முப்பது பாகங்கள்
அடுத்தது திருக்குர்ஆன் முப்பது ஜுஸ்வு எனும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பதை நாம் அறிவோம். இது பிற்காலத்தில் வந்தவர்களால் வசதிக்காகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்குமாறு அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களின் மூலப் பிரதியிலும் 30 பாகங்களாகப் பிரிக்கப்படவில்லை.
திருக்குர்ஆனுடைய அத்தியாயங்களைப் பொருத்த வரை அனைத்து அத்தியாயங்களும் சமமான அளவு கொண்டதாக இருக்கவில்லை. சில அத்தியாயங்கள் 286 வசனங்களைக் கொண்டதாகவும், சில அத்தியாயங்கள் மூன்றே மூன்று வசனங்களைக் கொண்டதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
இந்த நிலையில் மாதத்திற்கு ஒரு முறையாவது திருக்குர்ஆனை முஸ்லிம்கள் ஓதி முடிக்க வேண்டும் எனக் கருதிய சிலர் அதற்கேற்ப சம அளவிலான முப்பது பாகங்களாகக் திருக்குர்ஆனைப் பிரித்தனர்.
திருக்குர்ஆனை முப்பது நாட்களில் சமஅளவில் ஓதியாக வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை; நபித்தோழர்களிடமும் இத்தகைய வழிமுறை இருக்கவில்லை.
முப்பது பாகங்களாகப் பிரித்தபோது அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கூட அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. திருக்குர்ஆனுடைய மொத்த சொற்களை எண்ணி அதை முப்பதால் வகுத்து அதனடிப்படையில் முப்பது பாகங்களாகப் பிரித்துள்ளனர். இதனால் கருத்துச் சிதைவு ஏற்பட்டாலும் அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
ஒரு முழு அத்தியாயத்தைக் கூட மூன்று துண்டுகளாகப் பிரித்துள்ளனர். உதாரணம் பகரா எனும் 2வது அத்தியாயம்.
ஒரு அத்தியாயத்தின் ஒரு பாதி முந்திய பாகத்திலும், அடுத்த பாதி அடுத்த பாகத்திலும் இருக்குமாறும் பிரித்துள்ளனர்.
உதாரணத்திற்கு முஸ்லிம்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்ற 'யாஸீன்' என்ற அத்தியாயத்தை எடுத்துக் கொண்டால் அதில் 21 வசனம் வரை 22ஆம் பாகத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். 22ஆம் வசனம் முதல் இறுதி வரை 23ஆம் பாகத்தில் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
அது போல் ஐந்தாம் பாகத்தின் முதல் வசனம் "உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள மற்ற பெண்களும்'' என்று ஆரம்பமாகிறது. இந்த வசனத்தை இப்படி ஆரம்பித்தால் எந்தப் பொருளும் தராது. காரணம் இது முந்தைய வசனத்தின் தொடர்ச்சியாகும். அந்த வசனத்தில் உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள்....... என்று ஒரு பட்டியலைக் கூறி இவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது. அந்தப் பட்டியலின் தொடர்ச்சி தான் உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர என்ற அடுத்த வசனம்.
இவ்விரு வசனங்களில் ஒன்றை நான்காம் பாகத்திலும், இன்னொன்றை ஐந்தாம் பாகத்திலும் பிரித்து பொருளற்றதாக ஆக்கியுள்ளனர்.
இந்த வசனத்தை மட்டும் வாசித்தால் அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. முந்தைய வசனத்தோடு சேர்த்தால் மட்டுமே இதற்கு அர்த்தம் வரும். திருக்குர்ஆனை முப்பது பாகங்களாகப் பிரித்தவர்கள் சொற்களின் எண்ணிக்கையைத் தான் கவனத்தில் கொண்டார்களே தவிர கருத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஒரு அத்தியாயத்தின் ஒரே ஒரு வசனத்தை மட்டும் ஒரு பாகத்திலும், அந்த அத்தியாயத்தின் மீதியை அடுத்த பாகத்திலும் சேர்த்துள்ளனர். உதாரணம் 15 ஆம் அத்தியாயம். இதன் முதல் வசனத்தை மட்டும் 13வது பாகத்தில் சேர்த்துள்ளனர். மீதியை 14வது பாகத்தில் சேர்த்துள்ளனர்.
இப்படி முப்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டது இறைவனே வகுத்துத் தந்தது போல ஒரு எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அன்றாடம் குறிப்பிட்ட அளவில் திருக்குர்ஆனை ஓதுவதற்கு உதவியாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு பிற்காலத்தில் வந்த சமுதாயமும் இதை ஏற்றுக் கொண்டது.
இதனை நம்முடைய வசதிக்காக நாம் தான் பிரித்தோம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டும்.
இன்று வரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மூலப் பிரதியில் முப்பது பாகங்களாக திருக்குர்ஆன் பிரிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் திருக்குர்ஆனை ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் மார்க்கத்தில் இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப ஓதுமாறு தான் மார்க்கத்தில் கட்டளை இருக்கிறது.
(பார்க்க: திருக்குர்ஆன் 73:20)எனவே 30 பாகங்களாகப் பிரித்ததற்கு மார்க்கரீதியான எந்த நியாயமும் இல்லை.
முப்பது பாகங்களாகப் பிரித்தது மட்டுமின்றி ஒவ்வொரு பாகத்தையும் நான்கு கால் பாகங்களாகவும் பிரித்தனர். அதற்கு அடையாளமாக முதல் கால் பாகத்தில் "அர்ருபுவு' (கால்) என்ற சொல்லையும், இரண்டாவது கால் பாகத்தில் "அந்நிஸ்ஃப்' (அரை) என்ற சொல்லையும், மூன்றாவது கால் பாகத்தில் "அஸ்ஸலாஸத்' (முக்கால்) என்ற சொல்லையும் ஓரத்தில் அச்சிட்டு வருகின்றனர்.
இதுவும் பிற்காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் திருக்குர்ஆனின் ஒவ்வொரு பாகத்தையும் சமமான 8 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் "ஸுமுன்' (எட்டில் ஒன்று) என்று குறிப்பிடுவது சமீப கால வழக்காகும்.
முப்பது பாகங்கள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode