Sidebar

27
Sat, Jul
5 New Articles

அத்தியாயம் 5

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 5 அல் மாயிதா

மொத்த வசனங்கள் : 120

அல் மாயிதா - உணவுத் தட்டு

வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக 112, 113, 114 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு (பின்னர்) கூறப்படுவதைத் தவிர தாவரத்தை உண்ணும் கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இஹ்ராமின்போது வேட்டையாடுவது அனுமதிக்கப்பட்டதாக நீங்கள் கருதக் கூடாது. தான் விரும்பியதை அல்லாஹ் கட்டளையிடுவான்.

2. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் (புனிதச்) சின்னங்கள், புனித மாதம்55, ஹத்யு எனும் பலிப் பிராணி, (பலிப்பிராணியின் கழுத்தில் அடையாளத்திற்காகப் போடப்பட்ட) மாலைகள், தமது இறைவனின் அருளையும், திருப்தியையும் தேடி இப்புனித ஆலயத்தை33 நாடிச் செல்வோர் ஆகியவற்றின் புனிதங்களுக்குப் பங்கம் விளைவித்து விடாதீர்கள்! இஹ்ராமிலிருந்து விடுபட்டதும் வேட்டையாடுங்கள்! (கஅபா எனும்) புனிதப்பள்ளியை விட்டு உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

3. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.171 கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில்135 அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும்136 (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இது தீயதாகும். (ஏகஇறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்திடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு431 உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.42

4. "தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை (வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன''171 எனக் கூறுவீராக! அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள்! (அதை அனுப்பும்போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

5. தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்27 உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.137 உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட27 கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை108 வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.138 தனது நம்பிக்கையை (இறை)மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.

6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால்363 தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!117 அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை.68 மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

7. அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளையும், உங்களிடம் அவன் செய்த உடன்படிக்கையையும், "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் அறிந்தவன்.

8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

9. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

10. (நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரே நரகவாசிகள்.

11. நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்டபோது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

12. இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தான். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். "நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும்75 கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களைச் சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்து விலகி விட்டார்'' என்று அல்லாஹ் கூறினான்.

13. அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம்.6 அவர்களின் உள்ளங்களை இறுகச்செய்தோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

14. "நாங்கள் கிறித்தவர்கள்'' என்று கூறியோரிடமும் உடன்படிக்கை எடுத்தோம். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். எனவே கியாமத் நாள்1 வரை அவர்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தினோம்.99 அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்குப் பின்னர் அறிவிப்பான்.

15. வேதமுடையோரே!27 நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்.97 பலவற்றை அலட்சியம் செய்து விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன.

16. அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து303 வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறான்.

17. "மர்யமுடைய மகன் மஸீஹ்92 தான் அல்லாஹ்'' என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர்.459 "மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?'' என்று நீர் கேட்பீராக! வானங்கள்,507 பூமி, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

18. "நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்'' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். "(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?'' என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள்.368 தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள்,507 பூமி, அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

19. வேதமுடையோரே!27 "எங்களுக்கு நற்செய்தி கூறுபவரோ, எச்சரிக்கை செய்பவரோ வரவில்லை'' என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக தூதர்களின் வருகை நின்று போயிருந்த காலகட்டத்தில் நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களுக்குத் தெளிவுபடுத்திட உங்களிடம் வந்து விட்டார். நற்செய்தி கூறுபவரும், எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

20. "என் சமுதாயமே! உங்களில் நபிமார்களை ஏற்படுத்தி, உங்களை ஆட்சியாளர்களாக்கி, உலகத்தில் எவருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்ததன் மூலம் அல்லாஹ் உங்களுக்குச் செய்திருந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்!'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக!

21. "என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள்! புறங்காட்டி ஓடாதீர்கள்! (அவ்வாறு ஓடினால்) நட்டமடைந்தவர்களாவீர்கள்!'' (என்றும் மூஸா கூறினார்)

22. "மூஸாவே! அதில் அடக்குமுறை செய்யும் கூட்டத்தினர் உள்ளனர். அதிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை நாங்கள் அதில் நுழைய மாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டால் நாங்கள் நுழைவோம்'' என்று அவர்கள் கூறினர்.

23. "அவர்களை எதிர்த்து (அவ்வூரின்) நுழைவாயில் வழியாக நுழையுங்கள்! நீங்கள் அதில் நுழைந்தால் நீங்களே வெற்றி பெறுபவர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள்!'' என்று அல்லாஹ்வின் அருட்கொடையைப் பெற்ற, (இறைவனை) அஞ்சுகிற இருவர் கூறினர்.

24. "மூஸாவே! அவர்கள் அங்கே இருக்கும் வரை அதில் நாங்கள் ஒருபோதும் நுழைய மாட்டோம். எனவே நீரும், உமது இறைவனும் சென்று போரிடுங்கள்! நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்'' என்று அவர்கள் கூறினர்.

25. "என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் தவிர (யாரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும், குற்றம் புரிந்த இக்கூட்டத்திற்குமிடையே நீ தீர்ப்பளிப்பாயாக!'' என்று (மூஸா) கூறினார்.

26. "இவ்வூர் அவர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டது. (நாடற்று) பூமியில் அவர்கள் திரிவார்கள். எனவே குற்றம் புரிந்த இக்கூட்டத்திற்காக நீர் கவலைப்படாதீர்!'' என்று (இறைவன்) கூறினான்.

27. ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

28, 29. "என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன். உன் பாவத்துடன், என்(னைக் கொன்ற) பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்.)26

30. (இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நட்டமடைந்தவனாக ஆகி விட்டான்.

31. தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே'' எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.

32. "கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்" என்றும், "ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.

33. கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.43

34. அவர்களில், நீங்கள் சிறைப்பிடிப்பதற்கு முன் திருந்திக் கொள்வோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

35. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்!141 அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

36. பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதுபோல் இன்னொரு மடங்கும் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு உடைமையாக இருந்து, கியாமத் நாளின்1 வேதனைக்கு ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அவை ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

37. அவர்கள் நரகிலிருந்து வெளியேற விரும்புவார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்கள் வெளியேற முடியாது. அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.

38. திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை512 வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.43

39. அநீதி இழைத்த பின் மன்னிப்புக் கேட்டு (தம்மை) திருத்திக் கொண்டவரை அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

40. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

41. நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க484 நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.

42. பொய்யையே அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

43. அவர்களிடம் தவ்ராத்491 இருக்கிறது. அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. இதன் பின்னர் அதை அவர்கள் புறக்கணிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் உம்மை எப்படி தீர்ப்பு வழங்குபவராக ஏற்றுக் கொள்வார்கள்? அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

44. தவ்ராத்தை491 நாம் அருளினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது. (இறைவனுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டதாலும், அதற்குச் சாட்சிகளாக இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். எனவே மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்பவிலைக்கு விற்று விடாதீர்கள்!445 அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே234 (ஏகஇறைவனை) மறுப்பவர்கள்.

45. உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர்234 அநீதி இழைத்தவர்கள்.43

46. தமக்கு முன்சென்ற தவ்ராத்தை491 உண்மைப்படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம். அவருக்கு இஞ்சீலையும்491 வழங்கினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தன. தனக்கு முன்சென்ற தவ்ராத்தை491 உண்மைப்படுத்துவதாகவும் அது அமைந்திருந்தது. (இறைவனை) அஞ்சுவோருக்கு நேர்வழியாகவும், அறிவுரையாகவும் இருந்தது.

47. இஞ்சீலுக்குரியோர்491 அதில் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.234

48. உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன்சென்ற வேதத்தை4 உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக484 (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

49. அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.

50. அறியாமைக்காலத் தீர்ப்பைத்தான் அவர்கள் தேடுகிறார்களா? உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்?234 

51. நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

52. உள்ளங்களில் நோய் இருப்போர், அவர்களை நோக்கி விரைவதைக் காண்கிறீர். "எங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (உங்களுக்கு) வெற்றியளிக்கலாம்; அல்லது ஏதேனும் ஒரு காரியத்தை அவன் நிகழ்த்தலாம். அவர்கள் தமக்குள் இரகசியமாக வைத்திருந்ததற்காக அப்போது கவலைப்பட்டோராக ஆவார்கள்.

53. இவர்களின் நல்லறங்கள் அழிந்து, நட்டமடைந்தனர். "நாங்களும் உங்களைச் சேர்ந்தோரே என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா?'' என்று நம்பிக்கை கொண்டோர் (மறுமையில் வியப்புடன்) கூறுவார்கள்.

54. நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏகஇறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

55. அல்லாஹ்வும், அவனது தூதரும், தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.

56. அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

57. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும்27 (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

58. தொழுகைக்கு நீங்கள் அழைக்கும்போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்.

59. "வேதமுடையோரே!27 அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இதற்கு முன் அருளப்பட்டதையும்4 நம்புகிறோம் என்பதற்காக தவிர வேறு எதற்காக எங்களை வெறுக்கின்றீர்கள்? உங்களில் பெரும்பாலோர் குற்றவாளிகள்'' என்று கூறுவீராக!

60. "அல்லாஹ்விடம் இதைவிட கெட்டகூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து6 கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,23 எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள்.

61. அவர்கள் உங்களிடம் வரும்போது "நம்பிக்கை கொண்டோம்'' எனக் கூறுகின்றனர். அவர்கள் (இறை)மறுப்பை (மனதில்) வைத்துக் கொண்டே வந்தனர். அதனுடனேயே வெளியேறியும் விட்டனர். அவர்கள் மறைத்து வைப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

62. அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.

63. அவர்களின் பாவமான கூற்றை விட்டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.

64. "அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது, அவர்களில் பெரும்பாலோருக்கு (இறை) மறுப்பையும் வரம்பு மீறலையும் அதிகப்படுத்தி விட்டது. கியாமத் நாள்1 வரை அவர்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம்.99 அவர்கள் போர் (எனும்) தீயை மூட்டும் போதெல்லாம் அதை அல்லாஹ் அணைத்து விடுகிறான். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

65. வேதமுடையோர்27 நம்பிக்கை கொண்டு, (இறை) அச்சத்துடன் நடந்து கொண்டிருந்தால் அவர்களது பாவங்களை அவர்களை விட்டும் நீக்கியிருப்போம். அவர்களை இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்திருப்போம்.

66. தவ்ராத்தையும், இஞ்சீலையும்,491 அவர்களுக்கு அவர்களது இறைவனிடமிருந்து அருளப்பட்டதையும் அவர்கள் நிலைநாட்டியிருந்தால் தமது (தலைக்கு) மேலிருந்தும், தமது கால்களுக்குக் கீழே இருந்தும் (கிடைப்பவற்றைச்) சாப்பிட்டிருப்பார்கள். அவர்களில் நேர்மையான கூட்டமும் உள்ளது. அவர்களில் அதிகமானோரின் செயல் மிகவும் கெட்டதாகும்.

67. தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.145 (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

68. "வேதமுடையோரே!27 தவ்ராத்தையும், இஞ்சீலையும்,491 உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும் நீங்கள் நிலைநாட்டாத வரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர்'' என்று கூறுவீராக! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்ட (இவ்வேதமான)து அவர்களில் அதிகமானோருக்கு (இறை) மறுப்பையும், வரம்பு மீறலையும் அதிகப்படுத்துகிறது. எனவே (ஏகஇறைவனை) மறுக்கும் கூட்டத்திற்காக நீர் கவலைப்படாதீர்!

69. நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், ஸாபியீன்களிலும்,443 கிறித்தவர்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

70. இஸ்ராயீலின் மக்களிடம் உறுதிமொழி எடுத்தோம்.22 அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர்.

71. எந்தச் சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணி விட்டனர். இதனால், குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆனார்கள். பின்னரும் அவர்களை அல்லாஹ் மன்னித்தான். பின்னர் அவர்களில் அதிகமானோர் குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆனார்கள். அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488

72. "மர்யமின் மகன் மஸீஹ் தான்92 அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர்.459 "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ்92 கூறினார்.

73. "மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்'' என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர்.459 ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏகஇறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.

74. அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

75. மர்யமின் மகன் மஸீஹ்92 தூதரைத் தவிர வேறில்லை.459 அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்.101 அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

76. "அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்;488 அறிந்தவன்.

77. "வேதமுடையோரே!27 உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக (கூறி) வரம்பு மீறாதீர்கள்! இதற்கு முன் தாமும் வழிகெட்டு, அதிகமானோரையும் வழிகெடுத்து, நேரான பாதையை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்கள்!'' என்று கூறுவீராக!

78. "தாவூத், மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏகஇறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறுசெய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம்.

79. அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது.

80. அவர்களில் அதிகமானோர் (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஏற்படுத்திக் கொள்வதை நீர் காண்கிறீர்.89 தமக்காக அவர்கள் தயாரித்தது கெட்டது. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். வேதனையில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

81. அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும், (முஹம்மதையும்) இவருக்கு அருளப்பட்டதையும் நம்பியிருந்தால் அவர்களைப் பொறுப்பாளர்களாக்கியிருக்க மாட்டார்கள்.89 எனினும் அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.

82. நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! "நாங்கள் கிறித்தவர்கள்'' எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்!147 அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.

83. இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும்போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர்.

84. "அல்லாஹ்வையும், எங்களிடம் வந்த உண்மையையும் நாங்கள் நம்பாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) உள்ளது? நல்ல சமுதாயத்துடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்திட ஆவல் கொள்கிறோம்'' (எனவும் கூறுகின்றனர்).

85. அவர்கள் (இவ்வாறு) கூறியதால் அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் பரிசாக வழங்கினான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே நன்மை செய்வோருக்குரிய கூலி.

86. (நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோரே நரகவாசிகள்.

87. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

88. அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்!

89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே.64 (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.

90. நம்பிக்கை கொண்டோரே! மது116, சூதாட்டம், பலிபீடங்கள்,135 (குறி கேட்பதற்கான) அம்புகள்136, ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

91. மது,116 சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

92. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை81 என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

93. (இறைவனை) அஞ்சி, நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார்களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் மீது எந்தக் குற்றமுமில்லை. நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

94. நம்பிக்கை கொண்டோரே! "தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும்போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப்484 பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

95. நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும்போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.

96. உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும்505 உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.42 இஹ்ராமுடன் இருக்கும்போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

97. புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும்,55 ஹத்யு (எனும் பலிப்) பிராணியையும்,, (அதற்கு அணிவிக்கப்படும்) மாலைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.34 வானங்களில்507 உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிவதற்காகவே இது (கூறப்படுகிறது.)

98. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும், அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

99. எடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை.81 நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.

100. "கெட்டதும், நல்லதும் சமமாகாது'' என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

101. நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும்.150 அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.

102. உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் இவ்வாறு கேள்வி கேட்டனர். பின்னர் அவர்கள், அவற்றை மறுப்போராக ஆகி விட்டனர்.

103. பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் ஆகியவற்றை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.148 மாறாக (ஏகஇறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகின்றனர். அவர்களில் அதிகமானோர் விளங்க மாட்டார்கள்.

104. "அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

105. நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடக்கும்போது வழிகெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்.

106. நம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி அவர் மரண சாசனம் செய்தால் உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும்.45 நீங்கள் பூமியில் பயணம் மேற்கொண்டிருக்கும்போது மரணம் எனும் துன்பம் உங்களுக்கு ஏற்பட்டால் உங்களைச் சேராத இருவராக இருக்கலாம். நீங்கள் (அவர்களைச்) சந்தேகப்பட்டால் தொழுகைக்குப் பின் அவ்விருவரையும் தடுத்து வைத்துக் கொள்ளவும்! "இதனை (சாட்சியத்தை) விலை பேச மாட்டோம். நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம். மறைத்தால் நாங்கள் குற்றவாளிகளாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது அவ்விருவரும் சத்தியம் செய்ய வேண்டும்.

107. அவ்விருவரும் (பொய்சாட்சி கூறி) பாவம் செய்தனர் என்பது தெரிய வந்தால், யாருக்குப் பாதகமாக சாட்சியம் கூறினார்களோ அவர்களைச் சேர்ந்த இருவர், அவ்விருவர் இடத்தில் நின்று "எங்கள் சாட்சியம் இவ்விருவரின் சாட்சியத்தை விட மிகவும் உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அவ்வாறு வரம்பு மீறினால்) அப்போது நாங்கள் அநீதி இழைத்தவர்களாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும்.

108. சரியான முறையில் சாட்சியம் கூறவோ, தமது சத்தியம் (பிறரால்) மறுக்கப்படும் என்று அவர்கள் அஞ்சவோ இதுவே ஏற்ற வழி. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

109. தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில்1 "உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?'' என்று கேட்பான். "எங்களுக்கு (இதுபற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர்கள் கூறுவார்கள்.

110. "மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ்444 மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும்,67 தவ்ராத்தையும், இஞ்சீலையும்491 நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் அனுமதியின்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் அனுமதியின்படி அது பறவையாக மாறியதையும், என் அனுமதியின்படி269 பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் அனுமதியின்படி269 (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி357 வேறில்லை''285 என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறியபோது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!'' என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

111. "என்னையும், என் தூதரையும் நம்புங்கள்!" என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்தபோது "நம்பிக்கை கொண்டோம்! நாங்கள் முஸ்லிம்கள்295 என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பாயாக!'' என அவர்கள் கூறினர்.

112. "மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து507 உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?'' என்று சீடர்கள் கூறியபோது, "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!'' என்று அவர் கூறினார்.

113. "அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண்மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, அதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்'' என்று அவர்கள் கூறினர்.

114. "அல்லாஹ்வே! எங்கள் இறைவா! வானிலிருந்து507 எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார்.

115. "உங்களுக்கு அதை நான் இறக்குவேன். அதன் பிறகு உங்களில் யாரேனும் (என்னை) மறுத்தால் இவ்வுலகில் யாரையும் தண்டிக்காத அளவு அவரைத் தண்டிப்பேன்'' என்று அல்லாஹ் கூறினான்.

116. "மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?''459 என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, "நீ தூயவன்.10 எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப்பார்.

117, 118. "நீ எனக்குக் கட்டளையிட்டபடி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.151 அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.)26

119. "இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள்1. அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்'' என்று அல்லாஹ் கூறுவான்.

120. வானங்கள்,507 பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account