Sidebar

27
Sat, Jul
5 New Articles

வசனங்களின் எண்கள்

தமிழாக்கம் முன்னுரை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

வசனங்களின் எண்கள்

திருக்குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கை யைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

  • அலீ (ரலி) அவர்கள் 6218 வசனங்கள் என்கிறார்கள்.
  • இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 வசனங்கள் என்கிறார்கள்.
  • ஹுமைத் என்பார் 6212 வசனங்கள் என்கிறார்கள்.
  • அதா என்பார் 6177 வசனங்கள் என்கிறார்கள்.
  • இன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 வசனங்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
  • மக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள்.

இப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் திருக்குர்ஆன் பிரதிகளில் 6236 வசனங்கள் உள்ளன.

வசனங்கள் எத்தனை என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கூறவில்லை. மேலும், உஸ்மான் (ரலி) அவர்களுடைய மூலப் பிரதியிலும் திருக்குர்ஆனுடைய மொத்த வசனங்கள் குறித்து எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் குறிப்பிடப்படவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும்போது அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப்படவில்லை. ஒரு வசனம் எங்கே முடிகிறது என்பதற்கு மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.

எனவே தான் வசனங்களை எண்ணும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். எண்ணிக்கை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் எந்த எண்ணிக்கையைக் கூறினாலும் திருக்குர்ஆனில் எதுவும் அதிகரிப்பதோ, குறைவதோ இல்லை.

ஒருவர் இரண்டு வசனங்களை ஒரு வசனமாகக் கருதுவார்; இன்னொருவர் ஒரு வசனத்தை இரண்டு வசனங்களாகக் கருதுவார்; எங்கே வசனத்தை முடிப்பது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தி வருகின்ற திருக்குர்ஆனில் இப்போது போடப்பட்டிருக்கின்ற எண்களை நாம் ஆய்வு செய்தால் எண்களிடுவதில் அறிஞர்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

சில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை இன்னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு வசனமாகக் கூறும்போது தான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.

வசனங்களைக் குறிக்க 'ஆயத்' என்ற சொல்லை திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. "ஆயத்' என்றால் சான்று என்று பொருள். ஒவ்வொரு வசனமும் முழுமையான கருத்தைத் தந்து சான்றாக அமைந்திருப்பதால் இவ்வாறு திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஒரு செய்தி முழுமை பெறும்போது தான் அது ஒரு சான்றாக ஆக முடியும். கருத்து முழுமை பெறாதபோது அதைச் சான்று எனக் கருத முடியாது.

ஆனால் வசனங்களுக்கு எண்கள் இட்டவர்கள் கருத்து முழுமை பெறுவதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இப்போது போடப்பட்டிருக்கின்ற எண்களை ஆய்வு செய்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சில இடங்களில், ஒரு கருத்து ஒரு வசனமாகவும், அந்தக் கருத்திலிருந்து விதிவிலக்கு இன்னொரு வசனமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.

உதாரணத்திற்காகச் சில வசனங்களை நாம் காண்போம்.

நான்காவது அத்தியாயத்தில் 168, 169 ஆகிய இரு வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

இதில் "அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான்' என்பது 168வது வசனத்திலும், "நரகத்தின் வழியைத் தவிர' என்பது 169வது வசனத்திலும் உள்ளது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியமாகும். ஆனாலும் இதை இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.

7வது அத்தியாயத்தின் 121, 122 ஆகிய வசனங்களை எடுத்துக் கொண்டால், 121வது வசனத்தில் "நாங்கள் அகிலத்தின் இறைவனை நம்பினோம் எனக் கூறினார்கள்'' என்றும் 122வது வசனத்தில் "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய'' என்றும் உள்ளது.

"மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய'' என்பதில் எந்தவொரு கருத்தும் முழுமை பெறவில்லை. "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பினோம்'' என்று சொன்னால் தான் வாக்கியம் முழுமை பெறுகிறது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியமாகும். ஆனாலும் இதையும் இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.

இதே போல் 11வது அத்தியாயத்தில் 96, 97 வசனங்களை எடுத்துக் கொண்டால் 96வது வசனத்தில் "மூஸாவைத் தகுந்த சான்றுகளோடு அனுப்பினோம்'' என்று இருக்கிறது. 97வது வசனத்தில் "ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்'' என்று இருக்கிறது.

"ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்'' என்பது 96 வசனத்துடன் இணைய வேண்டிய சொற்றொடராகும். ஆனால் "ஃபிர் அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்'' என்பதை தனியாகப் பிரித்ததால் அதற்குப் பொருள் இல்லாமல் போய் விடுகிறது.

இப்படி ஏராளமான வாக்கியங்களைக் கருத்து முழுமை பெறாத வகையில் வசனங்களாகப் பிரித்திருப்பதை நாம் பார்க்கிறோம். சில இடங்களில் ஒரு வாக்கியத்தை நான்கு, ஐந்து வசனங்களாகக் கூட பிரித்து வைத்திருக்கிறார்கள். கருத்து முழுமை பெறாத ஒரே ஒரு சொல்லைக் கூட ஒரு வசனம் என்று சில இடங்களில் கணக்கிட்டிருக்கிறார்கள்.

திருக்குர்ஆன் அதனுடைய ஆழமான கருத்துக்களுக்காகவும், அதன் அழகான நடைக்காகவும் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது.

வசனங்களைப் பிரிப்பதென்றால் அதற்கு இரண்டு அளவு கோல்கள் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதும்போது எந்த இடத்தில் நிறுத்தினார்களோ அந்த இடத்தை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது ஏற்கத்தக்கதாக இருக்கும்.

அல்லது ஒரு கருத்து எந்த இடத்தில் முழுமை பெறுகிறதோ அதை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது அறிவுப்பூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு அளவுகோல்களின் அடிப்படையில் வசனங்களுக்கு எண்கள் இடப்படவில்லை.

மாறாக ஒவ்வொரு வசனத்தையும் குறிப்பிட்ட ஒரு எழுத்தைக் கொண்டு முடிக்க வேண்டும் என்பதைத் தான் வசனங்களைப் பிரிப்பதற்கு அளவு கோலாகக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக "யஃலமூன்', 'தஃலமூன்', "யஃப்அலூன்' என்று வருகிறதா எனப் பார்த்து அந்த இடங்களில் வசனங்களை முடித்துள்ளார்கள். கருத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை.

பொருத்தமில்லாமல் வசனங்களுக்கு எண்களிட்டதால் வேறு சில இடையூறுகளும் ஏற்படுகின்றன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு திருக்குர்ஆன் மாற்றப்படும்போது முழுமை பெறாத அந்தப் பகுதியை முழுமைப்படுத்துவதற்காக அடைப்புக்குறியில் சில வார்த்தைகளைச் சொந்தமாகச் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது.

எல்லா மொழிபெயர்ப்புகளிலும் அதிக அளவிலான அடைப்புக் குறிகள் இடம் பெறுவதற்கு கருத்து முழுமை பெறாத இடத்தில் வசனங்களைப் பிரித்தது தான் முக்கியக் காரணம்.

மேலும் வசனங்களுக்கு எண்கள் போடப்பட்ட இந்த வரலாற்றைத் தெரியாதவர்கள், இறைவன் தான் இவ்வாறு வசனங்களுக்கு எண்களை இட்டிருக்கிறான் என்று நினைப்பார்கள்; முழுமை பெறாத வசனங்களைப் பார்த்தால் அவர்களுடைய நம்பிக்கை பாதிப்படையும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

அவர்கள் அரபுமொழி பேசுவோராக இருந்ததால் மொழிபெயர்ப்பினால் ஏற்படும் சங்கடங்களும், மற்றவர்கள் திருக்குர்ஆனைப் பற்றி தவறான எண்ணம் கொள்வதற்கு நாம் காரணமாக ஆகி விட்டோம் என்பதும் அவர்களுக்குத் தோன்றவில்லை.

ஆனாலும் இப்போது சான்றுகளை எடுத்துக் காட்டுவதற்கும், விவாதங்கள் புரிவதற்கும், சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கும், குறிப்பிட்ட ஒரு வசனத்தைத் தேடி எடுப்பதற்கும் இந்த வசன எண்கள் உதவியாக இருக்கின்றன.

இப்போது இதில் ஒவ்வொருவரும் மாற்றம் செய்யப் புகுந்தால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும். எனவே எந்த எண்களைச் சில நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோமோ அதில் நாம் எந்த மாறுதலும் செய்யவில்லை.

அதே சமயத்தில் முழுமை பெறாத அந்த வசனங்களைச் சேர்த்து தமிழாக்கம் செய்து தேவையற்ற அடைப்புக் குறிகள் வருவதைத் தவிர்த்திருக்கிறோம்.

வசனங்களுக்கு எண்கள் போட்டவர்கள் தாமாகத் தான் போட்டனர் என்பதற்கு இரண்டு தமிழ் மொழி பெயர்ப்புகளை உதாரணமாகக் கூறலாம்.

ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவியின் மொழிபெயர்ப்பில் 6வது அத்தியாயம் 73வது வசனத்தை ஒரு வசனமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையே நிஜாமுத்தீன் மன்பஈ 73, 74 என இரண்டு வசனங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்த அத்தியாயம் முழுவதும் இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கிடையே ஒரு எண் வித்தியாசத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

சில சகோதரர்களுக்கு இதுவரை கேள்விப்பட்டிராத செய்திகளைப் போல் இது தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது அந்தந்தக் காலத்தவருக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது.

திருக்குர்ஆனில் இல்லாத வசன எண்கள், ஸஜ்தாவுடைய அடையாளங்கள், பத்து வசனங்கள் முடியும்போது ஒரு அடையாளம், நிறுத்தல் குறிகள் ஆகியன திருக்குர்ஆனில் கலக்கவே கூடாது என்று பைஹகீ கூறியதாக அறிஞர் ஸுயூத்தி அவர்கள் தமது "அல்இத்கான்' என்ற நூலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

ஐந்து வசனங்களுக்கு ஒரு அடையாளம், பத்து வசனங்களுக்கு ஒரு அடையாளம், அத்தியாயங்களின் பெயர்கள், வசனங்களின் எண்கள், இவற்றை எழுதுவது வெறுக்கத்தக்கது என்றும் இதே நூலில் "சுலைமி' என்ற அறிஞர் கூறியதை ஸுயூத்தி எடுத்துக் காட்டுகிறார்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்'' என்பதைத் தவிர வசன எண்களோ, அத்தியாயத்தின் பெயர்களோ, இடையிடையே எழுதப்படுகின்ற விஷயங்களோ மூலப் பிரதியில் இல்லை

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account