்கள் என்ற சொற்றொடருக்கு தூதர்களிடையே வேற்றுமை காட்டாதீர்கள் என்று பொருள் கொள்வதை விட அறியாமை ஏதும் இருக்க முடியாது.
எனவே இவ்வசனம் அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்களுக்கும் இடையே வேற்றுமை காட்டக் கூடாது என்பதைத் தான் கூறுகிறது. நேரடியான வாசகமே அப்படித் தான் அமைந்திருக்கின்றது.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை காட்டக் கூடாது என்பதன் பொருளையும் சரியான முறையில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே நிச்சயமாக வேற்றுமை உள்ளது. அல்லாஹ்வைப் போல் அவன் தூதர்களைக் கருதக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்கத்தை அல்லாஹ்வின் தூதருக்குச் செய்ய வேண்டும் என்று இவ்வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது. அப்படியானால் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்குமிடையே வேற்றுமை காட்டக் கூடாது என்பதன் பொருள் என்ன?
இதற்காக நாம் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. ஏனெனில் எந்த வகையில் வேற்றுமை காட்டக் கூடாது என்பதையும் இவ்வசனத்திலேயே அல்லாஹ் தெளிவாகக் கூறி விடுகின்றான். "சிலவற்றை ஏற்போம். சிலவற்றை மறுப்போம்'' என்று கூறுவதையே வேற்றுமை காட்டுதல் என்று அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.
அல்லாஹ் சொன்னதை நாங்கள் ஏற்போம். அவன் தூதர்கள் கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று யாராவது கூறினால் அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையில் வேற்றுமை காட்டுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் கூறும் செய்திகள் அல்லாஹ்வின் செய்திகள் என்று நம்ப வேண்டும். தூதர் கூறும் செய்திகளை ஒருவர் மறுத்தால் அவர் உண்மையில் அவரை அனுப்பிய அல்லாஹ்வைத் தான் மறுக்கிறார். இதைத் தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான்.
இவ்வாறு வேறுபாடு காட்டுபவர்களின் நிலை என்ன என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் பாதியை ஏற்று மீதியை மறுத்து, புது வழியை உருவாக்கியதால் "இவர்களே உண்மையான இறைமறுப்பாளர்கள். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறது'' என்று பிரகடனம் செய்கின்றான்.
திருக்குர்ஆன் மட்டும் போதும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவையில்லை எனக் கூறுவோர் இவ்வசனத்தின் தெளிவான தீர்ப்பின்படி முஸ்லிம்கள் அல்லர். சந்தேகத்திற்கிடமின்றி இவர்கள் இறைமறுப்பாளர்களே!
மேலே நாம் எடுத்துக் காட்டிய 150, 151, 152 ஆகிய வசனங்களில் மூன்றாவது வசனத்தை இவர்கள் தங்களின் கருத்துக்கு ஆதரவாக வளைக்க நினைக்கின்றனர்.
"யார் அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புகிறார்களோ - மேலும் அவர்களில் எவருக்குமிடையே வேற்றுமை காட்டாமல் உள்ளனரோ அவர்களின் பரிசுகளை அவர்களுக்கு அவன் வழங்குவான்'' என்பது தான் 152வது வசனம்.
இவ்வசனத்தில் இறைத்தூதர்களுக்கு இடையே வேற்றுமை காட்டக் கூடாது என்று கூறப்படுவதால் 150வது வசனத்திற்கும் அவ்வாறு தான் பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
முதலில் ஒரு அடிப்படையை இவர்கள் அறியவில்லை. இரண்டு விதமான கருத்துக்கள் கொள்ள எந்த வசனம் இடம் தருகின்றதோ அது போன்ற வசனங்களுக்கு எந்த விளக்கம் கொடுக்கலாம் என்பதற்காக வேறு வசனங்களைத் துணைக்கு அழைக்க வேண்டும்.
எந்த வசனம் இரண்டு கருத்துக்கள் கொள்ள இடம் தரவில்லையோ அது போன்ற வசனங்களுக்கு இன்னொரு வசனத்தின் துணையுடன் விளக்கம் கூறுவதாகக் கருதிக் கொண்டு நேரடியான பொருளை நிராகரிக்கக் கூடாது.
150வது வசனத்தில் "அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையே வேற்றுமை காட்டுகிறார்களோ'' என்று கூறப்படுகின்றது. இதற்கு இரண்டு கருத்துக்கள் கிடையாது. அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்களுக்குமிடையே வேற்றுமை காட்டக் கூடாது என்ற ஒரு கருத்து தான் இதற்கு இருக்கிறது.
"தூதர்களுக்கிடையில் வேற்றுமை காட்டக் கூடாது'' என்பது தான் இதன் கருத்து என்றால் அல்லாஹ்வுக்கும்' என்ற வாசகம் தேவையில்லாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆகி விடும். இறைவேதத்தில் இத்தகைய வீணான சொற்கள் இருப்பதாகக் கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
எனவே அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வேற்றுமை காட்டக் கூடாது என்ற 150வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும், தூதர்களுக்கிடையே வேற்றுமை காட்டக் கூடாது என்ற 152வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும் கொடுக்க வேண்டுமே தவிர இல்லாத ஒன்றை வலிந்து திணிக்கக் கூடாது.
"அல்லாஹ் சொன்னதை அதாவது திருக்குர்ஆனை மட்டும் தான் ஏற்பேன்; தூதர் சொன்னதை அதாவது ஹதீஸ்களை ஏற்க மாட்டேன்'' என்று கூறுவது அப்பட்டமான இறைமறுப்பாகும் என்பது தான் இவ்வசனம் சொல்லும் செய்தியாகும்.
திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!
132. அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode