அத்தியாயம் : 61 அஸ்ஸஃப்
மொத்த வசனங்கள் : 14
அஸ்ஸஃப் - அணி வகுப்பு
இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் அணிவகுத்து நிற்பவர்களைப் பற்றி பேசப்படுவதால் அணிவகுப்பு என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
2. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
3. நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
4. உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
5. "என் சமுதாயமே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் என்பதை அறிந்து கொண்டே ஏன் எனக்குத் தொல்லை தருகிறீர்கள்?'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக. அவர்கள் தடம் புரண்டபோது அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தடம் புரளச் செய்து விட்டான். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
6. "இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை491 உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள282 அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்''25 என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!457 அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது "இது தெளிவான சூனியம்''285 எனக் கூறினர்.357
7. இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மிகப் பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
8. அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
9. இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
10. நம்பிக்கை கொண்டோரே! துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
11. நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்ப வேண்டும்; அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அறப்போர் புரிய வேண்டும்; நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது.
12. உங்களுக்காக உங்கள் பாவங்களை அவன் மன்னிப்பான். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அதன் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய குடியிருப்புகளும் உள்ளன. இதுவே மகத்தான வெற்றி.
13. நீங்கள் விரும்பும் மற்றொன்றும் உண்டு. (அது) அல்லாஹ்விடமிருந்து உதவியும், அருகில் உள்ள வெற்றியுமாகும். நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
14. நம்பிக்கை கொண்டோரே! "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார்'' என்று மர்யமின் மகன் ஈஸா சீடர்களிடம் கேட்ட போது "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள்'' என்று சீடர்கள் கூறினர். அது போல் நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள்! இஸ்ராயீலின் மக்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டனர். மற்றொரு பிரிவினர் (நம்மை) மறுத்தனர். நம்பிக்கை கொண்டோரை அவர்களுடைய எதிரிகள் விஷயத்தில் பலப்படுத்தினோம். எனவே அவர்கள் வெற்றி பெற்றனர்.
அத்தியாயம் 61 அஸ்ஸஃப்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode