Sidebar

27
Sat, Jul
4 New Articles

458. அலங்காரம் என்றால் என்ன?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

458. அலங்காரம் என்றால் என்ன?

அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் பெண்கள் வெளிப்படுத்தக் கூடாது என இவ்வசனங்களில் (24:31, 33:59) கூறப்படுகிறது.

அலங்காரம் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் 'ஜீனத்' என்ற மூலச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள்ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.

உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, மேக்கப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது ஆகியவை ஜீனத் என்ற சொல்லில் அடங்கும்.

இவ்வசனத்தில் கூறப்படுபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன்னால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது என்பது தான் இதன் பொருளாகும்.

அழகை வெளிப்படுத்தக் கூடாது என்பது தான் இதன் கருத்து என்று சிலர் வாதிடுகின்றனர். அழகு என்பதில் முகமே முதல் இடத்தில் இருப்பதால் மேற்கண்ட உறவுமுறை இல்லாத ஆண்கள் முன்னால் முகத்தை மறைக்க வேண்டும் எனவும் இவர்கள் வாதிடுகின்றனர். மேலும் பெண்களின் கைகளும், கால்களும் அழகில் அடங்கும் என்பதால் கைகளையும், பாதங்களையும் மறைப்பது அவசியம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இவர்களின் இந்த வாதம் முற்றிலும் தவறாகும்.

திருக்குர்ஆனில் ஜீனத் என்ற சொல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களைக் கவனமாக ஆராய்ந்தால் ஜீனத் என்பது அலங்காரத்தைத் தான் குறிக்கும் என்பதையும், உடல் உறுப்புக்களைக் குறிக்காது என்பதையும் சந்தேகமற அறியலாம்.

வானத்தில் நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம்.

திருக்குர்ஆன் 15:16

முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.

திருக்குர்ஆன் 37:6

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.

திருக்குர்ஆன் 41:12

அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை.

திருக்குர்ஆன் 50:6

முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

திருக்குர்ஆன் 67:5

மேற்கண்ட வசனங்களில் நட்சத்திரங்கள் வானத்துக்கு அலங்காரமாக அமைந்துள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான்.

நட்சத்திரங்கள் வானத்தின் ஓர் அங்கம் அல்ல. வானத்தில் ஓர் அங்கமாக இல்லாமல் நட்சத்திரங்கள் வானத்துக்குக் கவர்ச்சியை அளிக்கின்றன. இதை ஜீனத் என்ற சொல்லால் இறைவன் குறிப்பிடுகிறான்.

அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 18:7

பூமியின் மேலுள்ள புற்பூண்டுகளை பூமிக்கு ஜீனத் (அலங்காரம்) என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

திருக்குர்ஆன் 7:31

தொழுமிடத்தில் அலங்காரம் செய்து கொள்ளுங்கள் என்பது உடல் அழகைக் குறிக்காது. அவ்வாறு குறித்தால் உடல் அழகு இல்லாதவர்கள் பள்ளிக்கு வருவது குற்றமாகி விடும். அணிகின்ற ஆடை நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது.

24:31 வசனத்தில் இடம் பெற்றுள்ள ஜீனத் என்ற சொல்லின் பொருளை விளக்குவதற்காகவே மேற்கண்ட வசனங்களை நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

பெண்கள் ஆபரணங்கள் அணிந்த நிலையில், லிப்ஸ்டிக் போட்டுக் கொண்ட நிலையில், மேக்கப் செய்து கொண்ட நிலையில் அன்னிய ஆண்களுக்கு முன்னால் காட்சி தரலாகாது. மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்கள் முன்னிலையில் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் அலங்காரம் செய்யாமல் இயற்கையான தோற்றத்தில் தான் இருக்க வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இவ்வசனத்தில் முகம், கைகளை மறைக்க வேண்டும் என்றும் கூறப்படவில்லை. மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்படவில்லை. உடல் அங்கங்கள் பற்றி இவ்வசனம் பேசவேயில்லை.

அலங்காரத்தில் வெளியே தெரிபவற்றைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்பதில் வெளியே தெரிபவை என்பது எதைக் குறிக்கின்றது?

நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி அலங்காரம் என்பது நகைகள், முகப் பவுடர், லிப்ஸ்டிக் ஆகியவற்றுடன் ஆடையையும் குறிக்கும். உடலை மறைப்பதற்காக அணியும் ஆடைகள் கூட ஒருவருக்கு அலங்காரம் தான். அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று பொதுப்படையாகக் கூறினால் ஆடை அணியாமல் இருக்க வேண்டும் என்ற கருத்து வந்து விடும்.

மற்ற அலங்காரத்தை மறைக்கலாம், அல்லது தவிர்க்கலாம். ஆனால் ஆடை எனும் அலங்காரத்தை மறைக்கவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. மறைப்பதற்காக ஆடையின் மேல் மற்றோர் ஆடையைப் போர்த்தினால் போர்த்தப்பட்ட ஆடையும் அலங்காரத்தில் அடங்கி விடும்.

என்ன செய்தாலும் வெளியே தெரிந்தே தீர வேண்டியதாக ஆடை எனும் அலங்காரம் அமைந்துள்ளது. எனவே வெளியே தெரிந்தே தீர வேண்டிய ஆடை என்ற அலங்காரம் தவிர மற்ற எந்த அலங்காரத்தையும் அன்னியர் முன் காட்ட வேண்டாம் என்று தெளிவுபடுத்தவே, 'வெளியே தெரிபவை தவிர' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜீனத் என்ற சொல்லின் நேரடி அர்த்தத்தின் படியும், திருக்குர்ஆனில் பிற இடங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளபடியும் நாம் கூறிய விளக்கம் தான் சரியானதாகும்.

பெண்கள் முகத்தையும், முன் கைகளையும் மறைப்பது அவசியமா? இல்லையா? என்றால் அதற்கு வேறு ஆதாரங்களைத் தான் எடுத்துக் காட்ட வேண்டும். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டக் கூடாது.

பெண்கள் முகத்தையும், கைகளையும் மறைக்கக் கூடாது என்பதுதான் சரியான கருத்தாகும். இது குறித்து 472வது குறிப்பில் தக்க ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம்.

பெண்கள் அலங்காரத்தை ஏன் மறைக்க வேண்டும் என்பதையும், முகம் கைகள் தவிர மற்ற பகுதிகளை ஏன் மறைக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள 300வது குறிப்பைப் பார்க்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account