அத்தியாயம் : 3 ஆலு இம்ரான்
மொத்த வசனங்கள் : 200
ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்
இம்ரான் என்பவர், ஈஸா நபி (இயேசு) அவர்களின் தாய்வழிப் பாட்டனாரும் மர்யம் (மேரி) அவர்களின் தந்தையும் ஆவார். இம்ரானின் குடும்பத்தினர் என்பது மர்யமையும், அவரது தாயாரையும், ஈஸா நபியையும் குறிக்கும்.
இந்த அத்தியாயத்தில் 35, 36, 37 ஆகிய வசனங்களில் இம்ரானின் குடும்பத்தார் பற்றிய முக்கிய நிகழ்ச்சி கூறப்படுகின்றது. எனவே இந்த அத்தியாயம் இம்ரானின் குடும்பத்தினர் எனப் பெயர் பெற்றது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. அலிஃப், லாம், மீம்.2
2. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.
3,4. (முஹம்மதே!) உண்மையை உள்ளடக் கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை4 உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான்.491 (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழிமுறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.26
5. வானத்திலும்,507 பூமியிலும் எதுவுமே அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.
6. தான் விரும்பியவாறு அவனே உங்களுக்குக் கருவறைகளில் வடிவம் தருகிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வன் யாருமில்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
7. (முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற86 மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர (மற்றவர்கள்) அதன் விளக்கத்தை அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.
8. எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே!81 எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.
9. எங்கள் இறைவா! எந்தச் சந்தேகமும் இல்லாத நாளில்1 எங்களை நீ ஒன்று திரட்டுபவன். (எனக் கூறுவார்கள்.) அல்லாஹ் வாக்கு மீற மாட்டான்.
10. (ஏகஇறைவனை) மறுத்தோரின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றவே முடியாது. அவர்களே நரகின் எரிபொருட்கள்.
11. ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன்சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே இவர்களுக்கும் ஏற்படும். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதினர். அவர்களது பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
12. "தோற்கடிக்கப்பட்டு, நரகத்திற்குக் கொண்டு செல்லப்படுவீர்கள்; அது மிகக் கெட்ட தங்குமிடம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போரிடம் கூறுவீராக!
13. இரண்டு அணியினர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்87 உங்களுக்கு தக்க சான்று உள்ளது. ஓர் அணியினர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டனர். (ஏகஇறைவனை) மறுப்போராக மற்றொரு அணியினர் இருந்தனர். தம்மைப் போல் இரு மடங்காக கண்களால் அவர்களைக் கண்டனர்.466 தான் நாடியோரைத் தன் உதவியின் மூலம் அல்லாஹ் வலுப்படுத்துகிறான். அறிவுடையோருக்கு இதில் பாடம் உள்ளது.
14. பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.88
15. "இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும்,8 அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.488
16. "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள்.
17. (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)
18. "தன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்று நீதியை நிலைநாட்டும் அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்களும், அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
19. அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர்27 தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
20. அவர்கள் உம்மிடம் விதண்டாவாதம் செய்வார்களானால் "என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)'' எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும்,27 எழுதப் படிக்கத் தெரியாதோ ரிடமும் "இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?'' என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர்வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை.81 அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.488
21. அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்து, நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து, நீதியை ஏவும் மக்களையும் கொலை செய்வோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக!
22. இவ்வுலகிலும், மறுமையிலும் நல்லறங்கள் அழிந்து போனவர்கள் அவர்களே. அவர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.
23. வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை27 நீர் அறியவில்லையா? அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்வின் வேதத்தை நோக்கி அழைக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பகுதியினர் அலட்சியம் செய்து புறக்கணிக்கின்றனர்.
24. குறிப்பிட்ட நாட்களே தவிர நரகம் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். தாமாக இட்டுக்கட்டிக் கொண்டது அவர்களது மார்க்க விஷயத்தில் அவர்களை ஏமாற்றி விட்டது.
25. எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில்1 அவர்களை நாம் ஒன்று திரட்டும்போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.265 அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
26. "அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!
27. "இரவைப் பகலில் நுழைக்கிறாய்! பகலை இரவில் நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து441 உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய்'' (என்றும் கூறுவீராக!)
28. நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது.89 அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.
29. "உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ, வெளிப்படுத்தினாலோ அதை அல்லாஹ் அறிகிறான். வானங்களில்507 உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் அறிகிறான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!
30. ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில்1 "தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும்'' என ஆசைப்படுவர். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுள்ளவன்.
31. "நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!
32. "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!
33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.
34. அவர்களில் சிலர், மற்ற சிலரின் வழித்தோன்றல்கள். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.
35. "இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்;488 அறிந்தவன்'' என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!
36. அவர் ஈன்றெடுத்தபோது, "என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனே'' எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான். "ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன்.373 விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித்தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்'' எனவும் அவர் கூறினார்.
37. அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்றபோதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, "மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.
38. அப்போது தான் ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்''488 என்று தம் இறைவனிடம் வேண்டினார்.
39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை90 அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.
40. "என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ் இப்படித்தான் செய்வான்'' என்று (இறைவன்) கூறினான்.
41. "இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!'' என்று அவர் கேட்டார். "மூன்று நாட்கள் சைகையாகவே தவிர உம்மால் மக்களிடம் பேச முடியாது என்பதே உமக்குரிய சான்றாகும். உமது இறைவனை அதிகம் நினைப்பீராக! காலையிலும், மாலையிலும் துதிப்பீராக!'' என்று (இறைவன்) கூறினான்.
42. "மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்'' என்று வானவர்கள் (மர்யமிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!
43. "மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!'' (என்றும் வானவர்கள் கூறினர்.)
44. இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். (முஹம்மதே!) இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (முடிவு செய்ய) தமது எழுதுகோல்களை அவர்கள் போட்டபோது அவர்களுடன் நீர் இருக்கவில்லை. அவர்கள் இது குறித்து சர்ச்சை செய்தபோதும் அவர்களுடன் நீர் இருக்கவில்லை.
45. "மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை90 பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ்92 என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!
46. "அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார்.415 நல்லவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினர்)
47. "இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் "ஆகு' என்பான். உடனே அது ஆகி விடும்'' என்று (இறைவன்) கூறினான்.506
48. அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும்491 கற்றுக் கொடுப்பான்.67
49. இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும்459 (ஈஸாவை அனுப்பினான்.) "உங்கள் இறைவ னிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் அனுமதியின் படி269 அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் அனுமதியின்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது'' (என்றார்)
50. "எனக்கு முன் சென்ற தவ்ராத்தை491 உண்மைப்படுத்தவும், உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!'' (என்றும் கூறினார்.)
51. "அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்'' (எனவும் கூறினார்)
52. அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்தபோது "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் யார்?'' என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள்295 என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்'' என்றனர்.
53. "எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!'' (எனவும் கூறினர்.)
54. (ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்6. அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.
55,56. " ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும்,93 என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும்,456 (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள்1 வரை மேல் நிலையில் வைப்பவனாகவும்448 இருக்கிறேன். பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன். (என்னை) மறுப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையாகத் தண்டிப்பேன். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.'' என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக!26
57. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு அவன் முழுமையாக வழங்குவான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
58. (முஹம்மதே!) நாம் உமக்குக் கூறும் இச்செய்தியானது (நமது) வசனங்களும், ஞானமிக்க அறிவுரையுமாகும்.
59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார்.459 அவரை மண்ணால் படைத்து 'ஆகு' என்று அவரிடம் கூறினான்.506 உடனே அவர் ஆகி விட்டார்.368
60. இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர்!
61. உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்''94 எனக் கூறுவீராக!449
62. இதுவே உண்மையான வரலாறாகும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அல்லாஹ்வே மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
63. நீங்கள் புறக்கணித்தால் குழப்பம் செய்வோரை அல்லாஹ் அறிந்தவன்.
64. "வேதமுடையோரே!27 நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள்295 என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்!
65. வேதமுடையோரே!27 இப்ராஹீமைப் பற்றி ஏன் தர்க்கம் செய்கின்றீர்கள்? தவ்ராத்தும், இஞ்சீலும்491 அவருக்குப் பிறகே அருளப்பட்டன. விளங்க மாட்டீர்களா?
66. உங்களுக்கு விளக்கம் உள்ள விஷயத்தில் (இதுவரை) தர்க்கம் செய்தீர்கள். உங்களுக்கு எது பற்றி விளக்கம் இல்லையோ அது பற்றி ஏன் தர்க்கம் செய்கின்றீர்கள்? அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்!
67. இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவரா கவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக295 இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை.
68. இப்ராஹீம் விஷயத்தில் உரிமை படைத்த மக்கள் அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், நம்பிக்கை கொண்டோருமே. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன்.
69. வேதமுடையோரில்27 ஒரு பகுதியினர் உங்களை வழிகெடுக்க விரும்புகின்றனர். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.
70. வேதமுடையோரே!27 நீங்கள் விளங்கிக் கொண்டே ஏன் அல்லாஹ்வின் வசனங்களை மறுக்கின்றீர்கள்?
71. வேதமுடையோரே!27 உண்மையை ஏன் பொய்யுடன் கலக்கின்றீர்கள்? அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள்?
72. "நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்பட்டதைக் காலையில் நம்பி, மாலையில் மறுத்து விடுங்கள்! அப்போது தான் (மற்றவர்களும் அந்த மார்க்கத்திலிருந்து) விலகுவார்கள்'' என்று வேதமுடையோரில்27 ஒரு குழுவினர் கூறுகின்றனர்.
73. "உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுபவர் தவிர (மற்றவருக்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று கொடுக்கப்படும் என்றோ, உங்கள் இறைவனிடம் அவர்கள் உங்களை வென்று விடுவார்கள் என்றோ நம்பாதீர்கள்!'' (எனவும் கூறுகின்றனர்.) "நேர்வழி அல்லாஹ்வின் வழியே'' என்று கூறுவீராக! "அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்'' என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராள மானவன்; அறிந்தவன்.
74. தான் நாடியோருக்கு தன் அருளை அவன் சொந்தமாக்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
75. நம்பி, ஒரு குவியலையே ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில்27 உள்ளனர். நீர் நம்பி ஒரு தங்கக் காசை ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். "எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது'' என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகின்றனர்.
76. அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான்.
77. அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும்64 அற்பமான விலைக்கு விற்றோருக்கு445 மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில்1 அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும்488 மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
78. அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர்.
79. எந்த மனிதருக்காவது வேதத்தையும், அதிகாரத்தையும்,164 நபி எனும் தகுதியையும் அல்லாஹ் வழங்கினால் (அதன்) பின் "அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகிவிடுங்கள்!'' என்று மனிதர்களிடம் கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, "வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!'' (என்றே நபி கூறுவார்.)
80. "வானவர்களையும், நபிமார்களையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!'' என்று அவர் உங்களுக்கு ஏவமாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக295 ஆன பின் (ஏக இறைவனை) மறுக்குமாறு அவர் உங்களுக்கு ஏவுவாரா?
81. "உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து95 "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டபோது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.
82. இதன் பிறகு புறக்கணிப்போரே குற்றம் புரிந்தவர்கள்.
83. அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன.96 அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
84. "அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், மற்றும் (அவர்களின்) சந்ததிகளுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா, மற்றும் நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்ட மாட்டோம்.37 நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுவீராக!
85. இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.
86. தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர்வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
87. அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் ஏனைய (நன்)மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை.6
88, 89. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப்படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.26
90. நம்பிக்கை கொண்ட பின் மறுத்து, பின்னர் (இறை)மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரின் மன்னிப்பு ஒருக்காலும் ஏற்கப்படாது. அவர்களே வழி தவறியவர்கள்.
91. (ஏகஇறைவனை) மறுத்து, மறுத்த நிலையில் மரணித்தோர், பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.
92. நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்.78 நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.
93. தவ்ராத்491 அருளப்படுவதற்கு முன் இஸ்ராயீல் (யாகூப்) தன் மீது தடைசெய்து கொண்டதைத் தவிர எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட தாகவே இருந்தன. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டு வந்து படித்துக் காட்டுங்கள்!'' என்று (முஹம்மதே! யூதர்களிடம்) கேட்பீராக!97
94. இதன் பிறகும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோரே அநீதி இழைத்தவர்கள்.
95. "அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணைகற்பித்தவராக அவர் இருந்ததில்லை'' என்று கூறுவீராக!
96. அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம்33 பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
97. அதில் தெளிவான சான்றுகளும்438 மகாமே இப்ராஹீமும்35 உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.34 அந்த ஆலயத்தில்33 அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.485
98. "வேதமுடையோரே!27 அல்லாஹ்வின் வசனங்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்''488 என்று கூறுவீராக!
99. "வேதமுடையோரே!27 நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கின்றீர்கள்? தெரிந்து கொண்டே அதைக் கோணலா(ன மார்க் கமா)கச் சித்தரிக்கின்றீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை'' என்றும் கூறுவீராக!
100. நம்பிக்கை கொண்டோரே! வேதம் கொடுக்கப்பட்டோரில்27 ஒரு பிரிவினருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நம்பிக்கை கொண்ட பின் உங்களை (ஏகஇறைவனை) மறுப்போராக மாற்றி விடுவார்கள்.
101. அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்குக் கூறப்படும் நிலையிலும், அவனது தூதர் (முஹம்மத்) உங்களுடன் இருக்கும் நிலையிலும் எப்படி (ஏகஇறைவனை) மறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வைப் பற்றிக் கொள்பவர் நேரான வழியில் செலுத்தப்பட்டு விட்டார்.
102. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே295 தவிர மரணிக்காதீர்கள்!
103. அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!98 பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
105. தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு.
106. அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கருத்திருக்கும். "நம்பிக்கை கொண்ட பின் (ஏகஇறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!'' என்று முகங்கள் கருத்தவர்களிடம் (கூறப்படும்)
107. வெண்மையான முகமுடையோர் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
108. இவை, உண்மையை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வசனங்கள். இவற்றை உமக்குக் கூறுகிறோம். அகிலத்தாருக்கு அநீதி இழைப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
109. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு செல்லப்படும்.
110. நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர்27 நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
111. தொந்தரவு தருவதைத் தவிர அவர்கள் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. உங்களுடன் போருக்கு வந்தால் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
112. அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்தபோதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது.99 அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும், வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்.
113. அவர்கள் அனைவரும் சமமாக இல்லை. வேதமுடையோரில்27 நேரான சமுதாயமும் உள்ளது. அவர்கள் இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர்; ஸஜ்தாச் செய்கின்றனர்.
114. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.
115. அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது மறுக்கப்படாது. (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன்.
116. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்களின் மக்கட்செல்வமும், பொருட் செல்வமும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றாது. அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
117. இவ்வுலக வாழ்க்கையில் அவர்கள் செலவிடுவதற்கு உதாரணம் கடும் குளிர் காற்றாகும். தமக்குத் தாமே தீங்கிழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது. அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தனர்.
118. நம்பிக்கை கொண்டோரே! உங்களை விடுத்து மற்றவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!89 அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப் பதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள். நீங்கள் சிரமப்படுவதை அவர்கள் விரும்பு வார்கள். அவர்களின் வாய்களிலிருந்தே பகைமை வெளியாகி விட்டது. அவர்களின் உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பது அதைவிட அதிகம். நீங்கள் விளங்குவோராக இருந்தால் (நமது) வசனங்களைத் தெளிவு படுத்தி விட்டோம்.
119. நீங்களோ அவர்களை நேசிக்கிறீர்கள். அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் அனைத்து வேதங்களையும் நம்புகிறீர்கள். அவர்கள் உங்களைக் காணும்போது "நம்பிக்கை கொண்டோம்'' எனக் கூறுகின்றனர். தனித்திருக்கும்போது உங்களுக்கு எதிராக கோபத்தின் காரணமாக நகங்களைக் கடிக்கின்றனர். "உங்கள் கோபத்தின் காரணமாகச் செத்து விடுங்கள்! உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்'' எனக் கூறுவீராக!
120. உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.
121. நம்பிக்கை கொண்டோரைப் போர்க்களங்களில் நிறுத்துவதற்காக (முஹம்மதே!) உமது குடும்பத்தை விட்டுப் புறப்பட்டதை நினைவு கூர்வீராக! அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.53
122. உங்களில் இரு குழுவினருக்கும் அல்லாஹ் உதவுபவன் என்ற நிலையில் அவ்விரு குழுவினரும் கோழைகளாகிட எண்ணினர்.196 நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
123. நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்தபோது அல்லாஹ் "பத்ரு'க்களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
124. "(விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா?'' என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக!
125. அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும்போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
126. உங்களுக்கு நற்செய்தி கூறவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெறவுமே இதை அல்லாஹ் ஏற்படுத்தினான். மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை.
127. (ஏகஇறைவனை) மறுப்போரில் ஒரு பகுதியினரை அழிக்கவோ, அவர்களைத் தோல்வியுடன் திரும்பச் செய்து இழிவுபடுத்தவோ (இறைவன் உதவினான்)
128. (முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை.100 அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்த வர்கள்.480
129. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் மன்னிக்கிறான். நாடியோரைத் தண்டிக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
130. நம்பிக்கை கொண்டோரே! பன்மடங் காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை84 உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.
131. (ஏகஇறைவனை) மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்!
132. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
133. உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள்507 மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
134. அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
135. அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
136. தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும், சொர்க்கச் சோலைகளுமே அவர்களின் கூலி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (நன்கு) செயல்பட்டோரின் கூலி மிகவும் நல்லது.
137. உங்களுக்கு முன்னர் முன்னுதாரணங்கள் சென்றுள்ளன. எனவே பூமியில் பயணம் செய்து (உண்மையைப்) பொய்யெனக் கருதியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைச் சிந்தியுங்கள்!
138. இது மனிதர்களுக்கு விளக்கமும், நேர்வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்.
139. தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.
140. உங்களுக்கு (போரில்) ஒரு காயம் ஏற்பட்டால் அந்தக் கூட்டத்திற்கும் அது போன்ற காயம் ஏற்பட்டிருக்கிறது. காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம். நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அடையாளம் காட்டவும், உங்களில் உயிர் தியாகிகளை ஏற்படுத்தவுமே (இவ்வாறு துன்பத்தைத் தருகிறான்). அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
141. நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் தூய்மைப்படுத்தவும் (தன்னை) மறுப்போரை அழிக்கவும் (இவ்வாறு செய்கிறான்.)
142. உங்களில் தியாகம் புரிந்தோரை அல்லாஹ் அடையாளம் காட்டாமலும், பொறுமையாளர்களை அடையாளம் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழையலாம் என்று நினைக்கிறீர்களா?
143. (வீர) மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னால் அதற்கு ஆசைப்படுவோராக இருந்தீர்கள். இப்போது அதை நேருக்கு நேராகவே பார்த்து விட்டீர்கள்.
144. முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.101 அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
145. அல்லாஹ்வின் கட்டளையின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி. இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம்.
146. எத்தனையோ நபிமார்களுடன் சேர்ந்து எவ்வளவோ படையினர் போரிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
147. "எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!'' என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.
148. எனவே இவ்வுலகக் கூலியையும், மறுமையின் அழகிய கூலியையும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
149. நம்பிக்கை கொண்டோரே! (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் உங்களை வந்தவழியே திருப்பி விடுவார்கள். இதனால் நட்டமடைவீர்கள்!
150. மாறாக அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவனே உதவி செய்வோரில் சிறந்தவன்.
151. அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளாமலிருந்தும் அவனுக்கு இணை கற்பித்ததால் (நம்மை) மறுத்தோரின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்துவோம். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோர் சென்றடையும் இடம் மிகவும் கெட்டது.
152. அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர்களை நீங்கள் கருவறுத்தபோது தனது வாக்குறுதியை உங்களுக்கு உண்மைப்படுத்தினான். தளர்ந்து போய் இவ்விஷயத்தில் முரண்பட்டீர்கள்! நீங்கள் விரும்பியதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் (அவனுக்கு) மாறுசெய்தீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருந்தீர்கள். மறுமையை விரும்புவோரும் இருந்தீர்கள். உங்களைச் சோதிப்பதற்காக484 அவர்களை (வெற்றி கொள்வதை) விட்டும் அவன் உங்களைத் திருப்பினான். உங்களை மன்னித்தான். நம்பிக்கை கொண்டோர் மீது அல்லாஹ் அருளுடையவன்.
153. உங்களுக்குப் பின்னால் இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைத்துக் கொண்டிருக்கும்போது எவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலை மேல்) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்ட தற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்ப தற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான்.102 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
154. பின்னர் கவலைக்குப் பிறகு உங்களுக்கு மனஅமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான். உங்களில் ஒரு பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரைக் கவலை பிடித்துக் கொண்டது. அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமைக்கால எண்ணம் கொண்டனர். "நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் கிடைக்குமா?'' என்று அவர்கள் கேட்டனர். "அதிகாரம் முழுமையாக அல்லாஹ்வுக்கே உரியது'' என்று கூறுவீராக! உம்மிடம் வெளிப்படையாகக் கூறாததை தமது உள்ளங்களில் மறைத்துள்ளனர். "நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் இருந்திருந்தால் இங்கே கொல்லப்பட்டிருக்க மாட்டோம்'' என்றனர். "உங்கள் வீடுகளில் நீங்கள் இருந்திருந்தாலும் உங்களில் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டோர் தமது களத்திற்குச் சென்றிருப்பார்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளதைச் சோதிப்பதற்காகவும்,484 உங்கள் உள்ளங்களில் இருப்பதைத் தூய்மைப்படுத்தவும் அல்லாஹ் இவ்வாறு செய்தான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்'' எனக் கூறுவீராக!
155. இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக ஷைத்தான் வழிதவறச் செய்தான். அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.
156. நம்பிக்கை கொண்டோரே! பயணம் மேற்கொண்ட, அல்லது போருக்குச் சென்ற தம் சகோதரர்களைக் குறித்து "அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள். கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று கூறிய (ஏகஇறைவனை) மறுத்தோரைப் போல் நீங்கள் ஆகி விடாதீர்கள்! அவர்களின் உள்ளங்களில் கவலையை ஏற்படுத்தவே அல்லாஹ் இதைச் செய்தான். அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488
157. அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது.
158. நீங்கள் இறந்தாலோ, கொல்லப்பட்டாலோ அல்லாஹ்விடமே ஒன்று திரட்டப்படுவீர்கள்.
159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடைய வராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடு வீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந் திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.
160. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
161. மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில்1 கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும்.265 அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
162. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி, நரகத்தை அடைந்தவனைப் போன்றவரா? (அது) சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.
163. அவர்களுக்கோ அல்லாஹ்விடம் பல தகுதிகள் உள்ளன. அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.488
164. நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி யதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.36
165. (பத்ருப் போரில்) இது போன்ற இரு மடங்குகளை (எதிரிகளுக்கு) அளித்த நீங்கள், உங்களுக்கு (உஹதுப் போரில்) துன்பம் ஏற்பட்டபோது "இது எப்படி ஏற்பட்டது'' என்று கேட்டீர்கள். "இது உங்களிடமிருந்தே ஏற்பட்டது'' என்று கூறுவீராக! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
166, 167. இரு அணிகளும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்ட நாளில் உங்களுக்கு ஏற்பட்டது, அல்லாஹ்வின் கட்டளைப் படியே நிகழ்ந்தது. நம்பிக்கை கொண்டோரை அடையாளம் காட்டவும், நயவஞ்சகர்களை அடையாளம் காட்டவுமே (இது நிகழ்ந்தது.) "வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! அல்லது (எதிரிகளைத்) தடுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டது. "போர் செய்வது எங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களைப் பின்தொடர்ந்திருப்போம்'' என்றனர். அன்று அவர்கள் நம்பிக்கையை விட (இறை)மறுப்பிற்கு அதிக நெருக்கத்தில் இருந்தனர். தமது உள்ளங்களில் இல்லாததைத் தமது வாய்களால் கூறினர். அவர்கள் மறைப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.26
168. "அவர்கள் நமக்குக் கட்டுப்பட்டு (போருக்குப் போகாமல்) இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்று போருக்குச் செல்லாதோர், தம் சகோதரர்கள் பற்றி கூறினர். "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!'' என்று கூறுவீராக!
169. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்;41 உணவளிக்கப் படுகின்றனர்.
170. தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
171. அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நற்பேறு மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
172. தங்களுக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நன்மை செய்து (இறைவனை) அஞ்சி யோருக்கு மகத்தான கூலி உள்ளது.
173. "மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்.
174. எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
175. தனது நேசர்களை ஷைத்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!
176. (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
177. நம்பிக்கையை விற்று (இறை)மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
178. "(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது'' என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு.
179. நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கெட்டவருடன் கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டுவிட மாட்டான்.103 மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான்.104 எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.
180. அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், "அது தங்களுக்கு நல்லது" என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில்1 கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள்507 மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
181, 182. "அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர்'' என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான்.485 அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். "சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! இது நீங்கள் செய்த வினை'' என்று கூறுவோம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்.26
183. "எங்களிடம் ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து அதை நெருப்பு சாப்பிடும் வரை எந்தத் தூதரையும் நாங்கள் நம்பக் கூடாது என அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்'' என்று அவர்கள் கூறினர். எனக்கு முன்னால் பல தூதர்கள் தெளிவான சான்றுகளையும், நீங்கள் கேட்டதையும் கொண்டு வந்தனர். "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஏன் அவர்களைக் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!
184. (முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.105
185. ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில்1 உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
186. உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள்.484 உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும்,27 இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
187. வேதம் கொடுக்கப்பட்டோரிடம்27 "அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்தபோது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர்.445 (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது.
188. தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
189. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
190. வானங்களையும்,507 பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
191. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்களும்507 பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்;10 எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்)
192. "எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவுபடுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவி யாளரும் இல்லை'' (என்றும் கூறுவார்கள்.)
193. "உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!'' (என்றும் கூறுவார்கள்.)
194. "எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில்1 எங்களை இழிவுபடுத்தாதே! நீ வாக்கு மீறமாட்டாய்'' (எனவும் அவர்கள் கூறுவார்கள்.)
195. "உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) ஹிஜ்ரத்460 செய்து தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் பாதையில் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு, போரிட்டுக் கொல்லப்பட்டோரின் பாவங்களை அவர்களை விட்டும் அழிப்பேன்.53 அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (இது) அல்லாஹ்வின் கூலி. அல்லாஹ்விடம் அழகிய கூலி உள்ளது.
196. (ஏகஇறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றிட வேண்டாம்.
197. இது அற்ப வசதிகளே. பின்னர் அவர்களின் புகலிடம் நரகமாகும். தங்குமிடத்தில் அது கெட்டது.
198. எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.
199. அல்லாஹ்வுக்குப் பணிந்து, அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்டதையும், தமக்கு அருளப்பட்டதையும் நம்புவோர் வேதமுடையோரில்27 உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்க மாட்டார்கள்.445 அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அல்லாஹ் விரைவாகக் கணக்கெடுப்பவன்.
200. நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
அத்தியாயம் 3 ஆலு இம்ரான்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode