Sidebar

27
Sat, Jul
5 New Articles

உள்ளங்களிலும் ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்ட குர்ஆன்

தமிழாக்கம் முன்னுரை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.

இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு அவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

"திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்காதீர். அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது.

பார்க்க: திருக்குர்ஆன் 75:16-19, 20:114

இன்னொரு வசனத்தில் (87:6) "உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.

எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும் ஒலிநாடாவில் பதிவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.

இறைவன் தனது தூதராக அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.

திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.

நபித்தோழர்களின் உள்ளங்களில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது.

பொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம் காணலாம். நினைவாற்றல் மூலமாக மட்டும் தான் நம்மால் எதையும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக இத்தகையோரின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அதிகரிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மை.

எழுதவும், படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.

திருக்குர்ஆன் ஒட்டுமொத்தமாக ஒரு நாளிலோ, குறுகிய காலத்திலோ அருளப்பட்டிருந்தால் அதை அந்தச் சமுதாயத்திற்கு மனனம் செய்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம்.

23 ஆண்டுகளில் இந்தத் திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டிருப்பதால் மனனம் செய்வது மிகவும் எளிதாகவே இருந்திருக்கும். 23 ஆண்டுகளுக்கு எட்டாயிரத்திற்கும் அதிகமான நாட்கள் உள்ளன. சுமார் ஆறாயிரம் வசனங்கள் கொண்ட திருக்குர்ஆனை தினம் ஒரு வசனம் என்ற அளவில் மனனம் செய்தாலே எட்டாயிரம் நாட்களில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திட முடியும்.

மேலும் மனனம் செய்ததை மறந்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாமில் சிறப்பான ஒரு ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள். "முஸ்லிம்கள் தினமும் நடத்துகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும், தாமாக விரும்பித் தொழுகின்ற தொழுகைகளிலும் திருக்குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்'' என்பது தான் அந்த ஏற்பாடு.

திருக்குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனை மனனம் செய்யத் தூண்டும் ஏற்பாடாக இது அமைந்தது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட வசனங்களைச் சிரத்தை எடுத்து மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

எங்கெல்லாம் இஸ்லாமை ஏற்றவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காக சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு இது மேலும் உறுதுணையாக அமைந்தது.

இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல் அவர்கள் இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக ஏற்கத்தக்க நபிவழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பார்க்க புகாரீ 6, 1902, 3220, 3554, 4998

இவ்வாறாக திருக்குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.

குறிப்பாக, அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா (ரலி), ஸஅது (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி), ஹுதைஃபா (ரலி), ஸாலிம் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அம்ர் பின் ஆஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸாஇப் (ரலி), ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), உம்மு ஸலமா (ரலி), உபை பின் கஅபு (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), ஸைத் பின் தாபித் (ரலி), அபூதர்தா (ரலி), மஜ்மா பின் ஹாரிஸா (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களில் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள். சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள்.

இவ்வாறு கல்வியாளர் உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக 29:49 வசனமும் கூறுகிறது.

எழுத்து வடிவிலும்

கல்வியாளர் உள்ளங்களில் திருக்குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப்போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.

இவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த எழுத்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயம், இவற்றைத் தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தது.

இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இது தவிர திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக்குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.

(312, 461வது குறிப்புகளையும் பார்க்கவும்.)

அபூபக்ர் (ரலி) ஆட்சியில்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு "யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.

"முஸைலமா' என்பவன் தானும் ஒரு இறைத்தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அப்பகுதியில் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு பல்வேறு இன்னல்களைக் கொடுத்து வந்தான். எனவே அவனுக்கு எதிராக இப்போர் நிகழ்ந்தது. இப்போரில் திருக்குர்ஆனை மனனம் செய்திருந்த சுமார் 70 நபித்தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து திருக்குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணி தான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலைசிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.

அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று திருக்குர்ஆனை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொண்டார்.

(பார்க்க : புகாரீ 4988, 4989)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த போது திருக்குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், "இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்'' என்று அவர்கள் கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள்.

(பார்க்க: திர்மிதீ 3011)

இன்று நாம் பயன்படுத்தும் திருக்குர்ஆனில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையில் தான் அமைந்துள்ளது.

வசனங்களின் வரிசை அமைப்பும், ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்ற வசனங்கள் எவை என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைப்படியே முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அப்படியானால் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இதில் என்ன வேலை என்ற சந்தேகம் ஏற்படலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள். சில வசனங்கள் அருளப்படும் போது வெளியூரில் இருந்தவர்கள், அல்லது சொந்த வேலை காரணமாக எழுதுவதற்கு வர இயலாதவர்கள் தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள்.

இதனால் ஒவ்வொரு எழுத்தருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ, அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது.

ஒவ்வொரு எழுத்தரும், தம்மிடம் உள்ளது தான் முழுமையான குர்ஆன் என்று தவறாக எண்ணும் போது திருக்குர்ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு விடும்.

அனைத்து எழுத்தர்களின் அனைத்து ஏடுகளையும் ஒன்று திரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையிலும் சரி பார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டுள்ளார் என்று கண்டறிய இயலும்.

இந்தப் பணியைத் தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்து முடித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த ஏடுகளையும், திருக்குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.

இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளைச் சீர்படுத்தினார்கள்.

பாதுகாக்கப்பட்ட இந்த மூலப்பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்து வந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்கள் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் திருக்குர்ஆனைத் தயாரித்திட முடியும்.

அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு இந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களின் மகளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.

உஸ்மான் (ரலி ஆட்சியில்..

இந்தத் திருக்குர்ஆன் ஆவணம் பொதுமக்களுக்குப் பரவலாகச் சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.

மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில் அரைகுறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.

இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் "இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத் தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்'' என்று கருதி திருக்குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account