Sidebar

13
Wed, Nov
12 New Articles

86. இரு பொருள் தரும் வார்த்தைகள்

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

86. இரு பொருள் தரும் வார்த்தைகள்

இவ்வசனம் (3:7) அதிகமான முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே இது பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும், முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது. முஹ்கம் என்றால் என்ன? முதஷாபிஹ் என்றால் என்ன என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

தவறான கருத்துக்கு வளைக்க முடியாமல் அமைந்தவை முஹ்கம் ஆகும்.

நல்லவர்கள் சரியான முறையில் புரிந்து கொண்டாலும் வழிகேடர்கள் தவறாக வளைக்கும் வகையில் அமைந்தவை முதஷாபிஹ் ஆகும். இதுதான் சரியான கருத்தாகும்.

ஆனால், முஹ்கம் என்றால் அனைவருக்கும் புரியக் கூடியவை; முதஷாபிஹ் என்றால் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் புரியாதவை என்று சிலர் கூறுகிறார்கள்.

இதுதான் அதிகமானவர்களின் கருத்து என்றாலும் ஆய்வு செய்து பார்க்கும் போது இக்கருத்து முற்றிலும் தவறானதும், அல்லாஹ்வின் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவதுமாகும் என அறிந்து கொள்ளலாம்.

முதஷாபிஹ் வசனம் பற்றி பேசும் 3:7 வசனத்துக்குப் பொருள் செய்வதில் ஏற்பட்ட முரண்பாடு தான் இந்தக் கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.

3:7 வசனத்துக்கு நாம் செய்யும் பொருள்.

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ற விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர (மற்றவர்கள்) அதன் விளக்கத்தை அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

நமது இந்த மொழிபெயர்ப்பின்படி திருக்குர்ஆனில் முஹ்கம், முதஷாபிஹ் என இரு வகை வசனங்கள் உள்ளன என்றும், முஹ்கம் எனும் வசனங்களை அனைவரும் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்றும், முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வும், தேர்ந்த கல்வியாளர்களும் சரியான முறையில் புரிந்து கொள்வார்கள்; ஆனால் அறிவீனர்களும், வழிகேடர்களும் முதஷாபிஹ் வசனங்களைத் தவறாகப் புரிந்து வழிகெட்டுப் போவார்கள் என்றும் கருத்து கிடைக்கும்.

இவ்வசனத்துக்கு மற்றவர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புகளைப் பார்ப்போம்.

(நபியே!) அவனே இவ்வேதத்தையும் உங்கள் மீது இறக்கி வைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரிய முடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திற்கேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விரு வகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களையன்றி மற்ற எவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசம் அடைய மாட்டார்கள்.

-ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பு

அவன்தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறிய மாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

-அப்துல் ஹமீது பாக்கவி மொழிபெயர்ப்பு

முஹ்கம் வசனங்கள் அனைவருக்கும் விளங்கும் என்ற கருத்திலும், முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான்; மனிதர்களில் ஒருவரும் அறிய மாட்டார்கள் என்ற கருத்திலும் இவ்விரு மொழிபெயர்ப்புகளும் அமைந்துள்ளன.

நமது மொழிபெயர்ப்பும், மற்றவர்களின் மொழிபெயர்ப்பும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இரண்டும் சரி என்று கூற முடியாது. இரண்டும் தவறு என்றும் கூற முடியாது. இரண்டில் ஒன்று சரியாக இருக்க வேண்டும். மற்றொன்று தவறாக இருக்க வேண்டும்.

நாம் செய்த மொழிபெயர்ப்பும், மற்றவர்கள் செய்த மொழிபெயர்ப்புகளும் அரபு இலக்கணப்படி சரியானது தான். இலக்கணப்படி இரண்டும் சரியானது என்றாலும் இந்த வசனத்தில் எது பொருத்தமான மொழிபெயர்ப்பு என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இரண்டு வகையாக மொழிபெயர்க்க இலக்கணப்படி இடம் உள்ளது என்ற காரணத்துக்காக விரும்பிய ஒரு வகையில் மொழிபெயர்க்கக் கூடாது. இரண்டு விதமான மொழிபெயர்ப்புகளில் ஒரு மொழிபெயர்ப்பு இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாகவும், இன்னொரு மொழிபெயர்ப்பு இஸ்லாத்தின் அடிப்படைக்கு ஏற்ற முறையிலும் இருந்தால் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமில்லாமல் உள்ள மொழிபெயர்ப்பைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதஷாபிஹ் வசனங்களை மனிதர்களில் யாரும் விளங்க முடியாது என்ற மொழிபெயர்ப்பு பல காரணங்களால் ஏற்க முடியாததாகும்.

மனித சமுதாயம் நேர்வழி பெறுவதற்காகவும், படிப்பினை பெறுவதற்காகவும் திருக்குர்ஆனை அருளியதாக அல்லாஹ் கூறுகின்றான். திருக்குர்ஆனிலிருந்து மனிதர்கள் நேர்வழி பெற வேண்டுமானால் அது மனிதர்களுக்குப் புரியும்படி அமைந்திருக்க வேண்டும். எவருக்குமே புரியாத மந்திர உச்சாடனங்கள் நேர்வழி காட்டாது.

திருக்குர்ஆன் முழுவதும் விளங்கிடத்தக்கவை என்பதைக் கூறும் ஏராளமான வசனங்கள் உள்ளன. அந்த வசனங்களில் சிலவற்றின் எண்களை மட்டும் இங்கே தந்துள்ளோம்.

2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 6:114, 7:52, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11.

இந்த வசனங்களும், இந்தக் கருத்தில் அமைந்த மற்ற வசனங்களும், திருக்குர்ஆன் அனைத்தும் விளங்கத்தக்கது என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன. திருக்குர்ஆனில் விளங்காதவை இல்லை என்று கூறும் மேற்கண்ட வசனங்களுக்கு ஏற்ப மற்றவர்களின் மொழிபெயர்ப்பு அமையவில்லை. எனவே நமது மொழிபெயர்ப்பு தான் சரியானதாகும்.

முதஷாபிஹ் வசனங்களைப் பற்றி இரண்டு இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். முதலாவது இடம் 3:7 வசனமாகும்.

மற்றொன்று 39:23 வசனமாகும். அந்த வசனம் இதுதான்:

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அவை திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், முதஷாபிஹானதாகவும் உள்ளன. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவனுக்கு வழிகாட்டுபவன் இல்லை.

திருக்குர்ஆன் 39:23

முதஷாபிஹான வசனத்தைக் கேட்பதால் இறையச்சம் உடையவர்களின் மேனி சிலிர்த்துப் போகும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகின்றான். மேனி சிலிர்த்தல் என்ற வார்த்தை விஷயம் தெளிவாக விளங்கி உள்ளத்தில் ஊடுருவுவதற்கே பயன்படுத்தப்படுகின்றது.

முதஷாபிஹ் வசனங்களைக் கேட்பதால் இறையச்சமுடையோரின் மேனி சிலிர்க்கின்றது என்றால் அந்த வசனங்கள் விளங்கும் என்பதும், உள்ளத்தில் ஆழமாக வேரூன்றும் என்பதும் தான் அதன் கருத்தாக இருக்க முடியும்.

மேலும் இவ்வசனத்தில் அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மை அடைகின்றன என்றும் அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஒன்றுமே புரியாவிட்டால் அதைக் கேட்டவுடன் இறை நினைவில் உள்ளங்கள் இளகி விடுமா? முதஷாபிஹ் வசனங்கள் விளங்கும் என்பதற்கு மேலும் ஒரு சான்றாக இது அமைந்துள்ளது.

மேலும் இந்த வசனத்தில், திருக்குர்ஆன் முதஷாபிஹான வசனங்களைக் கொண்டுள்ளதால் அது அழகான செய்தி என்றும், முதஷாபிஹ் ஆக இந்த வேதம் அமைந்திருப்பது அதன் சிறப்புத் தகுதி என்றும் அல்லாஹ் சிலாகித்துக் கூறுகின்றான். எவருக்கும் விளங்காமல் அமைந்திருப்பதை இறைவன் ஒரு சிறப்புத் தகுதியாகக் குறிப்பிட்டிருப்பானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த வாசகமும், முதஷாபிஹ் வசனங்கள் விளங்கத்தக்கவையே என்பதை உறுதிப்படுத்துகின்றது.

இறையச்சமுடையவர்களின் மேனி சிலிர்த்து விடும் என்ற கூற்றின் மூலம் இறையச்சமுடையவர்கள் இதை விளங்கிக் கொள்வார்கள் என்பதை இறைவன் தெரிவிக்கின்றான். அதே போல் 3:7 வசனத்தில், 'கல்வியில் சிறந்தவர்கள் முதஷாபிஹ் வசனங்களை விளங்கிக் கொள்வார்கள்' என்று கூறுகின்றான்.

இறையச்சமுடையோர் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதும், கல்வியில் சிறந்தோர் என்று 3:7 வசனத்தில் குறிப்பிடுவதும் ஒரே வகையினர் தான்.

ஏனெனில் மற்றொரு வசனத்தில், "அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்கள் தான்'' (35:28) என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த வகையில் இரு வசனங்களும் ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டிருக்கின்றன.

3:7 வசனத்தில், 'உள்ளத்தில் வழிகேடு இருப்பவர்கள் குழப்பத்தை நாடி முதஷாபிஹ் வசனங்களைத் தவறாகக் கையாள்வர்' என்றும், கல்வியில் சிறந்தவர்கள் சரியான பொருளைப் புரிந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்ட இறைவன், மேற்கண்ட 39:23 வசனத்திலும் அதே கருத்தைத் தெரிவிக்கிறான். "இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழிகாட்டுபவன் இல்லை'' என்று அந்த வசனத்தை அல்லாஹ் நிறைவு செய்கின்றான்.

அதாவது முதஷாபிஹ் வசனங்களின் மூலம் நேர்வழி பெறுவோரும் உள்ளனர். வழிகெடுவோரும் உள்ளனர் என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

3:7 வசனத்திற்கு இருவேறு முரண்பட்ட அர்த்தங்கள் செய்ய இடமிருந்தாலும் 39:23 வசனம், முதஷாபிஹ் பற்றிய நிலையைத் தெளிவாக, இரண்டு கருத்துக்கு இடம் தராத வகையில் விளக்குகின்றது. இந்த வசனத்தையும் இணைத்து 3:7 வசனத்திற்குப் பொருள் செய்யும்போது இரண்டு வசனங்களும் முதஷாபிஹ் வசனங்கள் பற்றி ஒரே முடிவை அறிவிப்பதை உணரலாம்.

(3:7 வசனத்திலும், 39:23 வசனத்திலும் முதஷாபிஹாத், முதஷாபிஹ் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழிபெயர்ப்புகளில் இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அலட்சியப்படுத்தி விட்டு, இரண்டு இடங்களிலும் அரபி மூலத்தைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

திருக்குர்ஆனை இறைவேதம் என்று நம்பாது அதைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களை இறைவன் மறுமையில் நிறுத்தி விசாரிப்பான். அப்போது அவர்களை நோக்கி, "எனது வசனங்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அதைப் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று (இறைவன்) கேட்பான் (27:84) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

முழுமையாக அறிதல் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் துஹீ(த்)தூ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் முழுமையாக விளங்கிக் கொள்வதற்கே அரபு மொழியில் பயன்படுத்தப்படுகின்றது. சிலவற்றை விளங்கி, சிலவற்றை விளங்காமல் இருப்பதை, முழுமையாக அறிதல் என்று கூற முடியாது. திருக்குர்ஆனில் இதே வார்த்தையில் இருந்து பிறந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள கீழ்க்கண்ட இடங்களைப் பார்வையிடுக! 65:12, 72:28, 27:22, 18:91, 18:68, 2:255, 20:110.

என் வசனங்களை முழுமையாக அறியாமல் பொய்யென்று கருதிக் கொண்டிருந்தீர்களா? என்ற கேள்வியின் மூலம் இறை வசனங்களை முழுமையாக அறியாமல் இருப்பவர்களை அல்லாஹ் கண்டிக்கின்றான். இதன் மூலம் இறைவசனங்கள் அனைத்தையும் அறிய இயலும்; அறிய வேண்டும் என்பது தெளிவாகின்றது. வேதத்தை முழுமையாக அறிய முடியாது என்றிருந்தால் இறைவன் இவ்வாறு கேட்க மாட்டான். அதை ஒரு குற்றமாக விசாரிக்கவும் மாட்டான்.

இறை வேதத்தில் விளங்க முடியாத ஒரு வசனமும் இல்லை என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டதாக இறைவன் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். மக்கள் விளங்குவதற்காகவே அரபுமொழியில் அருளப்பட்டதாகவும், அரபுமொழியில் அமைந்த அதன் வசனங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளதாகவும் 26:195, 12:2, 20:113, 39:28, 41:3, 42:7, 43:3, 41:44 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.

முஹ்கம் வசனங்கள் மட்டுமல்லாது முதஷாபிஹ் வசனங்களும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப்பட்டிருக்கின்றன.

தெளிவான அரபுமொழியில் அருளப்பட்ட முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்குமே விளங்காது என்றால், அவற்றை விளங்குவதற்காக முயற்சிப்பவர்களுக்குக் கூட விளங்காது என்பது எத்தகைய விபரீதமான கருத்து என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்று கூறுவதன் மூலம், திருக்குர்ஆன் தெளிவான அரபுமொழியில் அருளப்பட்டது என்பதை மறுக்கும் நிலை ஏற்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்பதற்குச் சான்றாகத் திருக்குர்ஆனை மக்கள் முன் சமர்ப்பித்த போது இஸ்லாத்தை ஏற்காத மக்காவாசிகள், திருக்குர்ஆன் இறைவேதம் அல்ல என்று மறுத்தனர். கவிதை என்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கவிஞர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறினார்கள். நினைத்தால் இது போல் நாங்களும் கொண்டு வருவோம் என்றார்கள் என 8:31 வசனம் கூறுகிறது.

இந்தத் திருக்குர்ஆனில் ஏதேனும் ஒரு குறைபாடு தென்படாதா? அதை வைத்து முஹம்மது, நபியல்ல என்று நிரூபிக்க முடியாதா? என்று அலைந்து கொண்டிருந்தார்கள்.

திருக்குர்ஆனில் விளங்காதவைகளும் உள்ளன என்று தெரிய வந்தால் இந்த வாய்ப்பை அவர்கள் நழுவ விட்டிருப்பார்களா? திருக்குர்ஆனை ஏற்றுக்கொண்டவர்கள், திருக்குர்ஆனில் விளங்காதவை இருந்தாலும் கூட அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடக் கூடும். திருக்குர்ஆனை நம்பாதவர்கள் நிச்சயம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். எவருக்குமே விளங்காதவை திருக்குர்ஆனில் உண்டு என்றால் நிச்சயமாக அது உளறல் தான் என்று பிரச்சாரம் செய்திருப்பார்கள்.

திருக்குர்ஆனில் விளங்காதவை உள்ளன என்ற பிரச்சனையை இஸ்லாத்தின் எதிரிகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் கிளப்பியதே இல்லை. எவருக்குமே விளங்காதவை திருக்குர்ஆனில் உள்ளதாக வைத்துக் கொண்டால் அவர்கள் பார்வையில் இது பெரிய பலவீனம் ஆகும். திருக்குர்ஆன் இறைவேதம் அல்ல என்ற தங்களின் வாதத்தை இதன் மூலம் அவர்கள் நிரூபிக்க முயன்றிருப்பார்கள். அப்படி எதுவும் நடக்காமல் இருந்ததே திருக்குர்ஆனில் அனைத்து வசனங்களும் விளங்கும் என்பதற்குத் தகுந்த சான்றுகளாகும்.

முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே விளங்க முடியாது என்றால் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூட அதை விளங்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட முதஷாபிஹ் வசனங்களை விளங்க மாட்டார்கள். ஏனெனில் முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே விளங்க முடியாது என்பது இவர்களின் வாதம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் விளங்காது என்றால் நபியவர்களுக்கும் விளங்காது என்ற விபரீதமான நிலை உருவாகும்.

திருக்குர்ஆனைக் கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கும் விளங்காது. அதைப் பெற்றுத் தந்த அல்லாஹ்வின் தூதருக்கும் விளங்காது என்பதை விட பாரதூரமான முடிவு வேறு என்ன இருக்க முடியும்?

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

குர்ஆனை மக்களுக்கு விளக்குவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் நியமனம் செய்திருக்க, அந்தத் தூதருக்கு திருக்குர்ஆன் விளங்காது என்ற முடிவை உண்மையான முஸ்லிம்கள் எவரேனும் ஒப்புக் கொள்ள முடியுமா?

அல்லாஹ்வையும், அவன் அருளிய வேதத்தையும், அது அருளப்பட்ட நோக்கத்தையும், அல்லாஹ்வின் தூதருடைய பொறுப்புக்களையும் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே திருக்குர்ஆனில் ஒரு வசனம் கூட நபியவர்களுக்கு விளங்காது என்று கூறத் துணிய மாட்டார். தம் தோழர்களில் எவருக்குமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை விளக்கவில்லை; விளக்க முடியவில்லை என்றும் கூற மாட்டார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் திருக்குர்ஆனில் நபித்தோழர்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்படுமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டுத் தெளிவு பெறுவது வழக்கம்.

நபித்தோழர்கள் விளக்கம் கேட்ட ஒரேயொரு சந்தர்ப்பத்தில், ஒரேயொரு வசனம் பற்றிக் கூட, இது எனக்கோ, உங்களுக்கோ விளங்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதே இல்லை. கேட்கப்படும் போதெல்லாம் விளக்கம் அளிக்கத் தவறியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்வில் தமக்கு அருளப்பட்ட எந்த ஒரு வசனத்தைப் பற்றியும், தமக்கு விளங்காது என்று அவர்கள் கூறவே இல்லை. முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் விளங்க முடியாது என்பது உண்மையானால் ஒரே ஒரு வசனம் பற்றியாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு கூறியதாக எந்தச் சான்றும் கிடையாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எந்த வசனம் பற்றிக் கேட்கப்பட்டாலும் விளக்கமளித்தார்களே தவிர, விளக்கம் அளிப்பதில் முஹ்கம், முதஷாபிஹ் என்றெல்லாம் பேதப்படுத்திக் கொண்டிருக்கவில்லை.

முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்களிடம் முதஷாபிஹ் வசனங்கள் என்றால் யாவை? என்பதை நிர்ணயிப்பதில் பல அளவுகோல்கள் உள்ளன. ஆளுக்கு ஒரு விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் கருத்துப்படியும் பார்த்தால் முழுக்குர்ஆனும் முதஷாபிஹ் என்ற வகையில் சேர்ந்து, முழுக்குர்ஆனும் அனைவருக்கும் விளங்காது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.

முதஷாபிஹ் வசனங்கள் யாவை? என்பதைச் சரியான சான்றுகளுடன் அறியும் போது, முதஷாபிஹ் வசனங்களை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கல்வியில் சிறந்தவர்கள் விளங்க முடியும் என்பதை உணரலாம்.

முதஷாபிஹ் வசனங்கள் எவை? என்பது பற்றிய விளக்கமே அவை விளங்கக்கூடியவை என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது.

இன்னின்ன வசனங்கள் முதஷாபிஹ் வசனங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் பட்டியல் போட்டுச் சொல்லவில்லை. எனினும் முதஷாபிஹ் வசனங்கள் எத்தகையது என்பதற்கான குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்தக் குறிப்புகளைக் கொண்டு முதஷாபிஹ் வசனங்கள் யாவை என்பதை நாம் அறிய முடிகின்றது. அதன் சரியான பொருளையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

சில வசனங்கள் முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு இடம் தரும் வகையில் அமைந்திருக்கும். அந்த முரண்பாடு எத்தகையது என்றால், ஒரு கருத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது அது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் விதமாகவும், மற்றொரு கருத்தைக் கொள்ளும்போது அது இஸ்லாத்தின் அடிப்படையை நிலைநிறுத்துவதாகவும் அமைந்திருக்கும். முதஷாபிஹ் வசனங்களின் முக்கியமான தன்மை இது!

இது போன்ற அம்சம் திருக்குர்ஆனில் மட்டுமல்ல! மனிதர்கள் பயன்படுத்துகின்ற சொற்களில் கூட இந்த நிலைமை இருப்பதை நாம் உணரலாம்.

ஒரு மனிதன் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கும்போது கண்ணவிந்து போனவன் என்று சொல்வோம். அறிவாளிகள் இது அந்த மனிதனின் மடமையைக் குறித்து சொல்லப்பட்டது என்று விளங்கிக் கொள்வார்கள். அறிவிலிகள், கண் அவியாமல் நன்றாகத்தானே உள்ளது என்பார்கள்.

அதிகமாகப் பேசும் ஒருவனைப் பற்றி பேசும்போது இவனுக்கு நாக்கு நீளம் என்று சொல்வோம். நாம் எந்தக் கருத்தில் சொல்கிறோம் என்று அறிவாளிகள் புரிந்து கொள்வார்கள். அறிவிலிகள், நாக்கு அவ்வளவு நீளமாக இல்லையே என்பார்கள்.

மனிதனால் பேசப்படும் எந்த மொழியானாலும் ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாகப் புரிந்து கொள்வது சகஜமானது தான். திருக்குர்ஆனில் இவ்வாறு இடம் பெற்றிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமில்லை. ஏனெனில் அன்றைய மனிதர்கள் பேசிக் கொண்டிருந்த அரபுமொழியிலேயே திருக்குர்ஆன் அருளப்பட்டது.

உண்மையில் முதஷாபிஹ் வசனங்களும் குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சொல்வதற்காகவே இறைவனால் அருளப்பட்டன. இன்றளவும் அந்த ஒரு கருத்தைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்த வசனம் சொல்லாத ஒரு கருத்தை அதற்குக் கற்பித்துக் கொண்டு வழிகேடும், அறியாமையும் நிறைந்த உள்ளங்கள் திசைமாறிச் சென்று விடுகின்றன.

உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகின்றனர் என்று இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர் இதனை நமக்கு நன்றாகப் புரிய வைக்கின்றது. எவரது உள்ளத்தில் வழிகேடு ஆழமாகப் பதிந்து விட்டதோ அவர்கள் தங்களின் வழிகேட்டை நியாயப்படுத்துவதற்கும், அதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய வசனங்களைத் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக ஆக்க முயற்சிப்பர்.

முதஷாபிஹ் வசனங்களின் சரியான பொருளை அறிந்து கொண்டு, தவறான கருத்தை நிராகரிப்பதற்கு முக்கியமான தகுதி என்னவென்றால், திருக்குர்ஆன் அந்த விஷயத்தைப் பற்றி மற்ற இடங்களில் என்ன கூறுகின்றது என்பதைப் பற்றிய தெளிவேயாகும். இதை அரபுமொழியில் தான் அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர் மொழியிலேயே திருக்குர்ஆன் கூறும் அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொண்டாலே போதும். இத்தகைய வசனங்களின் சரியான பொருளைக் கண்டு கொள்ளலாம்.

இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே என்றும், இவை அனைத்தையும் நம்பினோம் என்றும் கல்விமான்கள் கூறுவார்கள் என இவ்வசனத்தில் கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது.

முழுக்குர்ஆனும் இறைவனிடமிருந்து தான் வந்துள்ளது. முழுக்குர்ஆனும் என்ன போதனையை வலியுறுத்துகின்றதோ அதற்கு மாற்றமான ஒரு கருத்தை நாங்கள் கூற மாட்டோம். திருக்குர்ஆனில் சிலதை ஏற்று சிலதை மறுக்க மாட்டோம். அனைத்தையும் நம்புகிறோம். எந்த வசனத்துடனும் எந்த வசனத்தையும் மோதச் செய்ய மாட்டோம் என்பது தான் இதன் கருத்தாகும்.

முதஷாபிஹ் வசனங்களுக்குச் சரியான பொருளைச் செய்யத் தகுந்த கல்வியாளர்கள் யாரென்றால், அவர்களிடம் மேற்கண்ட தன்மைகள் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தவறான அர்த்தம் செய்யாமல் முழுக்குர்ஆனையும் அலச வேண்டும். முழுக்குர்ஆனின் போதனைகளுக்கு உட்பட்டு இந்த அர்த்தம் அமைந்துள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

முதஷாபிஹ் வசனத்திற்குச் செய்யப்படும் பொருள் ஏனைய வசனங்களின் பொருளை மறுக்கும் விதமாக இருந்தால், திருக்குர்ஆனில் சிலதை ஏற்று சிலதை மறுக்கும் நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்படாத வகையில், இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை; இவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம் என்று எவர்களது உள்ளத்தில் ஆழமான நம்பிக்கை உள்ளதோ அவர்களே கல்வியாளர்கள். அவர்களால் தான் இவற்றின் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முடியும்.

உதாரணமாக ஈஸா (அலை) அவர்களைப் பற்றி கூறும்போது, கலிமத்துல்லாஹ் (இறைவனின் வார்த்தை), ரூஹுன் மின்ஹு (இறைவன் புறத்திலிருந்து வந்த உயிர்) என்று திருக்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகிறது. கிறித்தவ போதகர்கள் சிலர் இயேசு இறைமகன் என்று இவ்வசனங்கள் சொல்வதாக மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.

இயேசு மனிதர் தான் என்றும், அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்றும் திருக்குர்ஆன் பல இடங்களில் தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளது. அதனுடன் இணைத்து இவ்வசனங்களைக் கவனிப்பவர்கள் இதன் சரியான பொருளை அறிந்து கொள்வார்கள்.

இதன் சரியான பொருள் என்ன என்பது 90வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:154

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

திருக்குர்ஆன் 3:169

இவ்விரு வசனங்களையும் சமாதி வழிபாட்டுக்காரர்கள் தங்களின் தீய கொள்கைக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று மட்டும் இறைவன் கூறவில்லை. மாறாக அவர்களை இறந்தவர்கள் என்று எண்ணாதீர்கள்; கூறாதீர்கள் என்று இறைவன் தடை விதிக்கிறான். இதிலிருந்து நல்லடியார்கள் உயிருடனே உள்ளனர் என்று தெரிகிறது. எனவே அவர்களிடம் பிரார்த்திக்கலாம்; இறைவனிடம் பெற்றுத் தருமாறு அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இவ்வசனங்களின் சரியான விளக்கம் 41 வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

இவ்வசனங்களில் இவர்களின் வாதத்துக்கு இடமில்லாமல் இருந்தும் தவறாகப் பொருள் கொடுத்து வழிகேட்டை நியாயப்படுத்துகின்றனர். இது போல் அமைந்த வசனங்கள் தான் முதஷாபிஹ் வசனங்களாகும்.

விண்முட்டும் கோபுரம் என்று கூறினால் இதை நேரடியான பொருளில் நாம் புரிந்து கொள்ள மாட்டோம். விண்முட்டும் உயரத்தில் கோபுரம் இருக்க முடியாது என்று நாம் அறிந்து வைத்துள்ளோம்.

ஆயிரம் நிலவுக்கு நிகராகப் பிரகாசிப்பதாக ஒரு பெண்ணின் முகத்தை வர்ணிப்பார்கள். முகத்திலிருந்து வெளிச்சம் வருகிறது என்று இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். அழகாக இருக்கிறாள் என்றே புரிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை, ஒளி என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அவர்கள் அறியாமை இருளைப் போக்க வந்த வெளிச்சம் என்ற கருத்தில் இது சொல்லப்பட்டுள்ளது என்று அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

அறிவீனர்களோ "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருட்டில் நடந்தால் அவர்களிடமிருந்து வெளிச்சம் வரும்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதர் இல்லை; கடவுள் அம்சம் பொருந்தியவர்'' என்று கூறி மக்களை வழிகெடுப்பார்கள்.

சுருங்கச் சொல்வது என்றால் நல்லறிவு படைத்தவர்கள் சரியாகவும், அறிவு குறைந்தோர் தவறாகவும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த வசனங்களே முதஷாபிஹ் ஆகும்.

எந்த மனிதராலும் விளங்க முடியாத வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன என்று வாதிடுவோரிடம் அந்த வசனங்கள் யாவை? என்று பட்டியலைக் கேட்டால் அவர்களால் பட்டியல் தர முடியாது.

ஒருவருக்கும் விளங்காத ஐந்தாறு வசனங்களைக் கூட அவர்களால் எடுத்துக் காட்ட முடியாது. இதிலிருந்து அவர்கள் விதண்டாவாதம் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஏராளமான தமிழ் மொழிபெயர்ப்புகளும், பிறமொழிகளின் மொழிபெயர்ப்புகளும் வந்து விட்டன. அம்மொழி பெயர்ப்பாளர்கள் எல்லா வசனங்களுக்கும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளனர். "இது எங்களுக்குப் புரியவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டும் தான் புரியும்'' எனக் கூறி ஒரே ஒரு வசனத்தைக் கூட அவர்கள் மொழிபெயர்ப்புச் செய்யாமல் விடவில்லை.

இவர்கள் தமக்குத்தாமே முரண்பட்டு இவ்வசனத்திற்கு பொருத்தமற்ற விளக்கம் கூறுகிறார்கள் என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

முதஷாபிஹாத் வசனங்கள் எவ்வாறு இரு பொருளைத் தருகின்றன என்பதையும், அதில் சரியான அர்த்தத்தையும், தவறான அர்த்தத்தையும் வேறுபடுத்தி எப்படிப் புரிந்து கொள்வது என்பதையும் அறிந்து கொள்ள, 193வது குறிப்பைக் காண்க.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account