Sidebar

27
Sat, Jul
5 New Articles

அத்தியாயம் 55

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 55 அர்ரஹ்மான்

மொத்த வசனங்கள் : 78

அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.26

3. மனிதனைப் படைத்தான்.368

4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.

5. சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.

6. மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) பணிகின்றன.

7, 8, 9. அவன் வானத்தை507 உயர்த்தினான். நிறுப்பதில் நீங்கள் வரம்பு மீறாதிருக்கவும், நியாயமாக எடையை நிலைநாட்டவும், எடையில் குறைத்து விடாதிருக்கவும் தராசை நிறுவினான்.26

10. பூமியை மனிதர்களுக்காக அமைத்தான்.

11, 12. அதில் கனிகளும், பாளைகளுடைய பேரீச்சை மரங்களும், தோல் மூடிய தானியமும், மணம் வீசும் மலர்களும் உள்ளன.26

13. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

14. மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால்503&506 மனிதனைப் படைத்தான்.368

15. தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.

16. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

17. (அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.335

18. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

19. இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான்.

20. இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.305

21. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும், பவளமும் வெளிப்படுகின்றன.

23. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

24. கடலில் மலைகளைப் போல் ஓங்கி உயர்ந்து ஓடும் கப்பல்கள் அவனுக்கே உரியன.

25. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

26. இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள்.225

27. மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.225

28. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

29. வானங்களிலும்,507 பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் இருக்கிறான்.

30. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

31. மதிப்பு மிக்க (மனித, ஜின் ஆகிய) இரு இனத்தவர்களே! உங்களுக்காக (விசாரிக்க) நேரம் ஒதுக்குவோம்.

32. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

33. மனித ஜின் கூட்டமே! வானங்கள்507 மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.304

34. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

35. (யுகமுடிவு நாளில்) உங்களுக்கு நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். அப்போது உதவி பெற மாட்டீர்கள்.

36. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

37. வானம்507 பிளக்கும்போது எண்ணெய்யைப் போல் சிவந்ததாக ஆகும்.

38. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

39. அந்நாளில் எந்த மனிதனிடமும், ஜின்னிடமும் அவரது குற்றம் குறித்து விசாரிக்கத் தேவை இருக்காது.

40. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

41. குற்றவாளிகள் அவர்களின் அடையாளத்தால் அறியப்படுவார்கள். முன் நெற்றிகளும், பாதங்களும் பிடிக்கப்படும்.

42. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

43. குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே.

44. அதற்கும், கொதிநீருக்குமிடையே அவர்கள் உழல்வார்கள்.

45. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

46. தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன.

47. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

48. அவை அடர்த்தியான கிளைகளைக் கொண்டவை.

49. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

50. அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடும்.

51. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

52. ஒவ்வொரு கனியிலும் இரண்டு வகைகள் அவ்விரண்டிலும் உள்ளன.

53. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

54. அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும்.

55. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

56. அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள்.8 இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.

57. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

58. அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள்.

59. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

60. நன்மைக்கு நன்மை தவிர வேறு கூலி உண்டா?

61. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

62. அவ்விரண்டும் அல்லாத வேறு இரு சோலைகளும் உள்ளன.

63. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

64. (அவை) கரும்பச்சை நிறமுடையவை.

65. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

66. அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன.

67. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

68. அவ்விரண்டிலும் கனியும், பேரீச்சையும், மாதுளையும் உள்ளன.

69. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

70. அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள்.

71. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

72. கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர்8 எனும் கன்னியராவர்.

73. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

74. இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.

75. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

76. பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.

77. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

78. கண்ணியமும், மகத்துவமும் மிக்க உமது இறைவனின் பெயர் பாக்கியம் மிக்கது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account