அவ்லியாக்களாக கருதப்பட்ட சிலருக்கு நரகம்!
மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.
உலகில் நல்லடியார்களாகக் கருதப்பட்ட பலர் நரகில் கிடப்பார்கள். கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கப்பட்டவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
"தடுப்புச் சுவர் மேல் இருப்போர், (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். அவர்களது அடையாளத்தைக் கொண்டு அவர்களை அறிந்து கொள்வார்கள். "உங்களுடைய ஆள் பலமும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களைக் காப்பாற்றவில்லை; அல்லாஹ் அருள் புரிய மாட்டான் என (சொர்க்கவாசிகளான) இவர்களைப் பற்றியா சத்தியம் செய்தீர்கள்?'' என்று கூறுவார்கள்.
அவ்லியாக்கள் எனக் கருதப்பட்டவர்கள் நரகத்தில் கிடப்பதையும், கெட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் சொர்க்கத்தில் இருப்பதையும் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.
நரகவாசிகளில் சிலர் நரகில் புலம்புவதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கெட்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள் இறைநேசர்களாக இருப்பார்கள் என்பதை அந்தப் புலம்பலும் தெளிவுபடுத்துகிறது.
"தீயோர் என்று நாங்கள் கருதி வந்த மனிதர்களை (நரகில்) ஏன் காணாமல் இருக்கிறோம்? (அவர்கள் நல்லோராக இருந்தும்) அவர்களை ஏளனமாகக் கருதினோமா? அல்லது அவர்களை விட்டும் (நமது) பார்வைகள் சாய்ந்து விட்டனவா?'' என்று கேட்பார்கள். நரகவாசிகளின் இந்த வாய்ச் சண்டை உண்மை!நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்றும் நம்மால் முடிவு செய்யப்பட்டவர்களின் நிலை நமது முடிவுக்கு மாற்றமாக இருக்கும் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. நல்லடியார்கள் என்றும், கெட்டவர்கள் என்றும் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாக ஆகிவிடும் என்று பின்வரும் வசனத்திலும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் கூறும் செய்தி என்ன? இந்த உலகத்தில் ஒருவரை நல்லவர் என்று நாம் தீர்மானிக்க முடியாது. அல்லாஹ் மட்டும் தான் அதை அறிந்தவன் என்பதுதான்.
அவ்லியாக்களாக கருதப்பட்ட சிலருக்கு நரகம்!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode