Sidebar

25
Thu, Jul
3 New Articles

மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?

ஷஃபாஅத் - மறுமை - சொர்க்கம் - நரகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?

கியாமத் நாளில் மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள சிரமத்தை நபிமார்களிடம் முறையிடும் போது அல்லாஹ்விடம் தானே அவர்கள் முறையிடுமாறு கூறி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் முஹம்மத நபியிடம் பரிந்துரையைக் கேட்குமாறு கூறுவது இணைவைப்பதாக ஆகாதா என்று நண்பர் ஒருவர் கேட்கிறார். இது சரியா?

சிராஜுத்தீன் முஹம்மத்

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இதுதான்:

صحيح البخاري

4476 - حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وقَالَ لِي خَلِيفَةُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يَجْتَمِعُ المُؤْمِنُونَ يَوْمَ القِيَامَةِ، فَيَقُولُونَ: لَوِ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا، فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ: أَنْتَ أَبُو النَّاسِ، خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ، وَأَسْجَدَ لَكَ مَلاَئِكَتَهُ، وَعَلَّمَكَ أَسْمَاءَ كُلِّ شَيْءٍ، فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا، فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ ذَنْبَهُ فَيَسْتَحِي، ائْتُوا نُوحًا، فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الأَرْضِ، فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ سُؤَالَهُ رَبَّهُ مَا لَيْسَ لَهُ بِهِ عِلْمٌ فَيَسْتَحِي، فَيَقُولُ: ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ، فَيَأْتُونَهُ [ص:18] فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُوسَى، عَبْدًا كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ، فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ قَتْلَ النَّفْسِ بِغَيْرِ نَفْسٍ، فَيَسْتَحِي مِنْ رَبِّهِ، فَيَقُولُ: ائْتُوا عِيسَى عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ، وَكَلِمَةَ اللَّهِ وَرُوحَهُ، فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، فَيَأْتُونِي، فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي، فَيُؤْذَنَ لِي، فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ، ثُمَّ يُقَالُ: ارْفَعْ رَأْسَكَ وَسَلْ تُعْطَهْ، وَقُلْ يُسْمَعْ وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَرْفَعُ رَأْسِي، فَأَحْمَدُهُ بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الجَنَّةَ، ثُمَّ أَعُودُ إِلَيْهِ فَإِذَا رَأَيْتُ رَبِّي مِثْلَهُ، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الجَنَّةَ، ثُمَّ أَعُودُ الرَّابِعَةَ، فَأَقُولُ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ القُرْآنُ، وَوَجَبَ عَلَيْهِ الخُلُودُ " قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: إِلَّا مَنْ حَبَسَهُ القُرْآنُ، يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى: {خَالِدِينَ فِيهَا} [البقرة: 162]

4476 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் நம்பிக்கையாளர்கள் ஒன்று கூடி, (நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!) என்று பேசிக்கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவர் ஆவார் என்று சொல்வார்கள்.

உடனே, நம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, நம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் -அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்தையும் வழங்கிய அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவி டம் செல்லுங்கள் என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும் போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும் போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை என்று சொல்வேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

அல்லாஹ் (திருக்குர்ஆனில் யாரைக் குறித்து), நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளானோ அவர்களையே குர்ஆன் தடுத்து விட்டவர்கள்' எனும் சொற்றொடர் குறிக்கிறது.

பரிந்துரை வேண்டி நபிமார்களிடம் மக்கள் வந்த போது அவர்களை அல்லாஹ்விடம் கேட்கச் சொல்லாமல் மற்ற நபியிடம் ஏன் அனுப்பினார்கள்?  நபிமார்களுக்கு தவ்ஹீத் தெரியாதா? என்று உங்கள் நண்பர் கேள்வி கேட்டுள்ளார்.

தவ்ஹீதைப் பற்றிய சரியான தெளிவு இல்லாத காரணத்தாலே இந்தக் கேள்வி கேட்டுள்ளார்.

பரிந்துரை வேண்டுவது அனைத்தும் இணைகற்பிப்பாக ஆகாது. மாறாக சில பரிந்துரை வேண்டுதல் இணைவைப்பில் சேரும். சில பரிந்துரை வேண்டுதல் இணை வைப்பில் அடங்காது.

ஒருவரை இம்மையிலோ, மறுமையிலோ நேருக்கு நேராக நாம் சந்திக்கும் போது அவர்களுக்கு எது இயலுமோ அது பற்றி பரிந்துரைக்குமாறு வேண்டுவது இணை கற்பித்தல் ஆகாது. ஏனெனில் இது போல் பரிந்துரையை வேண்டும் போது அவருக்கு இறைத்தன்மை இருப்பதாக யாரும் கருதுவதில்லை.

ஆனால் நாம் கண்ணால் பார்க்காத, நம் முன்னே இல்லாத, அல்லது மரணித்து விட்ட ஒருவரிடம் நாம் பரிந்துரை வேண்டினால் அது தான் இணைவைப்பாகும்.

இறைவனை நாம் பார்க்கா விட்டாலும் அவன் நம்மைப் பார்ப்பது போல் அவர்களும் நம்மைப் பார்க்கிறார்கள் என்ற நம்பிக்கை இதற்குள் அடங்கி உள்ளது. இந்த வகையில் இது இணைவைப்பாக ஆகி விடுகின்றது.

அவர்களிடம் நாம் பரிந்துரை வேண்டும் நேரத்தில் இன்னும் பலர் அவர்களிடம் பரிந்துரை வேண்டுவார்கள். அவை அனைத்தையும் அவர்கள் செவியுறுகிறார்கள் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கி உள்ளது. எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனையையும் ஒரே நேரத்தில் இறைவன் எப்படி கேட்பானோ அது போல் இவர்களும் கேட்பார்கள் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளதால் இது இணைவைப்பாக ஆகி விடுகிறது.

ஆனால் இம்மையிலோ, மறுமையிலோ ஒருவரை நாம் நேருக்கு நேர் பார்த்து கேட்கும் போது அதில் இணைவைக்கும் எந்த அம்சமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்த உலகில் நாம் பார்ப்பதில்லை. எனவே நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால் அவர்கள் எங்கிருந்து அழைத்தாலும் செவியுறுவார்கள் என்ற கருத்து அதற்குள் உள்ளதால் அது கூடாது.

ஆனால் நபித்தோழர்கள் நேரடியாக நபியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்று இருந்தார்கள். அப்படிச் சந்திக்கும் போது எனக்காக பரிந்துரை செய்யுங்கள் என வேண்டி இருந்தால் இதில் எந்த இணைவைத்தலும் ஏற்படவில்லை.

அது போல் மறுமையில் நாம் நபியைச் சந்திக்கும் போது அவர்களை நேரடியாகக் கண்ணால் கண்டு அவர்களின் பரிந்துரையை வேண்டினால் அவர்களுக்கு எந்த இறைத்தன்மையும் இருப்பதாகக் கருத இடமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட மிஃராஜில் மூஸா நபியை நேருக்கு நேர் பார்த்த போது அவர்களிடம் உதவி பெற்றது இந்த அடிப்படையில் தான்.

இணைகற்பிக்கும் தன்மை எதில் அடங்கியுள்ளதோ அது தான் இணை கற்பிப்பாகும்.

17.03.2011. 6:10 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account