சொர்க்கம் வானத்தில் இல்லையா? வாதங்களும் எதிர்வாதங்களும்
சொர்க்கம் வானத்தில் இல்லை; அது பூமியில் படைக்கப்படும் என்று தனது திருகுர்ஆன் மொழிபெயர்ப்பில் பிஜே எழுதியதற்கான ஆதாரம் என்ன? இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் இந்த வரிகளை, இறைவாக்கின் மொழிபெயர்ப்பில் கூறும் அளவுக்கு இஸ்லாமிய அடிப்படைகளில் கவனமில்லாதவரா பிஜே?
என்று ஒரு கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகிறது.
இந்தக் கேள்வியில் பல விஷயங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
சொர்க்கம் பற்றி நாம் எழுதியதில் எந்தத் தவறும் இல்லை. அதை விளக்குவதற்கு முன்னால் இக்கேள்வியில் உள்ள அபத்தங்களை நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.சொர்க்கம் பற்றி பீஜே தவறாக எழுதி விட்டார்; இந்த அளவுக்கு அவர் கவனமில்லாதவரா?
என்ற கேள்வியை முதலில் எடுத்துக் கொள்வோம். பீஜே எழுதியது தவறு என்றே வைத்துக் கொள்வோம்.
இந்தக் கேள்வியின் மூலம் கேள்வி கேட்டவர் இஸ்லாத்தின் அடிப்படையை முதலில் தகர்த்து விடுகிறார். பீஜே போன்ற பெரியவர்களூக்கு கவனமின்மையால் தவறு ஏற்படாது என்பது இதன் உள் கருத்தாக இருக்கிறது.
அல்லாஹ்வைத் தவிர யாராக இருந்தாலும் கவனமின்மை ஏற்படும் என்பதும், கவனமின்மையால் தவறு ஏற்படும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இந்தக் அடிப்படைக் கொள்கையை பீஜே மீது கொண்ட வெறுப்பின் காரணமாக இவர் மறுக்கத் துணிந்ததால் தான் இப்படிக் கேட்டுள்ளார்.
மற்ற இயக்கத்தின் தவறுகளையும், மற்ற தலைவர்களின் தவறுகளையும் யாராவது விமர்சனம் செய்தால் உடனே இவர் முட்டுக் கொடுப்பார். மனிதன் தவறு செய்பவன் தான். அதற்காக இப்படியெல்லாம் விமர்சிக்காலாமா என்று முட்டுக் கொடுத்தவருக்கு இப்படி எழுத முடிகிறது என்றால் எப்படி?
பீஜே போன்றவருக்கு கவனமின்மை ஏற்படாது என்பது இவரது கொள்கையா? எந்தத் தகுதியில் உள்ளவருக்கு கவனக் குறைவு ஏற்படாது என்பதற்கு ஏதாவது அளவு கோல் வைத்துள்ளாரா? அந்த அளவு கோல் என்ன? அல்லது பீஜேயோ தவ்ஹீத் ஜமாஅத்தினரோ பீஜேயிடம் தவறு ஏற்படாது என்று கூறியுள்ளார்களா?
சொர்க்கம் பூமியில் படைக்கப்படும் என்று பீஜே எழுதியதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்த்து விட்டார் என்று இவர் கூறுகிறார். இஸ்லத்தின் அடிப்படையை பீஜே தகர்த்து விட்டார் என்றால் இதன் மூலம் இஸ்லாத்தின் எந்த அடிப்படை தகர்க்கப்பட்டது என்று கூற வேண்டுமல்லவா?
அடிப்படையைத் தகர்த்து விட்டார் என்று பாரதூரமான குற்றச்சாட்டைக் கூறுபவர் எந்த அடிப்படை தகர்க்கப்படுகிறது என்று ஒன்றுமே சொல்லவில்லை.
அடுத்து சொர்க்கம் பூமியில் தான் படைக்கப்படும் என்று பீஜெ எழுதியது சரியா?
நிச்சயம் சரி தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போதும், இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் சொர்க்கத்தைப் பார்த்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களில் இருந்து சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அது வானத்தில் உள்ளது என்பதும் தெரிகிறது என்ற காரணத்தினால் நமது கூற்றை சிலர் மறுக்கின்றனர்.
உயிர் தியாகிகள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்று குர்ஆன் கூறுவதாலும், பச்சை நிற பறவைக் கூட்டுக்குள் சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுவதாலும் சொர்க்கம் முன்னரே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இதற்கு முரணாக பீஜே எழுதி உள்ளார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்த ஆதாரங்களில் எதையும் பீஜே மறுக்கவில்லை. இது குறித்து பீஜெயே தனது தமிழாக்கத்தின் விளக்கவுரையில் எழுதியுள்ளார்.
ஸித்ரதுல் முன்தஹா அருகில் தான் சொர்க்கத்தையும் நபிகள் நாயகம்(ஸல்) கண்டனர்-
திருக்குர்ஆன் 53:15
ஒரு நல்ல மனிதர் இறைத் தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென சொர்க்கத்திற்குச் செல்' எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான்.
திருக்குர்ஆன் 36:26
இதனுள் அந்தச் சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி அடங்கியுள்ளது. அப்படிக் கொன்றவுடனேயே உடனே அவர் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்பதும் இவ்வசனம் கூறும் கருத்து.
கப்ரு என்ற ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே விசாரணை உண்டு என்றெல்லாம் நாம் நம்புகிறோம். இதில் இவரைப் போன்ற தியாகிகளுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் நேரடியாகவே சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் பச்சை நிறத்து பறவை வடிவத்தில் தான் அவர்கள் சொர்க்கத்தில் பறந்து கொண்டிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் விளக்கி உள்ளனர்.
சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டு உள்ளது என்பதை பீஜேயும் எழுதியுள்ளார் என்பதை மேற்கண்ட் அவரது எழுத்தில் இருந்து தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தைப் பார்த்தது உண்மை தான். அதில் பீஜேக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் உலகம் அழிக்கப்படும் போது வானம் பூமி உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும். சொர்க்கம் நரகமும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என்று கூறுவது சொர்க்கம் குறித்து மேற்கண்ட வசனங்களை மறுத்ததாக ஆகாது.
இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ்வின் வழிமுறையே இது தான்.
உங்கள் அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது. (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவனே ஆரம்பத்தில் படைத்தான். பின்னர், நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்கு கூலியை நியாயமாக வழங்குவதற்காக மீண்டும் படைக்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் கொதிக்கும் பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
திருக்குர்ஆன் 10:4
உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 10:34
நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 27:64
அல்லாஹ் முதலில் எவ்வாறு படைக்கிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? பின்னர் மீண்டும் அதை உருவாக்குவான். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
திருக்குர்ஆன் 29:19
அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
திருக்குர்ஆன் 3011
அவனே முதலில் படைத்தான். பின்னர் மீண்டும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே உயர்ந்த பண்பு உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமுடையவன்.
திருக்குர்ஆன் 30:27
அவன் முதலில் படைக்கிறான். மீண்டும் படைக்கிறான்.
திருக்குர்ஆன் 85:13
இந்த வசனங்களைச் சிந்தித்துப் பாருங்கள்! படைக்கப்பட்ட பொருட்களை அழிப்பதும், அழித்ததை மீண்டும் படைப்பதும் இறைவன் என்பதற்கான ஆதாரமாக அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். இப்படி என்னைத் தவிர யாராலும் செய்ய முடியுமா என்று அறை கூவல் விடுவதில் இருந்து இதை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு வானங்களுக்கும் சென்றார்கள் என்று ஹதீஸ் உள்ளதால் வானம் அழியாது என்று யாராவது கூற முடியுமா?
முதலில் எப்படி எதுவும் இல்லாமல் இருந்ததோ அது போன்ற நிலையை உலகம் அடையும். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அல்லாஹ் படைப்பான் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறவில்லையா?
இதில் சொர்க்கம் மட்டும் விதி விலக்கு என்று ஆதாரம் எதையும் நாம் காணவில்லை.
எனவே தான் ஏற்கனவே சொர்க்கம் படைக்கப்பட்டிருந்தாலும் அந்த சொர்க்கம் அழிக்கப்பட்டு வேறு சொர்க்கம் படைக்கப்படும்; அந்த சொர்க்கத்துக்குத் தான் சொர்க்கவாசிகள் செல்வார்கள் என்று கூறுகிறோம். இது தான் சரியான கருத்தாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சொர்க்கத்தைப் பார்த்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன. உலகம் அழியும் போது வானம் என்னவாகும்? இது பற்றி திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்!
அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
திருக்குர்ஆன் 14:48
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
திருக்குர்ஆன் 11 21;104
உலகம் அழிக்கப்படும் போது வானம் வேறு வானமாகவும், பூமி வேறு பூமியாகவும் மாற்றப்படும் என்றால் அவை அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் வானத்தில் இருந்த சொர்க்கமும் அழிந்து விடும் என்பதும் இதனுள் அடங்கியுள்ளது.
இன்னும் சொல்லப் போனால் வானத்தில் இருந்த சொர்க்கத்தை விட மிகப் பிரம்மாண்டமானதாக சொர்க்கம் இருக்கும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் 3:133
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
திருக்குர்ஆன் 57:21
வானத்தில் இருந்த சொர்க்கம் வேறு; வானத்தையும் பூமியையும் உள்ளடக்கும் அளவிலான் சொர்க்கம் வேறு என்பது இதில் இருந்து தெரிகிறது.
உலகம் அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். எங்கிருந்து எழுப்பப்படுவார்க்ள்? இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.
திருக்குர்ஆன்20;55
பூமியில் இருந்து தான் மீண்டும் மனிதர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதற்குத் தான் ஆதாரம் உள்ளது. மேலே எடுத்துச் செல்லப்படுவார்கள் என்று நாம் அறிந்தவரை எந்த ஆதாரத்தையும் காணவில்லை.
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது வானம் பூமி, சொர்க்கம் நரகம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் என்பதும், அழிக்கப்பட்ட பின் வானம் வேறு வானமாகவும், பூமி வேறு பூமியாகவும் மாற்றப்படும் என்பதும் மனிதர்கள் பூமியில் இருந்து எழுப்பப்படுவதால் அங்கு தான் சொர்க்கம் அமைக்கப்படும் என்பதும், அந்த பூமி வானம் பூமியை விட மிகப் பிரும்மாண்டமாக இருக்கும் என்பதும் தெரிகிறது.
சொர்க்கம் நரகம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறியுள்ளனர் என்றாலும் நாம் கூறி இருப்பதற்கு எதிராக உரிய ஆதாரம் இல்லை என்பதால் இதையே சரியானது என்கிறோம். இதில் இஸ்லாத்தின் எந்த அடிப்படையும் மீறப்படவில்லை.
மேலும் பின்வரும் வசனங்களும் மக்கள் அனைவரும் பூமியில்தான் மீண்டும் ஒன்று திரட்டப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதிலிருந்து உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச்செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.
திருக்குர்ஆன் அல்குர்ஆன் 20 : 55
''அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும் கூறினான்.
திருக்குர்ஆன் 7 : 25
அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்.. பின்னர் அதிலேயே உங்களை மீட்டுவான். (அதிலிருந்தே) உங்களை வெளியேற்றுவான்.
திருக்குர்ஆன் 71 : 17, 18
அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 30 : 25
(அவர்கள்) வெறுக்கும் காரியத்திற்கு அழைப்பவர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் பணிந்திருக்கும். பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியாவார்கள். அழைப்பாளரை நோக்கி விரைவார்கள். இது கஷ்டமான நாள்தான் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 54 : 6,7,8
பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது, தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது, இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது, அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும். அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள். அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.
திருக்குர்ஆன் 99 ; 1-8
எனவே மீண்டும் படைக்கப்படும் புதிய பூமியில் தான் சொர்க்கம் நரகம் அமைக்கப்படும் என்பது தெளிவாகிறது.
19.05.2010. 22:37 PM
சொர்க்கம் பூமியில் தான் உருவாக்கப்படுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode