Sidebar

27
Sat, Jul
5 New Articles

அத்தியாயம் 83

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 83 அல்முதஃப்பிபீன்

மொத்த வசனங்கள் : 36

அல்முதஃப்பிபீன் - அளவு நிறுவையில் குறைவு செய்வோர்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அளவு, நிறுவையில் குறைவு செய்வோர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!

2. அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர்.

3. மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர்.

4, 5. மகத்தான நாளில் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?26

6. அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.

7. அவ்வாறில்லை! குற்றவாளிகளின் ஏடு ஸிஜ்ஜீனில்434 உள்ளது.

8. ஸிஜ்ஜீன்434 என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?

9. அது எழுதப்பட்ட ஏடாகும்.

10. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

11. அவர்கள் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதினர்.

12. வரம்பு மீறும் ஒவ்வொரு பாவியையும் தவிர வேறு எவரும் அதைப் பொய்யெனக் கருத மாட்டார்கள்.

13. நமது வசனங்கள் அவனுக்குக் கூறப்பட்டால் "இது முன்னோர்களின் கட்டுக் கதைகள்'' எனக் கூறுகிறான்.

14. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது.

15. அவ்வாறில்லை! அந்நாளில்1 அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.488

16. பின்னர் அவர்கள் நரகில் எரிவார்கள்.

17. "நீங்கள் பொய்யெனக் கருதியது இதுவே'' என்று பின்னர் கூறப்படும்.

18. அவ்வாறில்லை! நல்லோரின் ஏடு இல்லிய்யீனில்434 இருக்கும்.

19. இல்லிய்யீன்434 என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?

20. அது எழுதப்பட்ட ஏடாகும்.

21. நெருக்கமான(வான)வர்கள் அதைப் பார்ப்பார்கள்.

22. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.

23. உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

24. அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர்.

25. முத்திரையிடப்பட்ட மது புகட்டப்படுவார்கள்.

26. அதன் முத்திரை கஸ்தூரியாகும். போட்டியிடுவோர் இதில் தான் போட்டியிட வேண்டும்.

27. அதன் கலவை தஸ்னீம் எனும் நீராகும்.

28. அது நெருக்கமானோர் அருந்துகிற நீரூற்று!

29. குற்றம் புரிந்தோர் நம்பிக்கை கொண்டோரைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தனர்.

30. அவர்களைக் கடந்து செல்லும்போது கண் சாடையால் கேலி செய்து கொண்டிருந்தனர்.

31. தமது குடும்பத்தாரிடம் செல்லும்போது மகிழ்ச்சியடைந்து சென்றார்கள்.

32. (நல்லோரான) அவர்களைக் காணும் போது "இவர்கள் வழிகெட்டவர்கள்'' எனக் கூறினர்.

33. இவர்களைக் கண்காணிப்போராக அவர்கள் அனுப்பப்படவில்லை.

34. அந்நாளில்1 (ஏகஇறைவனை) மறுப்போரைக் கண்டு நம்பிக்கை கொண்டோர் சிரிப்பார்கள்.

35. உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

36. (ஏகஇறைவனை) மறுப்போர் அவர்கள் செய்தவற்றுக்கேற்ப கூலி கொடுக்கப்பட்டார்களா? (எனக் கேட்கப்படும்.)

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account