அத்தியாயம் : 60 அல் மும்தஹினா
மொத்த வசனங்கள் : 13
அல் மும்தஹினா - சோதித்து அறிதல்
இந்த அத்தியாயத்தின் பத்தாவது வசனத்தில் நாடு துறந்து வரும் பெண்களைச் சோதித்து அறிய வேண்டும் என்று கூறப்படுவதால் சோதித்து அறிதல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. நம்பிக்கை கொண்டோரே! எனது பாதையிலும், எனது திருப்தியை நாடியும் அறப்போருக்குப் புறப்படுவோராக நீங்கள் இருந்தால் எனது பகைவரையும், உங்கள் பகைவரையும் நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாக89 ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்கள் உங்களிடம் வந்துள்ள உண்மையை மறுக்கின்றனர். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பியதற்காக இத்தூதரையும், உங்களையும் (ஊரை விட்டு) அவர்கள் வெளியேற்றி னார்கள். அவர்களிடம் இரகசியமாக அன்பைச் செலுத்துகிறீர்கள். நீங்கள் பகிரங்கப்படுத்தியதையும், மறைத்ததையும் நான் நன்கு அறிபவன். உங்களில் இதைச் செய்பவர் நேர்வழி தவறி விட்டார்.
2. அவர்கள் உங்கள் மீது சக்தி பெற்றால் உங்களுக்குப் பகைவர்களாகி (உங்களைத்) துன்புறுத்திட தமது கைகளையும், நாவுகளையும் உங்களை நோக்கி நீட்டுவார்கள். நீங்கள் (ஏகஇறைவனை) மறுப்பதை அவர்கள் விரும்புகின்றனர்.
3. கியாமத் நாளில்1 உங்களின் உறவினரும், உங்கள் சந்ததிகளும் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள். உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிப்பான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488
4. "உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. "உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர.247 (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) "எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது''
5. "எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக484 எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றும் பிரார்த்தித்தார்.)
6. உங்களுக்கு (அதாவது) அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவைகளற்றவன்;485 புகழுக்குரியவன்.
7. உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
8. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.89
9. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.89 அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.
10. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத்460 செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.91 அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை108 நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏகஇறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
11. உங்கள் மனைவியரில் யாரேனும் (மதம் மாறி) இறைமறுப்பாளர்களிடம் சென்று விட்டால் நீங்கள் வெற்றி கொள்ளும் போது, யாருடைய மனைவியர் சென்று விட்டார்களோ அ(ந்தக் கண)வர்களுக்கு, அவர்கள் செலவிட்டதற்குச் சமமானதை (போரில் கைப்பற்றும் பொருட்களிலிருந்து) கொடுத்து விடுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ள அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
12. நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்;487 நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதிமொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.334
13. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் யாரைக் கோபித்து விட்டானோ அந்தக் கூட்டத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 (ஏகஇறைவனை) மறுப்போர் மண்ணறைவாசிகள் (எழுப்பப் படுவார்கள் என்பது) பற்றி நம்பிக்கை இழந்தது போல் இவர்கள் மறுமையைப்1 பற்றி நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
அத்தியாயம் 60 அல் மும்தஹினா
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode