எனக்காக துஆச் செய்யுங்கள் எனக்கேட்கலாமா?
எனக்காக துஆச் செய்யுங்கள்" என்று நாம் பிறரிடம் சொல்கிறோம். இது ஒரு வகையில் யோசிக்கும் போது அல்லாஹ்விற்கு இணைவைப்பது போல தெரிகிறதே? இவ்வாறு சொல்வதற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்படி கோரிக்கை வைக்க ஆதாரம் உண்டு என்று நினைக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறரிடம் இவ்வாறு கூறியிருக்கிறார்களா?
பதில்:
இறைவனுடைய இடத்தில் பிறரை வைப்பதே இணைவைப்பாகும். நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பிறரிடம் கூறும் போது இறைவனுடைய எந்தத் தகுதியையும் அவருக்கு நாம் வழங்கவில்லை. மாறாக நாம் யாரிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறுகிறோமோ அவரும் அல்லாஹ்வின் அடிமை தான் என்ற கருத்துதான் இந்தக் கோரிக்கையில் அடங்கியுள்ளது.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம் கூறுவது தவறல்ல. பிறருக்காகப் பிரார்த்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
அன்றாடம் நமது தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆ செய்கிறோம். இவ்வாறு தனக்காக துஆ செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை வலியுறுத்தி உள்ளனர்.
பாங்கு முடிந்தவுடன் எனக்காக துஆச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று நாம் அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் … என்ற துஆவை பாங்குக்குப் பின்னர் ஓதுகிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
உயிருள்ளவர் தன்னைப் போன்று உயிருடன் இருப்பவரிடம் தனக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கூறுவது தவறல்ல. ஆனால் இறந்து போனவரிடம் இவ்வாறு கோரிக்கை வைப்பது இணைவைப்பாகும்.
நாம் உயிருள்ளவரிடம் பேசும் போது அவரை சாதாரண மனிதன் என்றே கருதுகின்றோம். ஆனால் இறந்து போனவரிடம் பேசும் போது அவருக்கு இறைவனுடைய தன்மைகள் அவருக்கு இருப்பதாகக் கருதப்படுகின்றது.
சப்தமின்றி மனதுக்குள் கேட்கப்படும் கோரிக்கையை அல்லாஹ்வால் மட்டுமே அறிய முடியும். எந்த மொழியில் கேட்டாலும் அதை இறைவனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒரே நேரத்தில் எத்தனை பேர் அழைத்தாலும் அனைவரின் பிரார்த்தனையையும் அவனால் மட்டுமே பிரித்து அறிய முடியும். இந்தத் தன்மைகள் மனிதர்களுக்கு இல்லை.
இறந்து போனவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் மேற்கண்ட தன்மைகள் இறந்து போனவர்களுக்கு இருப்பதாக நினைக்கின்றனர். எனவே தான் அல்லாஹ்விடம் கேட்பது போன்று இவர்களிடம் கேட்கின்றனர். இது இணைவைப்பாகும்.
எனக்காக துஆச் செய்யுங்கள் எனக்கேட்கலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode