Sidebar

27
Sat, Jul
4 New Articles

அத்தியாயம் 48

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 48 அல்ஃபத்ஹ்

மொத்த வசனங்கள் : 29

அல்ஃபத்ஹ் - அந்த வெற்றி

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மகத்தான வெற்றியைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்துக்கு வெற்றி என்று பெயர் சூட்டப்பட்டது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. (முஹம்மதே!) தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.

2, 3. உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும்,493 தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இவ்வெற்றியை அளித்தான்.)26

4. தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான். வானங்கள்507 மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

5. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களின் பாவங்களை அவர்களை விட்டும் அவன் நீக்குவான். இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது.

6. நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப்பற்றி தீய எண்ணம் கொண்ட இணைகற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தான்.6 அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது.

7. வானங்கள்507 மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

8. (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் நாம் அனுப்பினோம்.

9. நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவதற்காகவும், அவனுக்கு உதவி செய்து அவனைக் கண்ணியப்படுத்திடவும், காலையிலும், மாலையிலும் அவனைத் துதிப்பதற்காகவும் (நபியை அனுப்பினோம்).

10. உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.334

11. "எங்கள் செல்வங்களும், எங்கள் குடும்பங்களும் எங்களைத் திசை திருப்பி விட்டன! எனவே எங்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக!'' என்று கிராமவாசிகளில் போருக்கு வராமல் தங்கி விட்டோர் (முஹம்மதே!) உம்மிடம் கூறுவார்கள். தமது உள்ளங்களில் இல்லாத ஒன்றைத் தமது நாவுகளால் கூறுகின்றனர். "அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

12. இல்லை! இத்தூதரும், நம்பிக்கை கொண்டோரும் தமது குடும்பத்தாரிடம் ஒருபோதும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நினைத்தீர்கள். உங்கள் உள்ளங்களில் இது அழகாக்கப்பட்டது. தீய கருத்தை எண்ணினீர்கள். அழியும் கூட்டமாகவும் ஆகி விட்டீர்கள்.

13. யார் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பவில்லையோ (நம்மை) மறுப்போருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம்.

14. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

15. போரில் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை எடுப்பதற்காக நீங்கள் புறப்படும்போது "உங்களைப் பின்தொடர்ந்து வர எங்களை அனுமதியுங்கள்!'' என்று போருக்குச் செல்லாது தங்கியோர் கூறுகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றிட அவர்கள் நாடுகின்றனர்.30 "எங்களைப் பின் தொடராதீர்கள்! இப்படித்தான் முன்னரே அல்லாஹ் கூறி விட்டான்'' என (முஹம்மதே!) கூறுவீராக! நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகிறீர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அவ்வாறில்லை! குறைவாகவே தவிர அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

16. "வலிமைமிக்க ஒரு சமுதாயத்துடன் போரிட அழைக்கப்படுவீர்கள். அல்லது அவர்கள் சரணடைவார்கள். நீங்கள் கட்டுப்பட்டால் உங்களுக்கு அல்லாஹ் அழகிய கூலியைக் கொடுப்பான். (இதற்கு) முன்னர் புறக்கணித்தது போல் புறக்கணித்தால் உங்களுக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்'' என்று கிராமவாசிகளில் போருக்குச் செல்லாது தங்கியோரிடம் (முஹம்மதே!) கூறுவீராக!

17. (போருக்குச் செல்லாமல் இருப்பது) குருடர் மீது குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.

18. அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி334 எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.

19. போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற ஏராளமானவற்றையும் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

20. "போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற ஏராளமான பொருட்களை எடுப்பீர்கள்'' என அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்தான். அதை உங்களுக்கு விரைவாகவே நிறைவேற்றினான். நம்பிக்கை கொண்டோருக்கு சான்றாக ஆகவும், உங்களுக்கு நேரான வழியைக் காட்டவும் மனிதர்களின் கைகளை உங்களை விட்டும் தடுத்தான்.

21. இன்னொரு கூட்டத்தினர் மீது நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை. அவர்களை அல்லாஹ் முழுமையாக அறிந்து வைத்துள்ளான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.

22. (ஏகஇறைவனை) மறுத்தோர் உங்களுடன் போருக்கு வந்தால், புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் பொறுப்பாளனையோ, உதவி செய்பவனையோ காண மாட்டார்கள்.

23. இதுவே (இதற்கு) முன்னரும் அல்லாஹ்வின் வழிமுறை. அல்லாஹ்வின் வழிமுறையில் எந்த மாறுதலையும் நீர் காணமாட்டீர்.

24. மக்காவின் மையப்பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக488 இருக்கிறான்.

25. அவர்கள் தாம் (ஏகஇறைவனை) மறுத்தார்கள். (கஅபா எனும்) புனிதப் பள்ளியை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும் (தடுத்தார்கள்.) உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம்.

26. (ஏகஇறைவனை) மறுத்தோர் தமது உள்ளங்களில் வைராக்கியத்தை, மூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்தியபோது, அல்லாஹ் தனது நிம்மதியைத் தனது தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். (இறை) அச்சத்திற்கான வார்த்தையை அவர்கள் பற்றிப் பிடிக்குமாறு செய்தான். அவர்கள் அதற்கு உரிமை படைத்து, தகுதியுடையோராகவும் இருந்தனர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

27. அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை122 உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாமலும் (கஅபா எனும்) புனிதப் பள்ளியில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.163

28. ஏனைய எல்லா மார்க்கத்தையும் விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.

29. முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏகஇறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.382 ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில்491 அவர்களது உதாரணம்.25 இன்ஜீலில்491 அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account