அத்தியாயம் : 42 அஷ்ஷூரா
மொத்த வசனங்கள் : 53
அஷ்ஷூரா - கலந்தாலோசனை
ஆலோசனை செய்தே முடிவு செய்ய வேண்டும் என்று 38வது வசனம் கூறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. ஹா, மீம்.2
2. ஐன், ஸீன், காஃப்.2
3. (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் அல்லாஹ் இவ்வாறே அறிவிக்கிறான். (அவன்) மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
4. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.
5. (மனிதர்களின் பாவத்தால்) வானங்கள்507 அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்து விட முயலும். வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வே மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
6. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களே அவர்களையும் அல்லாஹ்வே கண்காணிப்பவன். (முஹம்மதே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.
7. (மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும்281 (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், ஒன்று திரட்டப்படும் சந்தேகமே இல்லாத நாளைப்1 பற்றி எச்சரிப்பதற்காகவும் இவ்வாறு உமக்கு (தெரிந்த) அரபு489 மொழியில் குர்ஆனை அறிவித்தோம்.227 ஒரு கூட்டம் சொர்க்கத்திலும், மற்றொரு கூட்டம் நரகத்திலும் இருக்கும்.
8. அல்லாஹ் நினைத்திருந்தால் அவர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை தனது அருளில் நுழையச் செய்கிறான். அநீதி இழைத்தோருக்குப் பாதுகாவலனும், உதவியாளனும் இல்லை.
9. அவனையன்றி பாதுகாவலர்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்களா? அல்லாஹ்வே பாதுகாவலன். அவன் இறந்தோரை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
10. "நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் முரண்பட்டால் அது பற்றிய முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே என் இறைவனாகிய அல்லாஹ். அவனையே சார்ந்திருக்கிறேன். அவனிடமே திரும்புகிறேன்'' எனக் கூறுவீராக.
11. (அவன்) வானங்களையும்,507 பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால்நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்;488 பார்ப்பவன்.488
12. வானங்கள்507 மற்றும் பூமியின் திறவுகோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். அளவோடும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
13. நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும் "மார்க்கத்தை நிலைநாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!'' என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணைகற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழிகாட்டுகிறான்.
14. அவர்களிடம் அறிவு வந்த பின்னும் தங்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே தவிர அவர்கள் பிளவுபடவில்லை. குறிப்பிட்ட காலக்கெடு வரை உமது இறைவனிடமிருந்து ஏற்பட்ட கட்டளை முந்தியிராவிட்டால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்குப் பின் வேதத்துக்கு உரிமையாளர்களாக ஆக்கப்பட்டோர் அதில் கடுமையான சந்தேகத்தில் உள்ளனர்.
15. (முஹம்மதே!) இதை நோக்கி அழைப்பீராக! உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! "அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்கக் கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும், உங்களுக்குமிடையே எந்தத் தர்க்கமும் (இனி) இல்லை. அல்லாஹ் (மறுமையில்) நம்மை ஒன்று திரட்டுவான். அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது'' என்று கூறுவீராக!
16. (இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் முஸ்லிம்களால்) அல்லாஹ்வுக்குப் பதிலளிக்கப்பட்ட பின் அவன் விஷயத்தில் யார் தர்க்கம் செய்கிறார்களோ அவர்களின் தர்க்கம் அவர்களது இறைவனிடம் செல்லுபடியாகாது. அவர்கள் மீது கோபமும் உள்ளது. கடுமையான வேதனையும் உண்டு.
17. அல்லாஹ்வே உண்மையை உள்ளடக்கிய வேதத்தையும், தராசையும் அருளினான். யுகமுடிவு நேரம்1 அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?
18. அதை நம்பாதோர் அவசரப்படுகின்றனர். நம்பிக்கை கொண்டோர் அதைப் பற்றி அஞ்சுகின்றனர். அது உண்மை என்று அறிகின்றனர். கவனத்தில் கொள்க! யுகமுடிவு நேரம்1 குறித்து தர்க்கம் செய்வோர் தூரமான வழிகேட்டில் உள்ளனர்.
19. அல்லாஹ் தனது அடியார்களிடம் மென்மையாக நடப்பவன். தான் நாடியோருக்குச் செல்வத்தை வழங்குகிறான். அவன் வலிமையானவன்; மிகைத்தவன்.
20. மறுமையின் விளைச்சலை விரும்புவோருக்கு அவரது விளைச்சலை அதிகப்படுத்துவோம். இவ்வுலகத்தின் விளைச்சலை விரும்புவோருக்கு அதிலிருந்து அவருக்குக் கொடுப்போம். அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை.
21. அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
22. அநீதி இழைத்தோர் தாங்கள் செய்தது பற்றி அஞ்சியோராக இருப்பதை நீர் காண்பீர்! அது அவர்களை வீழ்த்திவிடும். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். அவர்கள் நாடியவை அவர்களது இறைவனிடம் அவர்களுக்காக உண்டு. இதுவே பேரருள்.
23. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்த தனது அடியார்களுக்கு இதையே அல்லாஹ் நற்செய்தியாகக் கூறுகிறான். "உறவின் அடிப்படையில் ஏற்படும் அன்பைத் தவிர இதற்காக (வேறு) கூலியை நான் உங்களிடம் கேட்கவில்லை''377 என்று (முஹம்மதே!) கூறுவீராக! நன்மை செய்வோருக்கு அதில் நன்மையை அதிகரிப்போம். அல்லாஹ் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்.6
24. "அல்லாஹ்வின் மீது இவர் இட்டுக்கட்டி விட்டார்'' எனக் கூறுகிறார்களா? (முஹம்மதே!) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தில் முத்திரையிடுவான். அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால்155 உண்மையை நிலைக்கச் செய்கிறான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.
25. அவனே மன்னிப்புக் கோருவதை தனது அடியார்களிடமிருந்து ஏற்று தீமைகளை மன்னிக்கிறான். நீங்கள் செய்வதை அறிகிறான்.
26. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரின் பிரார்த்தனையை அங்கீகரிக்கிறான். தனது அருளை அவர்களுக்கு அதிகப்படுத்துகிறான். (ஏகஇறைவனை) மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு.
27. அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்கினால் பூமியில் வரம்பு மீறுகின்றனர். எனினும் தான் நாடியதை அளவோடு அவன் இறக்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவன்; பார்ப்பவன்.488
28. அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.
29. வானங்களையும்,507 பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும்440 பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்.
30. உங்களுக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் உங்கள் கைகள் செய்ததன் காரணத்தினால் ஏற்பட்டது. அவன் அதிகமானவற்றை மன்னிக்கிறான்.
31. பூமியில் நீங்கள் வெல்வோர் அல்லர். அல்லாஹ்வையன்றி உதவுபவரோ, பாதுகாவலரோ உங்களுக்கு இல்லை.
32. மலைகளைப் போன்று கடலில் செல்லும் கப்பல்களும் அவனது சான்றுகளில் உள்ளவை.
33. அவன் நினைத்தால் காற்றை நிறுத்தி விடுகிறான். உடனே அது அதன் (கடலின்) மேற்பரப்பில் நின்று விடுகின்றது. சகிப்புத் தன்மையும், நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன.
34. அல்லது அவர்கள் செய்தவற்றின் காரணமாக அவற்றை (மூழ்கடித்து) அழித்து விடுவான். அதிகமானவற்றை அவன் மன்னிக்கிறான்.
35. நமது சான்றுகளில் வீண் தர்க்கம் செய்வோர் தமக்கு எந்தப் புகலிடமும் இல்லை என்பதை (அப்போது) அறிந்து கொள்வார்கள்.
36, 37, 38, 39. உங்களுக்கு எந்தப் பொருள் கொடுக்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளே. நம்பிக்கை கொண்டு தம் இறைவனையே சார்ந்திருப்போருக்கும், பெரும் பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்வோருக்கும், கோபம் கொள்ளும்போது மன்னிப்போருக்கும், தமது இறைவனுக்குப் பதிலளித்து தொழுகையை நிலைநாட்டி தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவோருக்கும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்ததும் நிலையானதுமாகும்.26
40. தீமைக்கு அது போன்ற தீமையே தண்டனை. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.
41. தான் அநீதி இழைத்த பின்னர் (அநீதி இழைக்கப்பட்டவரால்) யார் உதவி பெறுகிறாரோ அவருக்கு எதிராக எந்த வழியும் இல்லை.
42. மக்களுக்கு அநீதி இழைத்து நியாயமின்றி பூமியில் வரம்பு மீறுவோருக்கு எதிராகவே குற்றம் பிடிக்க வழி உண்டு. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
43. யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
44. அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனுக்கு அவனன்றி எந்த உதவியாளனும் இல்லை. அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது "தப்பிக்க ஏதும் வழி உண்டா?'' எனக் கூறுவதை நீர் காண்பீர்.
45. சிறுமையினால் அடங்கி ஒடுங்கி, அவர்கள் அதன் முன்னே நிறுத்தப்பட்டு, கடைக்கண்ணால் பார்ப்பதை நீர் காண்பீர்! "கியாமத் நாளில்1 தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் நட்டத்தை ஏற்படுத்தியோரே (உண்மையில்) நட்டமடைந்தவர்கள்'' என்று நம்பிக்கை கொண்டோர் (அப்போது) கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
46. அல்லாஹ்வையன்றி உதவி செய்யும் பாதுகாவலர்கள் எவரும் அவர்களுக்கு இல்லை. அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு எந்த வழியும் இல்லை.
47. அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க இயலாத நாள்1 வருவதற்கு முன் உங்கள் இறைவனின் அழைப்புக்குப் பதில் கூறுங்கள்! அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் இல்லை. உங்களுக்கு மறுப்பு தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை.
48. (முஹம்மதே!) அவர்கள் புறக்கணித்தால் (கவலைப்படாதீர். ஏனெனில்) உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக நாம் அனுப்பவில்லை. எடுத்துச் சொல்வது தவிர உமக்கு வேறு இல்லை.81 நாம் மனிதனுக்கு நமது அருளை அனுபவிக்கச் செய்தால் அதனால் மகிழ்ச்சியடைகிறான். அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்கு ஒரு தீமை ஏற்பட்டால் மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
49. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.
50. அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
51. வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை.350 அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.
52. இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை.344 மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.81
53. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாருக்கு உரியனவோ அந்த அல்லாஹ்வின் வழியில் (அழைக்கிறீர்). கவனத்தில் கொள்க! அல்லாஹ்விடமே காரியங்கள் மீள்கின்றன.
அத்தியாயம் 42 அஷ்ஷூரா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode