Sidebar

27
Sat, Jul
5 New Articles

அத்தியாயம் 65

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 65 அத்தலாக்

மொத்த வசனங்கள் : 12

அத்தலாக் - விவாகரத்து

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால்66 அவர்கள் இத்தாவைக்69 கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும்424 என்பதை நீர் அறிய மாட்டீர்.

2. அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!386 அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

3. அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான்.463 அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.

4. உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப்போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய இத்தா (எனும் காலக்கெடு) மூன்று மாதங்கள் ஆகும். கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்.360 அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.

5. இது அல்லாஹ்வின் கட்டளை. இதை உங்களுக்கு அவன் அருளியுள்ளான். அல்லாஹ்வை அஞ்சுபவரின் தீமைகளை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். அவருக்கு மகத்தான கூலியை வழங்குவான்.

6. உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்!74 உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இதுபற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும்.

7. வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும்.74 அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான்.68 சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

8. எத்தனையோ ஊர்கள் தமது இறைவனுடைய, அவனது தூதர்களுடைய கட்டளைகளை மீறின. அவற்றைக் கடுமையாகக் கணக்கெடுத்து மிகக் கடுமையாக அவர்களைத் தண்டித்தோம்.

9. எனவே தமது காரியத்தின் விளைவை அவை அனுபவித்தன. அவற்றின் கடைசி முடிவு நட்டமாகவே ஆனது.

10. அவர்களுக்குக் கடுமையான வேதனையை அல்லாஹ் தயாரித்துள்ளான். நம்பிக்கை கொண்ட அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அறிவுரையை அருளியுள்ளான்.

11. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை இருள்களிலிருந்து303 ஒளிக்குக் கொண்டு செல்வதற்காகவே தெளிவுபடுத்தும் அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதரை (அனுப்பினான்). அல்லாஹ்வை நம்பி, நல்லறம் செய்வோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவருக்காக அல்லாஹ் உணவை அழகாக்கி வைத்துள்ளான்.

12. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும்,507 பூமியில் அது போன்றதையும் படைத்தான்.425 அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account