Sidebar

27
Sat, Jul
6 New Articles

அத்தியாயம் 74

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 74 அல்முத்தஸிர்

மொத்த வசனங்கள் : 56

அல்முத்தஸிர் - போர்த்தியிருப்பவர்

இந்த அத்தியாயம், போர்த்தி இருப்பவரே (முத்தஸிர்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. போர்த்திக் கொண்டிருப்பவரே!

2. எழுந்து எச்சரிக்கை செய்வீராக!

3. உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!

4. உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக!

5. அசுத்தத்தை வெறுப்பீராக!

6. (மனிதரிடம்) அதிகம் எதிர்பார்த்து உதவாதீர்!

7. உமது இறைவனுக்காகப் பொறுத்துக் கொள்வீராக!

8, 9. ஸூர் ஊதப்படும் அந்நாள்1 மிகவும் சிரமமான நாள்.26

10. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு (அது) இலேசானதாக இருக்காது.

11. (யாருடைய துணையுமின்றி) நான் மட்டுமே யாரைப் படைத்தேனோ அவனை என்னோடு விட்டு விடுவீராக!

12, 13. அவனுக்கு நீண்ட செல்வத்தையும், கூடவே இருக்கும் ஆண் மக்களையும் கொடுத்தேன்.26

14. அவனுக்காக பல தயாரிப்புகளைச் செய்தேன்.

15. பின்னரும் நான் அதிகப்படுத்த வேண்டும் என அவன் ஆசைப்படுகிறான்.

16. அவ்வாறில்லை! அவன் நமது வசனங்களை மறுப்பவனாக இருக்கிறான்.

17. அவனுக்குச் சிரமம் தரும் வேதனை அளிப்பேன்.

18. அவன் (நமக்கு எதிராகச்) சிந்தித்தான். தீர்மானித்தான்.

19. ஆகவே அவன் சபிக்கப்பட்டான். அவன் எவ்வாறு தீர்மானித்தான்?

20. பின்னரும் அவன் சபிக்கப்பட்டான். அவன் எவ்வாறு தீர்மானித்தான்?

21. பின்னர் சிந்தித்தான்.

22. பின்னர் கடுகடுத்து முகம் சுளித்தான்.

23. பின்னர் புறக்கணித்து கர்வம் கொண்டான்.

24, 25. "இது மயக்கத்தை ஏற்படுத்தும் சூனியம்357 தவிர வேறு இல்லை;285 இது மனிதனின் சொல் தவிர வேறு இல்லை'' என்று கூறுகிறான்.26

26. அவனை ஸகர் (எனும் நரகி)ல் கருகச் செய்வேன்.

27. ஸகர் என்றால் என்ன என்பது உமக்கு எப்படித் தெரியும்?

28. அது மிச்சம் வைக்காது. விட்டும் வைக்காது.

29. தோலை (கரித்து) மாற்றிவிடும்.

30. அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர்.354

31. நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டோர்27 உறுதி கொள்வதற்காகவும், நம்பிக்கை கொண்டோர் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவும், நம்பிக்கை கொண்டோரும் வேதம் வழங்கப்பட்டோரும்27 சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும், யாருடைய உள்ளங்களில் நோய் உள்ளதோ அவர்களும் (நம்மை) மறுப்போரும் இதன் மூலம் அல்லாஹ் என்ன முன்மாதிரியை நாடுகிறான்?'' என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு அமைத்தோம்) இவ்வாறே தான் நாடியோரை அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். உமது இறைவனின் படையை அவனைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். இது மனிதனுக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.

32. ஆம்! சந்திரன் மீது ஆணையாக!379

33. பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது ஆணையாக!379

34. வெளிச்சம் தரும் காலைப் பொழுதின் மீது ஆணையாக!379

35. அது பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.

36, 37. அது முன்னேறவோ, பின்தங்கவோ விரும்புகின்ற மனிதனை எச்சரிப்பதாகும்.26

38. ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான்.265

39. வலது புறத்தில் இருப்போர் தவிர.

40, 41, 42. அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள்.26

43, 44. "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள்.26

45. (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.

46. தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதி வந்தோம்.

47. உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை (எனவும் கூறுவார்கள்).

48. எனவே பரிந்துரைப்போரின் பரிந்துரை17 அவர்களுக்குப் பயன் தராது.

49. இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?

50, 51. அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.26

52. ஆம்! ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட ஏடுகள் தனக்குக் கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறான்.

53. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் மறுமையை அஞ்சுவதில்லை.

54. அவ்வாறில்லை! இது அறிவுரை.

55. விரும்பியவர் இதில் படிப்பினை பெறலாம்.

56. அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் படிப்பினை பெறுவதில்லை. அவனே அஞ்சத்தக்கவன்; மன்னித்தல் உடையவன்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account