அத்தியாயம் 67 அல் முல்க்

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 67 அல் முல்க்

மொத்த வசனங்கள் : 30

அல் முல்க் - அதிகாரம்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அதிகாரம் அவன் கையில் எனத் துவங்குவதால் இந்த அத்தியாயத்திற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

2. உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக484 மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

3. அவனே ஏழு வானங்களை507 அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! எதேனும் குறையைக் காண்கிறீரா?

4. பின்னர் இரு தடவை பார்வையைச் செலுத்துக! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.

5. முதல் வானத்தை507 விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம்.307 அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

6. தமது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் வேதனை உள்ளது. (அது) கெட்ட தங்குமிடம்.

7. அதில் அவர்கள் போடப்படும்போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கடும் இரைச்சலைச் செவியுறுவார்கள்.

8. கோபத்தால் அது வெடித்திட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் "எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

9. அதற்கவர்கள் "ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்'' எனக் கூறுவார்கள்.

10. நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.

11. மேலும் தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். அப்போது நரகவாசிகளுக்குக் கேடு தான்.

12. தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.

13. உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.

14. படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

15. அவனே பூமியை (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளுக்கும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள்! அவனிடமே மீளுதல் உள்ளது.

16. வானத்தில்507 உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்.

17. அல்லது வானத்தில்507 உள்ளவன் உங்கள் மீது கல்மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அப்போது அறிந்து கொள்வீர்கள்.

18. அவர்களுக்கு முன்சென்றோரும் பொய்யெனக் கருதினர். அப்போது எனது பதிலடி எவ்வாறு இருந்தது?

19. அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை.260 அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.488

20. அளவற்ற அருளாளனையன்றி உங்களுக்கு உதவி செய்யும் உங்களுக்குரிய படையினர் உள்ளனரா? (அவனை) மறுப்போர் ஏமாற்றத்திலேயே உள்ளனர்.

21. அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவர் உண்டா?463 மாறாக வரம்பு மீறுவதிலும், வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.

22. முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவரா?

23. அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக!

24. அவனே பூமியில் உங்களைப் பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்றும் கூறுவீராக!

25. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?'' எனக் கேட்கின்றனர்.

26. "அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே'' என (முஹம்மதே) கூறுவீராக!

27. அதை அருகில் அவர்கள் பார்க்கும் போது (ஏகஇறைவனை) மறுத்தோரின் முகங்கள் கெட்டுவிடும். "நீங்கள் தேடிக் கொண்டிருந்தது இதுவே'' எனக் கூறப்படும்.

28. "என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏகஇறைவனை) மறுப்போரைக் காப்பவர் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்'' என்றும் கூறுவீராக!

29. அவனே அளவற்ற அருளாளன். அவனை நம்பினோம். அவனையே சார்ந்திருக்கிறோம். தெளிவான வழிகேட்டில் உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள் எனக் கூறுவீராக!

30. "உங்கள் தண்ணீர் வற்றிவிட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவர் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' எனக் கேட்பீராக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account