பெண் நபி ஏன் இல்லை?
கேள்வி : ஏராளமான நபிமார்களாக ஆண்களை மட்டும் தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்கு இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். நபியாக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண் நபியாக வருவதில் உங்கள் இறைவனுக்கே உடன்பாடில்லையா? இப்படியிருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு உங்கள் மதத்தில் தான் சம உரிமை இருக்கிறது என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? என்று வாதிடுகிறார் பிற மத நண்பர்.
எஸ். சீனி சலாப்தீன், மண்டபம்.
பதில் :
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
திருக்குர்ஆன் 16:43, 22:07
இவ்விரு வசனங்களும் ஆண்கள் தாம் நபிமார்களாக அனுப்பப்பட்டனர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வார்த்தைகளால் அறிவிக்கின்றன.
12:109 வசனமும் இதே கருத்தைக் கூறுகின்றது.
மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஆண்களாகவே அனுப்பப்பட்டனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
எனவே பெண் நபிமார்கள் அனுப்பப்படாததன் காரணங்களை அறிந்து கொள்வதற்கு முன் ஆன்மீகத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்களில் நபிமார்கள் – இறைத்தூதர்கள் அனுப்பப்படாததற்கு பெண்களை மட்டம் தட்டுவது தான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.
பல்வேறு மதங்களில் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பொருத்த வரை இத்தகைய பாரபட்சம் ஏதும் இல்லை என்பதை திருக்குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது.
யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.
(பார்க்க : திருக்குர்ஆன் 40:40
ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 4:124
ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.
திருக்குர்ஆன் 16:97
உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.)
திருக்குர்ஆன் 3:195
நல்லறங்கள் மூலம் உயர் நிலையை அடைவதிலும், அதற்கான பரிசுகளை இறைவனிடம் பெறுவதிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இறைவன் எந்தப் பாரபட்சமும் பார்ப்பதில்லை என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.
குறைவான நல்லறம் செய்த ஆணை விட நிறைவான நல்லறம் செய்த பெண் இறைவனிடம் உயர்ந்தவளாவாள்.
ஆணா பெண்ணா என்று கவனித்து மறுமையில் பரிசுகள் வழங்கப்படுவதில்லை. நடத்தைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
எனவே ஆன்மீக நிலையில் பெண்கள் தகுதியற்றவர்கள் என்பதற்காக பெண்களில் நபிமார்கள் அனுப்பப்படுவது தவிர்க்கப்படவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
திருக்குர்ஆன் 33:35
இதற்கு நிகரான ஒரு பிரகடனம் உலகில் எந்த மதத்தின் வேத நூல்களிலும் காண முடியாது. ஆண் பெண் என அல்லாஹ் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதற்கு இதுவும் சான்றாகவுள்ளது.
இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுவதற்கும், இறைச் செய்தி கொண்டு வரும் வானவரைச் சந்திப்பதற்கும் பெண்கள் தகுதியற்றவர்கள் என்பதால் இறைவன் பெண்களில் நபிமார்களை அனுப்பாமல் இருந்திருப்பானோ என்றால் அதுவும் இல்லை.
மூஸா நபியின் தாயாருக்கு ஒரு செய்தியைத் தன் புறத்திலிருந்து இறைவன் அறிவித்துள்ளான் என்பதை 20:38, 28:7 ஆகிய குர்ஆன் வசனங்களில் காணலாம்.
ஈஸா நபியின் தாயார் மர்யம் (அலை) அவர்களிடம் ஜிப்ரீல் எனும் வானவர் வந்ததையும் இறைக் கட்டளையைத் தெரிவித்ததையும் திருக்குர்ஆன் 19:17 வசனத்தில் காணலாம்.
இன்னும் சொல்வதாக இருந்தால் ஒருவன் உண்மையான முஸ்லிமாக வாழ விரும்பினால் அவன் கடந்த காலத்தில் வாழ்ந்த இரண்டு நபர்களைப் போல் வாழ வேண்டும். அவ்விருவர் தான் முஸ்லிம்களுக்குரிய முன் மாதிரிகளாவர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அவ்விருவரும் பெண்களாவர்.
என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக! என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.
திருக்குர்ஆன் 66:11,12
உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஆன்மீகத்தில் முன்மாதிரிகளாக இரண்டு பெண்களையே இறைவன் குறிப்பிடுகிறான் என்றால் பெண்கள் ஆன்மீகத்தில் ஆண்களுடன் போட்டியிட்டு அவர்களையும் மிஞ்ச முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அப்படியானால் பெண்கள் நபிமார்களாக அனுப்பப்படாதது ஏன்?
இக்கேள்விக்கு விடை மிக எளிதானது.
இறைத்தூதர்கள் என்ற பொறுப்பை, தகுதியை நிர்ணயிக்கும் விவகாரமாக மட்டும் பார்க்கிறார்கள். உண்மையில் இறைத்தூதுப் பணி என்பது மிகவும் கடினமான பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவது ஆண்களில் கூட அனைவருக்கும் சாத்தியமாகாது.
இறைத்தூதராக அனுப்பப்பட்டவர்கள் அன்றைய சமூகத்தில் இருந்த அத்தனை கொள்கை கோட்பாடுகளையும் தனியொருவராக நின்று எதிர்க்க வேண்டும்.
அவ்வாறு எதிர்க்கும் போது கொல்லப்படலாம்!
நாடு கடத்தப்படலாம்.
கல்லெறிந்து சித்ரவதை செய்யப்படலாம்!
ஆடையைக் கிழித்து நிர்வாணப்படுத்தப்படலாம்.
அவர்களின் ஒழுக்கம் தொடர்பாக அவதூறு கூறப்படலாம்.
இன்னும் சொல்லொண்ணாத் துன்பங்களை அவர்கள் அனுபவித்து ஆக வேண்டும்.
பெண்களாக இருந்தால் இவை அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து மேலும் துன்புறுத்துவார்கள்!
ஒட்டுமொத்த சமுதாயத்தையே தன்னந்தனியாக களத்தில் நின்று எதிர்ப்பதால் ஏற்படும் சிரமங்களை எந்தப் பெண்ணாலும் நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது.
இன்றைக்குக் கூட உடலுக்கு அதிக வேதனை தராத பணிகளில் தான் பெண்கள் நாட்டம் கொள்கிறார்களே தவிர பாரம் இழுக்கவோ, மூட்டை தூக்கி இறக்கவோ பெண்கள் போட்டியிடுவதில்லை. விரும்புவதுமில்லை.
இறைத்தூதர்கள் என்ற பணி இதை விட பல ஆயிரம் மடங்கு கடினமான பணியாகும். பெண்களை இழிவு செய்வதற்காகத் தான் இப்பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறு என்பதை மேலே நாம் எடுத்துக்காட்டிய சான்றுகள் சந்தேகமற நிரூபிக்கும்.
பெண் நபி ஏன் இல்லை?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode