Sidebar

27
Sat, Jul
5 New Articles

அத்தியாயம் 46

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 46 அல் அஹ்காஃப்

மொத்த வசனங்கள் : 35

அல் அஹ்காஃப் - மணற்குன்றுகள்

இந்த அத்தியாயத்தின் 21வது வசனத்தில் ஹூத் என்ற இறைத்தூதர் மணற்குன்றின் மீது நின்று பிரச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. ஹா, மீம்.2

2. (இது) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதம்.

3. வானங்களையும்,507 பூமியையும், அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவற்றையும் தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக்கெடுவுடனும் தவிர நாம் படைக்கவில்லை. (நம்மை) மறுப்போர் தமக்கு எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர்.

4. "அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில்507 அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

5. கியாமத் நாள்1 வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

6. மக்கள் ஒன்று திரட்டப்படும்போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

7. இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர் "இது தெளிவான சூனியம்''285 என்று கூறுகின்றனர்.357

8. "இவர் இதை இட்டுக்கட்டி விட்டார்'' என்று கூறுகிறார்களா? "நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும், உங்களுக்குமிடையே அவனே சாட்சியாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

9. "தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' எனக் கூறுவீராக!

10. ''இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!'' என (முஹம்மதே!) கேட்பீராக! அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

11. "இது சிறந்ததாக இருந்திருந்தால் அவர்கள் நம்மை விட இதற்கு முந்தியிருக்க மாட்டார்கள்'' என்று நம்பிக்கை கொண்டோரைப் பற்றி (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். இதன் மூலம் அவர்கள் நேர்வழி பெறாமல் "இது பழைய பொய்யாகும்'' எனக் கூறுகின்றனர்.

12. இதற்கு முன் மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் இருந்தது. இது அநீதி இழைத்தோரை எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவதற்காகவும் அரபு489 மொழியில் அமைந்த வேதமாகும்.227 (முன் சென்ற வேதங்களை இது) உண்மைப்படுத்துகிறது.

13. எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

14. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாகும்.

15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.314 அவன் தனது பருவ வயதை அடைந்து, நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில்295 ஒருவன்'' என்று கூறுகிறான்.340

16. அவர்கள் செய்த நல்லறத்தை அவர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொள்வோம். அவர்களின் தீமைகளை மன்னிப்போம். அவர்கள் சொர்க்கவாசிகளில் இருப்பார்கள். (இது) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதி.

17. "(மீண்டும்) உயிர் கொடுக்கப்படுவேன் என்று என்னை நீங்கள் இருவரும் பயமுறுத்துகிறீர்களா? "ச்சீ'' எனக்கு முன் பல தலைமுறையினர் சென்று விட்டனர்'' என்று ஒருவன் தன் பெற்றோரிடம் கூறினான். அவர்களோ அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள். "உனக்குக் கேடு தான்! நம்பிக்கை கொள்! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது!'' என்றனர். அதற்கு அவன் "இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' எனக் கூறினான்.

18. அவர்களுக்கு முன் சென்ற ஜின்களுடனும், மனிதர்களுடனும் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நட்டமடைந்தனர்.

19. ஒவ்வொருவரும் செயல்பட்டதற்கு ஏற்ப அவர்களுக்குப் பதவிகள் உள்ளன. அவர்களின் செயல்களுக்கு அவன் முழுமையாகக் கூலி கொடுப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

20. (ஏகஇறைவனை) மறுத்தோர் நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில்1 "உங்கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்து விட்டீர்கள். அதிலேயே இன்பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும், நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனையைப் பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்'' (என்று கூறப்படும்.)

21. "அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; மகத்தான நாளின்1 வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' என்று ஆது சமுதாயத்திற்கு அவர்களின் சகோதரர் (ஹூத்) மணற்குன்றுகளில் நின்று எச்சரித்ததை நினைவூட்டுவீராக! எச்சரிப்போர் அவருக்கு முன்பும் பின்பும் சென்றுள்ளனர்.

22. "எங்கள் கடவுள்களை விட்டும் எங்களைத் திருப்புவதற்காக எங்களிடம் வந்துள்ளீரா? உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக!'' என்று கேட்டனர்.

23. "(இது பற்றிய) ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன்'' என்று அவர் கூறினார்.

24. தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். "இது நமக்கு மழை பொழியும் மேகமே'' எனவும் கூறினர். "இல்லை! எதற்கு அவசரப்பட்டீர்களோ அதுவே இது. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும்'' (என்று கூறப்பட்டது.)

25. தனது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு பொருளையும் அது அழித்தது. அவர்களின் குடியிருப்புகளைத் தவிர (வேறு எதுவும்) காணப்படாத நிலையைக் காலையில் அடைந்தனர். குற்றம் செய்யும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.

26. உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்கு நாம் செய்து கொடுத்திருந்தோம். அவர்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தியிருந்தோம். அவர்களின் செவியும், பார்வைகளும், உள்ளங்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோது சிறிதளவும் அவர்களுக்குப் பயன் தரவில்லை. அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

27. உங்களைச் சுற்றி பல ஊர்களை அழித்துள்ளோம். இவர்கள் திருந்துவதற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

28. அல்லாஹ்வையன்றி யாரை அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தும் கடவுள்களாகக் கற்பனை செய்தார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவியிருக்க வேண்டாமா? மாறாக இவர்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர். இது இவர்களின் பொய்யும் இட்டுக்கட்டியதுமாகும்.

29. (முஹம்மதே!) இக்குர்ஆனைச் செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப் பார்ப்பீராக! அவை அவரிடம் வந்தபோது "வாயை மூடுங்கள்!'' என்று (தம் கூட்டத்தாரிடம்) கூறின. (ஓதி) முடிக்கப்பட்டபோது எச்சரிப்போராக தமது சமுதாயத்திடம் திரும்பின.

30. "எங்கள் சமுதாயமே! மூஸாவுக்குப் பின் அருளப்பட்ட ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது தனக்கு முன் சென்றதை4 உண்மைப்படுத்துகிறது. உண்மைக்கும், நேரான பாதைக்கும் அது வழிகாட்டுகிறது'' எனக் கூறின.

31. எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளியுங்கள்! அவரை நம்புங்கள்! அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.

32. அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளிக்காதவர் பூமியில் அல்லாஹ்வை வெல்பவராக இல்லை. அவனன்றி அவருக்குப் பாதுகாவலர்களும் இல்லை. அவர்கள் தெளிவான வழிகேட்டிலேயே உள்ளனர் (என்றும் கூறின.)

33. வானங்களையும்,507 பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? ஆம் அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

34. (ஏகஇறைவனை) மறுப்போர் நரகத்தின் முன்னே நிறுத்தப்படும் நாளில் "இது உண்மை அல்லவா?'' (எனக் கேட்கப்படும்) "ஆம்! எங்கள் இறைவன் மேல் ஆணையாக!'' என்று கூறுவார்கள். நீங்கள் (என்னை) மறுப்போராக இருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்! என்று (இறைவன்) கூறுவான்.

35. உறுதிமிக்க தூதர்கள் பொறுத்தது போல் நீரும் பொறுப்பீராக! இவர்கள் விஷயத்தில் அவசரப்படாதீர்! இவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை இவர்கள் காணும் நாளில் பகலில் சிறிது நேரமே தவிர (உலகில்) வசிக்கவில்லை என்பது போல் (நினைப்பார்கள். இது) எடுத்துச் சொல்லப்பட வேண்டியது. குற்றம் புரிந்த கூட்டம் தவிர (மற்றவர்) அழிக்கப்படுவார்களா?158

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account