Sidebar

20
Sat, Apr
4 New Articles

ஏழு கிராஅத்கள்

தமிழாக்கம் முன்னுரை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஏழு கிராஅத்கள்

ஏழு கிராஅத் அல்லது பத்து கிராஅத் என்ற பெயரில் பலரும் திருக்குர்ஆனுடன் விளையாடி உள்ளனர்.

திருக்குர்ஆனை நானே நேரடியாகப் பாதுகாப்பேன் என்று அல்லாஹ் உத்தரவாதம் தருகிறான்.

(பார்க்க 15:9)

அல்லாஹ்வின் வேதத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறினால் அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆனால் ஏழு கிராஅத் என்ற பெயரில் இந்த அக்கிரமத்தைத் தான் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் பலர் அரங்கேற்றியுள்ளனர்.

திருக்குர்ஆன் ஏழு வகைகளில் அருளப்பட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

(பார்க்க : புகாரீ 2419, 3219, 4991, 4992, 5041, 7556)

இதை ஆதாரமாகக் காட்டி ஏழு கிராஅத்கள் உள்ளன என்று அவர்கள் வாதம் செய்கின்றனர். இந்த வாதம் தவறாகும். திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாகக் கூறியுள்ளதற்கு முரணில்லாத வகையில் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பரந்து விரிந்த எந்த மொழியாக இருந்தாலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விதமாக உச்சரிப்பார்கள்.

உதாரணமாக வாழைப்பழம் என்பதைச் சரியான ழகர உச்சரிப்புடன் சிலர் வாசிப்பார்கள். ஆனால் இதை வாளைப்பளம், வாளப்பளம், வாலைப் பலம், வாலப்பலம், வாயப்பயம், வாஸப்பஸம் என்றெல்லாம் ஒவ்வொரு வட்டாரத்தில் ஒவ்வொரு விதமாக உச்சரிக்கிறார்கள்.

ஆனால் எழுத்தில் எல்லோரும் வாழைப்பழம் என்றே எழுதுவார்கள்.

எண்பது என்று எழுதி எம்பலது என்று தஞ்சை மாவட்டத்தில் வாசிப்பார்கள்.

மதுரை என்று எழுதி மருதை என்று வாசிப்பவர்களும் உள்ளனர்.

இது போல் அரபு மொழியிலும் வட்டார வழக்குகள் இருந்தன.

மக்கா, மதீனாவை உள்ளடக்கிய ஹிஜாஸ் பகுதியில் உள்ள வழக்கப்படி மற்ற பகுதிகளில் உள்ளவர்களும் ஓத வேண்டும் என்று சொன்னால் தங்கள் வழக்கத்திற்கு மாறாக நாவை வளைப்பது அந்த மக்களுக்குச் சிரமமாக இருக்கும். எனவே ஏழு வட்டார வழக்கின்படியும் ஓதிக் கொள்ளலாம் என்பது தான் ஏழு வகைகள் என்பதன் பொருளாகும்.

ஒரு வகையில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது. நான் ஜிப்ரீலிடம் மேலும் மேலும் அதிகரித்துத் தருமாறு கேட்டுக்கொண்டே இருந்ததால் ஏழு வரை அதிகப்படுத்தினார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(பார்க்க : புகாரீ 4991)

மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காகவே அன்று வழக்கத்தில் இருந்த ஏழு வட்டார வழக்குகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகாரம் பெற்றுத் தந்தார்கள்.

ஒவ்வொரு வட்டாரத்தினரும் உச்சரிப்பிலும், ஓதும் முறையிலும் தங்கள் வழக்கப்படி ஓதுவதால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகாது.

ஆனால் கிராஅத் என்ற பெயரில் சில மார்க்க அறிஞர்கள் செய்துள்ள கோமாளித்தனங்கள் திருக்குர்ஆனுடன் விளையாடுவதாக உள்ளது.

உதாரணமாக 2:198 வசனத்தில் ஃப்ள்லன் மின் ரப்பிகும் என்று திருக்குர்ஆனில் உள்ளது. இதனுடன் ஃபீ மவாசிமில் ஹஜ் என்ற சொற்களைச் சேர்த்து இப்னு அப்பாஸ் ஓதினார்கள்.

(பார்க்க : புகாரீ 2050,2098)

இந்தச் செய்தியை எப்படிப் புரிந்து கொள்வது? மனிதர் என்ற முறையில் ஞாபக மறதியாக இப்னு அப்பாஸ் இப்படி தவறாக ஓதி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ளாமல் இப்படியும் ஓதலாம் என்று சொல்கின்றனர்.

இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு வார்த்தைக்குப் பதிலாக வேறு வார்த்தைகளைப் போட்டு ஓதுவதும், ஒரு வார்த்தையுடன் இன்னொரு வார்த்தையை அதிகப்படுத்தி ஓதுவதும் ஏழு கிராஅத்களில் அடங்கும் என்று கூறி திருக்குர்ஆனுடைய பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளனர்.

இப்படி ஓதுவது அந்த ஏழு வகைகளில் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் என்பதற்கு எந்தச் சான்றுமில்லாமல் இருந்தும் இவர்களாகத் தான் இப்படி ஓதுகிறார்கள்.

இப்படி திருக்குர்ஆனைப் பலவாறாக ஓதியவர்களில் ஏழுபேர் முக்கியமானவர்கள் என்று கூறுகின்றனர். ஏழு காரிகள் எனப்படும் இவர்கள் நபித்தோழர்கள் அல்லர். தாபியீன்களும் அல்லர். அதன் பின்னர் வந்தவர்களாவர். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) ஓதியதைக் கேட்டவர்களல்லர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியதை நேரில் கேட்காமல் இவர்களாக உருவாக்கிக் கொண்டவை எப்படி திருக்குர்ஆனாக இருக்க முடியும் என்ற சாதாரண விஷயம் கூட ஏன் இவர்களுக்குப் புரியாமல் போனது என்று தெரியவில்லை.

ஏழு கிராஅத் என்ற பெயரில் இவர்கள் செய்துள்ள குளறுபடிகளால் தான் திருக்குர்ஆனுக்கு எதிரான கேள்விகள் உருவாயின. ஏழு வகை திருக்குர்ஆனை வைத்துக் கொண்டு பாதுகாக்கப்பட்ட வேதம் இருக்கிறது என்கிறீர்களா என்பன போன்ற கேள்விகளை எழுப்பக் காரணமான ஏழு கிராஅத்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account