அத்தியாயம் : 25 அல் ஃபுர்கான்
மொத்த வசனங்கள் : 77
அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவது
திருக்குர்ஆனைப் பற்றி ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. (பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டுவதை (திருக்குர்ஆனை) அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்வதற்காக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.
2. அவனுக்கே வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
3. அவனையன்றி கடவுள்களை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.
4. "இது பொய்யைத் தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். மற்றொரு சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும், பாவத்தையுமே கொண்டு வந்துள்ளனர்.
5. "இது முன்னோர்களின் கட்டுக்கதை. அதை இவர் எழுதச் செய்து152 கொண்டார்.312 காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது'' எனவும் கூறுகின்றனர்.142
6. "வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள இரகசியத்தை அறிந்தவனே அதை அருளினான்'' எனக் கூறுவீராக! அவன் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
7. "இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர்.154
8. "அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.357
9. (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் நேர்வழி அடைய இயலாது.
10. அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக ஏற்படுத்துவான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மாளிகைகளையும் ஏற்படுத்துவான்.
11. எனினும் அவர்கள் அந்த நேரத்தைப்1 பொய்யெனக் கருதுகின்றனர். அந்த நேரத்தைப்1 பொய்யெனக் கருதுபவருக்கு நரகத்தைத் தயாரித்துள்ளோம்.
12. நரகம் அவர்களைத் தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்.
13. விலங்கிடப்பட்டு அவர்கள் அதில் நெருக்கடியான இடத்தில் போடப்பட்டதும் அவர்கள் அங்கே அழிவை அழைப்பார்கள்.
14. "ஓர் அழிவை அழைக்காதீர்கள்! அதிகமான அழிவுகளை அழையுங்கள்!'' (என்று கூறப்படும்.)
15. "இது சிறந்ததா? (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சொர்க்கமா?'' என்று கேட்பீராக! அது அவர்களுக்குக் கூலியாகவும், தங்குமிடமாகவும் அமையும்.
16. அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு. நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் வாக்குறுதியாக ஆகி விட்டது.
17. அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் அவன் ஒன்று திரட்டும் நாளில்1 "எனது அடியார்களை நீங்கள் தான் வழிகெடுத்தீர்களா? அவர்களாக வழிகெட்டார்களா?'' என்று கேட்பான்.
18. "நீ தூயவன்.10 உன்னையன்றி உற்ற நண்பர்களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். அழிந்து போகும் கூட்டமாக ஆகி விட்டனர்'' என்று (வணங்கப்பட்ட) அவர்கள் கூறுவார்கள்.
19. நீங்கள் கூறியதை இவர்கள் பொய்யாக்கி விட்டனர் (என்று இணைகற்பித்தவர்களிடம் கூறிவிட்டு, வணங்கப்பட்டவர்களை நோக்கி) தடுக்கவோ, உதவவோ உங்களுக்கு இயலாது. உங்களில் அநீதி இழைத்தோருக்குப் பெரிய வேதனையைச் சுவைக்கச் செய்வோம் (என்று கூறப்படும்.)
20. (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, சிலருக்குச் சோதனையாக484 ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக488 இருக்கிறான்.
21. "நம்மிடம் வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது நமது இறைவனை நாம் நேரில் பார்க்க வேண்டாமா?''21 என்று நமது சந்திப்பை488 நம்பாதோர் கூறுகின்றனர். அவர்கள் தங்களைப் பற்றி பெருமையடிக்கின்றனர். மிகப் பெரிய அளவில் வரம்பு மீறி விட்டனர்.
22. வானவர்களை அவர்கள் காணும் நாளில் குற்றவாளிகளுக்கு அன்று எந்த நற்செய்தியும் இருக்காது. "(எல்லா வாய்ப்புகளும்) முழுமையாகத் தடுக்கப்பட்டு விட்டன'' என்று அவர்கள் கூறுவார்கள்.
23. அவர்கள் செய்து வந்த செயல்களைக் கவனித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம்.
24. அந்நாளில் சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும், சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள்.
25. (அது) மேகத்தால் வானம்507 பிளக்கப்பட்டு, வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள்!1
26. அந்நாளில் உண்மையான ஆட்சி அளவற்ற அருளாளனுக்கே உரியது. அது (அவனை) மறுப்போருக்கு கஷ்டமான நாளாக இருக்கும்.
27. அநீதி இழைத்தவன் (கவலைப்பட்டு) தனது கைகளைக் கடிக்கும் நாளில்1 "இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே'' என்று கூறுவான்.
28. இன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா?
29. அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.)
30. "என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்'' என்று இத்தூதர் கூறுவார்.
31. (முஹம்மதே!) இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் குற்றம் புரிவோரிலிருந்து எதிரியை ஏற்படுத்தியிருந்தோம். உமது இறைவன் வழிகாட்டவும், உதவி செய்யவும் போதுமானவன்.
32. இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித்தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.447
33. (முஹம்மதே!) அவர்கள் எந்த உதாரணத்தைக் கூறினாலும் (அதை விட) உண்மையானதையும், அழகிய விளக்கத்தையும் உம்மிடம் கொண்டு வருவோம்.
34. முகம் குப்புற நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும், வழிகெட்டோராகவும் இருப்பார்கள்.
35. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஏற்படுத்தினோம்.
36. "நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்திடம் இருவரும் செல்லுங்கள்!'' எனக் கூறினோம். அக்கூட்டத்தை அடியோடு அழித்தோம்.
37. நூஹுடைய சமுதாயம் தூதர்களைப் பொய்யர்களெனக் கூறியபோது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்குப் படிப்பினையாக ஆக்கினோம். அநீதி இழைத்தோருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
38. ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தையும், பாழடைந்த கிணற்றுக்குரியோரையும், இவர்களுக்கு இடையில் வேறு பல தலைமுறையினரையும் (அடியோடு அழித்தோம்.)
39. ஒவ்வொருவருக்கும் அறிவுரைகளைக் கூறினோம். (அவர்கள்) ஒவ்வொருவரையும் அடியோடு அழித்தோம்.
40. தீயமழை பொழியப்பட்ட ஊரை இவர்கள் கடக்கின்றனர். அதை இவர்கள் காணவில்லையா? மாறாக அவர்கள் திரும்ப எழுப்பப்படுவதை நம்பாது உள்ளனர்.
41. உம்மை அவர்கள் காணும்போது "இவரைத்தான் அல்லாஹ் தூதராக அனுப்பினானா?'' என்று (கேட்டு) உம்மைக் கேலியாகக் கருதுகின்றனர்.
42. "நாம் நமது தெய்வங்கள் மீது உறுதியாக இல்லாதிருந்தால் இவர் அவற்றை விட்டு நம்மைத் திருப்பியிருப்பார்'' (எனக் கூறுகின்றனர்). மிகவும் வழிகெட்டவன் யார் என்பதை வேதனையைக் காணும்போது பின்னர் அறிந்து கொள்வார்கள்.
43. தனது மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா?
44. அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழிகெட்டவர்கள்.
45. உமது இறைவன் எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் அறியவில்லையா? அவன் நினைத்திருந்தால் அதை நிலையானதாக ஆக்கியிருப்பான். சூரியனை அதற்குச் சான்றாக ஆக்கினோம்.
46. பின்னர் அதை நம்மளவில் இலேசாகக் கைப்பற்றிக் கொள்வோம்.
47. அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.
48. தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறுவதற்காக அவனே காற்றை அனுப்புகிறான். வானத்திலிருந்து507 தூய்மையான தண்ணீரை இறக்கினோம்.
49. இறந்த ஊரை அதன் மூலம் நாம் உயிர்ப்பிப்பதற்காகவும், நாம் படைத்த கால்நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை நாம் புகட்டுவதற்காகவும் (மழையை இறக்கினோம்).
50. அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களிடையே இதைத் தெளிவுபடுத்துகிறோம். மனிதர்களில் அதிகமானோர் (நம்மை) மறுப்போராகவே உள்ளனர்.
51. நாம் நினைத்திருந்தால் ஒவ்வொரு ஊரிலும் எச்சரிக்கை செய்பவரை அனுப்பியிருப்போம்.
52. எனவே (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!
53. அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.305
54. அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான்.368&506 அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
55. அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.
56. (முஹம்மதே!) உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பினோம்.
57. "தனது இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புபவரைத் தவிர வேறு எந்தக் கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை''377 எனக் கூறுவீராக!
58. மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.
59. அவனே வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான்.511 அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!
60. "அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச்396 செய்யுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது "அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா?'' என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பை அதிகமாக்கியது.
61. வானத்தில்507 நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.
62. படிப்பினை பெற விரும்புபவனுக்கும், நன்றி செலுத்த விரும்புபவனுக்கும் இரவையும், பகலையும் ஒன்றன் பின் ஒன்றாக அவனே ஏற்படுத்தினான்.
63. அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம்159 கூறி விடுவார்கள்.
64. அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள்.
65. "எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
66. அது மோசமான ஓய்விடமாகவும், தங்குமிடமாகவும் இருக்கிறது.
67. அவர்கள் செலவிடும்போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.
68. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.
69. கியாமத் நாளில்1 வேதனை அவனுக்குப் பன்மடங்காக்கப்படும். அதில் இழிவுபடுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத் தங்குவான்.
70. திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான்.498 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
71. திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்.
72. அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும்போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.
73. தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் அவர்கள் விழ மாட்டார்கள்.
74. "எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
75. அவர்கள் சகித்துக் கொண்ட காரணத்தால் அவர்களுக்கு மாளிகை வழங்கப்படும். ஸலாமுடன்159 வாழ்த்துக் கூறி அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
76. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அது அழகிய தங்குமிடமாகவும், ஓய்விடமாகவும் உள்ளது.
77. "உங்களது பிரார்த்தனை இல்லாதிருந்தால் என் இறைவன் உங்களை விட்டு வைத்திருக்க மாட்டான். நீங்கள் பொய்யெனக் கருதி விட்டீர்கள். கட்டாயம் (அதற்கான தண்டனை) பின்னர் ஏற்பட்டே தீரும்'' என்று கூறுவீராக!
அத்தியாயம் 25 அல் ஃபுர்கான்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode