Sidebar

19
Wed, Jun
4 New Articles

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

நபிமார்களை நம்புதல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

தொழுகையில் ஸலவாத் ஓதும் போது இப்ராஹீம் நபிக்கு அருள் புரிந்தது போல் முஹம்மத் நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்கும் போது இது போல் வேண்டும் அது போல் வேண்டும் என்று கேட்பது சரியா?

செய்யத் நஸ்ஸார்

பதில் :

நமக்குத் தெரியாத விஷயங்களில் இது போல் கேட்பது தான் கூடாது. மார்க்க ஆதாரத்தின் அடிப்படையில் யாருக்கு இறைவன் கொடுத்தது மிகச் சிற்ந்தது என்று நமக்குத் தெரிகின்றதோ அது போல் எனக்கும் தா என்று கேட்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல.

இப்ராஹீம் நபிக்கு நீ அருள் புரிந்தது போல் முஹம்மது நபிக்கும் அருள்புரிவாயாக என்று அத்தஹிய்யாத் இருப்பில் நாம் கேட்கிறோம். இவ்வாறு நாம் சுயமாகக் கேட்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்காக இப்படி அல்லாஹ்விடம் கேட்குமாறு கற்றுத் தந்ததால் தான் கேட்கிறோம்.

இப்ராஹீம் நபியவர்களுக்கு இறைவன் செய்தது போல் வேறு யாருக்கும் அருள் புரியவில்லை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிந்திருந்ததால் தனக்காகவும் அவ்வாறு கேட்க நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

அது போல் ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்து அவர் நல்வழியில் செலவு செய்கிறார் என்று நமக்குத் தெரிகிறது. ஒருவருக்கு அல்லாஹ் கல்வியைக் கொடுத்து அதன் மூலம் அவர் மார்க்கப் பணி செய்கிறார். இதை நாம் கண்ணால் பார்க்கிறோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் இவருக்குக் கொடுத்தது போன்ற கல்வியையும் செல்வத்தையும் எனக்குத் தருவாயாக என்று கேட்கலாம் என்பதைப் பின்வரும் ஹதீஸ் மூலம் அறியலாம்.

صحيح البخاري

73 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَلَى غَيْرِ مَا حَدَّثَنَاهُ الزُّهْرِيُّ، قَالَ: سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لاَ حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَسُلِّطَ عَلَى [ص:26] هَلَكَتِهِ فِي الحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் புகாரீ 73, 1409, 7141, 7316

இறைவனிடம் ஒன்றை வேண்டும் போது முன் நடந்த நிகழ்வொன்றைச்  சுட்டிக்காட்டி அது போன்று தனக்கு கொடுக்குமாறு வேண்டுவது தவறல்ல. இவ்வாறு பிரார்த்தனை செய்வதை இறைவன் அங்கீகரித்துள்ளான்.

وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا (286)2

எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே!

திருக்குர்ஆன் 2:286

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنْ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا(24)17

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக! 

திருக்குர்ஆன் 17:24

744حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ قَالَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ الْقِرَاءَةِ إِسْكَاتَةً قَالَ أَحْسِبُهُ قَالَ هُنَيَّةً فَقُلْتُ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ أَقُولُ اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنْ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ رواه البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

"அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்? என்று நான் கேட்டேன்.  அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்' என்று கூறுகிறேன்'' என்றார்கள்.

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)

நூல் புகாரி 744

இவ்வாறு நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் இறைவனுக்கு நாம் உதாரணங்களைக் கூறியவராக மாட்டோம். மாறாக நமது கோரிக்கைகளுக்கே உதாரணம் கூறியுள்ளோம். எனவே இது தவறல்ல.

ஆனால் நமக்கு அறிவு இல்லாத விஷயங்களைப் பற்றி நாம் இது போல் கேட்கக் கூடாது.

ஆதம் ஹவ்வா போல் தம்பதிகளை வாழச் செய்வாயாக என்றும், அய்யூப் ரஹீமா போல் வாழ்க என்றும் இன்னும் இது போல் சில நபிமார்களுடன் சில பெண்களின் பெயர்களை இணைத்து அவர்கள் போல் வாழ்க என்றும் வாழ்த்தும் வழக்கம் உள்ளது.

மேற்கண்ட நபிமார்கள் தமது மனைவியருடன் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்களின் மண வாழ்வு எப்படி இருந்தது என்பதை நாம் காணவும் இல்லை. இந்த நிலையில் அவர்களைப் போல் வாழ்க என்று கேட்கக் கூடாது.

உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

திருக்குர்ஆன் 17:36

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account