Sidebar

25
Thu, Apr
17 New Articles

பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா?

ஜிஹாத் தீவிரவாதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

53. பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா?

இவ்வசனங்கள் (2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9) போர் செய்யுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகின்றன.

ஆன்மிக வழிகாட்டும் நூலில் போர் செய்யுமாறு ஏன் கட்டளையிட வேண்டும்? அப்படியானால் வாள் முனையில் தான் இஸ்லாம் பரப்பப்பட்டதா? என்று இஸ்லாத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகின்றது.

ஏன் இவ்வாறு கட்டளையிடப்பட்டது? எந்தச் சூழ்நிலையில் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்த விமர்சனம் முற்றிலும் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த போது சொந்த ஊர் மக்களால் அவர்கள் சொல்லொணாத இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பலர் கொல்லப்பட்டார்கள்.

இறுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் கொன்று விட அவ்வூர் மக்கள் திட்டமிட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் தம்முடைய வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் எதிரிகளிடம் பறிகொடுத்து மக்காவை விட்டு வெளியேறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்ததால் அங்கே தனி அரசையும் உருவாக்கினார்கள்.

இதன் பிறகு மக்காவாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இருந்த முஸ்லிம்களைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்வதை இறைவன் கடமையாக்கினான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத் தலைவராக மட்டுமின்றி அந்த நாட்டின் அதிபராகவும் இருந்தார்கள். நாட்டின் அதிபராக இருப்பவர் தமது குடிமக்களைக் காக்கும் பொறுப்பில் இருப்பதால் எதிரிகள் போருக்கு வரும்போது அவர்களை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். சொந்த ஊரை விட்டு முஸ்லிம்களை விரட்டி அடித்தது மட்டுமின்றி வேறு இடத்தில் நிம்மதியாக வாழும்போது எதிரிகள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்க்கும் கடமையும், உரிமையும் உண்டு. இதனடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிட்டார்கள்.

கொல்லுங்கள், வெட்டுங்கள் என்று திருக்குர்ஆனில் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.

போர்க்களத்தில் நிற்கும் போர் வீரர்களுக்கு இடப்பட்ட மேற்கண்ட கட்டளைகளை இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாம் கொன்று குவிக்கச் சொல்கிறது என்று பிரச்சாரம் செய்வது உள் நோக்கம் கொண்டதாகும்.

இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்பதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

*   வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:190, 9:13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

*   சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:191, 22:40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

*   போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் செய்யக் கூடாது என்று 2:192 வசனம் கூறுகிறது.

*   அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர் செய்ய வேண்டும் என 4:75, 22:39-40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

*   சமாதானத்தை விரும்புவோருடன் போர் செய்யக் கூடாது என்று 8:61 வசனம் கூறுகிறது.

*   மதத்தைப் பரப்ப போர் செய்யக் கூடாது என்று 2:256, 9:6, 109:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.

இந்த வசனங்கள் எதற்காக எந்தச் சூழ்நிலையில் அருளப்பட்டன என்பதை விளங்காமல் சில தனி நபர்களும், குழுக்களும் தங்களின் வன்முறைகளுக்கு உரிய சான்றுகளாக இவ்வசனங்களை எடுத்துக் கொண்டால் அது அவர்களின் அறியாமையாகும். இவ்வசனங்களுக்கும், வன்முறைகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.

சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் தொடுத்தனர்.

போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. இதை 2:190, 9:12,13 ஆகிய வசனங்களில் காணலாம்.

போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 54, 55, 76, 89, 197, 198, 199, 203, 359 ஆகிய குறிப்புகளையும் பார்க்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account