Sidebar

27
Sat, Jul
4 New Articles

அத்தியாயம் 66

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 66 அத்தஹ்ரீம்

மொத்த வசனங்கள் : 12

அத்தஹ்ரீம் - தடை செய்தல்

இறைவன் அனுமதித்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால் தடை செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.272

2. உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவன் அறிந்தவன்; ஞானமுடையோன்.

3. இந்த நபி தமது மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகக் கூறியபோது, அம்மனைவி அச்செய்தியை (மற்றொரு வரிடம்) கூற அதை அல்லாஹ் நபிக்கு வெளிப்படுத்திக் காட்டினான். அப்போது அதில் சிலவற்றை (அம்மனைவியிடம்) நபி எடுத்துக்காட்டி, சிலவற்றை எடுத்துக்காட்டாது விட்டார். அவர் அதை அறிவித்தபோது "இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்'' என மனைவி கேட்டார். அதற்கு அறிந்தவனும், நன்கறிந்தவனும் (ஆகிய இறைவன்) எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என நபி விடையளித்தார்.258

4. (நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் (அதுவே நல்லது.) உங்கள் இருவரின் உள்ளங்கள் தடம் மாறி இருந்தன. அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டால் அல்லாஹ்வே அவரது உதவியாளன். ஜிப்ரீலும், நம்பிக்கை கொண்டோரில் நல்லோரும், வானவர்களும் அதன் பின் (இவருக்கு) உதவுபவர்கள்.

5. உங்களை அவர் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான நம்பிக்கை கொண்ட, கட்டுப்பட்டு நடக்கிற, திருந்திக் கொள்கிற, வணக்கம் புரிகிற, நோன்பு நோற்கிற விதவைகளையும், கன்னியரையும் மனைவியராக அவரது இறைவன் மாற்றித்தரக் கூடும்.

6. நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

7. (ஏகஇறைவனை) மறுப்பவர்களே! இன்று சமாளிக்காதீர்கள்! நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கே கூலி கொடுக்கப்படுவீர்கள் (எனக் கூறப்படும்.)

8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும், (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவுபடுத்தாத நாளில்1 அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். "எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவர்.

9. நபியே! (ஏகஇறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக!53 அவர்கள் விஷயத்தில் கடுமை காட்டுவீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது கெட்ட புகலிடம்.

10. நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. "இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!'' என்று கூறப்பட்டது.

11. "என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

12. இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்). அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம்514 நமது உயிரை ஊதினோம்.90 அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account