Sidebar

10
Tue, Dec
4 New Articles

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா?

ஜியாரத், தர்கா, சமாதி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா?

அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவானா? அவர்களுக்கு வஹீ வருமா? என்று என்று பீஜே அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் நடைபெற்ற சேப்பாக்கம் பொதுக் கூட்டத்தில்  கேள்வி எழுப்பினார்.

இதை கட் பண்ணி போட்டு பீஜே குர்ஆனை மறுக்கிறார் என்று வெளியிடப்பட்ட ஒரு மறுப்பு வீடியோ நம் பார்வைக்கு வந்தது.

அந்த வீடியோவைக் காண:

மூஸா நபியின் தாயாரிடம் அல்லாஹ் பேசியுள்ளதாகவும், அவருக்கு வஹீ வந்ததாகவும் அல்லாஹ் கூறுகிறான். ஆனால் பீஜேயின் இந்தக் கேள்வி அந்த வசனங்களை மறுப்பதாக அமைந்துள்ளது என்று அந்த மறுப்பு வீடியோ கூறுகிறது.

ஆனால் இவர்கள் இப்போது எழுப்பும் கேள்விக்கு 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பீஜே தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதில் இவர்கள் ஐந்து ஆண்டுக்குப் பின் இப்போது எழுப்பும் கேள்விக்கும் பதிலாக அமைந்துள்ளது.

நமது ஆன்லைன் பீஜே இணைய தளத்தில் மேற்கண்ட தேதியில் பீஜே அளித்த பதில் இதுதான்.

மூஸா நபியின் தாயாரிடம் இறைவன் பேசியது போல் நம்மிடமும் பேசுவானா?

மூஸா, ஈஸா நபிகளின் தாயாருக்கு இறைவனிடம் இருந்து வந்த செய்திகள் வஹி தான் என்றால் நமக்கும் அது வருமா?

சிராஜ் புது ஆத்தூர்

பதில் :

மூஸா (அலை) அவர்களின் தாயாருக்கு இறைவன் வஹீ அறிவித்தான்.

أَنْ اقْذِفِيهِ فِي التَّابُوتِ فَاقْذِفِيهِ فِي الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِي وَعَدُوٌّ لَهُ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَلِتُصْنَعَ عَلَى عَيْنِي(39)20

அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான் (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன்.

அல்குர்ஆன் 20:39

وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنْ الْمُرْسَلِينَ(7)28

இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம் என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.

அல்குர்ஆன் 28:7

மேற்கண்ட வசனங்கள் மூஸா நபியின் தாயாரிடம் அல்லாஹ் உரையாடியதாகக் கூறுகின்றது. இறைவன் மூஸா நபியின் தாயாரிடம் உரையாடியதைப் போன்று இப்போது நம்மிடம் பேசுவானா? என்று உங்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பு நடந்தவையாகும். முந்தைய சமுதாயங்களில் இறைவன் இந்த வழியில் சிலரிடம் பேசியுள்ளான். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் அல்லாஹ் யாரிடமும் நேரடியாகப் பேச மாட்டான்.

இது பற்றி நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய வழக்கில் வஹீ என்பதற்கு இறைவன் தான் கூற விரும்பும் செய்திகளைத் தனது அடியார்களுக்குத் தெரிவித்தல் என்பது பொருளாகும்

இஸ்லாம் நிறைவு பெற்று இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்ததோடு இந்த வஹீ நின்று விட்டது.

நுபுவ்வத் நிறைவு பெற்று விட்டதால் இனிமேல் வஹீ என்ற இறைச்செய்தி யாருக்கும் வரவே வராது. அதிலும் மார்க்க சம்பந்தமான காரியங்களிலும், சட்ட சம்பந்தமான காரியங்களிலும் இறைவன் என்னிடத்தில் உரையாடினான், அசரீரியில் என்னிடம் சொன்னான் என்று யார் கூறினாலும் அது மாபெரும் புருடாவாகும். காரணம் மார்க்கம் பூர்த்தியாகி விட்டது

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.

என்று இறைவன் குர்ஆனில் கூறுவதன் மூலம் இனி எவரிடமும் அவன் பேச மாட்டான் என்பதை உணர்த்தியுள்ளான்.

மார்க்க சட்டதிட்டங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் யாரிடமும் பேச மாட்டேன் என்று இறைவன் முடிவு செய்து விட்டான் என்பதை இதில் இருந்து அறியலாம்.

நல்ல மூமின்களின் முபஷ்ஷிராத் என்ற கனவின் மூலம் சில முன்னறிவிப்புகளை அல்லாஹ் அறிவிப்பானே தவிர வேறு எதனையும், யாரிடமும் அறிவிக்க மாட்டான். இந்த முன்னறிவிப்புகள் கூட கனவின் மூலம் சொல்வானே தவிர நேரடியாக நாம் உரையாடுவதைப் போன்று சொல்ல மாட்டான்.

நபித்துவமும் சகல விதமான வஹீயும் நின்று விட்டது என்பதற்கு குர்ஆன், ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்காவது வஹீ வர வேண்டும் என்றால் நபித் தோழர்களுக்குத் தான் வர வேண்டும். ஆனால் அவர்களே வஹீ வரவில்லை என்பதை அறிவித்து விட்டார்கள்.

صحيح مسلم

6472 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ أَخْبَرَنِى عَمْرُو بْنُ عَاصِمٍ الْكِلاَبِىُّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ قَالَ أَبُو بَكْرٍ رضى الله عنه بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- لِعُمَرَ انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أَيْمَنَ نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَزُورُهَا. فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ فَقَالاَ لَهَا مَا يُبْكِيكِ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ -صلى الله عليه وسلم-. فَقَالَتْ مَا أَبْكِى أَنْ لاَ أَكُونَ أَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ -صلى الله عليه وسلم- وَلَكِنْ أَبْكِى أَنَّ الْوَحْىَ قَدِ انْقَطَعَ مِنَ السَّمَاءِ. فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ فَجَعَلاَ يَبْكِيَانِ مَعَهَا.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலீ) அவர்கள் உமர் (ரலீ) அவர்களை நோக்கி, நாம் இருவரும் உம்மு அய்மன் (ரலி) அவர்களைச் சந்தித்து வருவோம் என்றார்கள். காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அடிக்கடி சந்தித்து வருபவர்களாக இருந்தார்கள். அவரை அவ்விருவரும் சந்திக்கச் சென்றபோது அந்தப் பெண் அவ்விருவரையும் பார்த்து அழத்துவங்கினார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதருக்கு அல்லாஹ்விடத்தில் நன்மைகள் தானே கிடைக்கும் ஏன் அழுகிறீர்கள்? என்ன காரணம்? என்றார்கள். அதற்கு அவர் அல்லாஹ்விடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நன்மையே கிடைக்கும் என்பதை நான் அறிவேன். நான் அது கிடைக்காது என்பதற்காக அழவில்லை. என்றாலும் வானிலிருந்து வரும் வல்லவன் அல்லாஹ்வின் வஹீ (இறைச்செய்தி) நின்று விட்டதே என்பதற்காக அழுகிறேன் என்று சொன்னார்கள். அவ்வம்மையார் அவ்விருவரையும் அழ வைத்து விட்டார்கள். எனவே அவரோடு அவ்விருவரும் அழத் துவங்கினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம்

உமர் பின் கத்தாப் (ரலி) கூறுகிறார்கள் :

صحيح البخاري

2641 – حدثنا الحكم بن نافع، أخبرنا شعيب، عن الزهري، قال: حدثني حميد بن عبد الرحمن بن عوف، أن عبد الله بن عتبة، قال: سمعت عمر بن الخطاب رضي الله عنه، يقول: " إن أناسا كانوا يؤخذون بالوحي في عهد رسول الله صلى الله عليه وسلم، وإن الوحي قد انقطع، وإنما نأخذكم الآن بما ظهر لنا من أعمالكم، فمن أظهر لنا خيرا، أمناه، وقربناه، وليس إلينا من سريرته شيء الله يحاسبه في سريرته، ومن أظهر لنا سوءا لم نأمنه، ولم نصدقه، وإن قال: إن سريرته حسنة "

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள் வஹீயின் வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது (நபியவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ வருவது நின்று போய் விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடித்துத் தண்டிப்பது உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டு தான். ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக்குரியவராக்கி, கவுரவித்துக் கொள்வோம். அவரது இரகசியம் எதையும் கணக்கில் எடுக்க மாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறோரோ அவரைக் குறித்து நாம் திருப்தியுடன் இருக்க மாட்டோம். தமது அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே!

நூல்: புகாரி 2641

صحيح البخاري

6990 – حدثنا أبو اليمان، أخبرنا شعيب، عن الزهري، حدثني سعيد بن المسيب: أن أبا هريرة، قال: سمعت رسول الله صلى الله عليه وسلم، يقول: «لم يبق من النبوة إلا المبشرات» قالوا: وما المبشرات؟ قال: «الرؤيا الصالحة»

நபித்துவத்தில் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) தவிர வேறெதுவும் மீதியிருக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். அப்போது மக்கள், நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன? என்று வினவினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நல்ல (உண்மையான) கனவு என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6990

நுபுவ்வத் என்னும் வஹீ வெளிப்பாடு இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். முதலாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், அதன் சட்ட திட்டங்களையும் உள்ளடக்கியதாகும்.

இரண்டாவது, இனி நடக்க இருப்பதைப் பற்றி முன்னறிவிப்பு செய்வதாகும். இந்த இரண்டு விஷயங்களையே எல்லா நபிமார்களும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு விளக்கினார்கள். மனிதன் எப்படி நடக்க வேண்டும் என்பதையும், வருங்காலத்தில் நடக்கவுள்ளவற்றில் சிலவற்றை முன்னறிவிப்பு செய்யும் வகையிலும் அவர்களின் போதனைகள் அமைந்திருந்தன என்பதை நபிமார்களின் போதனைகளை ஆராயும் போது நாம் அறியலாம்.

நுபுவ்வத்துடைய இந்த இரண்டு அம்சங்களில் எந்த அம்சம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கூறியிருப்பார்கள் என்பதை நாம் முடிவு செய்தாக வேண்டும். முதல் அம்சத்தைப் பற்றி இங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கவே முடியாது. ஏனெனில் சட்டதிட்டங்களும் அடிப்படைக் கொள்கைகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விளக்கப்பட்டு விட்டன. அதில் எந்தக் குறையும் வைக்கப்படவில்லை.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டேன்.

திருக்குர்ஆன் 5:3

என்ற வசனமே இதற்குப் போதிய சான்றாகும். இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்ட பின் எவரது கனவின் மூலமும் எந்தச் சட்டத்தையும், மார்க்கச் செய்தியையும் கூற வேண்டிய அவசியம் இல்லை.

கனவுகள் மூலமும் மனிதன் இறைச் சட்டங்களைப் பெற முடியும் என்றால் மார்க்கம் முழுமையாகி விட்டது என்பதற்கு அர்த்தம் இல்லாதுபோய் விடும். இன்னும் சொல்வதென்றால் நபிமார்கள் அனுப்பப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்றாகிவிடும். கனவுகள் மூலமே எல்லாச் சட்டதிட்டங்களையும் இறைவன் மனிதர்களுக்கு அறிவித்து விடுவான்.

எனவே, கனவில் நுபுவ்வத்துடைய அம்சம் உள்ளது என்பதற்கு கனவில் சட்ட திட்டங்களைப் பெறலாம், கனவில் காட்டப்படுவது போல் நடந்து கொள்ளலாம் என்று அர்த்தம் செய்து கொள்ள முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகி விடுகிறது.

அப்படியானால் நுபுவ்வத்துடைய அம்சம் என்பதற்கு இரண்டாவது விளக்கத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதனுக்கு நாளை வரக்கூடிய செல்வம், குழந்தைகள், ஆபத்துகள், அனுகூலங்கள் ஆகியவற்றில் சிலவற்றை இறைவன் சிலருக்குக் கனவின் மூலமாக காட்டிக் கொடுக்கக் கூடும் என்பதே அதன் கருத்தாக இருக்க முடியும். இதைத் தெளிவாகவே நபியவர்கள் கூறியதை முன்னர் நாம் குறிப்பிட்ட புகாரி ஹதீஸிலிருந்து அறியலாம்.

நுபுவ்வத்தை இரண்டு அம்சமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இங்கே பிரித்துக்காட்டி விட்டு நற்செய்தி கூறக் கூடியவைகளைத் தவிர மற்றவை, அதாவது மார்க்கம் தொடர்பாகக் கூறும் இறைச்செய்திகள் முடிந்து விட்டன என்று திட்டவட்டமாக அறிவித்து விடுகிறார்கள். எனவே இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரிடமும் நேரடியாகப் பேச மாட்டான் என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது.

மேலும் முந்தைய சமுதாயத்தில் இறைவன் புறத்தில் இருந்து செய்திகள் அறிவிக்கப்படுவோர் இருந்துள்ளனர். இந்தச் சமுதாயத்தில் அது கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

صحيح البخاري

3469 – حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا إبراهيم بن سعد، عن أبيه، عن أبي سلمة، عن أبي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم، قال: إنه قد كان فيما مضى قبلكم من الأمم محدثون، وإنه إن كان في أمتي هذه منهم فإنه عمر بن الخطاب "

3469 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 3469, 3689

இப்படி யாராவது இருப்பதாக இருந்தால் அவர் உமராக இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் இது போன்றவர் இனிமேல் கிடையாது என்பது உறுதியாகிறது.

எனவே மூஸா நபியின் தாயாருக்கு அறிவித்தது போல் முந்தைய சமுதாயத்தில் சிலருக்கு அறிவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் முஹம்மது நபி அவர்களின் சமுதாயத்தில் இப்படிப்பட்டவர்கள் கிடையாது என ஏற்படுத்தி அல்லாஹ் மாபெரும் அருள் செய்து விட்டான்.

இந்தச் சமுதாயத்தில் இது போன்ற நிலை இருந்தால் பொய்யர்கள் தங்களுக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாகக் கூறி மக்களின் நம்பிக்கைக்குப் பங்கம் விளைவித்திருப்பார்கள்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account