Sidebar

28
Tue, May
98 New Articles

அத்தியாயம் 26

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா

மொத்த வசனங்கள் : 227

அஷ் ஷுஅரா - கவிஞர்கள் 

இந்த அத்தியாயத்தின் 221வது முதல் 227வது வசனம் வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், நல்ல கவிஞர்களும், கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. தா, ஸீம், மீம்.2

2. இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.

3. அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக்கொள்வீர் போலும்.

4. நாம் நினைத்தால் வானிலிருந்து507 அவர்களுக்கு அற்புதத்தை இறக்குவோம். அப்போது அவர்களின் கழுத்துக்கள் அதன் முன்னே பணிந்து விடும்.

5. அளவற்ற அருளாளனிடமிருந்து புதிதாக எந்த அறிவுரை வந்தாலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.

6. அவர்கள் பொய்யெனக் கருதினர். எதை அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது பற்றிய செய்திகள் அவர்களை வந்தடையும்.

7. பூமியில் மதிப்புமிக்க ஒவ்வொரு வகையிலும் எத்தனையோ (பயிர்களை) முளைக்கச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் காணவில்லையா?

8. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.

9. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

10, 11, 12. "அநீதி இழைக்கும் கூட்டமான ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தவரிடம் செல்வீராக! அவர்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று உமது இறைவன் மூஸாவை அழைத்தபோது "என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதுவார்கள் என நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.26

13. என் உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகும். என் நாவும் எழாது. எனவே ஹாரூனைத் தூதராக அனுப்புவாயாக!

14. "அவர்களிடம் என் மீது ஒரு (கொலைக்) குற்றச்சாட்டு உள்ளது.375 எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்.)

15. "அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம்'' என்று (இறைவன்) கூறினான்.

16, 17. ஃபிர்அவ்னிடம் சென்று "நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!''181 என்று கூறுங்கள்! (என்றும் இறைவன் கூறினான்.)26

18. "குழந்தையாக இருந்த நிலையில் நாம் உம்மை எடுத்து வளர்க்கவில்லையா? உமது வாழ்நாளில் பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே!'' என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்.

19. "நீர் செய்த உமது செயலையும் செய்து முடித்தீர். நீர் நன்றி கெட்டவர்'' (என்றும் கூறினான்.)

20. "நான் நேர்வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன்'' என அவர் கூறினார்.

21. "உங்களுக்கு அஞ்சி உங்களை விட்டு ஓடினேன். அப்போது என் இறைவன் எனக்கு ஞானத்தை வழங்கி தூதர்களில் ஒருவராக என்னை நியமித்தான்''

22. "இஸ்ராயீலின் மக்களை நீ அடிமைப்படுத்துவதற்கு (நியாயம் கற்பிக்க) எனக்குச் செய்த அருட்கொடையை நீ சொல்லிக் காட்டுகிறாய்!''181 (என்றும் கூறினார்)

23. "அகிலத்தின் இறைவன் என்றால் என்ன?'' என்று ஃபிர்அவ்ன் கேட்டான்.

24. "நீங்கள் உறுதியாக நம்பினால் வானங்கள்,507 பூமி, மற்றும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டதற்கும் அவனே இறைவன்'' என்றார்.

25. தன்னைச் சுற்றியிருந்தோரிடம் "(இதை) நீங்கள் செவிமடுக்கிறீர்களா?'' என்று அவன் கேட்டான்.

26. "அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன்'' என்று அவர் கூறினார்.

27. "உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் தூதர் பைத்தியக்காரர் தான்'' என்று அவன் கூறினான்.

28. "நீங்கள் விளங்கிக் கொள்வோராக இருந்தால் கிழக்குக்கும், மேற்குக்கும், அவற்றுக்கு இடைப்பட்டதற்கும் அவன் இறைவன்'' என்று அவர் கூறினார்.

29. "என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தால் உம்மைச் சிறைப்படுத்துவேன்'' என்று அவன் கூறினான்.

30. "தெளிவான ஒரு பொருளை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?'' என்று அவர் கேட்டார்.

31. "நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்'' என்று அவன் கூறினான்.

32. அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது.269

33. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது.269

34. "இவர் திறமைமிக்க சூனியக்காரர்'' என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான்.357

35. "தனது சூனியத்தின்285 மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?'' (என்றும் கேட்டான்).357

36, 37. "இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! பல நகரங்களுக்கும் ஆள் திரட்டுவோரை அனுப்புவீராக! அவர்கள் திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' (என்றும் சபையோர் கூறினர்).26

38. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.

39, 40. சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் அவர்களை நாம் பின்பற்றுவதற்காக நீங்கள் ஒன்று கூடுவீர்களா? என்று மக்களுக்கும் கூறப்பட்டது.26

41. சூனியக்காரர்கள் வந்தவுடன் "நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று ஃபிர்அவ்னிடம் கேட்டனர்.

42. "ஆம்! அப்போது நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என்று அவன் கூறினான்.

43. "நீங்கள் போடவிருப்பதைப் போடுங்கள்!'' என்று அவர்களிடம் மூஸா கூறினார்.

44. அவர்கள் தமது கயிறுகளையும், கைத்தடிகளையும் போட்டனர். "ஃபிர்அவ்னின் கண்ணியத்தின் மீது சத்தியமாக!379 நாங்களே வெல்பவர்கள்'' என்றனர்.

45. உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது.269

46. சூனியக்காரர்கள் (இறைவனுக்கு) ஸஜ்தாச் செய்து, விழுந்தனர்.357

47, 48. "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்'' என்றனர்.26

49. "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு இவரே. (இதன் விளைவை) பின்னர் அறிவீர்கள். உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்'' என்று அவன் கூறினான்.

50. "கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறினர்.

51. "நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்'' (என்றும் கூறினர்).

52. "என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.

53. ஆள் திரட்டுவோரைப் பல நகரங்களுக்கும் ஃபிர்அவ்ன் அனுப்பினான்.

54. அவர்கள் சிறிய கூட்டத்தினரே.

55. அவர்கள் நமக்குக் கோபத்தை ஏற்படுத்துகின்றனர்.

56. நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள். (என்று ஃபிர்அவ்ன் கூறினான்)

57, 58. தோட்டங்களையும், நீரூற்றுகளையும், பொக்கிஷங்களையும், மதிப்புமிக்க தங்குமிடங்களையும் விட்டும் அவர்களை வெளியேற்றினோம்.26

59. இப்படித்தான் இஸ்ராயீலின் மக்களை அவற்றுக்கு வாரிசுகளாக்கினோம்.

60. காலையில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

61. இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டபோது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.

62. "அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்'' என்று அவர் கூறினார்.

63. "உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.269

64. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம்.

65. மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்.

66. பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.

67. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.

68. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

69. அவர்களிடம் இப்ராஹீமின் வரலாறைக் கூறுவீராக!

70, 71. "எதை வணங்குகிறீர்கள்?'' என்று தமது தந்தையிடமும், தமது சமுதாயத்தினரிடமும் அவர் கேட்டபோது "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றனர்.26

72, 73. "நீங்கள் அழைக்கும்போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?'' என்று அவர் கேட்டார்.26

74. "அவ்வாறில்லை. எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம்'' என்று அவர்கள் கூறினர்.

75, 76, 77. "அகிலத்தின் இறைவனைத் தவிர நீங்களும், முந்திச் சென்ற உங்கள் முன்னோர்களும் எதை வணங்குவோராக இருக்கிறீர்கள்?'' என்பதைக் கவனித்தீர்களா? அவை எனது எதிரிகளாகும்26

78. அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர்வழி காட்டுகிறான்.

79. அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகத் தருகிறான்.463

80. நான் நோயுறும்போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

81. அவனே என்னை மரணிக்கச் செய்வான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.

82. "தீர்ப்பு நாளில்1 என் தவறை அவன் மன்னிக்க வேண்டும்'' என ஆசைப்படுகிறேன்.

83. என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக!

84. பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!

85. இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!

86. என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழிதவறியவராக இருக்கிறார்.247

87. (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவுபடுத்தி விடாதே!

88, 89. அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.26

90. (இறைவனை) அஞ்சுவோருக்கு சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.

91. வழிகெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.

92, 93. "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே? அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா? அல்லது தமக்குத் தாமே உதவிக் கொள்வார்களா?'' என்று அவர்களிடம் கேட்கப்படும்.26

94, 95. அவர்களும், வழிகெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.26

96, 97, 98. "உங்களை அகிலத்தின் இறைவனுக்குச் சமமாக்கியபோது அல்லாஹ்வின் மீது ஆணையாக தெளிவான வழிகேட்டில் இருந்தோம்'' என்று அங்கே தர்க்கம் செய்து கொண்டே கூறுவார்கள்.26

99. இந்தக் குற்றவாளிகளே எங்களை வழிகெடுத்தனர்.

100. எங்களுக்குப் பரிந்துரை செய்வோர்17 எவருமில்லை.

101. உற்ற நண்பனும் இல்லை.

102. உலகுக்குத் திரும்பிச் செல்லுதல் எங்களுக்கு இருக்குமானால் நம்பிக்கை கொண்டோரில் ஆகியிருப்போம் (என்றும் கூறுவார்கள்).

103. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.

104. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

105. நூஹுடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.

106. (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா? என்று அவர்களின் சகோதரர் நூஹு அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

107. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர்;

108. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

109. உங்களிடம் நான் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.

110. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! (என்றும் கூறினார்.)

111. "மிகவும் தாழ்ந்தோர் உம்மைப் பின்பற்றியுள்ள நிலையில் உம்மை நம்புவோமா?'' என்று அவர்கள் கூறினர்.

112. "அவர்கள் செய்து கொண்டிருப்பது (பற்றிய முடிவு என்ன என்பது) எனக்குத் தெரியாது'' என்று அவர் கூறினார்.

113. "அவர்களை விசாரிப்பது எனது இறைவனின் பொறுப்பாகும். விளங்க மாட்டீர்களா?''

114. "நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை''

115. "நான் தெளிவாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை'' (என்றும் கூறினார்.)

116. "நூஹே! நீர் விலகிக் கொள்ளவில்லையானால் கல்லால் எறிந்து கொல்லப்படுவீர்!'' என்று அவர்கள் கூறினர்.

117. "என் இறைவா! என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யரெனக் கருதுகின்றனர்'' என்று அவர் கூறினார்.

118. "எனக்கும், அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும், என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!'' (என்றும் கூறினார்).

119. எனவே அவரையும், அவருடன் இருந்தோரையும் நிரப்பப்பட்ட கப்பலில் காப்பாற்றினோம்.

120. பின்னர் எஞ்சியோரை மூழ்கடித்தோம்.

121. இதில் தக்க சான்று உள்ளது.222 அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.

122. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

123. ஆது சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.

124. "இறைவனுக்கு அஞ்ச மாட்டீர்களா'' என்று அவர்களின் சகோதரர் ஹூது, அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

125. நான் உங்களுக்கு நம்பிக்கையுள்ள தூதராவேன்.

126. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

127. நான் உங்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.

128. ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் வீணாக சின்னங்களை எழுப்புகிறீர்களா?

129. நிரந்தரமாக இருப்பதற்காக வலிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா?

130. நீங்கள் பிடிக்கும்போது அடக்குமுறை செய்வோராகப் பிடிக்கிறீர்கள்.

131. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

132. உங்களுக்குத் தெரிந்தவற்றின் மூலம் உங்களுக்கு உதவியவனை அஞ்சுங்கள்!

133, 134. கால்நடைகள், மக்கள், நீரூற்றுகள் மற்றும் தோட்டங்கள் மூலம் அவன் உங்களுக்கு உதவினான்.26

135. "மகத்தான நாளின்1 வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்.)

136. "நீர் அறிவுரை கூறுவதும், கூறாமல் இருப்பதும் எங்களுக்குச் சமமானதே'' என்று அவர்கள் கூறினர்.

137. இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை.

138. நாங்கள் தண்டிக்கப்படுவோரும் அல்லர் (என்றும் கூறினர்.)

139. அவரை அவர்கள் பொய்யரெனக் கருதினர். எனவே அவர்களை அழித்தோம். இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.

140. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

141. ஸமூது சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.

142. அஞ்ச மாட்டீர்களா? என்று அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் கூறியதை நினைவூட்டுவீராக!

143. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.

144. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

145. இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.

146, 147, 148. இங்கே நீங்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும், விளைநிலங்களிலும், குலை தள்ளிய பேரீச்சை மரங்களிலும், அச்சமற்றோராக விட்டு வைக்கப்படுவீர்களா?26

149. மிகத் திறமையுடன் மலைகளை வீடுகளாகக் குடைகிறீர்கள்!

150. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

151. வரம்பு மீறியோரின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாதீர்கள்!

152. அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிப்பார்கள். சீர் செய்ய மாட்டார்கள் (என்றும் கூறினார்).

153. "நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்''285 என்று அவர்கள் கூறினர்.357

154. "நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!'' (என்றும் கூறினர்)

155. "இதோ ஒட்டகம்!269 நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாள் பருகுவது அதற்குரியது. இன்னொரு நாள் உங்களுக்குரியது'' என்றார்.

156. அதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! உங்களை மகத்தான நாளின்1 வேதனை பிடித்துக் கொள்ளும் (என்றும் கூறினார்).

157. அதை அவர்கள் அறுத்தனர். இதனால் கைசேதம் அடைந்தனர்.

158. உடனே அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ளவில்லை.

159. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

160. லூத்துடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.

161. "அஞ்ச மாட்டீர்களா'' என்று அவர்களின் சகோதரர் லூத் அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

162. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.

163. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

164. இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.

165, 166. உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? இல்லை! நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கிறீர்கள்! (என்றும் கூறினார்.)26

167. "லூத்தே நீர் விலகிக் கொள்ளாவிட்டால் வெளியேற்றப்படுவோரில் நீரும் ஒருவர்!'' என்று அவர்கள் கூறினார்கள்.

168. "உங்கள் செயலை நான் வெறுப்பவன்'' என்று அவர் கூறினார்.

169. "என் இறைவா! என்னையும், என் குடும்பத்தினரையும் இவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!'' (என்றும் கூறினார்)

170, 171. எனவே அவரையும், (தீயோருடன்) தங்கி விட்ட கிழவியைத் தவிர, அவரது குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றினோம்.26

172. பின்னர் ஏனையோரை அழித்தோம்.

173. அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்.412 எச்சரிக்கப்பட்டோரின் இந்த மழை மிகவும் கெட்டதாக இருந்தது.

174. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.

175. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

176. தோப்பு (மத்யன்)வாசிகளும் தூதர்களைப் பொய்யர்களெனக் கருதினர்.

177. "அஞ்ச மாட்டீர்களா?'' என்று அவர்களிடம் ஷுஐபு கூறியதை நினைவூட்டுவீராக!

178. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.

179. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

180. இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.

181. அளவை முழுமைப்படுத்துங்கள்! குறைத்து விடாதீர்கள்!

182. நேர்மையான தராசு மூலம் நிறுத்துக் கொடுங்கள்!

183. மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!

184. உங்களையும், முந்தைய படைப்புகளையும் படைத்தவனுக்கு அஞ்சுங்கள்! (என்றார்)

185. "நீர் சூனியம் செய்யப்பட்டவர் தான்''285 என்று அவர்கள் கூறினர்.367

186. "நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.''

187. "நீர் உண்மையாளராக இருந்தால் வானத்தின்507 ஒரு துண்டை எங்கள் மீது விழச் செய்வீராக!'' (என்றும் கூறினர்)

188. "நீங்கள் செய்பவற்றை என் இறைவன் நன்கறிபவன்'' என்று அவர் கூறினார்.

189. அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை அவர்களைத் தாக்கியது. அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.

190. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.

191. (முஹம்மதே!) உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

192. இது அகிலத்தின் இறைவனால் அருளப்பட்டது.

193, 194, 195. எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில்152 தெளிவான அரபு489 மொழியில்227 நம்பிக்கைக்குரிய ரூஹ்444 இதை இறக்கினார்.26&492

196. இது முன்னோரின் வேதங்களிலும் உள்ளது.

197. இஸ்ராயீலின் மக்களில் உள்ள அறிஞர்கள் இதை அறிந்து (ஏற்று) இருப்பது இவர்களுக்குச் சான்றாக இல்லையா?

198, 199. இதை அரபியர் அல்லாத ஒருவருக்கு அருளி, அவர் இவர்களுக்கு அதை ஓதிக் காட்டியிருந்தாலும், அதை நம்பியிருக்க மாட்டார்கள்.26

200. இவ்வாறே குற்றவாளிகளின் உள்ளங்களில் இதைப் புகுத்தி விட்டோம்.

201. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணாத வரை அதை நம்ப மாட்டார்கள்.

202. அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களிடம் அது வந்து விடும்.

203. "எங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுமா?'' என்று (அப்போது) அவர்கள் கேட்பார்கள்.

204. நமது வேதனையையா அவர்கள் அவசரமாகத் தேடுகின்றனர்?

205, 206, 207. அவர்களைப் பல வருடங்கள் நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது அவர்களிடம் வருமானால் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தவை அவர்களைக் காப்பாற்றாது என்பதை அறிவீரா?26

208. எச்சரிக்கை செய்வோரில்லாமல் எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை.

209. (இது) அறிவுரை! நாம் அநீதி இழைத்ததில்லை.

210. இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை.

211. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது.

212. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.307

213. அல்லாஹ்வுடன் மற்றொரு கடவுளை நீர் அழைக்காதீர்! அப்போது நீர் தண்டிக்கப்படுபவராக ஆகி விடுவீர்!

214. (முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!281

215. உம்மைப் பின்பற்றிய நம்பிக்கை கொண்டோருக்கு உமது சிறகைத் தாழ்த்துவீராக!251

216. "அவர்கள் உமக்கு மாறுசெய்தால் நீங்கள் செய்பவற்றை விட்டு நான் விலகியவன்'' என்று கூறுவீராக!

217. மிகைத்தவனையும், நிகரற்ற அன்புடையோனையுமே சார்ந்திருப்பீராக!

218, 219. நீர் நிற்கும் நேரத்திலும், ஸஜ்தாச் செய்வோருடன் நீர் இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.26

220. அவனே செவியுறுபவன்;488 அறிந்தவன்.

221. ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

222. இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

223. அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.

224. கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள்.

225. அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா?

226. அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.

227. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைத்து, அநீதி இழைக்கப்பட்ட பின் பழிதீர்த்துக் கொண்ட(புல)வர்களைத் தவிர. எந்த இடத்திற்குத் தாங்கள் செல்லவிருக்கிறோம் என்பதை அநீதி இழைத்தோர் பின்னர் அறிந்து கொள்வார்கள்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account