Sidebar

16
Wed, Oct
10 New Articles

அத்தியாயம் 50 காஃப்

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 50 காஃப்

மொத்த வசனங்கள் : 45

காஃப் - அரபு மொழியின் 21வது எழுத்து

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், காஃப் என்ற எழுத்து இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. காஃப்.2 மகத்தான இக்குர்ஆன் மீது ஆணையாக!

2. அவர்களிலிருந்து எச்சரிக்கை செய்பவர் அவர்களிடம் வந்ததில் வியப்பு அடைகின்றனர். இது ஆச்சரியமான விஷயம் என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

3. "நாங்கள் மரணித்து, மண்ணாக ஆனாலுமா? இது (அறிவுக்கு) தூரமான மீளுதல் ஆகும்'' என்று கூறுகின்றனர்.

4. அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது331 என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு157 உள்ளது.

5. மாறாக உண்மை அவர்களிடம் வந்தபோது அதைப் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் குழப்பமான நிலையில் உள்ளனர்.

6. அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை507 எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை.

7. பூமியை நீட்டினோம். அதில் முளைகளை நிறுவினோம்.248 அதில் கவர்கின்ற ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம்.

8. திருந்தும் ஒவ்வொரு அடியாருக்கும் இது பாடமும், படிப்பினையுமாகும்.

9, 10, 11. வானத்திலிருந்து507 பாக்கியம் மிக்க தண்ணீரை இறக்கினோம். இறந்த ஊரை அதன் மூலம் உயிர்ப்பித்தோம். இவ்வாறே (இறந்தோரை) வெளிப்படுத்துதலும் (நிகழும்). அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியத்தையும், நீண்டு வளர்ந்த பேரீச்சை மரங்களையும் அடியார்களுக்கு உணவாக முளைக்கச் செய்தோம். அதற்கு அடுக்கடுக்காகப் பாளைகள் உள்ளன.26

12, 13, 14. அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயமும், கிணற்றுவாசிகளும், ஸமூது சமுதாயத்தினரும், ஆது சமுதாயமும், ஃபிர்அவ்னும், லூத்துடைய சகோதரர்களும் தோப்பு (மத்யன்) வாசிகளும், துப்பவு எனும் சமுதாயமும் பொய்யெனக் கருதினார்கள். அனைவரும் தூதர்களைப் பொய்யரெனக் கருதினார்கள். எனவே எனது எச்சரிக்கை உண்மையாயிற்று.26

15. முதலில் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தோமா? ஆனால் அவர்கள் புதிதாகப் படைக்கப்படுவதில் குழப்பத்தில் உள்ளனர்

16. மனிதனைப் படைத்தோம்.368 அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.49

17, 18. வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.26

19. மரண அவஸ்தை உண்மையாகவே வந்து விட்டது. எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே.

20. ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப் பட்ட நாள்1.

21. ஒவ்வொருவரும் இழுத்துச் செல்பவருடனும், சாட்சியுடனும் வருவர்.

22. இதில் தான் நீ அலட்சியமாக இருந்தாய். உன்னை விட்டும் உனது திரையை நீக்கி விட்டோம். இன்று உனது பார்வை கூர்மையாகவுள்ளது.

23. (எழுதும் வானவராகிய) அவரது கூட்டாளி "இதோ என்னிடம் எழுதப்பட்ட ஏடு இருக்கிறது'' என்பார்.

24, 25, 26. பிடிவாதமாக (ஏகஇறைவனை) மறுத்து, நல்லதைத் தடுத்து, வரம்பு மீறி, சந்தேகம் கொண்டு, அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நீங்களிருவரும் நரகில் போடுங்கள்! இவனை நீங்கள் இருவரும் கடுமையான வேதனையில் போடுங்கள்! (என்று அவ்விரு வானவர்களுக்கும் கூறப்படும்).26

27. "எங்கள் இறைவா! நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழிகேட்டில் இருந்தான்'' என்று அவனது கூட்டாளி(யான ஷைத்தான்) கூறுவான்.

28, 29. "என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள்! உங்களிடம் முன்னரே எச்சரிக்கை செய்து விட்டேன். என்னிடம் பேச்சு மாற்றப்படாது. நான் அடியார்களுக்கு அநீதி இழைப்பவனாகவும் இல்லை'' என்று (இறைவன்) கூறுவான்.26

30. "நீ நிரம்பி விட்டாயா?'' என்று நரகத்திடம் நாம் கேட்கும் நாளில் "இன்னும் அதிகமாகவுள்ளதா?'' என்று அது கூறும்.

31. (இறைவனை) அஞ்சியோருக்கு சொர்க்கம் தொலைவின்றி நெருக்கத்தில் கொண்டு வரப்படும்.

32, 33. திருந்தி, பேணி நடந்து, மறைவில் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சி, தூய உள்ளத்துடன் வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.26

34. "நிம்மதியுடன் இதில் நுழையுங்கள்! இதுவே நிரந்தரமான நாள்!'' என்று கூறப்படும்.

35. அதில் அவர்கள் விரும்புவது அவர்களுக்கு உண்டு. அதிகமானதும் நம்மிடம் உண்டு.

36. இவர்களை விட வலிமைமிக்க எத்தனையோ தலைமுறையினரை இவர்களுக்கு முன் அழித்துள்ளோம். அவர்களின் ஊர்களில் இவர்கள் சுற்றித் திரிந்தனர். தப்பிக்கும் இடம் இருந்ததா?

37. யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது.

38. வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம்.179 நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

39. அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும், மறைவதற்கு முன்பும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக!

40. இரவிலும், ஸஜ்தாவுக்குப் பின்னரும் அவனைத் துதிப்பீராக!

41. அருகில் உள்ள இடத்திலிருந்து அழைப்பவர் அழைக்கும் நாளைப்1 பற்றி கவனமாகக் கேட்பீராக!

42. அது, உண்மையாகவே பெரும் சப்தத்தை அவர்கள் கேட்கும் நாளாகும். அதுவே வெளிப்படும் நாள்.1

43. நாமே உயிர்ப்பிக்கிறோம். மரணிக்கச் செய்கிறோம். நம்மிடமே மீளுதல் உண்டு.

44. அவர்களை விட்டு பூமி பிளந்து அவர்கள் விரைவார்கள். அதுதான் ஒன்று திரட்டப்படும் நாள்.1 இது நமக்கு எளிதானது.

45. (முஹம்மதே!) அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். நீர் அவர்கள் மீது அடக்குமுறை செய்பவர் அல்லர்.81 எனது எச்சரிக்கையை அஞ்சுபவருக்கு குர்ஆன் மூலம் அறிவுரை கூறுவீராக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account