Sidebar

20
Fri, Sep
4 New Articles

285. சூனியம் ஒரு தந்திரமே!

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

285. சூனியம் ஒரு தந்திரமே!

சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் ஆகிய சொற்கள் 5:110, 7:109, 7:116, 7:118, 7:119, 7:120, 10:2, 10:76,77, 11:7, 20:57, 20:63, 20:66, 20:69, 20:71, 21:3, 26:35, 26:153, 26:185, 27:13, 28:36, 28:48, 34:43, 37:15, 38:4, 40:24, 43:30, 46:7, 51:39, 51:52, 52:15, 54:2, 61:6, 74:25 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தில் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேறு சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது; அது தந்திரமாக ஏமாற்றுவது தான் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் உள்ளவர்கள் தமது கருத்தை நிலைநாட்டுவதற்கு உதவும் வசனங்களை எடுத்துக் காட்டி சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று சாதிக்கின்றனர்.

முரண்பட்ட வகையில் அல்லாஹ் பேச மாட்டான் என்று கவனமாக ஆய்வு செய்யும் போது சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்துடையோர் திருக்குர்ஆனை தவறாகப் புரிந்து கொண்டு வாதிட்டுள்ளனர் என்பதை அறியலாம்.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

நபிமார்களின் போதனையை நம்பாத மக்கள் நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் பைத்தியம் பிடித்து உளறுகிறார்கள் என்று சொன்னார்கள்.

இதை திருக்குர்ஆன் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறது.

உதாரணமாக சாலிஹ் நபியைப் பார்த்து சூனியம் செய்யப்பட்டவர் என்று அவரது சமுதாயத்தினர் சொன்னதாக 26:153 வசனம் கூறுகிறது.

ஷுஐப் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று அவரது சமுதாயத்தினர் கூறியதாக 26:185 வசனம் கூறுகிறது.

மனநோயால் பாதிக்கப்பட்டு நபிமார்கள் உளறுகிறார்கள் என்ற கருத்தைச் சொல்லும் போது அதை சூனியம் வைக்கப்பட்டவர் என்ற சொல்லால் அன்றைய மக்கள் குறிப்பிட்டுள்ளனர். சூனியம் என்ற வார்த்தைக்கு மனநோய் என்று மக்கள் நம்பியிருந்ததால் தானே இப்படிக் கூறினார்கள்? எனவே சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பதற்கு இவ்வசனங்கள் போதுமான ஆதாரமாகும் என்று கூறுகின்றனர்.

ஆனால் இது அறிவுடையோர் வைக்கக் கூடிய வாதமாக இல்லை.

சூனியத்திற்கு இந்த அர்த்தத்தை அல்லாஹ் சொல்லவில்லை. அறியாத மக்கள் சூனியத்திற்கு இவ்வாறு அர்த்தம் வைத்திருந்தனர் என்பதற்குத் தான் இது ஆதாரமாகுமே தவிர அல்லாஹ்விடம் இது தான் சூனியத்தின் அர்த்தம் என்பதற்கு ஆதாரமாக ஆகாது.

இறைவனை மறுப்போர் சூனியத்திற்கு சக்தியிருப்பதாக நம்பினார்கள். அவர்களின் நினைப்பிற்குத் தகுந்தவாறு அவர்கள் பேசினார்கள் என்று தான் இது போன்ற எல்லா வசனங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தை ஏற்காதவர்கள் தமது நம்பிக்கைப் பிரகாரம் பேசியதை அல்லாஹ் எடுத்துக் காட்டினால், இது இஸ்லாத்தை ஏற்காதவர்களின் நம்பிக்கை என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

சூனியத்தால் ஒருவனை மன நோயாளியாக ஆக்க முடியும் என்று அந்த மக்கள் நம்பியதால் நபிமார்கள் சூனியம் வைக்கப்பட்டு மன நோயாளிகளாகி விட்டார்கள் என்று தமது நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் பேசியுள்ளார்கள்.

நபிமார்களின் போதனைகளைக் கேட்டபோது அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று சொன்னது போல் நபிமார்களை சூனியம் வைப்பவர்கள் என்றும் சிலர் சொன்னார்கள். நபிமார்கள் கொண்டு வந்த அற்புதத்தை சூனியம் என்றும் சொன்னார்கள்.

வித்தை என்று சொல்ல முடியாத அளவில் அற்புதத்தைச் செய்து காட்டினாலும் அதனை மறுப்பதற்காக இது சூனியம் என்று சொன்னார்கள்.

5:110, 61:6, 10:2, 10:77, 20:57, 20:71, 21:3, 21:52, 26:35, 27:13, 28:36, 28:48 ஆகிய வசனங்களில் நபிமார்களை சூனியக்காரர்கள் என்று அவர்களின் எதிரிகள் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான்.

நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பார்த்தவுடன் அதை சூனியம் என்று நபிமார்களின் எதிரிகள் சொன்னார்கள் என்றால் நபிமார்கள் செய்தது போன்ற காரியங்களை சூனியத்தாலும் செய்ய முடியும் என்பது தெரிகிறது. எனவே சூனியத்தால் மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இவ்வசனங்களும் ஆதாரங்களாகும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இதுவும் முதலில் சொன்ன வாதம் போல் தான் உள்ளது. சூனியத்தால் அற்புதம் செய்ய முடியும் என்ற கருத்தில் இருந்தவர்கள் தமது நம்பிக்கைக்கு ஏற்ப பேசியது மார்க்க ஆதாரமாக ஆகாது.

அல்லாஹ்வின் பார்வையில் சூனியம் என்பது என்ன? அதை இப்போது பார்ப்போம்.

திருக்குர்ஆன் 7:108 - 120 வரை உள்ள வசனங்களும், 20:65 - 70 வரை உள்ள வசனங்களும் அல்லாஹ்வின் பார்வையில் சூனியம் என்பது என்ன என்பதை விளக்குகின்றன.

சூனியக்காரர்கள் மகத்தான சூனியத்தைச் செய்தனர் என்று 7:116 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மூஸா நபிக்கு எதிராகக் களம் இறங்கிய சூனியக்காரர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். மிகவும் திறமை வாய்ந்த சூனியக்காரர்கள். அவர்கள் செய்து காட்டியது சிறிய சூனியம் அல்ல. மகத்தான சூனியத்தைச் செய்தனர் என்று இவ்வசனம் கூறுகிறது. அந்த மகத்தான சூனியத்தால் அவர்கள் செய்து காட்டியது என்ன?

அவர்கள் செய்த சூனியத்தின் மூலம் கயிறுகளும், கைத்தடிகளும் பாம்புகளாக மாறவில்லை. மாறாக பாம்பு போல் பொய்த்தோற்றம் ஏற்பட்டது என்று 20:66 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

மகத்தான சூனியமாக இருந்தாலும் அதன் மூலம் பொய்த்தோற்றம் தான் ஏற்படுத்த முடிந்தது. மெய்யாக எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை. மகத்தான சூனியத்தின் சக்தியே இதுதான் என்றால் சாதாரண சூனியத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

20:69 வசனத்தில் சூனியக்காரர்கள் செய்தது தில்லுமுல்லு (சூழ்ச்சி) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்''

அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்டபோது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.

மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.

அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி.

சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்.

உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.

மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மேற்கண்ட வாசகங்கள் சொல்வது என்ன?

சூனியம் கற்பனை தான். பொய்த் தோற்றம் தான். கண்கட்டு வித்தை தான். நிஜத்தில் ஒன்றும் நடக்கவில்லை என்பதை இவ்வசனங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன.

52:13,14,15 வசனங்களிலும் சூனியம் என்பதற்கு அல்லாஹ்விடம் என்ன அர்த்தம் என்று கூறப்பட்டுள்ளது.

மறுமையில் விசாரணை முடிந்தவுடன் சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்றவுடன் அல்லாஹ் நரகவாசிகளைப் பார்த்து, எதைப் பொய் என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்களோ அந்த நரகம் இதுதான். இது என்ன சூனியமா என்று சொல்லுங்கள் என்று கேட்பான் என இவ்வசனம் கூறுகிறது.

தீயவர்கள் நரகில் தள்ளப்படும் போது இது பொய்யா என்று கேட்பதற்குப் பதிலாக இது சூனியமா என்று அல்லாஹ் கேட்கிறான்.

சூனியம் என்றால் பொய் என்று அல்லாஹ் பொருள் சொல்லித் தருகிறான்.

இருப்பதை இல்லாமல் ஆக்கவோ, இல்லாததை உருவாக்கவோ, ஒன்றை வேறொன்றாக மாற்றவோ எந்த வித்தையும் கிடையாது. தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இதில் இருந்து அறியலாம்.

சூனியம் குறித்து மேலும் அறிய 28, 285, 357, 468, 495 499 ஆகிய குறிப்புக்களையும் பார்க்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account