Sidebar

28
Tue, May
63 New Articles

அத்தியாயம் 23

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 23 அல் முஃமினூன்

மொத்த வசனங்கள் : 118

அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர்

இந்த அத்தியாயத்தின் 1 முதல் 11 வரை உள்ள வசனங்களில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் பற்றி கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.

2. (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.

3. வீணானதைப் புறக்கணிப்பார்கள்.

4. ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள்.

5, 6. தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர107, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.26

7. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.

8. தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.

9. மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள்.

10, 11. பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.26

12. களிமண்ணின்503 சத்திலிருந்து506 மனிதனைப் படைத்தோம்.368

13. பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.506

14. பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்.365&506 பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக296 ஆக்கினோம்.486 அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கிய சாலியாவான்.

15. இதன் பிறகு நீங்கள் மரணிப்பவர்கள்.

16. பின்னர் கியாமத் நாளில்1 உயிர்ப்பிக்கப் படுவீர்கள்.

17. உங்களுக்கு மேலே ஏழு வழிகளைப் படைத்துள்ளோம். இப்படைப்பு பற்றி நாம் கவனமற்று இருக்கவில்லை.

18. வானத்திலிருந்து507 அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம்.297 அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

19. அதன் மூலம் பேரீச்சை, மற்றும் திராட்சைத் தோட்டங்களை உங்களுக்காக உருவாக்கினோம். அவற்றில் ஏராளமான கனிகள் உங்களுக்கு உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்.

20. தூர் ஸினாயிலிருந்து வெளிப்படும் (ஆலிவ்) மரத்தையும் (படைத்தோம்.) அது எண்ணெயையும், உண்பவருக்கு குழம்பையும் உற்பத்தி செய்கிறது.

21. கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்குப் பருகத் தருகிறோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்!171

22. அவற்றின் மீதும், கப்பலிலும் சுமக்கப்படுகிறீர்கள்.

23. நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று கேட்டார்.

24. அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான்.154 முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை'' என்றனர்.

25. "இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்!'' (என்றனர்.)

26. "என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!'' என்று அவர் கூறினார்.

27. "நமது மேற்பார்வையிலும் நமது அறிவிப்பின்படியும், கப்பலைச் செய்வீராக! நமது உத்தரவு வந்து தண்ணீர் பொங்க ஆரம்பித்தால்221 ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், யாருக்கு எதிராகக் கட்டளை முந்தி விட்டதோ அவர்களைத் தவிர ஏனைய உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்'' என்று அவருக்கு அறிவித்தோம்.

28. நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் "அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' எனக் கூறுவீராக!

29. "என் இறைவா! பாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாக! தங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன்'' என்று கூறுவீராக!

30. இதில் பல சான்றுகள் உள்ளன.222 நாம் சோதிப்பவர்களாவோம்.484

31. அவர்களுக்குப் பின் மற்றொரு தலைமுறையை உருவாக்கினோம்.

32. "அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று (எச்சரிக்க) அவர்களிலிருந்தே அவர்களுக்குத் தூதரை அனுப்பினோம்.

33. "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

34. "உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நீங்கள் நட்டமடைந்தவர்கள்''

35. "நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகிவிடும்போது உயிர்ப்பிக்கப்படுவீர்கள் என்று இவர் உங்களுக்கு எச்சரிக்கிறாரா?''

36. "நடக்காது! உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடக்காது''

37. "நமது இவ்வுலக வாழ்க்கை தவிர வேறு இல்லை. மரணிக்கிறோம்; வாழ்கிறோம்; நாம் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்''

38. "இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிய மனிதரைத் தவிர வேறு இல்லை. நாங்கள் இவரை நம்புவோராக இல்லை'' (என்று அந்தப் பிரமுகர்கள் கூறினர்.)

39. "என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!'' என்று அவர் கூறினார்.

40. "சிறிது காலத்தில் அவர்கள் கவலைப்படுவோராக ஆவார்கள்'' என்று (இறைவன்) கூறினான்.

41. உண்மையாகவே அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. உடனே அவர்களைக் கூளங்களாக ஆக்கினோம். அநீதி இழைத்த கூட்டத்தினருக்கு (இறையருள்) தூரமே!

42. அவர்களுக்குப் பின்னர் வேறு பல தலைமுறையினரை உருவாக்கினோம்.

43. எந்தச் சமுதாயமும் தன்னுடைய காலக் கெடுவை முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

44. பின்னர் நமது தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அதன் தூதர் வந்த போது அவரைப் பொய்யரெனக் கருதினர். ஆகவே அவர்களில் சிலருக்குப் பின் வேறு சிலரைத் தொடரச் செய்தோம். அவர்களைப் பழங்கதைகளாக ஆக்கினோம். நம்பிக்கை கொள்ளாத கூட்டத்திற்கு (இறையருள்) தூரமே!

45, 46. பின்னர் ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் மூஸாவையும், அவரது சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுடனும் அனுப்பினோம். அவர்கள் பெருமையடித்தனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமாக இருந்தனர்.26

47. "இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?'' என்றனர்.

48. அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே அவர்கள் அழிக்கப்பட்டோர் ஆயினர்.

49. அவர்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம்.

50. மர்யமின் மகனையும், அவரது தாயாரையும் சான்றாக ஆக்கினோம்.415 செழிப்பும், நிலையான தன்மையும் கொண்ட உயரமான இடத்தில் அவ்விருவரையும் தங்க வைத்தோம்.

51. தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நல்லறம் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்.

52. உங்களின் இந்தச் சமுதாயம் ஒரே சமுதாயமே. நான் உங்கள் இறைவன். எனக்கே அஞ்சுங்கள்!

53. அவர்கள் தமது காரியத்தைத் தமக்கிடையே பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனர். ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளது பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்.

54. சிறிது காலம் வரை அவர்களை அவர்களின் வழிகேட்டிலேயே விட்டு விடுவீராக!

55, 56. அவர்களுக்கு நாம் செல்வத்தையும், பிள்ளைகளையும் வழங்கியிருப்பது குறித்து "நல்லவற்றை விரைந்து வழங்குகிறோம்'' என்று எண்ணுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உணர மாட்டார்கள்.26

57, 58, 59 60, 61. தமது இறைவனின் அச்சத்தால் நடுங்குவோரும், தமது இறைவனின் வசனங்களை நம்புவோரும், தமது இறைவனுக்கு இணை கற்பிக்காதோரும், தமது இறைவனிடம் திரும்பிச் செல்லவிருப்பதை உள்ளத்தால் அஞ்சி, வழங்குவதை வழங்குவோரும் ஆகிய இவர்களே நன்மைகளை விரைந்து அடைகின்றனர். அவர்களே அவற்றுக்கு முந்துபவர்கள்.26

62. எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.68 நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு157 உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

63. எனினும் அவர்களின் உள்ளங்கள் இதைப் பற்றி கவனமற்று இருக்கின்றன. இது அல்லாத ஏனைய செயல்கள் அவர்களுக்கு உள்ளன. அவற்றை அவர்கள் செய்கின்றனர்.

64. முடிவில் அவர்களில் சொகுசாக வாழ்ந்தோரை வேதனையால் நாம் பிடிக்கும்போது அபயக் குரல் எழுப்புகின்றனர்.

65. இன்று அபயக் குரல் எழுப்பாதீர்கள்! நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

66. எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்பட்டு வந்தன. அப்பொழுது புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.

67. ஆணவம் கொண்டு இரவு நேரங்களில் அதைக் குறை கூறிக் கொண்டு இருந்தீர்கள்.

68. இச்சொல்லை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களின் முந்தைய முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதா?

69. அல்லது தமது தூதரைப் பற்றி அறியாமல் இருந்து அவரை அவர்கள் நிராகரிக்கிறார்களா?

70. அல்லது அவருக்குப் பைத்தியம் உள்ளது எனக் கூறுகிறார்களா?468 மாறாக அவர்களிடம் உண்மையையே கொண்டு வந்தார். அவர்களில் பெரும்பாலோர் உண்மையை வெறுப்போராகவே உள்ளனர்.

71. உண்மை, அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றிச் சென்றிருந்தால் வானங்களும்,507 பூமியும் அவற்றில் உள்ளோரும் சீரழிந்திருப்பார்கள். மாறாக அவர்களுக்கு அவர்களின் அறிவுரையையே வழங்கியுள்ளோம். அவர்கள் தமது அறிவுரையைப் புறக்கணிக்கின்றனர்.

72. அல்லது அவர்களிடம் (முஹம்மதே!) நீர் கூலியைக் கேட்கிறீரா? உமது இறைவனின் கூலியே சிறந்தது. அவனே கொடுப்போரில் சிறந்தவன்.

73. நீர் அவர்களை நேரான வழியை நோக்கி அழைக்கிறீர்!

74. மறுமையை நம்பாதோர் அவ்வழியை விட்டும் விலகியவர்கள்.

75. நாம் அவர்களுக்கு அருள் புரிந்து, அவர்களிடம் உள்ள துன்பத்தை நீக்கியிருந்தால் தமது அத்துமீறலில் தடுமாறி மூழ்கிக் கிடப்பார்கள்.

76. அவர்களைக் கடுமையாகத் தண்டித்தோம். அவர்கள் தமது இறைவனுக்குப் பணியவுமில்லை; மன்றாடவும் இல்லை.

77. முடிவில் கடுமையான வேதனையுடைய வாசலை அவர்களுக்கு எதிராக நாம் திறந்து விடும்போது அவர்கள் நம்பிக்கையிழந்தோராகி விடுகின்றனர்.

78. அவனே உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

79. அவனே உங்களைப் பூமியில் பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள்.

80. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். இரவு பகல் மாறுவது அவனுக்கே உரியது. விளங்க மாட்டீர்களா?

81. மாறாக முன் சென்றோர் கூறியது போலவே இவர்களும் கூறுகின்றனர்.

82. "நாங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆன பின் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கேட்கின்றனர்.

83. இதற்கு முன்பே எங்களுக்கும், எங்கள் முன்னோர்களுக்கும் இவ்வாறே எச்சரிக்கப்பட்டது. இது முன்னோர்களின் கட்டுக் கதைகள் தவிர வேறில்லை (என்றும் கூறினர்).

84. "பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

85. 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். "சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

86. "ஏழு வானங்களுக்கும்507 அதிபதி, மகத்தான அர்ஷின்488 அதிபதி யார்?'' எனக் கேட்பீராக!

87. "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

88. "பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)'' என்று கேட்பீராக!

89. 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். "எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?'' என்று கேட்பீராக!

90. அவர்களிடம் உண்மையையே கொண்டு வந்தோம். அவர்கள் பொய்யர்கள்.

91. அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.10

92. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.

93, 94. "என் இறைவா! அவர்களுக்கு எச்சரிக்கப்படுவதை (வேதனையை) எனக்குக் காட்டினால் என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கி விடாதே!'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!26

95. அவர்களுக்கு நாம் எச்சரிப்பதை உமக்குக் காட்டுவதற்கு நாம் ஆற்றலுடையவர்கள்.

96. நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.

97. "என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவீராக!

98. "என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' (என்றும் கூறுவீராக!)

99, 100. முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.26

101. ஸூர் ஊதப்படும்போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

102. எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர்.

103. எவரது எடைகள் இலேசாகி விட்டனவோ அவர்கள் தமக்குத் தாமே நட்டத்தை ஏற்படுத்தினர். நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்.

104. அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமான தோற்றத்துடன் இருப்பார்கள்.

105. "எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்படவில்லையா? அதை நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டு இருக்கவில்லையா?'' (என்று கூறப்படும்).

106. "எங்கள் இறைவா! எங்கள் துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. நாங்கள் வழிதவறிய கூட்டமாக இருந்தோம்'' என்று கூறுவார்கள்.

107. "எங்கள் இறைவா! இங்கிருந்து எங்களை வெளியேற்றி விடு! நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் நாங்கள் அநீதி இழைத்தவர்கள்'' (என்றும் கூறுவார்கள்).

108. "இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!'' என்று அவன் கூறுவான்.

109. "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன்'' என்று எனது அடியார்களில் ஒரு சாரார் கூறி வந்தனர்.

110. "எனது நினைவை விட்டும் உங்களை மறக்கச் செய்யும் அளவுக்கு அவர்களைக் கேலிப் பொருளாகக் கருதினீர்கள். அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டுமிருந்தீர்கள்'' (என்று இறைவன் கூறுவான்.)

111. "அவர்கள் சகித்துக் கொண்டதால் இன்று அவர்களுக்கு நான் பரிசளித்தேன். அவர்களே வெற்றி பெற்றோர்'' (என்றும் இறைவன் கூறுவான்.)

112. "ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்?'' என்று (இறைவன்) கேட்பான்.

113. "ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள்.

114. "குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவன் கூறுவான்.

115. உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா?

116. உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) கண்ணியமிக்க அர்ஷின்488 அதிபதி.

117. அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.

118. என் இறைவா! மன்னித்து அருள் புரிவாயாக!493 நீ அருள்புரிவோரில் சிறந்தவன்'' என கூறுவீராக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account