Sidebar

19
Fri, Apr
4 New Articles

அத்தியாயம் 16

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 16 அந்நஹ்ல்

மொத்த வசனங்கள் : 128

அந்நஹ்ல் - தேனீ

இந்த அத்தியாயத்தின் 68, 69 வசனங்களில் தேனீயைப் பற்றியும், தேனைப் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு தேனீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது. எனவே அதற்கு அவசரப்படாதீர்கள்! அவன் தூயவன்.10 அவர்கள் இணைகற்பிப்பவைகளை விட்டும் அவன் உயர்ந்தவன்.

2. "என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்!'' என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான்.

3. வானங்களையும்,507 பூமியையும் தக்க காரணத்துடனேயே அவன் படைத்தான். அவர்கள் இணைகற்பிப்பவைகளை விட்டும் அவன் உயர்ந்தவன்.

4. மனிதனை விந்துத் துளியால் அவன் படைத்தான்.368&506 அவனோ பகிரங்கமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.

5. கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள்.171

6. காலையில் ஓட்டிச் செல்லும்போதும், மாலையில் திரும்பும்போதும் அதில் உங்களுக்கு மதிப்பு இருக்கிறது.

7. பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுள்ளவன்.

8. குதிரைகள், கோவேறுக்கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், மதிப்புக்காகவும் (அவன் படைத்தான்.) நீங்கள் அறியாதவற்றை (இனி) படைப்பான்.253

9. நேர்வழி அல்லாஹ்வின் பொறுப்பாகும். கோணல் வழியும் உள்ளது. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான்.

10. அவனே வானத்திலிருந்து507 உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்களும் அதனால் கிடைக்கின்றன.

11. அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று இருக்கிறது.

12. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

13. பூமியில் அவன் உங்களுக்காகப் படைத்தவை மாறுபட்ட பல நிறங்களைக் கொண்டுள்ளன. படிப்பினை பெறும் சமுதாயத்துக்கு இதில் தக்க சான்று உள்ளது.

14. கடலிலிருந்து பசுமையான இறைச்சியை505 நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்!

15, 16. பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும்,248 நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.26

17. படைப்பவன், படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா?

18. அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் உங்களால் எண்ணி முடியாது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

19. நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிவான்.

20. அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.

21. அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். "எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்" என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

22. உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள்.

23. அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிவான் என்பதில் சந்தேகம் இல்லை. பெருமையடிப்போரை அவன் விரும்ப மாட்டான்.

24. "உங்கள் இறைவன் எதை அருளினான்?'' என்று அவர்களிடம் கேட்கப்படும்போது "முன்னோரின் கட்டுக் கதைகள்'' என்று கூறுகின்றனர்.

25. கியாமத் நாளில்1 முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும்254 சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

26. அவர்களுக்கு முன் சென்றோரும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின் கட்டடங்களின் அடிப்புறத்தில் அல்லாஹ் வந்தான்.61 மேலேயிருந்த முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் உணராத வகையில் அவர்களிடம் வேதனை வந்தது.

27. பின்னர் கியாமத் நாளில்1 அவர்களை இழிவுபடுத்துவான். "நீங்கள் எனக்கு இணையாகக் கருதி தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே?'' என்று அவன் கேட்பான். "இன்று இழிவும், கேடும் (ஏகஇறைவனை) மறுப்போர்க்கே'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறுவார்கள்.

28. தமக்குத் தாமே தீங்கிழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும்போது,165 "நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை'' என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

29. "நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்குவீர்கள்.'' (என்று கூறப்படும்) பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.

30. "உங்கள் இறைவன் எதை அருளினான்?'' என்று (இறைவனை) அஞ்சியோரிடம் கேட்கப்படும். 'நன்மையை' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. மறுமை வாழ்வு தான் சிறந்தது. (இறைவனை) அஞ்சுவோரின் உலகம் மிகவும் நல்லது.

31. நிலையான சொர்க்கச் சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அவர்கள் விரும்பியவை அங்கே அவர்களுக்கு உண்டு. இவ்வாறே (தன்னை) அஞ்சுவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

32. நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி,165 "உங்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!'' என்று கூறுவார்கள்.

33. வானவர்கள் அவர்களிடம் வருவதை,153 அல்லது உமது இறைவனின் கட்டளை வருவதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அவர்களுக்கு முன் சென்றோரும் இவ்வாறே செய்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்தனர்.

34. அவர்கள் செய்த தீமைகள் அவர்களைப் பிடித்தன. அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது (தண்டனை) அவர்களைச் சுற்றி வளைத்தது.

35. "அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களோ எங்கள் முன்னோர்களோ அவனையன்றி எதையும் வணங்கியிருக்க மாட்டோம். அவன(து கட்டளையி)ன்றி எதையும் நாங்களாக விலக்கியிருக்க மாட்டோம்'' என்று இணைகற்பிப்போர் கூறுகின்றனர். அவர்களுக்கு முன் சென்றோரும் இவ்வாறே செய்தனர். தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்களுக்கு வேறு எதுவும் உள்ளதா?

36. "அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.214 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவர்களும் அச்சமுதாயத்தில் இருந்தனர். வழிகேடு உறுதியானவர்களும் இருந்தனர். எனவே பூமியில் பிரயாணம் செய்து பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!

37. அவர்கள் நேர்வழி பெற வேண்டும் என்று நீர் பேராசை வைத்தால், அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேர்வழி காட்ட மாட்டான். அவர்களுக்கு உதவி செய்வோரும் இல்லை.81

38. இறந்தோரை அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே உறுதியாக சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறில்லை! இது அவனது உண்மையான வாக்குறுதி. எனினும் அதிகமான மனிதர்கள் அறிய மாட்டார்கள்.

39. அவர்கள் முரண்பட்டதைத் தெளிவுபடுத்தவும், தாங்கள் பொய்யர்களாக இருந்ததை (ஏகஇறைவனை) மறுப்போர் அறிந்து கொள்ளவும் (அவன் மீண்டும் எழுப்புவான்)

40. ஒன்றை நாம் நாடினால் 'ஆகு' எனக் கூறுவதே நமது கூற்றாகும். உடனே அது ஆகி விடும்.506

41. அநீதி இழைக்கப்பட்ட பின் அல்லாஹ்வை நோக்கி ஹிஜ்ரத்460 செய்தோரை இவ்வுலகில் அழகிய முறையில் குடியமர்த்துவோம். மறுமையின் கூலி இதை விடப் பெரிது. இதை அவர்கள் அறிய வேண்டாமா?

42. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

43, 44. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம்.239 அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.105 நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்,255 அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.26

45, 46, 47. தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்; அல்லது அவர்கள் அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்து விடும்; அல்லது தமது காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களை அவன் பிடிப்பான்; அல்லது பயந்து கொண்டிருக்கும் போதே அவர்களை அவன் பிடித்து விடுவான் என்பதில் அச்சமற்று இருக்கிறார்களா? அவர்கள் தப்பிக்க முடியாது. உங்கள் இறைவன் இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோன்.26

48. அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அவர்கள் பார்க்கவில்லையா? அதன் நிழல் வலப்புறங்களிலும், இடப்புறங்களிலும் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.

49. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.396 வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.

50. தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

51. "இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

52. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. இம்மார்க்கமும் என்றென்றும் அவனுக்கே உரியது. அல்லாஹ் அல்லாதவர்களுக்கா அஞ்சுகின்றீர்கள்?

53. உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள்.

54, 55. பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.26

56. நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து ஒரு பாகத்தை தாங்கள் அறியாதவைகளு(க்காக கற்பனைக் கடவுளு)க்காகப் படைக்கின்றனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் இட்டுக்கட்டியது பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

57. அல்லாஹ்வுக்குப் புதல்வியரைக் கற்பனை செய்கின்றனர். அவன் தூயவன்.10 அவர்களுக்கோ அவர்கள் ஆசைப்படுவது (ஆண் குழந்தை) வேண்டுமாம்!

58. அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான்.

59. அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

60. மறுமையை நம்பாதோருக்கு தீய குணம் தான் உள்ளது. அல்லாஹ்வுக்கோ உயர்ந்த குணம் உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

61. மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

62. அவர்கள் (தமக்கு) விரும்பாததை (பெண் குழந்தையை) அல்லாஹ்வுக்குக் கற்பனை செய்கின்றனர். (இதனால்) தங்களுக்கு நன்மை உண்டு என்று அவர்களின் நாவுகள் பொய் கூறுகின்றன. அவர்களுக்கு நரகமே உள்ளது. அவர்கள் (அதில்) தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

63. அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

64. அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே256 உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

65. அல்லாஹ்வே வானிலிருந்து507 தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் (தண்ணீர்) மூலம் இதற்கு உயிரூட்டினான். செவியுறும் சமுதாயத்துக்கு இதில் தக்க சான்று இருக்கிறது.

66. கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள சாணத்துக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது.257

67. பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும்,116 அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.

68, 69. "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''474 என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.259 அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.26

70. அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக333 ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

71. உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம்107 கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

72. உங்களிலிருந்தே அல்லாஹ் உங்களுக்கு மனைவியரை ஏற்படுத்தினான். உங்கள் மனைவியரிலிருந்து பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் ஏற்படுத்தினான். தூய்மையானவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்தான். பொய்யில் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி மறக்கின்றார்களா?

73. அல்லாஹ்வை விட்டு விட்டு வானங்களிலும்,507 பூமியிலும் இவர்களுக்கான உணவில் சிறிதளவும் கைவசம் வைத்திராதவர்களையும், சக்தியற்றோரையும் இவர்கள் வணங்குகின்றனர்.

74. அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

75. எதற்கும் சக்தி பெறாத, பிறருக்கு உடைமையான அடிமையையும், யாருக்கு நாம் அழகிய செல்வத்தை அளித்தோமோ அவனையும் அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். இவன் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அதிலிருந்து (நல்வழியில்) செலவிடுகிறான். (இவ்விருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

76. இரண்டு மனிதர்களை அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். அவர்களில் ஒருவன் ஊமை. எதற்கும் சக்தி பெற மாட்டான். அவன் தனது எஜமானனுக்குப் பாரமாக இருக்கிறான். எங்கே அவனை அனுப்பினாலும் நன்மையைக் கொண்டு வர மாட்டான். இ(த்தகைய)வனும், நேரான வழியில் இருந்து கொண்டு, நீதியை ஏவுபவனும் சமமாவார்களா?

77. வானங்களிலும்,507 பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. யுக முடிவு நேரம்1 எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

78. நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.

79. ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.260

80. உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான்.

81. தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.

82. அவர்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே உமது கடமை.81

83. அல்லாஹ்வின் அருட்கொடையை அறிந்து, பின்னர் அதை மறுக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் (ஏகஇறைவனை) மறுப்போரே.

84. ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் நாளில்1 (ஏகஇறைவனை) மறுப்போருக்கு (பேச) அனுமதிக்கப்படாது. அவர்கள் (உலகுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு வணக்கங்கள் செய்ய) வற்புறுத்தப்பட மாட்டார்கள்.

85. அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள்.

86. இணை கற்பித்தோர் தங்கள் தெய்வங்களைக் காணும்போது "எங்கள் இறைவா! அவர்களே எங்கள் தெய்வங்கள். உன்னையன்றி அவர்களையே பிரார்த்தித்து வந்தோம்'' என்று கூறுவார்கள். "நீங்கள் பொய் சொல்கிறீர்கள்'' என்று அவர்கள் மறுமொழி கூறுவார்கள்.

87. அன்று அல்லாஹ்விடம் சரணாகதியைச் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.

88. (நம்மை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் குழப்பம் செய்து வந்ததன் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அவர்களுக்கு அதிகமாக்குவோம்.

89. ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு சாட்சியை நாம் நிறுத்தி, (முஹம்மதே!) உம்மை இவர்களுக்கு சாட்சியாகக் கொண்டு வரும் நாளை1 நினைவூட்டுவீராக! இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம்.

90. நீதியையும், நன்மையையும், உறவினருக்குக் கொடுப்பதையும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவற்றையும், தீமையையும், வரம்பு மீறுவதையும் உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

91. நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாளனாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்!64 நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

92. உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக (அவர்களுக்குச் சாதகமாக) உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான்.484 நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில்1 அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.

93. அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

94. உங்களுக்கிடையே மோசடி செய்வதற்காக சத்தியங்களைச் செய்யாதீர்கள்!64 அவ்வாறு செய்தால் உறுதிப்பட்ட பாதம் சறுகிப் போய் விடும். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்ததால் தீங்கைச் சுவைப்பீர்கள். உங்களுக்குக் கடும் வேதனை கிடைக்கும்.

95. அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்காதீர்கள்!445 நீங்கள் அறிந்தால் அல்லாஹ்விடம் உள்ளதே உங்களுக்குச் சிறந்தது.

96. உங்களிடம் உள்ளவை முடிந்து விடும். அல்லாஹ்விடம் உள்ளவை நிலைத்திருக்கும். பொறுமையைக் கடைப்பிடித்தோருக்கு அவர்கள் செய்து வந்த நல்லவற்றின் காரணமாக அவர்களுக்குரிய கூலியை வழங்குவோம்.

97. ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.

98. குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக!

99. நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை.

100. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணைகற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது.

101. ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால்30 "நீர் இட்டுக் கட்டுபவர்'' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

102. நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து 'ரூஹுல் குதுஸ்'444 உண்மையுடன் இறக்கினார்'492 என்பதை (முஹம்மதே!) கூறுவீராக!

103. "ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்'' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும்.142 இதுவோ தெளிவான அரபு489 மொழியாகும்.227

104. அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான். துன்புறுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு.

105. அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோரே பொய்யை இட்டுக்கட்டுவார்கள். அவர்களே பொய்யர்கள்.

106. அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.261

107. அவர்கள் மறுமையை விட, இவ்வுலக வாழ்க்கையை விரும்பினார்கள் என்பதே இதற்குக் காரணம். (தன்னை) மறுக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

108. அவர்களின் உள்ளங்கள் மீதும், செவியின் மீதும், பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களே விளங்காதவர்கள்.

109. அவர்கள் மறுமையில் நட்டமடைந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

110. சோதனைக்குள்ளாக்கப்பட்ட பின் ஹிஜ்ரத்460 செய்து, அறப்போரும் செய்து, பொறுமையைக் கடைப்பிடிப்போருக்கு உமது இறைவன் இருக்கிறான். இதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

111. ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி வாதிட வரும் நாளில்1 ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

112. ஓர் ஊரை அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அது நிம்மதியுடனும், அமைதியுடனும் இருந்தது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவ்வூருக்குரிய உணவு தாராளமாக வந்து சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது. எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவ்வூருக்கு அணிவித்தான்.

113. அவர்களிலிருந்தே அவர்களுக்குத் தூதர் வந்தார். அவரைப் பொய்யரெனக் கருதினர். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் வேதனை அவர்களைத் தாக்கியது.

114. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்!

115. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ431 அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.171

116. "இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது" என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.

117. (இது) அற்பமான வசதிகள். (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

118. (முஹம்மதே!) முன்னர் உமக்கு விவரித்ததை262 யூதர்களுக்குத் தடை செய்திருந்தோம். அவர்களுக்கு நாம் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

119. அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கோரி, திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

120. இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணைகற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.

121. அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். அவரை அவன் தேர்வு செய்தான். நேரான வழியில் அவரைச் செலுத்தினான்.

122. அவருக்கு இவ்வுலகில் நன்மையை வழங்கினோம். அவர் மறுமையில் நல்லோரில் ஒருவர்.

123. "(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!'' என்று உமக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். அவர் இணைகற்பிப்பவராக இருந்ததில்லை.

124. அவருக்கு முரண்பட்டோர் மீதே சனிக்கிழமை (மீன் பிடிக்கக்கூடாது என்ற சட்டம்) இருந்தது.146 கியாமத் நாளில்1 உமது இறைவன் அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.

125. விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.

126. நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

127. பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்!

128. (தன்னை) அஞ்சி நல்லறங்கள் செய்வோருடனே அல்லாஹ் இருக்கிறான்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account