Sidebar

27
Sat, Jul
4 New Articles

266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது 

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது

மனிதர்கள் விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில் (17:37) சொல்கின்றது.

இவ்வசனம் மிகப்பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.

தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர்.

"நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை'' என்ற கருத்துப்படவே பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.

ஆரம்பகாலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.

மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக் கூடாது என்ற கட்டளையுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இவ்வசனத்தின் சரியான பொருள் "நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை'' என்பது தான். இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமிக்குக் கீழ் அப்படிச் செல்ல முடியவில்லை. பெரிய மலையின் உயரம் அளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பது தான் இவ்வசனம் கூறும் கருத்தாகும்.

நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான்.

இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம்.

மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய்க் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.

பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர்முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும்.

இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான்.

உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் இன்னும் செல்லவில்லை.

உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.

பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களால் இந்த வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன.

பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டால் காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை.

மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச்செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதனால் மனிதனின் எடை அதிகரிக்கும். அவனது எடையை அவனால் தாங்க முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது.

இந்தப் பேருண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறை வேதம் என்பது நிரூபணமாகின்றது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account