Sidebar

20
Sun, Apr
7 New Articles

ஈத் முபாரக், பெருநாள் வாழ்த்து சொல்லலாமா?

பெருநாள் வணக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஈத் முபாரக், பெருநாள் வாழ்த்து  சொல்லலாமா?

பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது.

ஒருவர் தனது தாய்மொழியில் குர்ஆன், ஹதீஸுக்கு முரணில்லாத தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை.

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்; மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் தவறு இல்லை.

ஆனால் குறிப்பிட்ட ஒரு சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்றால் அது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டும் உள்ள அதிகாரமாகும்.

ஈத் முபாரக் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட பயன்படுத்தியதில்லை. அவர்கள் பயன்படுத்தாத இச்சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை ஒரு சுன்னத் போல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தந்தவைகளை மட்டும் தான் அனைவரும் சுன்னத் என்ற அடிப்படையில் சொல்ல முடியும்.

ஒரு முஸ்லிமுக்காக துஆச் செய்யலாம் என்ற பொது அனுமதியின் அடிப்படையில் பெருநாள் தினத்திலும் துஆச் செய்யலாம். துஆச் செய்தல் என்பதை மனதில் கொண்டு வாழ்த்துக்கள் என்றோ வாழ்த்துகிறேன் என்றோ அல்லது மார்க்கத்துக்கு முரணில்லாத விருப்பமான சொற்களைக் கூறலாம்.

ஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு செயல் எப்போது பித்அத் என்ற நிலையை அடையும் என்பதை விளங்கிக் கொண்டால் தான் இதில் நாம் கவனமாக இருக்க முடியும்.

ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் தொழ விரும்பினால் அவர் தொழலாம். குறிப்பிட்ட நாளில் நோன்பு நோற்க விரும்பினால் நோற்கலாம். பொதுவாக நஃபில் தொழ அனுமதி இருக்கிறது என்பதே இதற்குப் போதுமான ஆதாரமாகும்.

நான் இன்று காலை எட்டு மணிக்கு நஃபில் தொழுகிறேன். அதனால் அனைவரும் எட்டு மணிக்கு நஃபில் தொழ வேண்டும் என்று ஒருவர் கூறினால் – அல்லது அவர் கூறுவதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்படுத்தினால் – அது பித்அத் ஆகிவிடும்.

தன்னளவில் வைத்துக் கொண்டால் அது நஃபில் ஆகக் கருதப்படும். அனைவருக்கும் அதை ஆர்வமூட்டினால் அது பித்அத் ஆகிவிடும்.

நான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று நோன்பு நோற்பதால் அனைவரும் அந்த நாளில் நோற்க வேண்டும் என்று ஒருவர் கூறினாலோ, அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்படுத்தினாலோ அதுவும் பித்அத் ஆகி விடும்.

ஒருவர் தன்னளவில் தானாக விரும்பிச் செய்ய அனுமதி கொடுக்கப்பட்ட காரியத்தை தன்னோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். தான் செய்வதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று ஒருவர் கூறினால் அல்லாஹ்வின் தூதருடைய அதிகாரத்தைக் கையில் எடுத்தவராவார்.

ஒருவர் தான் விரும்பும் நாளில் நோன்பு நோற்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் நாம் மிஃராஜ், பராஅத் இரவுகளில் நோன்பு வைக்கக் கூடாது என்று கூறுகிறோம்.

இதற்குக் காரணம் என்ன? அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்து விட்டது தான் இதை பித்அத் என்று நாம் கூறுவதற்கான காரணம்.

ஒருவர் தற்செயலாக ரஜப் 27 அன்று நோன்பு நோற்றால் அது பித்அத் ஆகாது. இது அனைவரும் நோன்பு நோற்க வேண்டிய நாள் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும்.

அனைவரும் ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்றால் அது வஹீயின் மூலம் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும்.

ஈத் முபாரக் என்பது எப்படி உள்ளது? அது பெருநாள் அன்று சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை. அது மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முகமன் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஒருவர் தானாக விரும்பி அந்த வார்த்தையின் அர்த்தத்துக்காகச் சொன்னால் அது பித்அத் ஆகாது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்ல வேண்டியதாக அது மாறினால் அதுதான் பித்அத்.

எவரோ ஒருவர் உருவாக்கிய சொல் அல்லாஹ்வின் தூதர் கூறிய சொல்லுக்கு நிகரான இடத்தைப் பெற்று விடுகிறது. அல்லாஹ்வின் தூதருடைய இடத்தை மற்றவர்களுக்கு வழங்கும் இந்தப் போக்கு தான் அனைத்து பித்அத்துகளுக்கும் அடிப்படையாக உள்ளது.

ஈத் முபாரக் மட்டுமின்றி ஹேப்பி ரம்ஜான், ஹேப்பி பக்ரீத், பெருநாள் வாழ்த்து, குல்ல ஆமின் அன்தும் பி கைர் என்பது போன்ற எந்தச் சொல்லுக்கும் இது தான் நிலை.

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுகிறோம் என்றால் அது அனைவராலும் ஒரே மாதிரியாகச் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறியதால் இது ஸுன்னத் ஆகிறது.

ஈத் முபாரக் என்று எவரோ வழக்கப்படுத்திய சொல்லை அனைவரும் குறிப்பிட்ட நாளில் சொல்ல வேண்டும் என்பது பித்அத் ஆகிவிடும். இது போன்ற விஷயங்களைப் பல வருடங்கள் நாம் சொல்லிப் பழகி விட்டதால் எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயல்கின்றனர்.

பத்து வருடப் பழக்கத்தை விட மறுக்கும் இவர்கள் பல நூறு ஆண்டுப் பழக்கமான, பராஅத், மிஃராஜ், மீலாது உள்ளிட்ட பித்அத்களை மக்கள் விட்டு விட வேண்டும் கூறும் தகுதியை இழந்து விடுகிறார்கள்.

மிஃராஜ் அன்று நோன்பு தானே வைக்கிறோம். அது தவறா என்று அவர்கள் கேட்பது போல் இது நல்ல அர்த்தம் உடைய சொல் தானே இது தவறா என்று இவர்கள் கேட்கின்றனர்.

என்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம் தான். அது போல் யார் சொல்லிச் செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அதைவிட முக்கியமானது.

ஈத் முபாரக் என்பது பெருநாளுக்கான வாழ்த்து முறை என்று ஆக்கியது அல்லாஹ்வின் தூதர் அல்ல. நோன்பு வைப்பது நல்லது என்றாலும் மிஃராஜ் அன்று நோன்பு வைக்கச் சொன்னது அல்லாஹ்வின் தூதர் அல்ல. வேறு யாரோ ஏற்படுத்தியது என்பதால் தான் அது பித்அத் ஆகிறது. அது போல் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

حدثنا يعقوب حدثنا إبراهيم بن سعد عن أبيه عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد رواه عبد الله بن جعفر المخرمي وعبد الواحد بن أبي عون عن سعد بن إبراهيم 2697

இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்துச் செய்யப்படும் என்பது நபிமொழி-

நூல் : புகாரி 2697

குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்றில்லாமல் குறிப்பிட்ட நாளில் அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றில்லாமல் ஆசி வழங்கும் வகையில் இல்லாமல் மார்க்கம் அனுமதித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பெருநாளிலோ, மற்ற நாட்களிலோ துஆச் செய்தால் அது தவறில்லை.

வாழ்த்து கூறுதல் இரு அர்த்தங்களில் பயன்படுதப்படுகிறது.

ஒரு பெரியவரிடம் வாழ்த்து பெற்றேன் எனக் கூறினால் அவரது ஆசியைப் பெற்றேன் என்ற கருத்தில் அமைந்து விடுகிறது.

நீங்கள் நலமாக இருக்க ஆசி வழங்குகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாக அதன் கருத்து அமைந்துள்ளது.

ஒருவருக்கொருவர் துஆ செய்தல் என்ற கருத்திலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் நலமாக மகிழ்வுடன் இருக்க, அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும்.

வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான மத குருவிடம் வாழ்த்துப் பெற்றேன் என்றால் அப்போது அதன் பொருள் ஆசி பெறுதல் என்பதாக ஆகும்.

ஒருவருக்கொருவர் வாழ்த்து என முஸ்லிம்கள் கூறிக் கொண்டால் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்ற கருத்தைக் கொண்டதாகவே இது அமையும். இந்த வார்த்தையைச் சொல்வது குற்றமாகாது.

ஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அனைவரும் ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்றால் அது வஹீயின் மூலம் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும்.

பித்அத் குறித்து மேலும் அறிய

குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்றில்லாமல் குறிப்பிட்ட நாளில் அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றில்லாமல் ஆசி வழங்கும் வகையில் இல்லாமல் மார்க்கம் அனுமதித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பெருநாளிலோ மற்ற நாட்களிலோ துஆச் செய்தால் அது தவறில்லை.

12.12.2009. 7:41 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account